யாகாவாராயினும் நா காக்க…

  • By Magazine
  • |

வெ. சின்னசாமி

பிறந்தவுடன் பூச்சிகள் பறக்கவும், விலங்குகள் நடக்கவும், மீன்கள் நீந்தவும் தொடங்கி விடுகின்றன. ஆனால் மனிதன் மட்டும் பிறந்ததும் நடப்பதில்லை. சில மாதங்களுக்குப் பிறகு பிறர் துணையுடன் நடக்கக் கற்று கொள்கிறான். பேச, வளர, வாழ பிறர் மூலம் தான் கற்றுக் கொள்கிறான். கற்றுக் கொள்வது என்பது வாழ்வியலின் அடிப்படையாகும். வாழ்வியலை வகுத்து, பகுத்து, விரித்து சொல்கிறது திருவள்ளுவரின் அற்புதப் படைப்பாம் திருக்குறள்.

மெய், வாய் (நாக்கு, கண், மூக்கு, செவி இவற்றை ஐம்புலன் என்கிறோம். உயிர் வாழ்வதற்கும், உடல் இயக்கத்திற்கும் ஐம்புலன் இன்றியமையாததாகும். புறச் சூழலிலுள்ள ஒலி அளவைகளைக் காதுகளாலும், ஒளி உணர்வினை கண்களாலும், நறுமணம் நாற்றத்தினை மூக்குத் துளைகளாலும் உணருகின்றோம். எதை வேண்டுமானாலும் கேட்கலாம், பார்க்கலாம், நுகரலாம் ஏனென்றால் அவை திறந்த வெளியில் உள்ளன.

நாக்கானது உதடுகள், 32 பற்களால் நன்றாக பூட்டப்பட்டு அடைக்கப்பட்டுள்ளது. எனவே நாக்கு மற்ற புலன்களைப் போல செயல்பட முடியாது. எதை எப்படி எங்கு பேச வேண்டும் என்று மூளை கட்டளையிடுகிறதோ அதை மட்டும் மனிதன் (நாக்கு) செயல்படுத்த முடியும். நாக்கு சுவையுணர் உறுப்பாகவும், ஜீரணச் சுரப்பாகவும் (உமிழ்நீர்) செயல்படுகின்றது. பேச்சாற்றலுக்கும் நாக்குதான் காரணமாயிருக்கிறது.

நாக்கை எப்போதும் பேணிப் பாதுகாத்து பக்குவமாகப் பயன்படுத்த வேண்டும். பேச்சாற்றல் என்பது ஒரு கலையாகும். இதன் மூலம் பலரையும் தன் கட்டுக்குள் கொண்டு வரலாம். திரு.வி.க, அறிஞர் அண்ணா, கலைஞர், கிருபானந்த வாரியார் போன்ற சான்றோர்களையும், ஆன்றோர்களையும் சான்றாகக் கூறலாம். ஒருவரது மனம் புண்படும் படி பேசக் கூடாது. அறச் சொற்களை பயன்படுத்தவே கூடாது. பொய், புறம், கோள், அவதூறு, இட்டுக்கட்டுதல் போன்ற செயல்களுக்காக நாக்கைப் பயன்படுத்த கூடாது.

அறிஞர் அண்ணா முதலமைச்சரான பிறகு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் திருக்குறளை எழுதச் செய்து திருக்குறள் அனைத்து மக்களையும் சேர வேண்டும் என் விரும்பி செயலாற்றினார்.

ஒருநாள் சட்டப்பேரவையின் உறுப்பினர் ஒருவர் எழுந்து பேருந்துகளில் திருக்குறள் எழுதியுள்ளமைக்கும் பாராட்டுகிறேன். யாகாவாராயினும் நா காக்க… என்ற குறளில் யார் நாக்கை யார் காக்க வேண்டும். பேருந்தின் ஓட்டுநரா? நடத்துநரா? இல்லை பயணிகளா? என்று வினா எழுப்பினார். அதற்கு அண்ணா அவர்கள் யார் யாருக்கு நாக்கு இருக்கிறதோ அவர்கள் அனைவரும் நா காக்க வேண்டும் என்று பதில் தந்தார். ஆகவே நாக்கு என்ற ஆயுதத்தால் பிறருக்கு தீங்கு ஏற்படாமல் கவனமாக பயன்படுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *