உடல் பருமனை குறைக்கும்  ‘சியா’ விதைகள்

உடல் பருமனை குறைக்கும்  ‘சியா’ விதைகள்

  • By Magazine
  • |

நமது மூலிகை மருத்துவர்

சியா விதைகளை கொடுக்கும், சியா செடி மத்திய அமெரிக்கா மற்றும் மெக்சிகோவே பூர்வீகமாக கொண்டது. ஆஸ்திரேலியா, அர்ஜென்டைனா, பெரு மற்றும் இந்தியாவிலும் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் கர்நாடகா, மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் பயிராகிறது.

சியா செடி புதினா மற்றும் துளசி போன்று லேமினேசியே குடும்பத்தை சார்ந்தது.

இதனை வீட்டு தோட்டங்களிலும் பயிரிடலாம். விதைகள் முளைப்பதற்கு 2 முதல் 14 நாட்கள் தேவைப்படும். நான்கு மாதங்களில் அறுவடைக்கு தயாராகி விடும்.

சியா செடிகள் 3 முதல் 5 அடி உயரம் வரை வளரும்.  இதன் பூக்கள் நீலநிறத்தில் காணப்படும். விதைகள் சிறியதாக இருக்கும்.

 வெண்ணிற விதைகளும் இருக்கும். கருப்பு நிற விதைகளும் உண்டு. விதைகளில் மருத்துவ குணமிக்க சத்துப்பொருள்கள் நிறைந்துள்ளன.

தாவரவியல் பெயர் 

                Salvia hispanica

அடங்கியுள்ள உயிர்சத்துக்கள்

                விட்டமின் A, விட்டமின் B1, விட்டமின் B3

அடங்கியுள்ள தாதுசத்துகள்

கால்சியம், இரும்புசத்து, பாஸ்பரஸ், நாகசத்து, தாமிரசத்து, மெக்னீசியம், மாங்கனீசு

அடங்கியுள்ள தாவரவேதிப்பொருள்கள் 

Quercetin, Caffeic acid, a Caryophllene, chlorogenic acid, Omega 3, Fatty acid (Alpha Linolenic acid)

அடங்கியுள்ள பிற சத்துகள்

அதிக அளவு நார்சத்து, நன்மை பயக்கும் தாவர கொழுப்பு சத்து, புரதசத்து

சியா விதைகளின் மருத்துவப்பயன்கள்

1. உடல் பருமன் குறைவதற்கு

சியா விதைகளில், அதன் எடையில் 35 சதவீதம் நார்சத்து உள்ளது. ஆகவே உடல் எடையை குறைப்பதில் சியாவிதைகள் முக்கிய பங்கு வகிக்கிறது.

தினம் 15 முதல் 30 கிராம் வரை சியா விதைகளை ஒரு டம்ளர் தண்ணீரில் அரை முதல் ஒருமணி நேரம் ஊற வைத்து அத்துடன் சிறிது தேன் மற்றும் சிறிது எலுமிச்சம் பழச்சாறு கலந்து ஆகாரத்திற்கு அரைமணி நேரத்திற்கு முன் தினம் சாப்பிடலாம். இதனால் அதிக உணவு உண்பது குறையும். பசி தாமதப்படும். இது உடல் பருமன் குறைக்க சிறந்த பானமாகும்.

2. எலும்பு மற்றும் பற்கள் ஆரோக்கியத்திற்கு

                சியா விதைகளில் அதிக அளவில் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற தாதுசத்துக்கள் இருக்கிறது. ஆகவே சியாவிதைகளை பாலில் ஒரு மணிநேரம் ஊற வைத்து தினம் சாப்பிட்டு வந்தால் எலும்பு மற்றும் பற்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக பேணலாம்.

3. இருதய ஆரோக்கியத்திற்கு

சியா விதைகளில் அதன் எடைக்கு 17 சதவீதம் Omega-3, Fatty acid உள்ளது. மேலும் 35 சதவீதம் நார்சத்து இருப்பதால் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கிறது. நல்ல கொழுப்பை (HDL) அதிகரிக்க செய்கிறது. மேலும் இரத்த அழுத்தத்தை சீராக்கி, இருதய ஆரோக்கியத்தை பேணுகிறது.

4. நீரிழிவு நோயாளர்களுக்கு

சியா விதைகளில் உள்ள அதிகப்படியான நார்சத்து, ஜீரணத்தை தாமப்படுத்துவதால் உணவில் உள்ள சர்க்கரை சத்தை குடல் மெதுவாக உறிஞ்சி இரத்தத்தில் கலக்க செய்கிறது. மேலும் பசியும் அடங்குகிறது. Chlorogenic acid என்னும் தாவரவேதிப்பொருள் இன்சுலினுக்கு உடல் கட்டுபடும் தன்மையை உருவாக்குகிறது. சியா விதைகளில் உள்ள பிறசத்துப் பொருள்கள் அசதியை மாற்றி ஆரோக்கியத்தை பேணுகிறது.

5. தோல் பளபளப்பிற்கு

                சியா விதைகளில் உள்ள Omega-3, Fatty acid மற்றும் Antioxidant தோலின் ஈரப்பதத்தை நிலை நிறுத்துகிறது. மேலும் தோலின் மீள்தன்மையை (Elasticity) பராமரித்து  தோல் பளபளப்பு தன்மையை கொடுக்கிறது.

6. மலச்சிக்கலுக்கு

                தினம் 15 முதல் 30 கிராம் சியா விதைகளை ஒருமணிநேரம் அல்லது ஒரு இரவு தண்ணீரில் ஊற வைத்து குடித்து வர மலச்சிக்கல் மாறும். மேலும் உடலில் தங்கியுள்ள கழிவுகளும் வெளியேறும். குடலில் உள்ள நன்மை பயக்கும் நுண் கிருமிகளை ஊக்குவிக்கும்.

7. புற்றுநோய் தடுப்பிற்கு

                சியா விதைகளில் அடங்கியுள்ள Qucercetin, Caffeic acid போன்ற ஆன்டி ஆக்சிடண்டுகள் மற்றும் Alpha linolenic acid போன்ற ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் புற்றுநோயை தடுக்கும் தன்மை இருப்பதால், இவ்விதைகளை தினம் பயன்படுத்தலாம்.

8. உடலின் நீர்த்தன்மையை பாதுகாக்க

                சியாவிதைகள் தன் எடைக்கு 10 முதல் 12 பங்கு நீரை உறிஞ்சுகிறது. ஆகவே ஓர் இரவு ஊறவைத்த சியா விதைகளை சாப்பிட உடலின் நீர்த்தன்மையை நீண்ட நேரம் பாதுகாக்கலாம்.

9. மூளை ஆரோக்கியத்திற்கு

                சியா விதைகளிலுள்ள ஓமேகா-3 கொழுப்பு அமிலம், மூளைக்கு புத்துணர்ச்சியை கொடுக்கிறது. ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் கவலை மறந்து நல்ல தூக்கத்தை தருகிறது.

10. கவனிக்க வேண்டியவைகள்

  1. சியா விதைகள் 30 கிராம் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தக் கூடாது. அஜீரணம், உப்பிசம் உண்டாகலாம்.
  2. சியா விதைகளை ஊற வைக்காமல், தனியாக உண்ண கூடாது. குடல் அடைப்பு உண்டாகலாம்.
  3. சியா விதைகளை குறைந்தது ½ மணி நேரம் முதல் அதிகப்படியாக ஒரு இரவு வரை ஊறவைத்து, அதிக அளவு தண்ணீர் சேர்த்து பருக வேண்டும்.
  4. சியா விதைகளுடன் தண்ணீர் அல்லது பால், மோர், பழச்சாறுகள் சேர்த்தும் அருந்தலாம்.
  5. சியா விதைகள் குளிர்தன்மை உடைவதால், இருமல், சளி, ஆஸ்துமா உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
  6. சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம்.
  7. சியாவிதைகளுடன் தண்ணீர் அதிகம் சேர்த்துக் பருகாவிட்டால் மலச்சிக்கல், உப்பிசம் உண்டாகலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *