– முனைவர் முல்லைத்தமிழ்
துதிக்கை வர்மம்
சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான உள்ளங்கை வெள்ளை வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் துதிக்கை வர்மம் பற்றி அறிவோம்.
கைவெள்ளையின் மேல் கை மடங்கும் உள்பகுதியில், மணிக்கட்டின் நேர் எதிர்புறம் துதிக்கை வர்மம் அமைந்துள்ளது. துதிக்கைக்காலம், அகமணிபந்த வர்மம், கோழிக்கழுத்தகதாரை வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் இவ்வர்மம் வழங்கப்படுகிறது.
“திகையதாம் வெள்ளையில் சேர்ந்தருகின் மத்திபத்தில்
இகமதாம் வளைவினில் துதிக்கைவர்மம்”.
– இலாடச்சூத்திரம் -300
“சீரப்பா கைவெள்ளை அருகு பற்றி
சிறப்பான வளைவதிலே துதிக்கைவர்மம்”.
– கலைக்கண்ணாடிச் சூத்திரம்
முட்டான மணிக்கட்டில் துதிக்கைமர்மம்
முட்டான அடிகளதில் கொள்ளுமாகில்
அடவான கை குழைந்து கொளுத்தி வீங்கும்
அடவதிலே வளையம்போல் நீரும் கட்டும்
அலறியே உடல்தளரும் அயதிவேர்வை
அசவு கண்ணது விலகில் முடம் தீராது
உள்ளாக வசவெண்ணை தொண்ணூறுநாளும்
உறுதியாய் தாரையிடு தீர்ந்துபோமே.
– வர்ம தாண்டவம்-500
“மணியென்ற வெள்ளைதனில் அருகு பற்றி
மத்திபத்தில் வளைவதில் துதிக்கைவர்மம்
கணீரென்று ஓசைபோல கொண்டுதானால்
கண் பிசகி மணிக்கட்டு விறைக்கும் தேகம்
அனலெனவே வளையமாம் நீரும் கூட்டும்
அகமெல்லாம் தளர்ச்சையினால் விறைக்கும் தானே
தணிந்திடவே வல்லாரை தாக்கி மைந்தா
தயவாக நெட்டி வாங்கு தீர்ந்துபோகும்”.
– வர்மச் சூத்திரம் -136
“தானென்ற துதிக்கையில் வர்மங்கொண்டால்
தொடராக அத்தலமே தளர்ந்துபோகும்
மாமென்ற மனம் பதறி வலியும் மிஞ்சி களைப்புடனே
கடுத்தேறும் குணங்கள் மாற செய்திடவே
தேனென்ற கைமடக்குப் பொய்கையுள்ளே
பெருவிரல் பதித்து கைக்கவளி வரை இழுத்து
கானென்ற வெள்ளையடங்கல் செய்து கவனமதாய்
முக்கூட்டால் தடவிவிட முறைமைதானே”.
– வர்ம நூல் தொகுப்பு
“……. திறமான கை பிடித்து திடமாய் வைத்து
கைபாகம் ஒற்றலுடன் பூச்சும் செய்து
அறமான துணியதனால் சுற்றிக்கெட்டி
அளவுடனே நடுவிரலை இழுத்துநீட்டி
முறையான கெட்டுமுறை அசைதலின்றி
முக்கியமாய் செய்துவிடு முக்கூட்டோடே”.
– வர்ம நூல் தொகுப்பு
மேலும்,
கரிதூக்கும் கரமன்ன தூக்கி நோக்கும் கனமான
வரியகம் பற்றியது மணிக்குழியின் நேரெதிராம்
சரிதூக்குமகம் பற்றித்தல்லலிடிக்கொண்டிடிலோர்
தரிப்போடு குத்துழைவும் கண்மசங்கு மென்னே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
கரியெனும் யானையானது தன் துதிக்கையினை தூக்குவதுபோல தூக்கிப் பார்க்கும்போது கையின் அகவரி பற்றி மணிக்கட்டுக் குழியின் நேர் எதிர்புறத்தில் அமைந்திருக்கும் இந்த வர்மத்தில் தல்லல் இடிகள் சரியாகக் கொண்டால் தரிப்பும் குத்துழைவும் உண்டாகி கண்களில் மயக்க உணர்வும் உண்டாகும் என்பதாம்.
என்றுறும் மூச்சோடே முனைந்துகொள்ளில்
பேச்சறும் சுரத்தோடே குளிர் நடுக்கமுடன்
மூச்சிறைத்து அனல்மிஞ்சி தளர்ந்துடல் மயங்கும்
வேச்சிரைப்புப் பாராமலுடனடங்கல் செய்யே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
இவ்வர்மமானது மூச்சியங்கும் சரநிலையில் கொள்ளுமானால், பேசமுடியாத அளவிற்கு குளிரும் நடுக்கமும் உண்டாகும். மூச்சிரைத்து உடல் வெப்பம் மிஞ்சி தளர்ந்து மயக்கம் உண்டாகும். இந்நேரம் வேறு சிந்தனைகளின்றி உடனே அடங்கல் செய்து எழுப்பி விட வேண்டும் என்பதாம்.
செய்திடுமடங்கல் செவிக்குற்றிக் கவளிவிடம்
கொய்திடும் மயக்கந்தன்னை ஒன்றாயினுமஃதும்
செய்திடும் வர்மாணி பத்தும் வகையறிந்துறைப்ப
பெய்திடும் பேதங்கள் அனைத்தும் தீருமென்னே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
இவ்வர்மத்தை இளக்கி நினைவூட்ட செவிக்குற்றியடங்கல், கவளியடங்கல், விட அடங்கல் இவைகளில் ஏதாவது ஒன்றே போதுமானதாம். எனினும் வர்மாணி அடங்கல் பத்தினையும் முறைப்படி தூண்டி செய்தால் பின்வரும் விளைவுகளும் மாறிவிடும் என்பதாம்.
என்னவே இவ்வன்மம் பேதமறுக்கும் காண்பல
கன்னவே கண்டவலி கரவலியும் நடுக்கமுடன்
நன்னவேக் கோபமுடல் தளர்ச்சைமயக்கமுடன்
பன்னவே பற்றிவரும் மனக்குளப்பமுமென்னே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
இந்த வர்மத்தை முறைப்படி தூண்டிக் கொடுத்தால் கழுத்துவலி, கைவலிகள், உடல் நடுக்கம், கோபம், தளர்ச்சை, மயக்கம், மனக்குளப்பம் என் பலதும் தீரும் என்பதாம் என வர்ம யோகச்சூத்திரமும் குறிப்பிடுகிறது.
இவ்வர்ம பாதிப்படைந்தவர்களுக்கு, கை மணிக்கட்டின் கண்பிசகி, வீக்கம் காணப்படும். தளர்ச்சை உண்டாகி உடல் விறைக்கும். அனல் மிஞ்சி, நீரும் கூடும். மலஜலம் இளகியோடும். விறையல், பனி, குளிர், தரிப்பு உண்டாகி மயக்கமாகும். இதற்கு வல்லாரை குடிநீர் கொடுக்க சுகமாகும் என வர்ம சூத்திரம் கூறுகின்றது.
இவ்வர்மத்தை இளக்குவதற்கு விரல்களை மெதுவாக இழுத்து நீட்டி, இதமாக இருபுறமும் கையணைத்து நெருக்கிக்கொள்ள வேண்டும். பின்னர், மேலிருந்து கீழாக இதமாக தடவி, பெருவிரல் தொடங்கி ஐந்து விரல்களையும் மீண்டும் இழுத்து நீட்டி நேர்படுத்திக்கொள்ள வேண்டும். இப்பகுதியில் முறிவு ஏற்பட்டால் கை சற்று அதன் இணைப்பிலிருந்து விலகி காணப்படும். இதற்கு இதமாக நேர்படுத்தி மூங்கில் தட்டையால் கட்டி சீர்செய்ய வேண்டும். முறிவு ஏற்பட்ட சூளலில் தடவுதலோ, வேகமாக அசைத்தலோ, பாதிக்கப்பட்டவருக்கு அதிக வேதனையையும், மயக்கத்தையும் உண்டாக்க வாய்ப்புண்டு. எனவே இதமாக எண்ணெய் இட்டு கட்டி அகமருந்து கொடுத்து சீர்செய்து கொள்ளவேண்டும். இவ்வர்ம பாதிப்புகளை முழுமையாக சரிசெய்ய, கைக்குழி அடங்கல், சுழியாடி அடங்கல், கவளி அடங்கல், வெள்ளை அடங்கல்கள் போன்றவைகளை மெதுவாக அனுக்கி விடவேண்டும். வீக்கம் அதிகமாக இருப்பின், அதற்கான ஒற்றல் முறைகள், மூலிகை பாளம் போடுதல், மூலிகை பற்று போடுதல், எண்ணெய் கட்டு போடுதல் போன்றவைகள் முழுமையான நலத்தை தர உதவும். முறிவு ஏற்பட்டால் கையினை அசைக்காமல் வைத்து எப்பொழுதும் எண்ணெய் விட்டுவர வேண்டும் என அனுபவ வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
இவ்வர்மத்தில் தாக்கம் கொண்டவர்களுக்கு பிற்காலத்தில் அடிக்கடி தளர்ச்சி, கழுத்துவலி, உடல்நடுக்கம், தீராத வலியுண்டாதல் போன்ற பின்விளைவுகளில் ஏதேனும் ஒன்றோ பலவோ ஏற்பட வாய்ப்பு உண்டு என வர்ம சுவடிகள் குறிப்பிடுகின்றன. இவ்வர்மத்தை பெருவிரல், நடுவிரல், இருபெருவிரல் தூண்டல் போன்ற தூண்டுமுறை நுட்பங்களை பயன்படுத்தி தூண்டும்போது கழுத்துவலி, கைவலி, அதிகவெப்பம், கோபம், உடல் நடுக்கம், தளர்ச்சி போன்ற நோய்கள் குணமாகும் என வர்ம வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
Leave a Reply