சுடர்விடுவோம் மண்மீது

சுடர்விடுவோம் மண்மீது

  • By Magazine
  • |

– முல்லைதமிழ்

கள்ளிச்செடி மீது புள்ளி வைத்து

கானல் இளநீரில் கண்ணி வைத்து

வாழையடி வாழையாய் வாய்விரித்து

மண்ணில் வளம்போன்ற பெண்மைதனை

வாரி வசைபாட ஆயிரம் பேர்

போதாக் குறைக்கிங்கு

கேளுங்கள் பொல்லாப்பை

வல்லான் வகுத்ததென்பான்

வழிவழியாய் வந்ததென்பார்

காலம் என்பான்

கடவுள் என்பான்

எல்லாம் இறைசெயல் என்பான்

ஏணிக்கும் எட்டாத தூரத்தில்

ஏற்றி வைத்துக் கதைபேசி

எடுத்து வீசிடுவார் மங்கையரை

கற்பென்பான் அதில்

காடென்பான் நாடென்பான்

காட்டும் அறநூல்கள்

அத்தனையும்

மங்கையர்தம் கடன் பேசும்

ஆணுக்குப் பெண்ணடிமை

என்றே எழுதிவைப்பார்

ஆண்டாண்டுக்காலடியில்

அடைபட்டு கிடப்பதற்காய்

அளந்துவிட்ட

பழங்கதையை

அடியொற்றி அறிவாலே

துடியளவும் எண்ணாது

கற்புநெறி காத்து

வாழ்ந்தாலே உயர்வென்று

கசடற்ற பெண்ணவளும்

கண்மூடி இருந்துவிட்டாள்

பெண்ணுக்கே கற்பென்றால்

பேதையவள் பிறழ்வதும் எதனாலோ?

ஆடவர் உயர்வென்றால்

அவர் கற்பு யாருரைப்பார்

தரைமட்டம் சாய்ந்துவிட்டோம்

இனியும் சாய்வதற்கு இடமில்லை

கடல் முட்டும் அலைபோலே

கண்டு கண்டு வாழ்க்கையிலே

அடிபட்டு போய்விட்டோம்

அலைந்தலைந்து ஓய்வில்லை

அறநெறியும் துணையில்லை

இறைநெறியும் துணையில்லை

அழுக்காக்கி விட்டுவிட்டார்

அணைபோட்டு தடுத்துவிட்டார்

சூரியனே நாமென்று

சுடர்விடுவோம் மண்மீது

கோடி கோடி வேதங்கள்

ஓடி ஓடி வந்தாலும்

மூடி மனம் வைத்து

முடங்கி கிடப்போம்

என்றெழுந்து

மூதுரைகள் வென்றிடுவோம்

மூடங்கள் தவிர்த்திடுவோம்

முனைப்போடு முன்னேறி

சந்தடியில் உரைத்திடுவோம்

தந்திரமாய் நமை வென்ற

நரிகளை நாம் துரத்திடுவோம்

எல்லார்க்கும் எல்லாம் தான் என்றோர்

இறை வேதம் இனி இங்கு உரைத்திடுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *