சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்

  • By Magazine
  • |

– வழக்கறிஞர்  பி. விஜயகுமார்

டி.என்.பரிசோதனையில் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கக் கூடாது

பூனாவைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் செல்வந்தர்கள். ஒருவர் மற்றவருக்கு சளைத்தவர் அல்ல. கணவர் பெயர் அருண் ஃபிரோடியா, மனைவி பெயர் அபர்ணா ஃபிரேஷயா. இருவருக்கும் இரு ஆண்குழந்தைகள். அபர்ணா எப்போதும் அவருடைய ஆண் நண்பர்களுடன் அலைபேசியில் தொடர்பில் இருப்பவர். இது அருணுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் மனைவி அதை கண்டு கொள்ளவில்லை.

நாளடைவில் மனைவியின் போக்கு சரியில்லை என்ற மனநிலையில் வந்தவர் தமது 2-வது மகன் தனக்கு பிறந்தவனாக இருக்க முடியாது என்ற சந்தேக வலையில் விழுந்தார். ஊர் உலகுக்குத் தெரியாமல் தனது 2-வது மகன் ரத்த மாதிரியும், தனது ரத்த மாதிரியும் எடுத்து ஹைதராபாத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டி.என்.ஏ சோதனைக்கு உட்படுத்தினார். சோதனையில் தனது 2-வது மகன் அவருக்கு பிறக்கவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதை பார்த்த அவர் மிகவும் அதிர்ச்சியடைந்தார்.

மேற்படி டி.என்.ஏ பரிசோதனை பிரகாரம் அபர்ணாவின் நடத்தை சரியில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டு அருண் தனது மனைவிக்கு எதிராக பூனா மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்குப்பதிவு செய்தார். மனைவியும் கணவரை எதிர்த்து வழக்கை கடுமையாக எதிர் கொண்டார். இறுதியில் மனைவிக்கு எதிராக தீர்ப்பு வந்தது. பூனா நீதிமன்றத்தில் கணவருக்கு மனைவியிடமிருந்து விவாகரத்து ஆணை பிறப்பிக்கப்பட்டது.

சளைக்காத மனைவி கீழ் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பாம்பே உயர்நீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்தார். பாம்பே உயர்நீதிமன்றத்திலும் மனைவியின் மேல் முறையீடு மனு தள்ளுபடியானது.

இருப்பினும் மனைவி விடவில்லை. இன்னும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உச்சநீதிமன்றத்தில் மனைவிக்காக மூத்த வழக்கறிஞர் ஹசீபா அகமாதி என்ற பெண் வழக்கறிஞரும், கணவருக்காக கபில் சிபிலும் ஆஜர் ஆனார்கள். மேற்படி இரு வழக்கறிஞர்களும் இன்றைய நிலையில் ஒரு நிமிடம் வாதாடுவதற்கு ரூ.ஒரு லட்சம் கட்டணம் வசூலிப்பவர்கள். பணம் செலவழிப்பது கணவன் மனைவி இருவருக்கும் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. இருவருமே கோடீஸ்வர குடும்பத்தைச் சார்ந்தவர்கள். இரு வக்கீல்களுக்கும் பணத்தை கொட்டி கொட்டி கொடுத்தனர்.

கபில் சிபில் போன்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் முகுல் ரோகித்தி, அபிஷேக்சிங் மனுவி, ப.சிதம்பரம் ஹாரிஷ் சால்வே போன்றவர்களும் நிமிடத்திற்கு ஒரு லட்சம் பீஸ் வாங்குபவர்கள். உலகில் உள்ள தொழிலில் அதிக வருமானம் ஈட்டும் தொழில் இந்த வக்கீல் தொழிலாகும்.

உச்சநீதிமன்றத்தில் கணவர் தரப்பில் வைத்த வாதம் என்னவென்றால் இரண்டாவது குழந்தை அவருக்குப் பிறக்கவில்லை என்றாலும் அந்த குழந்தையை அவருக்கு விட்டு கொடுக்க மனமில்லை. பிடிவாதமாக அந்த குழந்தை தன்னுடன் மட்டுமே இருக்கப்பட வேண்டும் என வாதிட்டார். இவ்வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் திரு. ராமசுப்பிரமணியன் மற்றும் திருமதி. நாகரத்தினா பெஞ்சில் ந¬பெற்றது. இதற்கு நீதிபதிகள் குழந்தை வேறு ஒருவருக்கு பிறந்தது என்று கூறிவிட்டு, குழந்தையை விட்டு கொடுக்கவே மாட்டேன். என்று சொல்லுவது எந்த விதத்தில் நியாயம் என கேட்டனர். அதற்கு கபில் சிபில் ஆரம்பகாலம் தொட்டே குழந்தைகள் இருவர் கணவர் பராமரிப்பில் மட்டுமே இருந்து வருகிறார் என்றும், இரண்டாவது குழந்தையும் கணவருடன் நன்றாக பழகி ஒட்டிக் கொண்டது என வாதிட்டார். தகப்பனும் குழந்தையும் ஒருவருக்கொருவர் பிரிய வாய்ப்பே இல்லை என வாதிட்டார்.

அதற்கு நீதிபதிகள் இவ்வளவு பேசும் நீங்கள் இந்த குழந்தை வளர்ந்து பெரியவன் ஆனதும் தான் வேறு ஒருவருக்கு பிறந்தவன் என்று தெரிந்து கொண்டால் அவன் மனது எவ்வளவு வேதனைப்படும் என்றனர். குழந்தைகளின் வாழ்க்கையில் விளையாடுகிறீர்களா என்றார்கள். அதற்கு கபில் சிபிலிடமிருந்து ஒரு பதிலுமில்லை. குழந்தை பிறருக்கு பிறந்திருந்தாலும் அது குழந்தையின் தவறில்லையே என நீதிபதிகள் சொன்னார்கள். இறுதியில் தீர்ப்பாக கீழமை நீதிமன்றங்கள் வழங்கிய விவாகரத்து ஆணையை  உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரத்து செய்து கணவருக்கு விவாகரத்து வழங்க முடியாது என்ற ஆணையைப் பிறப்பித்தனர். மேலும் இனிமேலும் குழந்தைகள் விஷயமான டி.என்.ஏ பரிசோதனைகள் இந்த நீதிமன்றத்துக்கு வரக்கூடாது என்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக குழந்தைகளின் நலனே எங்களுக்கு முக்கியமானது என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *