தமிழ்நாட்டின் வானம்பாடி                          கவிஞர் முடியரசன்!

தமிழ்நாட்டின் வானம்பாடி  கவிஞர் முடியரசன்!

  • By Magazine
  • |

பூ.வ.தமிழ்க்கனல்

‘தன்மானக்குன்றம்-கொள்கைமாறாச்சிங்கம்- திராவிட இயக்கத்தின் முன்னோடிக்கவிஞர், இயக்கத்தின் ஈடு இணையற்ற தளகர்த்தர்களில் ஒருவர்… இன்று திராவிட இயக்கம் நிமிர்ந்து நின்று கோலோச்சுகிறதென்றால்…. அன்று முடியரசனார் ஆற்றிய இலக்கியப் பணியும் காரணம்” என கருணாநிதியால் போற்றப்பட்ட அன்பு உடன்பிறப்பு அவர்தான், ‘தமிழ்நாட்டின் வானம்பாடி” எனப் போற்றப்பட்ட கவிஞர் முடியரசன்.

‘ கவிஞன் யார் என்பதற்கு எடுத்துக்காட்டு தானய்யா பகுத்தறிவுக் கவிஞர் முடியரசன்” என்கிற பெரியாரின் பாராட்டுச் சான்றிதழ் முடியரசின் கொள்கை உரத்துக்குக் காலத்துக்கும் அழியாத சான்று!

தேனிமாவட்டம், பெரியகுளம் நகரில் சுப்பராயலு – சீதாலட்சுமி தம்பதிக்கு 1920-ஆம் ஆண்டு அக்டோபர் 7-அன்று மகனாகப் பிறந்தவர். அப்போது பெற்றோர் வைத்த பெயர் துரைராசு.

பெரியகுளத்தில் பள்ளிக்கூடம் சேர்ந்தவர்,பெற்றோர் பிழைப்பு தேடி காரைக்குடிக்குக் குடிபெயர, அங்கிருந்த வேந்தன்பட்டி, திண்ணைப்பள்ளியில் தொடக்கக் கல்வியைத் தொடர்ந்தார். அதன்பிறகு மேலை புரிசன்மார்க்கச் சங்கத்தில் ஐந்து, ஆறாம் வகுப்புகள் படித்த போது பக்தி இலக்கியங்களையும், இலக்கணத்தையும் கற்றுத்தேர்ந்தார். பெரும் புலவரான தனது தாய்மாமா துரைசாமி மூலமாக, இளம் வயதிலேயே மொழிப் பற்றையும் இலக்கிய உணர்வையும் வளர்த்துக்கொண்டார்.

அண்ணாவைக் கண்டார்

தனது 21-வது வயதில் ‘சாதி என்பது நமக்கு ஏனோ?” என்ற கவிதையைத் ‘திராவிட நாடு” இதழுக்கு அனுப்பி வைத்தார். அண்ணா அந்தக் கவிதையை வெளியிடப்பெரும் உத்வேகம் பெற்றார் முடியரசன். அதே ஆண்டில் பெரியாரின் தன்மான இயக்கத்தோடும் தொடர்பு கிடைத்தது.

தனது 20 வயது வரை பக்திப்பாடல்கள் பாடிவந்த முடியரசன், 21 ஆவது வயதில் பகுத்தறிவுப் பாடல்களைப் பாடத் தொடங்கினார். அவரது கவிதையில் உணர்ச்சிப் பெருக்கோடு தெறித்த வார்த்தைகளும் அந்த வார்த்தைகளில் சரளமாக விளையாடிய தமிழ்ச்செழுமையும் அண்ணாவை ஈர்த்தன. தொடர்ந்து ‘திராவிடநாடு” இதழ்களின் அட்டைகளை முடியரசனின் கவிதைகளால் அலங்கரித்தார் அண்ணா.

1945-இல் திருப்பத்தூரில் பெரியா£¢ தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டிற்குச் சென்ற போது, அண்ணாவுடனான நேரடிச் சந்திப்பு நிகழ்ந்தது. அந்த மாநாட்டில், தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். அண்ணாவின் அடுக்குமொழிப் பேச்சில் சொக்கிப் போன ‘துரைராசு” மறுநாளே ‘முடியரசன்” என தனது பெயரை மாற்றிக் கொண்டார். மீண்டும் அதே திருப்பத்தூரில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் உரையைக் கேட்டு, உணர்வுகளால் உந்தப்பட்டார்.

குன்றாத கொள்கைக்காரர்!

திரை – இலக்கியத்தில் திராவிட இயக்கம் முழுமையாக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருந்த காலத்தில், மரபுக் கவிஞராக அடையாளப்பட்டவர். 1944-இல் நாடகங்களில் பாடல்கள், உரையாடல் எழுதுவதற்காக நவாப் இராசமாணிக்கத்தின் சிறீ தேவி பாலவினோத சபையில் சேர்ந்தார். ஆனால் நாடகக் குழுவின் கட்டுப்பாடுகளும் நடைமுறைகளும் தன் கொள்கைகளுக்கு உட்பட்டதாக இல்லை என அங்கிருந்து வெளியேறினார்.

திரைத்துறை ஆர்வத்துடன் சென்னைக்குப் புறப்பட்டு வந்தவர் எம்.ஆர்.இராதாவின் ‘கண்ணாடிமாளிகைப்” படத்திற்கு உரையாடலும் பாடல்களும் எழுதினார். ஆனால், திரைத் துறையும் அதன் இயல்புகளும் ஒத்து வராததால் கல்விப் பணிக்குத் திரும்பினார். கூடவே அவரது எழுத்தின் மூலம் கல(ழ)கப் பணி தொடர்ந்தது.

கவிதையில் கழகப் பணி!

1947-1949 வரை சென்னை முத்தியால்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். திராவிடர் கழகத்தில் இருந்து திராவிடமுன்னேற்றக் கழகம் பிரிந்த காலகட்டம் அது. பெரியாரோடும் அண்ணாவோடும் மாசற்ற அன்பைப் பாராட்டியவர். பெரியாரிடம் இருந்து கற்ற கொள்கை உறுதியைக் குலைத்துக் கொள்ளாமல், குழப்பமின்றி அண்ணாவின் பக்கம் சாய்ந்தார். அதுமட்டுமல்ல, இரண்டாவது இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற காலமும் கூட அது. அப்போது பள்ளி வகுப்பறைக்குள் இவர் நுழைந்து, இருக்கையில் அமர்ந்ததுமே ‘வெல்கதமிழ்” என்று மாணவர்கள் முழங்குவர்.

‘குடி அரசு”,‘திராவிட நாடு”,‘முரசொலி”, ‘முத்தாரம்” என நாற்பதுக்கும் மேற்பட்ட திராவிட இயக்க இதழ்களில் கவிதைகளால் தமிழில் முழங்கியவரின் மாணவர்கள் ‘வெல்கதமிழ்” என முழங்காமல் இருந்திருந்தால் தான் வியப்பாகும்.

1949-ஆம் ஆண்டு பிப்ரவரியில் கலைச்செல்வி என்பவரைச் சாதிமறுப்புத் திருமணம் புரிந்து கொண்டார். அதன்பிறகு, காரைக்குடியில் 29 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

என் மூத்தவழித்தோன்றல்

18 கவிதை நூல்கள், 3 காப்பியங்கள், 3 கதைகள், 2 கட்டுரைத் தொகுப்புகள், 2 கடித இலக்கியம், 4 பாட நூல்கள் என 30-க்கும் மேற்பட்ட நூல்களை அவர் படைத்துள்ளார். ‘காசுக்குப் பாடுபவன் கவிஞன் அல்லன். கைம்மாறு விளைந்து புகழ் பெறுதல் வேண்டி, மாசற்றக் கொள்கைக்கு மாறாய் நெஞ்சை மறைத்து விட்டுப் பாடுபவன் கவிஞன் அல்லன்” எனப் பாடி, அதன்படி வாழ்ந்து காட்டியவர். அதனால்தான் திராவிட இயக்கச் சார்போடு நூற்றுக்கணக்கான கவிஞர்கள் இருந்தபோதும்,‘ என் மூத்தவழித்தோன்றல் முடியரசனே” எனப் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாராட்டினார்.

அதுமட்டுமல்ல, திராவிடநாட்டின் வானம்பாடிக் கவிஞர் என்று அண்ணாவும் வாழ்த்தியிருக்கிறார். ‘சாதி ஒழிய வேண்டும் எனக் கவிதையிலும் மேடையிலும் முழங்கிய கவிஞர்களுள் அவற்றைத் தன் வாழ்வில் கடைப்பிடித்தவர்கள் இவரைத் தவிர, வேறு யாராவது இருக்கிறார்களா எனத் தெரியவில்லை” என குன்றக்குடி அடிகளாரால் போற்றப்பட்டவர் முடியரசன்.

ஓய்வுக்குப்பின் ஓய்வில்லை

1964-இல் இந்தி எதிர்ப்புப் போராட்டக்களம் தழிழ்நாட்டைத் தகிக்கச் செய்து கொண்டிந்த போது, மொழிக்கொரு காப்பியம் என முடியரசன் படைத்த ‘பூங்கொடி” கவிதைத் தொகுப்பு. தமிழ் உணர்வாளர்களையும் இளைஞர்களையும் வீறுகொள்ளச் செய்தது. அதன் காரணமாக, இந்நூல் தடைசெய்ய ஏற்பாடு நடைபெற்றது. அந்த நூலுக்காக அவர் மீது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி வழக்கும் தொடரப்பட்டது. 1967-இல் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு ‘பூங்கொடி” நூலுக்கான தடைஏற்பாடு விலக்கிக்கொள்ளப்பட்டது.

1978-இல் ஓய்வு பெற்ற பிறகு முழுநேரமாகக் கழகப் பணிக்குத் தன்னை ஒப்படைத்துக் கொண்டார். கழக ஆட்சிக்காலங்களில் அரசவைக் கவிஞர் பொறுப்பு அவரைத் தேடிவந்த போதும், தனது அரசியல் பணிகளுக்கு அரசுப் பொறுப்புதடையாக இருக்கும் என்று ஏற்க மறுத்தார். கழக இலக்கிய அணியின் முதல் தலைவராகப் பொறுப்பேற்றவர். 1979-ஆம் ஆண்டு கருணாநிதி பிறந்தநாளையொட்டிக் கழக இலக்கிய அணி சார்பில், பாவரங்கம் நடத்தி,‘ விரித்து வரும் வலையிலெல்லாம் தப்பி நின்று வீழாமல் சிரிக்கின்ற தமிழணங்கே” என்று கவிதை வடித்தார்.

அந்த அர்ப்பணிப்புமிக்க உடன்பிறப்பின் உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக, 1988-இல் கழக முப்பெரும் விழாவில் ‘கலைஞர் விருது”, 1989-இல் தமிழ்நாடு அரசின் சார்பில் ‘பாவேந்தர் விருது” வழங்கிக் கௌரவித்தார் கருணாநிதி.

‘பூமியில்வாழ் நாளெலாம் வாட்டும்

நலிவே உறினும் நற்றமிழே

ஆளாதல் திண்ணம் அடியேன் எனக் கடைசிக் கவிதை வரை தமிழைச் சுவாசித்த அந்த ஈடற்ற உடன்பிறப்பின் இயக்கம் 03.12.1998-இல் நின்றது. 2000-ஆம் ஆண்டில் அவருடைய நூல்களை நாட்டுடமையாக்கினார் கருணாநிதி. கழக அடையாளத்துடன் எழுத்துலகின் அரசனாக, இன்றும் உயர்ந்து நிற்கிறார் முடியரசன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *