அலைக்கழிக்கப்படும் ஆசிரியர்கள்

  • By Magazine
  • |

– இரா. அரிகரசுதன்

சமூகம் அறிவார்ந்த மேம்பட்ட சமூகமாக மாற வேண்டும் என்றால் அதற்கு இரு துறையினரை முக்கியமாக பொறுப்புமிக்கவர்களாகக் குறிப்பிடுவர்.

                ஒன்று ஆசிரியர்கள் மற்றொன்று ஊடகவியலாளர்கள். இருவரும் சமூகத்தை செம்மையிடுவதிலும் வளர்த்தெடுப்பதிலும் மிக முக்கியப் பங்காற்றுகின்றனர்.  ஆசிரியர்கள்  அவர்களிடம் வந்துச் சேரும்    குழந்தைகளை சிறந்த ஆளுமைகளாக, ஆற்றல்கொண்டவர்களாக, தலைவர்களா உருஏற்றி இச்சமூகத்திற்கு  கொடுக்கின்றார்கள்.

                அவ்வாறு உருபெற்றவர்களால் இச்சமூகத்தில் ஒவ்வொரு துறைகளும் இயங்குகின்றது. மேலும் இயக்கவும் படுகின்றது. அவ்வாறு இயங்குகையில் அவர்கள் தவறுகள் செய்வார்களே ஆனால் அல்லது தங்கள் பணிகளை கடமைகளை செவ்வனே செய்யாது போனால் அவர்களை விமர்சனம் செய்தும் இடிந்துரைத்தும் நேர்ப்படுத்தும் பணியை இடையறாது செய்பவர்கள் ஊடகவியலாளர்கள். முந்தியவர்கள் உருவாக்குபவர்கள் மற்றையர் வழிதவறிடாது கண்காணிப்பவர். இத்தகை முக்கியம் வாய்ந்த பணிகளில் இருப்பவர்கள் தரமாகவும் நேர்மையான வர்களாகவும் இருத்தல் வேண்டும்.

                குறிப்பாக உலகம் முழுக்க இவ்விரண்டு பணிகளை செய்பவர்கள் உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்கப்படுகின்றார்கள். இச்சூழலில் நமது நாட்டிலோ ஆசிரியர்கள் கேட்பார் அற்ற நிலையில் நசிந்துக் கொண்டிருப்பதைக் காண்கையில் சங்கடமே மேலிடுகின்றது.

                கல்வித்துறை முழுக்க தனியார்மயமாக மாறிக்கொண்டிருக்கும் அவலம். இருக்கின்ற அரசு கல்வி நிறுவனங்களிலோ ஆசிரியர் பற்றாக்குறை நிதி நெருக்கடிகள் என சிக்கல்கள். ஆண்டுதோரும் முறைப்படி ஆசிரியர்களை நியமனம் செய்யாமல் இழுத்தடிக்கும் அரசுகள். வேலைவாய்ப்பு பதிவு முன்னிலைப்படி தகுதி வாய்ந்தவர்களுக்கு பணிவாய்ப்பு  இல்லை.  வேலைவாய்ப்பு அலுவலகமோ தன் செயல் நோக்கத்திலிருந்து மாறி தேர்வுக்குப் பயிற்சிக்கொடுக்கும் பயி¢ற்சி நிலையமாக மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கினற்து.

                இச்சூழலில் அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை நடத்துவதிலும் கால தாமதம். ஏற்கனவே இருமுறை பேராசிரியர் பணிக்கான தேர்வு அறிவிப்புகள் அறிவித்து அவ்வண்ணமே தேர்வு நடத்த இயலாது தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு 2708 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களுக்கான புதிய அறிவிக்கையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

                கடந்த அனுபவங்களை வைத்துப் பார்க்கையில் இத்தேர்வுக்கு குறைந்தது  ஒன்றரை இலட்சம் விண்ணப்பங்களாவது விண்ணப்பிக்கப்பட்டிருக்கும். இவர்களுள் சுமார் ஒரு இலட்சம்பேராவது ஏற்கனவே உள்ள அரசு கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களாக அல்லது தனியார் கல்லூரிகளில் விரிவுரையாளர்களாக பணிபுரிந்து கொண்டிருப்பர். இவர்கள் தங்கள் விண்ணப்பங்களை நிறைவு செய்ய வேண்டும் என்றால் பணி அனுபவச் சான்று பெறவேண்டும். அதற்காக அவர்கள் பணிபுரிந்திருந்த அனைத்து வருகைப் பதிவு தகவல்கள் மற்றும் சம்பளக் கையெழுத்து நகல்களோடு சென்று மாவட்டக் கல்வி அலுவலரை நேரடியாகச் சந்தித்து விண்ணப்பிக்க வேண்டும்.

                அவர்களோ குறிப்பிட்ட நாளைக்குள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கவேண்டும் என்கின்ற நெருக்கடிக்கிடையில் இரவும் பகலுமாக வரிவரியாக சரிபார்த்து சான்றிதழ் தருகின்றனர்.

                இதில் என்ன சிக்கல் என்றால் அனைத்து தரவுத் தாள்களிலும் முதல்வர் மற்றும் கல்லூரி செயலரின் இரப்பர்  ஸ்டாம்போடான கையொப்பம் இருத்தல் கட்டாயம்.  கை ஒப்பம் இரப்பர் ஸ்டாம்ப் ஆக இருக்கக்கூடாது.

                குறைந்தது ஒரு ஆசிரியருக்கு 200 தாள்களில் ஒரு கல்லூரி முதல்வரும்  செயலரும் கையெழுத்து இட வேண்டும். அப்படிப் பார்க்கையில் 20 கோடி தாள்கள் செலவளிந்திருக்கும். மாவட்டம்தோரும் பணிபுரிந்த கல்லூரிகளில் சான்றிதழ்களைப் பெற அலைந்து சுயமரியாதை இழக்கும் சூழல்களைத் தாங்கி ஆசிரியர்கள் நகல்களைப் பெற பணிபுரிந்த கல்லூரிகளுக்கு அச்சுச் செலவுக் கட்டணம் 1000 முதல் 2000 வரை கொடுத்து ஒருவாரம் பத்து நாட்கள் அலைந்து திரிந்து சான்றிதழ்வாங்கி தற்போது பதிவேற்றுகிறார்கள்.

                ஏன் இவ்வாறு குறிப்பிடுகின்றேன் என்றால் எவ்வளவு பணம், நேரம், வளம் விரையம் ஆகின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் நோக்கம்.

                இதனை கல்லூரிகள் கொடுக்கும் பணியனுபச் சான்றிதழோடு முதலில் தேர்வை எழுதச் செய்து விட்டு பின்னர் தேர்வுபெற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பை 2708 பேருக்கு மட்டும் நடத்தினால் ஒருலட்சம்பேர் அலைகழிவும் விரயங்களும் தவிர்க்கப்பட்டிருக்கும் அல்லவா. மாவட்ட கல்வி அதிகாரிகளின் பணிசுமையும் கணிசமாக குறைந்திருக்கும்.

                இதில் ஆசிரியர் சமூகம் சந்திக்கும் அவலத்தைப் பற்றிக் குறிப்பிட்டாக வேண்டும். சான்றிதழ் வாங்குவதற்காக தற்போதையப் பணியிடத்தில் விடுமுறை கிடைக்காது அல்லாடி பழைய பணியிடங்களில் மரியாதையாக நடத்தப்படாமல் முறையற்ற வகையில் காக்க வைக்கப்பட்டு, சில கல்வி  நிலையங்களோ தரவுகளைச் சரியாகப் பாதுகாத்து வைக்காதனால் அல்லல்பட்டு  நொந்துபோய் விண்ணப்பித்திற்கும் ஆசிரியர்க¢ளின் நிலைகளை நினைத்துப் பாருங்கள்.

                இச்சூழலில்தான் அவர்கள் காதுகளில் விழுகின்றன பணி வேண்டுமா  50 இலட்சம் 60 இலட்சம் எனும் ஏலக்குரல்கள்.   நினைத்துப் பாருங்கள் நமது சமூகத்தின் நிலைமை எவ்வாறு சென்று கொண்டிருக்கின்றது என்பதை. இது உண்மையாக இல்லாதவாறு அரசு உடனடியாக தன்னுடைய சீரிய நடிவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதுவே நமது கோரிக்கை.

                அதுபோல முறைப்படி தேர்வுகளை தகுந்த இடைவெளிகளில் நடத்த வேண்டும். அரசு கல்வி நிலையங்களில் ஆசிரியர்களை நியமனம் செய்யாதிருப்பதற்கு தனியார் கல்வி நிறுவனங்களின் அழுத்தம் காரணமாக சொல்லப்படுகின்றது. இதுவும் உண்மையாக இல்லாது இருக்க வேண்டும். அது அரசின் கடமை. மக்களின் எதிர்பார்ப்பு.

                மேலும் ஆசிரியர்களை ஆசிரியர்களாக இருக்கவிடாது பல்வேறு அலுவலகப் பணிகளைச் செய்யும் பணியாளர்களாக பிழிந்து எடுக்கும் தனியார் கல்வி நிறுவனங்களிலிருந்து காப்பாற்றுவதும் அரசின் கடமை.

      அரசின் திட்டங்கள் அரசு கல்விக்கூடங்களுக்குதான் முன்னுரிமை வழங்கும் வகையில் இருத்தல் வேண்டும்.                 ஆசிரியர்களுக்கு அவர்களின் துடிப்பான இளமைக் காலத்திலேயே பணிவாய்ப்புக் கொடுக்கப்பட்டு அவர்தம் அறிவும் ஆய்வு முடிவுகளும் சமூகத்திற்கு பயன்படும்படி செய்ய வேண்டாமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *