தமிழரும் பாரம்பரிய மருத்துவமும்

தமிழரும் பாரம்பரிய மருத்துவமும்

  • By Magazine
  • |

மூலச்சல் Dr.T.இராஜேந்திரன் M.Sc, MD(Hom),Ph.D.,

தமிழர்கள் மருத்துவக்கலையில் தலைசிறந்து விளங்கியவர்கள். இதன் உயர்வையும், நன்மதிப்பையும் மருந்துகளின் பெயரிலேயே பல புலவர்களின் பெயர்களும், இலக்கியங்களும் இருப்பதிலிருந்து எளிதில் உணர்ந்துகொள்ள முடிகிறது. தமிழர் மருத்துவம் உலகில் தமிழர்கள் பரவி வாழ்ந்த அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றன. எனினும் குமரி மாவட்டம் இன்றும் இதில் தலைசிறந்து விளங்குகின்றது.

லெமூரியாக் கண்டம் என நம்மால் கருதப்படும் பகுதியின் எச்சமாகக் கருதப்படும் குமரி மாவட்டத்தில் தமிழரின் பாரம்பரியமிக்க மருத்துவம் பொதுமருத்துவம், சிறப்பு மருத்துவம், கை மருத்துவம், அஞ்சறைப்பெட்டி மருத்துவம், வீட்டு மருத்துவம், பாட்டி மருத்துவம் என பல்வேறு வழிகளில் அனைத்து பகுதிகளிலும் தழைத்தோங்கி வந்துள்ளது.

பொதுமருத்துவம் செய்து வந்தவர்கள் உடல், மனம் சார்ந்த அனைத்து நோய்களுக்கும் நாடிகள் பார்த்தும், குறிகுணங்களை ஆய்வுசெய்தும் மருத்துவம் செய்து வந்துள்ளனர். குமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஊருக்கும் குறைந்த அளவில் ஆய்வு செய்தாலும் பண்டையகாலம் முதல் இன்றுவரை பத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இருந்துவருகின்றனர். எனினும் பொதுவாக பெயர்பெற்று விளங்கியவர்கள் ஒரு சிலரே ஆவர். மூலச்சல், காப்புக்காடு, பாலூர், புதுக்கடை, கருங்கல், பாலப்பள்ளம், ஆனைக்குழி, செல்லங்கோணம், களியக்காவிளை, வெள்ளறடை, நிலமாமூடு, மார்த்தாண்டம், முஞ்சிறை, பரக்குன்னு, குலசேகரம், செருப்பாலூர், மாத்தார், மாத்தூர், கிள்ளியூர், ஐரேனிபுரம், வேர்கிளம்பி போன்ற இடங்களில் பொதுமருத்துவம் சிறப்புற்று விளங்குகின்றது.

இதுபோன்றே குமரி மாவட்டத்தில் கற்பிணிகளை பராமரிக்கும் மருத்துவச்சிகள் என அழைக்கப்படுபவர்கள் ஒவ்வொரு ஊரிலும் இருந்துள்ளனர். கற்பமுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் எந்தவித இன்னல்களுக்கும் இவர்களே அழைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாதமும் கற்பமுற்றவர்களுக்கான உணவுமுறைகள், இயக்கமுறைகள், கைமருந்துகளை இவர்கள் வழங்கி வந்ததோடு கற்பவதிகளின் உடல் குறிகளையும், குணங்களையும் கண்டு அதற்கேற்ப மருத்துவம் செய்துவந்துள்ளனர்.

தமிழர்கள் பாரம்பரிய மருத்துவமுறைகளில் பல சிறப்புமருத்துவமாக அன்றும் இன்றும் கையாளப்படுகின்றன. உயிர்காப்பு மருத்துவம் எனப்படும் வர்ம மருத்துவம் தலைமையிடத்தில் உள்ள ஒன்றாகும். நீண்டகாலமாகவே கடைபிடிக்கப்பட்டு வரும் இம்மருத்துவத்தில் கைதேர்ந்த வல்லுநர் உலகின் எந்த பகுதிகளிலும் இல்லாத அளவிற்கு குமரி மாவட்டத்திலேயே செறிந்து வாழ்கின்றனர். இதற்கு இங்கு வாழ்ந்த ஒரு குறிப்பிட்ட இன மக்களே காரணம் என கருதுகின்றனர். இவர்களே இக்கலையை தங்கள் பாரம்பரியமாக கொண்டவர்கள் எனவும் சிறு குறு குழுக்களாக மக்கள் வாழ்ந்த காலத்திலேயே இந்நுட்பங்களை தங்கள் கைவசப்படுத்தி தங்கள் பரம்பரையினருக்கே கற்றுத் தந்துள்ளனர் என்றும் பிற்காலங்களில் சூழ்நிலை காரணமாக சிறிதளவில் பிறரிடமும் பரவி உள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர். இன்று இந்த கலை உலகம் முழுவதும் மக்களை கவர்ந்து இழுக்கும் வண்ணம் புகழ்பெற்று விளங்குகின்றது. குமரி மாவட்டத்தில் பரம்பரையாகவும், குலவழியாகவும் முறைப்படுத்தப்பட்டு, பயிற்றுவிக்கப்பட்டு அனுபவ வாயிலாக அறியப்பட்ட இக்கலையை பிறர் எளிதில் படிக்க முடியாத சூளலில், மறைக்கப்பட்டு அழிவுற்று வந்த நிலையில் மூலச்சல் மருத்துவர் த. இராஜேந்திரன் முயற்சியால் சூளியல் அறிஞர் முனைவர் ஜி. சந்தானகுமார் (நாகர்கோவில்), முனைவர் ஜெயக்குமார் (திருச்செந்தூர்) இவர்கள் துணையோடு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மூலம் நெறிமுறைப்படுத்தப்பட்ட கல்வியாக்கி அனைவருக்கும் பொதுமையாக்கப்பட்டுள்ளது. அதன்வழி 2000 ஆண்டிலிருந்து மறுமலர்ச்சியுற்று இன்று உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குகின்றது.

இந்த சூளலில் 2005-ஆம் ஆண்டிலிருந்து பல்லாண்டுகள் முறைப்படி அடிப்படையோடு தேர்ச்சியடைய வேண்டிய கல்வியானது ஒருநாள், இருநாள் கலந்தாய்வுகள் மற்றும் பயிற்சி பட்டறைகள் மூலம் சமூகத்தின் சந்துபொந்துகள் எல்லாம் பரப்பப்பட்டு விழிப்புணர்வடைந்து கொண்டிருக்கின்றது.

இதன் குறுகியகால ஈசல் போன்ற வளர்ச்சிகள் அரைகுறை கல்வியாளர்களை உருவாக்கி சமூகத்தின் மருத்துவசேவையில் குழப்பத்தையும், பொருளாதார சீர்கேட்டையும் விளைவித்துக் கொண்டிருப்பதாக பல மருத்துவ வல்லுநர்கள் வருத்தம் தெரிவித்தும் வருகின்றனர். வர்ம மருத்துவத்தின் ஆழத்தையோ, அடிப்படையையோ, பின்விளைவுகளையோ அறியாத ஒருநாள், இருநாள் என கற்ற வல்லுநர்களால் இதன் ஆழமான நுட்பமான தடங்கள் அழிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தையும் நன்கு தேறிய வர்ம வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். மட்டுமன்றி, கண்மூடித்தனமான அறிவியல் விழிப்புணர்வற்ற இதுபோன்ற புத்திசாலிகள் மக்களின் அறியாமையை காசாக்கும் விளம்பர உத்திகளையும் கையாண்டு வருவது அனைத்து மருத்துவ உலக வல்லுநர்களையும் கோபத்தில் ஆழ்த்தி உள்ளது என்பதும் நிதரிசமான உண்மையாகும்.

வர்ம மருத்துவம் என்பது தமிழர்களின் ஆபத்து உயிர்காப்பு மருத்துவமாகும். பண்டைய காலத்திலிருந்தே மரத்திலிருந்து விழுபவர்கள், எதிரிகளால் தாக்குண்டவர்கள், விலங்குகளால் தாக்கப்பட்டவர் என பல்வேறு தாக்கங்களுக்குட்பட்டு ஏற்படும் மயக்கம், சன்னி, மூச்சடைப்பு போன்றவைகளுக்கு அடங்கல்கள் எனப்படும் தலங்களை தூண்டி குணப்படுத்தும் வல்லுநர்களே சிறந்த வர்மாணிகளாக மதிக்கப்பட்டனர்.

இத்தகைய நுட்பங்களைக் கையாளும் சிறந்த வல்லுநர்களாக விளங்கும் பல வர்மாணிகள் குமரி மாவட்டம் முழுவதும் காணப்பட்டனர். இன்று விரல்விட்டு எண்ணும் அளவிற்கு அடங்கல்முறைகள் தெரிந்த வல்லுநர்கள் உள்ளனர்.

பண்டையகாலத்திலிருந்தே வர்ம மருத்துவத்தின் அனைத்து நுட்பங்களிலும் பெயர்பெற்று விளங்கிக் கொண்டிருக்கின்ற முக்கிய இடங்கள் தக்கலை அருகில் உள்ள மூலச்சல், குளச்சல் அருகில் உள்ள ஓலக்கோடு, கருங்கல் அருகில் உள்ள காட்டுக்கடை, களியக்காவிளை அருகில் உள்ள மேக்கோடு, செல்லங்கோணம், ஆனக்குழி போன்ற இன்னும் பல பகுதிகளுமாகும். இங்கு வர்ம பாதிப்படைந்தவர்களுக்கான அனைத்துவகை மருத்துவமுறைகளும் கையாளப்படுகின்றன.

வர்ம மருத்துவத்தில் ஆபத்து உயிர்காப்பு மருத்துவம், எலும்புமுறிவு மருத்துவம், கைகால் மூட்டு பிறழ்தலுக்கான மருத்துவம், காயங்களுக்கான மருத்துவம், பொதுமருத்துவம் என பல மருத்துவமுறைகளும் அடங்கல், இளக்குமுறைகள், தடவல், தட்டல், சீராக்கல், அகப்புற மூலிகை மருத்துவம் என சிறந்த வகை மருந்துகளும் கடைபிடிக்கப்படுகிறது. வர்ம மருத்துவம் செயலிழப்பு நோய்கள், சிதைவு நோய்கள், நரம்புநோய்களுக்கான சிறந்த மருந்துகளையும், மருத்துவ செயல்முறைகளையும் கொண்ட ஓர் ஒப்பற்ற மருத்துவமாகும் என்பது ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டிய தகவல் ஆகும். வர்ம யோகச்சூத்திரம், வர்ம ஒடிவுமுறிவு சரச்சூத்திரம், ஒடிவுமுறிவு சாரி, கையடக்கம், தெய்வீக அடக்கம் போன்றவைகள் சிறந்த நூல்கள் ஆகும்.

இப்பாரம்பரிய மருத்துவத்தில் சிறப்பு மருத்துவத்தில் மற்றொன்று விச மருத்துவம் ஆகும். விச மருத்துவத்துக்கென்று தனி மருத்துவர்கள் இருந்துள்ளனர். தமிழ் இலக்கியங்களிலும் விடபரிகாரிகள் பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன. விடமருத்துவர்கள் பாம்புகடி, தேள்கடி, நாய்கடி, பூரான்கடி, காணக்கடி என அனைத்து கடி விசங்களுக்கும், தோலில் வரும் பற்றுப்படை, சொறிசிரங்கு, புண்புரைகள் போன்ற அனைத்து நோய்களுக்கும் சிறப்பு மருத்துவர்களாக விளங்குகின்றனர்.

பாம்புக்கடி என்பது கொடிய உயிராபத்தை விளைவிக்கக்கூடிய ஒன்றாகும். அதற்குரிய உயிர்காப்பு சிகிட்சைமுறைகள் நம் பாரம்பரிய மருத்துவத்தில் புகழ்பெற்று விளங்கி உள்ளது. விச உயிரிகள் தீண்டி மயக்கநிலையில் வருபவரின் நாடியைப் பார்த்து முடியும் முடியாது எனும் கணிப்பை அறிந்து செய்யும் வல்லமை விடபரிகாரிகளின் சிறப்பு தன்மை ஆகும். குறிகுணங்களைக் கண்டே விசமுள்ளவை, விசமற்ற உயிரி என்பதையும் எளிதில் கணித்துள்ளனர்.

விசம் தீண்டி மயக்கநிலையில் உள்ளவர்களின் நாசியில் தும்பை இலைச்சாற்றினை நசியம் செய்யும் (துளியாக விட்டு ஊதுவது) போது மயக்கமடைந்தவர் நினைவு திரும்பிவிடுவார். பின்னர், உச்சியை நெல்லினால் கீறி அதில் சில குறிப்பிட்ட மருந்துகளை வைத்து தேய்த்து விடுவர். கடிவாயில் விசகற்களை பதித்து விசத்தை உள்ளே ஏறவிடாமல் உறிஞ்சி எடுப்பது போன்ற பல்வேறு அவசரகால மருத்துவமுறைகளோடு மூலிகைகளிலான அகப்புற மருந்துகளையும் பயன்படுத்துவர்.

விட மருத்துவ கைவல்லியம், ஆருடநூல், சித்திராருடம், விசாருடம் போன்ற பல சுவடிகள் விச வைத்திய நூல்களாகும். இம்மருத்துவத்தில் தக்கலை பகுதிக்கு அருகில் உள்ள குமாரபுரம், முஞ்சிறைக்கருகிலுள்ள காப்புக்காடு, கருங்கல் பகுதிக்கு அருகிலுள்ள பூட்டேற்றி போன்ற ஊர்கள் தலைசிறந்தவையாகும்.

தமிழர் பாரம்பரிய மருத்துவத்தில் வாதநோய் மருத்துவம், பித்தநோய் மருத்துவம், கை விடமருத்துவம், மஞ்சள்காமாலை நோய் மருத்துவம், மனநோய் மருத்துவம், விலங்கின நோய் மருத்துவம் என தனித்தனியே பல சிறப்பு மருத்துவமுறைகள் வகைப்படுத்தப்பட்டு கடைபிடிக்கப்பட்டுள்ளமையை எண்ணும் நம் பாரம்பரியம் எவ்வளவு தெளிவோடும், நுட்பங்களோடும் செயல்பட்டு வந்துள்ளது என உணரமுடிகிறது.

வாத மருத்துவத்தினை மட்டுமே சிறப்பு மருத்துவமாக கொண்டு குலசேகரம் பகுதியில் உள்ள பொன்மனை என்ற இடத்தில் மருத்துவம் செய்துவந்துள்னர். வாத மருத்துவ நிதானம், வாதநோய் நிதானம், வாத மருத்துவ கைவல்லியம் போன்ற சுவடிகள் இம்மருத்துவம் சார்ந்த நூல்களாகும்.

பித்தம், மஞ்சள்காமாலை நோய்களுக்கு திங்கள்சந்தை அருகே இலங்கமூட்டு, நெய்யூர் எனப்படும் பகுதியிலும், பரக்குன்று, ரீத்தாபுரம், மூலச்சல், மேக்காமண்டபம் அருகில் உள்ள பாண்டிவிளை, தக்கலை போன்று இன்றும் பல இடங்களிலும் சிறப்பு மருத்துவங்கள் செய்யப்பட்டுள்ளன. காமாலை நிதானம், மஞ்சள்நோய் நிதானம், பித்தநோய் நிதானம் போன்ற சுவடிகள் இம்மருத்துவம் சார்ந்தவைகள் ஆகும்.

தலைநோய் மருத்துவத்தில் கருங்கல் அருகே உள்ள வெள்ளியாவிளை எனும் பகுதி சிறப்பு பெற்றுள்ளது. தலைநோய் நிதானம், தலைநோய் மருத்துவம் போன்ற சுவடிகள் இம்மருத்துவம் சார்ந்த சிறந்த சுவடிகளாகும்.

கண்நோய் மருத்துவம் தக்கலை அருகேயுள்ள கல்குறிச்சி, புதுக்கடை அருகே உள்ள கைச்சூட்டி போன்ற இன்னும் பல இடங்களிலும் சிறப்புற்று விளங்கி உள்ளது. நயனநோய் நிதானம், தலைநோய் நிதானம் போன்றவைகள் கண்நோய்க்கான சிறந்த சுவடிகளாகும்.

குழந்தை நோய்களுக்கென்று பல இடங்களில் மருத்துவம் சிறப்புற்று விளங்கி வந்துள்ளது. மேக்காமண்டபம் அருகில் உள்ள மாறாங்கோணம், காஞ்சிரகோடு, வில்லுக்குறி அருகில் உள்ள காரவிளை, தக்கலை, தேங்காப்பட்டணம், ஆசாரிப்பள்ளம், இரணியல் போன்று பல இடங்கள் இதற்கு சிறப்புற்ற இடங்களாகும்.

அம்மைநோய்கள், அவசரகால தொற்றுநோய்களுக்கு என்று பல மருத்துவ வல்லுநர்கள் சிறப்புற்று விளங்கி உள்ளனர். மேக்காமண்டபம் அருகில் சாமிவிளை, கருங்கல் அருகில் பாலூர், காப்பிக்காடு, முஞ்சிறை, மருதங்கோடு, மூலச்சல், ஆசாரிப்பள்ளம் போன்ற இடங்களில் இம்மருத்துவம் சிறப்புற்று விளங்கி உள்ளது.

பாலவாத நோய்க்கென்றே கூட சிறந்த வல்லுநர்கள் இருந்துள்ளனர். மேக்காமண்டபம் அருகில் சீயோன்மலை, வேர்கிளம்பி, வில்லுக்குறி, பரசேரி, இரணியல், குளச்சல் போன்ற இடங்களில் இம்மருத்துவம் சிறப்புபெற்று விளங்கி உள்ளது.

பாரம்பரிய விலங்கின மருத்துவத்திலும் கன்னியாகுமரி மாவட்டம் சிறந்து விளங்கி உள்ளது. நெல்லிமாமூடு, மூலச்சல் அருகே மருவூர்கோணம், காப்புக்காடு, குளச்சல், நுள்ளிவிளை, கண்டன்விளை போன்ற இடங்களில் இம்மருத்துவம் சிறப்பாக விளங்கி உள்ளது. மாட்டுவாகடம், மாட்டு வாகட நிதானம், மாட்டு வைத்தியம் போன்ற சுவடிகள் விலங்கின மருத்துவத்திற்கான சிறந்த சுவடிகள் ஆகும். உலகின் அனைத்துப்பகுதி மக்களுக்கும் பயன் விளைவிக்கும் அனுபவ அறிவுகளைக் கொண்ட பல்வேறு இயற்கை மூலிகை சார்ந்த மருத்துவமுறைகள் குமரி மாவட்டத்தின் புதையல் இரகசியமாகும். இஃது ஆய்வு செய்யப்பட்டு அனைத்து தீராத நோய்களுக்கும் மருந்துகள் கண்டுபிடிக்க வேண்டியது ஆய்வறிஞர்களின் கடமை ஆகும். அரசும், ஆர்வலர்களும் இணைந்து தமிழர்களின் பாரம்பரிய மருத்துவமுறைகளை பாதுகாத்து உலகிற்கு பயன் விளைவிக்க முன்வர வேண்டும்.

மருத்துவ செயல்முறைகள்

·             கை மருத்துவம்

·             பாட்டி மருத்துவம்

·             வீட்டு மருத்துவம்

·             அஞ்சறைப்பெட்டி மருத்துவம்

·             பொதுமருத்துவம்

·             சிறப்பு மருத்துவம்

சிறப்பு மருத்துவப் பிரிவுகள்

1.            கற்பிணி மருத்துவம்

2.            குழந்தை மருத்துவம்

3.            வர்ம மருத்துவம்

4.            விச மருத்துவம்

5.            அம்மைநோய் மருத்துவம்

6.            வாதநோய் மருத்துவம்

7.            பித்தநோய் மருத்துவம்

8.            மஞ்சள்காமாலை மருத்துவம்

9.            தலைநோய் மருத்துவம்

10.          கண்நோய் மருத்துவம்

11.          கைவிச மருத்துவம்

12.          விலங்கின மருத்துவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *