– இரா. அரிகரசுதன்
அந்த வயதான தாய்
வேலைக்குப் புதிது
என்று நினைக்கின்றேன்.
நசுநசுத்திருக்கும்
குப்பை மேட்டை
ஊடறுத்து நடுவில் அமர்ந்திருந்தாள்,
காற்று புகுந்து விளையாடிய
சிமிண்ட் சாக்குப்பைதான்
காட்டிக்கொடுத்தது.
அவளை!
அசைந்தாளா என்ன?
ஆம்.
மஞ்சள் தகிக்கும்
மாரியம்மன் சிலையின்
அசைவு.
அவளுக்கு புரியவில்லை
பட்டாசுக் குப்பைகளுக்குள்
பழசு கிடைக்காது.
மறுசுழற்சிக்கு பட்டாசில்
என்ன இருக்கின்றது?
வெடித்துப் பிளந்த
காகிதங்கள்,
மரங்களின் தூளில்
உருவானவை அவை.
மருந்துப்பொடிகளின்
மிச்சங்கள்,
விரல்களின் ரேகைகள்
அதிலிருக்கலாம்.
கொஞ்சம்
வெடிக்காத வெடிகள்,
விபத்திற்கு வாய்ப்புண்டு.
எரிந்து தீர்ந்த
கம்பிமத்தாப்பூக்களின்
கம்பிகள்.
ஆம்,
கம்பிகள்!
குட்டையும் நெட்டையுமான கம்பிகள்!!
கம்பிகள்
கம்பிகள்
கம்பிகள்
நீண்டு நீண்டு
தண்டவாளங்கள் ஆகின்றன.
தண்டவாளங்களுக்கிடையில்
கானல் நீர் பூத்திருக்கு.
கானல் நீர் எழுந்து
நடக்கக் கண்டேன் சிவனே ஐயா..
Leave a Reply