நீங்கள் உங்களை மறந்து விடாதீர்கள்

நீங்கள் உங்களை மறந்து விடாதீர்கள்

  • By Magazine
  • |

– ஓஷோ

முன்னொரு காலத்தில் ஒரு அரசர் இருந்தார். அவர் ஜோதிடத்திலும் வல்லவராக இருந்தார். அவர் நட்சத்திரங்களை பற்றிக் கற்பதில் மிகவும் ஆர்வமுடையவராக இருந்தார். திடீரென்று அவர் இதயத்தில் பயத்தை உணர்ந்தார். ஏனெனில் இவ்வருடத்தில் அறுவடையாகும் பயிர்களை உட்கொண்டால் அபாயகரமான விளைவுகள் ஏற்படும் என்பதை உணர்ந்தவராக இருந்தார். யார் அந்தப் பயிரை உண்டாலும் அவர்கள் பைத்தியமாகி விடுவார்கள். ஆகவே அவர் தனது பிரதம மந்திரியைக் கூப்பிட்டு நடக்கப் போகும் விஷயத்தைப் பற்றி சொன்னார். நட்சத்திரங்கள் சரியாக இருக்கின்றன. இவற்றின் ஒளி இவ்வருடத்தில் விளையும் பயிர்களின் மேல் படுவதால் பயிர்கள் அனைத்தும் விஷத்தன்மையுடையதாகி விடுகிறது. இப்படி வெகு அபூர்வமாகத்தான் நடக்கும். இப்படி ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறைதான் நடக்கும். ஆனால் இப்படி இந்த வருடம் நடக்கப் போகிறது. இவ்வருடம் அறுவடையாகும் பயிரை யார் உட்கொண்டாலும் அவர் பைத்தியமாகி விடுவார். ஆகவே அரசர் அவருடைய பிரதம மந்திரியிடம் கேட்டார். இப்பொழுது நாம் என்ன செய்யலாம்?

பிரதம மந்திரி சொன்னார். சென்ற வருட அறுவடையிலிருந்து கிடைத்த நெல்லை நாட்டில் அனைவருக்கும் கொடுக்கக் கூடிய அளவுக்கு நம்மிடம் கையிருப்பு இல்லை. நானும், நீங்களும் வாழ்வதற்கு மட்டும் போதுமான அளவு கையிருப்பு உள்ளது. ஆகவே பிரச்சனை இல்லை. நம்மிருவருக்கும் போதுமான அளவு உணவு கைவசம் உள்ளது.

அரசர் சொன்னார் இது எனக்கு சரியாகப் படவில்லை. என்னுடைய நாட்டு மக்கள், பெண்கள், முனிவர்கள், வேலைக்காரகள், மக்கள், குழந்தைகள் எல்லாரும் பைத்தியமாகப் போவது சரியாகப்படவில்லை. நீயும் நானும் மட்டும் இதிலிருந்து தப்புவதென்பது ஞாயமாகப்படவில்லை. அதற்கு பதில் நானும் எல்லாரையும் போல் பைத்தியக்காரனாகி விடுவதே நல்லது. ஆனால் எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. நான் உன் தலையில் பைத்தியக்காரன் என்ற முத்திரையைக் குறித்து விடுகிறேன். நீ என்னுடைய தலையில் பைத்தியக்காரன் என்ற முத்திரையை குறித்து விடு.

பிரதம மந்திரி கேட்டார். இது எப்படி உதவப் போகிறது?

அரசர் சொன்னார் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். முன் காலத்தில் இது புத்திச்சாலித்தனத்தின் ஒரு திறவுகோலாக இருந்திருக்கிறது. நாம் அதை முயற்சி செய்து பார்ப்போம். எல்லாரும் பைத்தியம் ஆன பின்பு நாமும் பைத்தியமாவோம். நான் எப்பொழுதெல்லாம் உன் தலையை பார்க்கிறேனோ அப்பொழுது நான் ஒரு பைத்தியக்காரன் என்பதை ஞாபகத்தில் கொள்ளுவேன். அதே போல் எப்பொழுதெல்லாம் நீ என் தலையை பார்க்கின்றாயோ அப்பொழுது நீ ஒரு பைத்தியக்காரன் என்பதை ஞாபகத்தில் கொள்வாய்.

பிரதம மந்திரி கேட்டார். இப்படி இருந்தால் என்ன நடக்கும்?

அரசர் சொன்னார். நான் அறிஞர்களிடமிருந்து கேட்டிருக்கிறேன். அதாவது நீ ஒரு பைத்தியக்காரன் என்பதை ஞாபகத்தில் வைத்து கொண்டால் நீ ஒரு பைத்தியக்காரனாக இருக்க மாட்டாய்.

ஒரு பைத்தியக்காரனுக்கு தான் ஒரு பைத்தியக்காரன் என்பது நினைவில் இருக்காது. அறியாமையில் இருப்பவனுக்கு தான் அறியாமையில் இருக்கிறோம் என்பது நினைவில் இருக்காது. கனவு கண்டு கொண்டிருக்கின்றோம் என்பது நினைவில் இருக்காது.

உங்கள் கனவில் நீங்கள் விழிப்படைந்து நீங்கள் கனவு கண்டு கொண்டிருக்கிறீர்கள் என்று தெரிந்து கொண்டால் கனவு நின்று விடும். நீங்கள் முற்றிலும் விழிப்படைந்து விட்டீர்கள். நீங்கள் அறியாதவராக இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்த அக்கணமே அறியாமை அகன்று விடுகிறது. அறியாதவர்கள் எப்பொழுதுமே அவர்களைப் புத்திச்சாலிகளாக எண்ணிக் கொள்ளுகிறார்கள். பைத்தியக்காரர்கள் அவர்கள் மட்டுமே உண்மையான, பைத்தியமில்லாத மனிதர்களாக எண்ணிக் கொள்ளுகிறார்கள். யாரேனும் ஒருவர் உண்மையிலேயே புத்திசாலியாகி விட்டால் அவர் தன் அறியாமையை உணர்ந்ததினாலே தான் அவர் அப்படி புத்திசாலியாகிறார். ஆகலே அரசர் சொன்னார். நாம் இப்படித்தான் செய்யப் போகிறோம்.

அரசர் உண்மையிலேயே புத்திசாலியானவர். அவர் சொன்னார்.. இது உதவப் போவதில்லை. நான் இவர்களிடமிருந்து வேறுபட்டவனாக இருக்க மாட்டேன். நான் இவர்களோடு ஒருவனாக இருப்பேன். நான் பைத்தியக்காரன் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்வேன். ஏனெனில் நீங்கள் பைத்தியக்காரன் என்பதை மறந்து விட்டால் நீங்கள் உண்மையிலேயே பைத்தியக்காரனாக இருப்பீர்கள். ஆகவே நான் பைத்தியக்காரன் எனப்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுவேன். இதைத்தான் செய்ய வேண்டும்? நீங்கள் எங்கே இருந்தாலும் சரி, உங்களை ஞாபகப்படுத்தி கொள்ளுங்கள். நீங்கள் இருந்து கொண்டிருக்கிறீர்கள் என்ற இந்த உள்ளுணர்வு தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும். உங்கள் பெயர் அல்ல, உங்கள் ஜாதி அல்ல, உங்கள் தேசம் அல்ல, இவை எல்லாம் முற்றிலும் உபயோகமற்றவைகள். எளிதாக ஞாபகத்தில் கொள்ளுங்கள். நான் இருக்கிறேன். இதை மறந்துவிடக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *