மன இறுக்கமும் வர்ம மருத்துவமும் பற்றிய கருத்தரங்கம்

மன இறுக்கமும் வர்ம மருத்துவமும் பற்றிய கருத்தரங்கம்

  • By Magazine
  • |

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆட்டிசம் (Autism) குறைபாட்டால் பாதிக்கப்பட்ட  குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை முறைகள் குறித்து, சித்த மற்றும் வர்ம மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் மருத்துவப் பயிலரங்கம் கோவையில் நடைபெற்றது. இந்தப் பயிலரங்கத்தை உலக வர்மா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அக்ஷரா சித்தா வர்மா மெடிக்கல் சென்டர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 150-க்கும் மேற்பட்ட சித்தா மற்றும் வர்ம மருத்துவர்கள் இந்தப் பயிலரங்கில் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.

                இதில் வர்ம மருத்துவ மறுமலர்ச்சியின் தந்தை என்று போற்றப்படும் டாக்டர் த. இராஜேந்திரன் அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி உரையாற்றினார். அப்போது அவர், இந்தியாவில் தற்போது சுமார் 25 லட்சம் குழந்தைகள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இந்தக் குறைபாடு பெரும்பாலும் 1 வயது முதல் 7 வயது வரையிலான குழந்தைகளிடையே அதிகமாய் காணப்படுகிறது என்றும் குறிப்பிட்டார். கற்றல், பேச்சுத்திறன் குறைபாடுகள் மற்றும் சமூக உறவில் ஏற்படும் சிக்கல்களுக்குச் சித்த மற்றும் வர்ம சிகிச்சை முறைகள் மூலம் தீர்வு காண முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

                தொடர்ந்து பேசிய டாக்டர் .த.இராஜேந்திரன் அவர்கள் குழந்தையின் மரபணு உருவாக்கம் குறித்து முக்கியமான கருத்தை முன்வைத்தார். “ஒரு குழந்தை உருவான பிறகு, அக்குழந்தைக்கு ஏற்படக்கூடிய 80 சதவீத குறைபாடுகளுக்குத் தந்தையின் மரபணுவே காரணம். குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், முழு வாழ்க்கையும் தந்தையின் மரபணுவே நிர்வகிக்கிறது” என்று அவர் வலியுறுத்தினார். மேலும், தந்தை குடிகாரனாகவோ, போதை மருந்துகளுக்கு அடிமையானவராகவோ,  அல்லது அளவுக்கு அதிகமாக மனச்சோர்வு மற்றும் மன இறுக்கம் உடையவராகவோ இருந்தாலும், குழந்தையின் மரபணுவில் பிரச்சனைகள் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

                சமூகத்தின் சமநிலை குறித்துப் பேசிய அவர், “மனிதர்கள் சமநிலையில் வாழ்வதுதான் உண்மையான ஆன்மீகம். முதலாளியும் தொழிலாளியும் சமநிலை அடைந்துவிட்டால் அது ஆன்மீகம். இப்படி ஒரு சமத்துவமான பாதையில் சமூகம் பயணிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். பாரம்பரிய மருத்துவ முறைகள் யாரிடம் இருந்தாலும், அது ஒரு சம நீதியானது என்று பாராட்டிய அவர், மருத்துவர்கள் மரபணுக் குறைபாடுகளை வர்ம மருத்துவத்தின் மூலம் எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து ஆராய வேண்டும் என்றும், வாழ்க்கை முழுவதும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

                ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் குணப்படுத்த, சித்த மருத்துவத்தின் பாரம்பரிய மூலிகைகள் மற்றும் உடலின் நுண்ணிய ஆற்றல் புள்ளிகளைத் தூண்டும் வர்ம சிகிச்சை முறை ஆகியவை குறித்த செயல்முறை விளக்கங்களுடன் விரிவான பயிற்சியை டாக்டர்.த.இராஜேந்திரன் அவர்கள்  அளித்தார். இதில் பங்கேற்ற அனுபவமிக்க மருத்துவர்கள் சிகிச்சை அளித்தபோது கிடைத்த ஆய்வு முடிவுகளையும், நேர்மறையான அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில், பயிற்சி பெற்ற அனைத்து மருத்துவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

                இந்த நிகழ்ச்சியில் டாக்டர்கள் சொர்ணவனம், அருள்குமார், சங்கர், அகில உலக வர்ம அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் உறுப்பினர்கள் திருமதி.இந்திரா இராஜேந்திரன், ஜெயகர்ணன், ஜாண் செல்வகுமார்,  லோகேஷ், வெங்கட், மோபி கனி, ஷேக் முஹம்மது, எபனேசர், தமிழரசு, மத்தியாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *