சஜீவின் தெய்யத்தின் முகங்கள் நூல் குறித்த ஒரு பார்வை

சஜீவின் தெய்யத்தின் முகங்கள் நூல் குறித்த ஒரு பார்வை

  • By Magazine
  • |

கிருஷ்ணகோபால்

    கடந்த 2024 ம் ஆண்டு ஜுன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னால் நண்பர்களோடு வட கேரளத்திற்கு மூன்று நாட்கள் சுற்றுலா சென்று வந்தேன்.

அதன் ஒரு பகுதியாக கண்ணூர் அருகே தெய்யம் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட சிறக்கல் அருங்காட்சியகத்தை பார்வையிடும் போது தெய்யத்தின் பல முகங்களை பார்க்க முடிந்தது . அதை பார்த்ததும்  தெய்யம் எனும் களியாட்டம் நிகழும் இடத்திற்குச் சென்று பார்க்க வேண்டும்  என  ஆர்வம் பொங்க அங்குள்ளவர்களிடம் விசாரிக்கும் போது  நடவு தொடங்கும் ஐப்பசி மாதம் தொடங்கி தொடர்ந்து ஆறு மாதங்கள்  இங்கு நடைபெறும் என்றும் இப்போது தெய்ய சீசன் இல்லை எனவும் உடனே பார்க்க வேண்டுமென்றால் காலையும் மாலையும் ஒரு வெள்ளோட்டமாக நடைபெறும் பரஸ்ஸீனிக்கடவு முத்தப்பன்  ஆலயத்திற்கும் போக வேண்டும் என வழிக்காட்டினார்கள்.

உடனே அங்கிருந்து பேருந்து ஏறி பரஸ்ஸீனிக்கடவுக்குச் நண்பர்களோடு சொன்றேன்.  முத்தப்பன் ஆலயத்தினுள் நுழையும் போது  கோவிலுக்குள் உலாவிக் கொண்டிருக்கும் நாய்கள் தான்  எங்களை வரவேற்றன. நாய் குறித்து அங்குள்ளவர்களிடம் விசாரிக்கும் போது அது முத்தப்பனுக்கு பிரியப்பட்ட விலங்கு என்றார்கள்.கட்டுக்கடங்காதக் கூட்டம் .நாங்கள் நினைத்த இடத்தில் நின்று தெய்யாட்டம் பார்க்க இயலவில்லை.அங்கு பிரசாதமாக வழங்கப்படும் கள்ளும் கிடைக்கவில்லை. தெய்யாட்டம் முடிவதற்கு முன்பே  கூட்டத்தில் நசுங்கி பிதுங்கி பேருந்திற்கு சமயமாகிறது என  ஆலயத்தை விட்டு வெளி வந்தோம்.

சாதாரணமாக தெய்யத்தை பார்க்கும் ஒருவர் நம்மூர் சாமியாட்டத்தோடும் கணியாட்டத்தோடும் இணைத்துப் பார்த்துக் கொள்வோம் அது ஓரளவுக்கு உண்மையும் கூட.

அது ஒரு நாட்டுப்புற நிகழ்த்துக் கலையெனவும் எல்லா தெய்யமும் ஒரேப் போன்றவைதான் என்ற எண்ணம் முதலில்  தோன்றுவது இயல்பே.ஆனால் தெய்யத்தின் முகங்கள்’  புத்தகத்தை வாசித்ததின் வழியே  நானூறுக்கும் மேற்பட்ட  தெய்யங்கள் உள்ளதென்றும் அதில் பெயர் பெற்றவை  முப்பது ஒன்பதென்றும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார் .

பெரும்பாலும் தெய்யம் ஆடும் கலைஞர்கள் புலயர், மலயர், வண்ணார், மாவிலர், கொப்பாளர், வேலர் என ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களே என தனது ஆய்வின் முடிவில் விளக்கும் நூலாசிரியர்,

முச்சிலோட்டு பகவதி, மார்க்கப்போதி, கதிவனூர் வீரன், பொட்டன் என்ற நாட்டுப்புற கொலையுண்ட வீரர்களையோ, துர்மரணமடைந்தவர்களையோ கதைப் பாடலாக்கி தெய்யம் கட்டுகின்றனர் என்கிறார்.

தெய்யம் எனும் புராதனக் கலை வடிவம் எப்போது தொடங்கியது என்பது குறித்து துல்லியமான தரவுகள் இல்லையென்றும் இருப்பினும் 1500 வருடங்களுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே தெய்யம் ஒரு வெறியாட்டமாக நடைப்பெற்று வருகிறதென்றும் பழந்தமிழர் மரபோடு தொடர்புடைய வேலன் வெறியாட்டத்தோடு ஒப்பியல் செய்து ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுவதை நூலாசிரியர் முன் வைக்கிறார்.

தமிழ் மரபோடு தொடர்புடைய  தமிழர்கள் மறந்துப்போன சிலம்பை  இந்த தெய்யக்கலைஞர்கள் காலில் அணிந்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

 இருப்பினும் தெய்யம் தோற்றம் குறித்து கூறப்படும் தொன்மக்கதைகளில்  ‘மணக்காடன் குருக்கள்’ பற்றிய கதை முதன்மையானது. முதலில் தெய்யம் கட்டும் தெய்யக் கலைஞர்கள் (வண்ணார் சமூகத்தினர்) மணகாடன் சமாதிக்குச் சென்று கோழியை பலிக்கொடுத்து தனது முதல் தெய்யத்தை கட்டுகின்றனர்.

இதன் தொடர்ச்சியான தெய்யத்தின் மண்சார்ந்த நாட்டார் கதைகள் வட கேரளம் முழுதும் விரவிக் கிடக்கின்றன..

தெய்ய கலை சம்பந்தப்பட்ட கலைஞர்களையும் அதனோடு தொடர்புடையவர்களையும் அழைக்க பிரத்தேக கலைகளஞ்சிய சொற்றொடர்கள் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணத்திற்கு தெய்யம் ஆடுபவர்களை ‘கோலக்காரர்கள்’ என்றும் தெய்யாட்டத்தை ‘களியாட்டம்’ என்றும்  காவுகளில் உள்ள பூசாரிகளை ஆதிக்கசாதிகள் ‘கோமரங்கள்’ எனவும் ஒடுக்கப்பட்ட சாதிகள்  ‘வெளிச்சப்பாடுகள்’ என்றும்  தீக்குழியை ‘மேலேறி ‘எனவும்  அழைக்கின்றனர். குருத்தோலையை ‘ஒலி ‘எனவும், கருக்கல் நேரத்தில் விளக்கேற்றுபவனை ‘அந்தித்திரியன்’  தெய்வலோகத்திலிருந்து தெய்வத்தை வரவழைத்தல் ‘வரவிழி’என இப்படி கலைச்சொற்களால் அழைக்கப்படும் உதாரணங்களை அடுக்கிக் கொண்டேச் செல்லலாம்.

இந்தநூலை எழுதியவர் ஒரு செண்டை மேளக் கலைஞர். அசுரமேளம் என்று கோவிலுக்குள் அனுமதிக்காமல் இருந்த  செண்டை மேளத்தை தெய்யம் என்னும் கலை  அரவணைத்துக் கொண்டதையும்; ஒரு களியாட்டத்தை வெற்றியடையச் செய்ய நல்ல வாத்திய கலைஞர்கள் வேண்டும் என்றும் ஓர் சிறந்த தெய்யக் கலைஞனுக்கு நல்ல தாள போதமும் செண்டை மேளக் கலைஞனுக்கு தெய்யத்தை ஆட வைப்பதற்கான நல்லனுபவம் இருக்க வேண்டும் என்கிறார்.

கேரளாவில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான காவுகள்  உள்ளன.அதில் சர்ப்பக்காவு, சாஸ்தாகாவு உள்ளிட்ட நிறைய காவுகள் இருக்கின்றன. வட கேரளமான காசர்கோடு, கோழிக்கோடு, கண்ணூர் மாவட்டங்களில் அதிகமும் நாட்டார் வழிபாடோடு தொடர்புடைய தெய்யக் காவுகளே அதிகம் உள்ளன.

ஒவ்வொரு காவுகளிலும்  தெய்யக்கலைஞர்கள் உள்ளனர். காவுகள் என்பது சூழலியலோடு தொடர்புடையது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

குறிப்பாக ஒரு காவுகளில் உள்ள கலைஞர்கள் வேறு காவுகளில் ஆட வேண்டுமென்றால் அவர்கள்’ பட்டம் ‘ பெற்றிருக்க வேண்டும் பட்டம் பெறுவது ஒன்றும் சாதாரண காரியமல்ல. பலா, செண்பகம், புளி முதலான விறகுகளைக் கொண்டு எரித்து தீக்கனலாக்கி அதில் 101 நேரம் விழுந்து எழும்ப வேண்டும் .

சில இடங்கில் 130 என அந்த எண்ணிக்கை நீளும். ஆயிரம் அணியறை ஏறி இறங்கினால் தான் ‘அரைக்கோலக்காரன்‘ என அவர்கள் சொல்லிக் கொள்ளும் பழஞ்சொல்  அவர்களிடம் உள்ளது.

தேவக் கூத்து’தெய்யம் கண்ணூர் மாவட்டம் தெக்கும்பாடு கூலம் தாயக்காவில் ஓராண்டு இடைவெளிக்கு ஒரு முறை நிகழ்த்தப்படுகிறது. இதை ‘வள்ளிக் கூத்து ‘ என்றும்  ‘வள்ளியம்மைக் கூத்து என்றும் அழைக்கின்றனர். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் எல்லா தெய்யாட்டங்களிலும் இத்தெய்யாட்டம் மட்டுமே பெண் கட்டி ஆடும் தெய்யமாகும். மலையர் சமூகத்தைச் சார்ந்த பெண்கள் தான் தெய்யம் கட்டுகிறார்கள். இது பெண் ஆடுவதால் காலில் சலங்கைக்குப் பதிலாக கொழுசும், முகத்தெழுத்து ரௌத்திரத்திரத்திற்குப் பதிலாக சாந்தமும் கொண்டவை.

பிறகு ‘முஸ்ஸீம் தெய்யம்’ எனும் மாப்பிள்ளைத் தெய்யமானது மலையர் மற்றும் கொப்பாளர் சமூகத்தினரால் ஆடப்படுகிறது.

சங்கொலியும் வாங்கொலியும் ஒருமித்து சங்கமிக்கும் சமூக நல்லிணக்கத்தை மலபாரின் மட்டுமே காணமுடியும் என்கிறார் நூலாசிரியர். ஆலித்தெய்யம், கரிசாமுண்டித் தெய்யம், உம்மச்சி தெய்யம்’, கலந்தரி முக்ரி தெய்யம் என்ற தெய்யங்கள் நிகழ்த்தப்படுகின்றன. ஒரு கோலதாரி இரண்டு தெய்யங்கள் கட்டுவது’ உம்மச்சி’ தெய்யத்தில் தான் காண முடியும்.

கோலதாரிகளுக்கு சுற்றுவட்டார  எல்லா  நாட்டார் கதைகளும்  தெரிந்திருக்க வேண்டும்  .மனித வாழ்வின் தத்துவத்தையும் மெய்யியலையும்  புராண இதிகாசங்கள் மற்றும் கதை நிகழும் மக்களின் வட்டார மொழியோடு பரிச்சயம் வேண்டும் அப்போதுதான் நல்ல கோலகாரனாக முடியும்.

மக்களை ஈர்க்கும்  வண்ணம் கூடுதலாக உடல் மொழி வேண்டும். புது புது தத்துவார்த்த மெய்யியலை அறிவுபூர்வமாக உரையாற்றும் வல்லமைப் பெற்றிருந்தால் மட்டுமே ஒரு கோலதாரியை தலைசிறந்த கலைஞனாக நாட்டு மக்கள் அங்கீகரிப்பார்கள் என்கிறார் நூலாசிரியர்.

எப்படியிருப்பினும் தெய்யம் கட்டும் கலைஞர்கள் தெய்யம் கட்டி கோலதாரிகளாக உருமாறும் ஆறுமாத காலத்தைத் தவிர மற்ற நேரங்களில் சாதாரண மனிதர்கள் அவர்களை நம்பி இருக்கும் குடும்பத்தை பட்டினியில் தள்ள முடியாததால் துணி தைப்பது, கட்டிட வேலைக்குச் செல்வது, எலக்ட்ரீசியன் பணிக்குச் செல்வது, தெய்ய அணிகலன்கலைச் செய்வது, ஆட்டோ, கார் ஓட்டுவது என பல தரப்பட்ட வேலைகளையும் ஒவ்வொரு தெய்யக் கலைஞர்களும் செய்கின்றனர்.

இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்ததும் வட கேரளத்தில் உள்ள ஏதோ ஒரு காவில் தெய்யம் எனும் களியாட்டம் பார்க்க வேண்டும். அதற்கான பருவம் இதுதான்  என அறிந்த பின் அங்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தை மட்டும் கட்டுப்படுத்த இயலவில்லை.             

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *