– இரா. அரிகரசுதன்
கற்ற கைமண்ணை
பாவிச்செல்லும்
விதைப்போன் அவன்
அவன் நடக்கும் இடங்களில்
நாளங்களின் துடிப்புகளைக்
கண்டுணரும் அபூர்வங்கள்
பூக்கும்
அவன் உடலோ
மண் வாசனையை
தெளிக்கும் மயில் பீலி
பார்த்தோர் வியந்தோர்
அவனை நுகர்ந்து
கொண்டு செல்லும் வாசனைகளில்
தங்கள் கோபுரங்களை
எழுப்பிக் கொள்வர்
இது
அன்றாடம்தான் அவனுக்கு
ஆயினும் அவனை
தன்னருகே வைத்துக்கொள்ளவும்
தூக்கிவிடவும்
அவர்கள் தங்களிடையே சில பல
கேள்விகளை
சுருட்டி வைத்திருக்கிறார்கள்
அவன் மக்களைப்பற்றிக் கேட்கிறார்கள்
அவர்களின் பெயர் படிக்கும்
பள்ளி பற்றியெல்லாம் கேட்கிறார்கள்
பின்
அவன்தம் மக்கள்
சைவம் அசைவம் உண்டு சத்தாக இருக்கின்றார்களா?
எனக் கேட்கிறார்கள்.
அவன் அனைத்துக்கும்
உள்ளபடியேச் சொல்கிறான்
கற்றது கைமண்ணளவு
கல்லாதது உலகளவு
என்பதில் உண்மை கொண்டுள்ள அவன்
இந்தப் புதுமைகளுக்குள்
நின்று கொண்டு
ஐயோ…. என்று சிரிக்கிறான்.
Leave a Reply