– கை. செல்லத்தங்கம்
காலை மணி ஒன்பது எப் எம்மில் வானொலி திரைப்பட பாடல்கள் நேயர் விருப்பம் கேட்டுக் கொண்டிருக்கிறது. அந்த டீக்கடையின் வெளியில் உள்ள பெஞ்சில் ஒருவர் தினத்தந்தி நாளிதழை படித்துக் கொண்டிருக்கிறார்,”அண்ணே ஒரு டீ போடுங்க” என்றபடி.
நான் எத்தனை தடவை சார் சொல்றேன். நான் உங்களை விட சின்னவன், “தம்பின்னு சொல்லுங்க சார்” என்றார் டீக்கடை முதலாளி ராஜா. புன்சிரிப்போடு நானும் சரி தம்பின்னு சொல்லிக்கிட்டு கடையில் கூட்டமில்லாததால் குடும்பத்தைப் பற்றி கேட்டேன்.
என்ன தம்பி பையனை இரண்டு நாளாக் காணல்லியே என்றேன். ஆமா சார் அவன் வேலை விசியமா வெளியூர் போயிருக்கான் என்றார். சரி சரி உங்க கால் வலி என்னாச்சி என்றேன். அது அப்படியே தான் இருக்கு மருந்து எடுத்தா “பொங்கின பயினிக்கு பதம் போட்டது போல” அப்பப்ப குறையும், மறுபடியும் வரும். வயசாச்சில்ல…. இனி இப்படித்தான் இருக்கும் போல. வலி அதிகமானா மாத்திரை எடுக்குறது, இல்லன்னா மருந்தெண்ணெய் தான் என்றார். சரி கவனிச்சுக்குங்க எப்பவும் நிக்கிறதில்லையா? கூட்டம் இல்லாதப்போ உட்கார்ந்துக்கங்க, என்றபடி வந்துட்டேன்.
அந்த சிறிய நகரத்தின் சந்திப்பில் நானும் ஒரு மருந்துக்கடை (medical store) வச்சிருக்கேன். எனக்கு வயது 68. என் கடையில் இரண்டு பணியாளர்கள் உண்டு. அந்த டீக்கடையயும் அதன் முதலாளி ராஜாவையும் எனக்கு நாப்பது வருசமாத் தெரியும். என் தந்தை காலத்தில் தொடங்கிய கடை தொடர்ந்து நான் நடத்தி வருகிறேன். அந்த ஜங்சனில் உள்ள எல்லாக் கடைகளையும் ஓணர் மாற்றங்கள் செய்து மாடி முதல் விரிவாக்கம் செய்துட்டார். அந்த டீக்கடையை மட்டும் விட்டு வச்சிருக்கார். எங்க ஓணர் ரொம்ப நல்லவர். அதிக வாடகைக்கு ஆசைப்பட்டு எங்களை எல்லாம் மாறச் சொல்லவில்லை. நியாயமான வாடகை. நல்ல மனிதர்கள் என அக்கட்டிடத்தில் பழக்கடை, பூக்கடை, துணிக்கடை, மளிகைக்கடை என பலவகை வியாபாரம். அதோட டீக்கடையும். டீக்கடை ராஜா நல்லவர் நாணயமானவர், படிச்சவர். ஒருநாள் பேச்சு வாக்கிலே கேட்ட போது பி.எஸ்.சி படிச்சிருக்கதாகச் சொன்னார். வேறு வேலை தேடிருக்கலாமேன்னேன். சிரிச்சார். இதுக்கு என்ன சார் ஆச்சி நல்லாத் தான் போகுது ஊரோட இருக்கேன். அதுவும் குடும்பத்தோட உங்கள மாதிரி எத்தனை நல்ல மனுசங்களை தினமும் பார்க்கிறேன். பேசுறேன். மனசுக்கு மகிழ்ச்சியாக இருக்கு சார் என்றார். இந்த டீக்கடை தான் சார். என் பிள்ளைங்களை படிக்கவச்சது, வீடுகட்ட வச்சது, பிள்ளைங்களுக்கு கலியாணம் பண்ண வச்சதுன்னார். ஆம். கடின உழைப்பாளி. இடைப்பட்ட காலத்தில் ஒரு பையனைத் துணைக்கு வேலைக்கு அமர்த்தியிருந்தார். எதிர்த்த வரிசையிலும் டீக்கடைகள் வரவே வியாபாரம் கொஞ்சம் குறைந்த உடன், ஒரு பத்து வருசமா அவர் மட்டும் தான். அடிக்கடி அவர் மகனும் வந்து உதவுவான்.
அவரது மகன் நல்லா படிச்சி தனியார் கல்லூரியில் விரிவுரையாளனாக இருக்கிறான். பக்கத்து டவுனில் தான் கல்லூரி. கல்லூரிக்குப் போவதற்கு முன் காலையிலே வந்து கடையைத் திறந்து தந்தைக்கு உதவிக்கிட்டு போயிடுவான் மாலையிலும் நேரம் கிடைச்சால் வருவான். லீவு நாளையிலே தனியே சமாளிச்சிக்குவான். அப்பாவுக்கு கால்வலியில்ல.. என்பான்.
ராஜா கடை டீன்னால் பிரபலம். பலர் வருசக் கணக்கிலே வாடிக்கையாளர்கள். நானும் தான் ராஜாக் கிட்ட கால் வலின்னா… இனி ரெஸ்ட் எடுக்கலாமில்ல… என்றேன். என்ன சார் நீங்க. இங்கே வந்து உங்களை எல்லாம் பார்க்கலைன்னா ஏதோ மாதிரி இருக்கு. பிள்ளைங்க நல்லா இருக்காங்க. வீட்டுக்காரியும் வேண்டாம் என்கிறாள். வீட்டிலே பேரப்புள்ளைங்க இருக்கு. ஆனாலும் இங்கே வந்து உங்க எல்லோர் கிட்டேயும் பழகி நாட்டுநடப்புகள் பேசுறது மாதிரி இல்ல சார் என்றார். அது மட்டுமில்ல என்ன வாழவச்சதே இந்த டீக்கடை தானசார். விடமுடியுமா? என்றார்.
Leave a Reply