– சிவ. விஜயபாரதி. கும்பகோணம்
அந்த வாசனை அவனை ஏதோ செய்தது. அவர்கள் மீதிருந்து வருகின்ற அந்த மணம் அவன் மூக்கினுள் நுழைந்து இதயம் வருடியது.அது என்ன வாசனை? இந்த ஐந்து பேர் மீது மட்டும் எப்படி வருகிறது இந்த வாசனை?குறைவாகவும் இல்லை.அதிகமாகவும் இல்லை. அருகில் அமரும் நமக்கு மட்டும் மிக மெல்லியதாக பரவி கொஞ்ச நேரத்தில் காணாமல் ஆகிவிடுகிறது.எனக்கு மட்டும்தான் அப்படி தோன்றுகிறதா? இவர்களின் மேல் வரும் இவ்வாசனை எனக்கு மட்டும்தான் தெரிகிறதா? வேறு யாருக்காவது தெரிகிறதா?பிடித்திருக்குமா? வீராவுக்கு தினமும் இதே யோசனைதான். பிறகு அந்த வாசனை போல் மறைந்து விடும் இந்த கேள்விகளும். இன்று அந்த வாசனைப் பற்றி அவர்களிடமே கேட்டு விட வேண்டும் என்று புத்தகத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான் வீரா.
மதிய உணவு இடைவேளை முடிந்து எப்போதும் போல ஆங்கில வகுப்புத் தொடங்கியிருந்தது. ஆங்கில ஆசிரியர் பெயர் குமார். ஆங்கில ஆசிரியர் நல்ல உயரம், செக்க செவேரென்று சிவந்த உடம்பு, நெற்றியில் குங்குமத்தால் ஒரு நீண்ட கோடுட்டிருப்பார்.
பாடத்தைத் தொடங்கியிருந்தார். ஆங்கிலத்தில் பாடத்தை நடத்தினாலும் தமிழிலும் விளக்கம் தருவார். பக்க எண் சொல்லி எங்களை பார்க்கச் சொல்வார். அப்பப்போ கரும்பலகையிலும் எழுதுவார்.ஆங்கிலம் தான் பேசுகிறாரா என்று கூட தோன்றும். ஆஃப் த,ஈஸ் த என்று அவர் பேசும் ஆங்கிலத்தில் ‘த’என்ற வார்த்தை இல்லாமல் இருக்காது.இராமச்சந்திரன் தான் சொல்லுவான் மச்சான் இந்தாளு இங்கிலீஷ் கரெக்டா பேசுறாரா? இல்ல நம்மளுக்கெல்லாம் இங்கிலீஷ் தெரியாதுன்னு பீலா விடுறாரா என்று முணுமுணுப்பான். ஒரு நாள் ஒரு வகுப்பில் அவர் எத்தனை முறை ‘த ‘ சொல்கிறார் என்று கணக்கிட்டு,மச்சான் இவரு 176 முறை சொல்லிருக்கார்டா என்றான். எங்களுக்கு வந்ததே சிரிப்பு. எங்களுக்குத்தான் எதுவும் புரியாது.கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருக்கும்.
மதிய வகுப்புத் தொடங்கி பத்து நிமிடம் கழித்துதான் வந்தார்கள். தமிழ்மாறன், செந்தமிழ்,திருநாவுக்கரசு, ராஜேஷ், ரமேஷ் ஆகியோர் நல்ல நண்பர்கள் எப்போதும் கேலி, கிண்டல் என சிரித்தபடி கலகலப்பாக இருப்பார்கள். தினம் வகுப்பு இவர்களால் இடையூறு ஆகும்.வகுப்பிலேயே தமிழ்மாறன் தான் கொஞ்சம் வசதியானவன் .
தமிழ்மாறன் அணிந்திருக்கும் சீருடை சட்டையும், அவன் மீது வீசும் பர்ஃப்யூம் வாசமும், அவன் வைத்திருக்கும் சைக்கிளும் உறுதியாகச் சொல்லும். தமிழ் மாறன் பணக்காரன் என்று. அவனது பேச்சிலும் அது அதிகமாக வெளிப்படும்.
பேருந்து நிலையத்தில் இருக்கும் கடைகளில் பாதி தமிழ்மாறன் அப்பாவுடையதுதான்.
ஸ்வீட் கடை, பெட்டிக்கடை ஹோட்டல் என மூன்று கடைகளையும் அவங்க அப்பாவே நடத்துகிறார். மீதி கடைகளை வாடகைக்கு விட்டிருக்கிறார்.பஸ் ஏற போகும்போது ஸ்வீட் கடையில். தமிழ்மாறன் நிற்பதை நானும் பார்த்திருக்கிறேன்.
தமிழ்மாறனின் வீடு பள்ளிக்கூடத்திற்கு பக்கத்தில் தான் இருக்கிறது. அதனால் மதிய உணவு இடைவேளைக்கு வீட்டிற்கு சென்று விடுவான் .நாங்கள் எல்லோரும் பள்ளிக்கூடத்தில் கொடுக்கும் சத்துணவுதான்.
இயற்பியல் ஆசிரியருக்கு மட்டும்தான் பயப்படுவார்கள். மற்றபடியாருக்கும் கொஞ்சம் கூட பயம் இருக்காது.ஆங்கில ஆசிரியர் லேட்டா வருவது பற்றி சில சமயங்களில் கோபப்படுவார். சில சமயங்கள் எனக்கென்ன நீ படிச்சா உனக்கு நல்லது போ போய் உட்கார் என்பதோடு நிறுத்திக் கொள்வார். அதைத் தாண்டிப் பேசினால் கொஞ்சமும் பயப்படாமல் அவரிடம் எதிர்த்தும் பேசுவார்கள். இன்றும் அப்படித்தான் வகுப்புத் தொடங்கி பத்து நிமிடம் கழித்துதான் வகுப்புக்கு வந்தார்கள், கதவின் ஓரம் நின்று கொண்டிருந்தார்கள். பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியரின் பார்வை அவர்கள் மீது பட்டதும்,தலையைக் குனிந்தபடி சிரித்துக் கொண்டே வகுப்பிற்குள் நுழைந்தார்கள். இவர்கள் மதிக்காததை தெரியாததைப்போல முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார் ஆசிரியர், தமிழ்மாறனும் மற்றவர்களும் வந்து அமர்ந்தனர். வழக்கம் போல் தமிழ்மாறன் வீராவின் அருகில் அமர்ந்தான்.
அந்த வாசனைக்கு மூக்குத் துடித்தது. அது என்ன வாசனை என்று கேட்க நாக்குத் துடித்தது. பாடத்தைக் கூட கவனிக்காமல் வீரா, தமிழ்மாறனிடம் கேட்டான்.விரல் மூன்றை தன் மேல் உதட்டில் வைத்து.
பேசுவதை ஆசிரியர் கவனித்து விடாமல் இருக்க, வாயை மறைத்துக் கொண்டு, என்னமோ ஒரு வாசனை வீசுதே அது என்னடா? என்று கேட்டான், ஒன்னுமில்லையே, “பர்ஃப்யூம் வாசனையை சொல்றியா என்றான் தமிழ்மாறன். அது இல்லடா அதுதான், எனக்கு முன்னாடியே தெரியுமே எப்பவுமே உன் மேல பர்ஃப்யூம் வாசனைதான் வீசுமே. மதிய நேரத்திலே மட்டும் வருதுடா என்றான் வீரா. ஓ! அதுவா பாஸ்,பாஸ் பாக்கு மெல்லுறேனுல்ல அதுவா இருக்கும் என்றான் தமிழ்மாறன். இல்லடா,பர்ஃப்யூம் ,பாக்கு வாசனையுடன் சேர்ந்து வருதடா என்றான் வீரா. அதுவா என்று சிரித்தான் தமிழ்மாறன்.
ஏண்டா சிரிக்கிற என்றான் வீரா ஒன்றும் புரியாமல். இன்னைக்கு சாயந்தரம் ஸ்கூல் விட்டதும். எங்களோடு வா சொல்றேன் என்றான். சரி என்று தலையசைத்தான் வீரா. ஸ்கூல் பெல் அடித்தது.அனைவரும் வீட்டிற்குப் புறப்பட்டனர். வீரா மட்டும் தமிழ்மாறன் சகாக்களுடன் கிளம்பினான். பள்ளிக்கூடத்தின் வகுப்பிலேயே தமிழ்மாறன் தான் கொஞ்சம் வசதியானவன் .
தமிழ்மாறன் அணிந்திருக்கும் சீருடை சட்டையும், அவன் மீது வீசும் பர்ஃப்யூம் வாசமும், அவன் வைத்திருக்கும் சைக்கிளும் உறுதியாகச் சொல்லும். தமிழ் மாறன் பணக்காரன் என்று. அவனது பேச்சிலும் அது அதிகமாக வெளிப்படும்.
பேருந்து நிலையத்தில் இருக்கும் கடைகளில் பாதி தமிழ்மாறன் அப்பாவுடையதுதான்.
ஸ்வீட் கடை, பெட்டிக்கடை ஹோட்டல் என மூன்று கடைகளையும் அவங்க அப்பாவே நடத்துகிறார். மீதி கடைகளை வாடகைக்கு விட்டிருக்கிறார்.பஸ் ஏற போகும்போது ஸ்வீட் கடையில்.தமிழ்மாறன் நிற்பதை நானும் பார்த்திருக்கிறேன்.தமிழ்மாறனின் வீடு பள்ளிக்கூடத்திற்கு பக்கத்தில் தான் இருக்கிறது. அதனால் மதிய உணவு இடைவேளைக்கு வீட்டிற்கு சென்று விடுவான் .நாங்கள் எல்லோரும் பள்ளிக்கூடத்தில் கொடுக்கும் சத்துணவுதான்.
அன்று மாலை பள்ளி முடியும் நேரம் மணி அடித்தது. மாணவர்கள் எல்லோரும் புத்தகப்பையைத் தூக்கிக்கொண்டு உற்சாகத்துடன் தத்தம் வீடுகளுக்கு புறப்பட்டனர். சைக்கிளில் வந்தவர்கள் சைக்கிளை எடுத்துக் கொண்டும், பேருந்துக்கு செல்பவர்கள் பள்ளிக்கூட வாசலில் வந்து நின்று, மற்ற நண்பர்கள் வேறு வகுப்புகளில் இருந்து வரும் வரை காத்திருந்து புறப்பட்டனர். பி டி சார் விசிலை ஊதி ஊதி விரைவு படுத்திக் கொண்டிருந்தார். வீரா மட்டும் பேருந்துக்குச் செல்லும் நண்பர்களுடன் செல்லவில்லை. தமிழ்மாறன் சகாக்களுடன் புறப்பட தயாரானான்.பேருந்து புறப்படுவதற்கு இன்னும் அரை மணி நேரம் இருக்கிறது. எப்பொழுதும் பேருந்து நிலையத்திற்கு சென்று, பேருந்து வரும் வரை காத்திருப்பான். இன்று அந்த நேரத்தை பயன்படுத்தி தமிழ்மாறன் நண்பர்களுடன் சென்று வரலாம் என்று முடிவு செய்தான். தமிழ்மாறனின் சைக்கிளை செந்தமிழ் தள்ளி கொண்டு வந்தான் புத்தகப் பைகள் சைக்கிளில் மாட்டப்பட்டிருந்தன. மீதி பேர் சத்தமிட்டபடியும்,
கிண்டல் செய்து கொண்டும், சிரித்து விளையாடியபடியும் சென்றனர். தங்களுக்குள்ளும் கிண்டல் செய்து கொண்டனர். அப்பப்போ வழியில் செல்லும் மாணவர்களையும் கிண்டல் செய்தும் வந்தனர்.இதெல்லாம் வீராவுக்கு சற்று புதிதாக இருந்தது. கொஞ்சம் பிடிக்கவில்லை,இருந்தும் அவர்களுடன் சென்று கொண்டிருந்தான். வீரா சற்று அமைதியானவன். தனது கிராமத்தில் இருந்து பள்ளிக்கூடத்திற்கு தினமும் 10 கிலோமீட்டர் தொலைவு பேருந்தில் வந்து சென்று கொண்டிருக்கிறான்.அவனுக்கு மூன்று அக்காக்கள்.அப்பா இறந்த பிறகு அனைவரின் படிப்பையும் நிறுத்திவிட்டாள் அம்மா. வீரா தான் கடைசி பையன். ஆண் பிள்ளை படிக்கட்டும் என்று அவன் படிப்பை நிறுத்தவில்லை. வீராவும் நன்றாக படிப்பான். அப்பா இறந்து மூன்று வருடங்கள் கடந்து விட்டன.அம்மா தான் வயல் வேலைக்கு சென்று படிக்க வைக்கிறாள். அம்மா அடிக்கடி சொல்லித்தான் வளர்க்கிறாள். பொறுப்பா படிச்சு பெரிய ஆளா வரணும். அம்மா படுற கஷ்டத்தை நீதான் குறைக்கணும் அப்படின்னு அடிக்கடி வறுமையை ஞாபகப்படுத்துவார். வீராவும் எப்போதும் பொறுப்பை உணர்ந்து படிப்பவன்.
தமிழ் மாறனும் நண்பர்களும் எப்போதும் கூடும் அந்த இடம் வந்து விட்டது. பள்ளியின் அருகில் தான் இருக்கிறது. எருக்கஞ்செடிகள் அடர்ந்து,புதர் போல் இருக்கும்.வெளியில் ரோட்டுப் பகுதியில் இருந்து பார்த்தால் எதுவும் தெரியாது. எல்லா செடிகளிலும் மொட்டுக்களும் பூவுமாக காய்த்து இருக்கிறது. வீரா எருக்கஞ் செடிகளை பார்த்ததும், அதில் உள்ள மொட்டுகளை அமுக்கி அமுக்கி, வெடித்து விளையாடினான். மொட்டு வெடிக்கும் போது பட்டென்று சத்தம் வந்தால் தேர்வில் பாஸ் ஆகி விடுவேன் என்பது அவனது நம்பிக்கை. நிறைய பேர் இப்படி விளையாடுவார்கள். காதலிப்பவர்கள் கூட ,காதலியை மனதில் நினைத்து எருக்கு மொட்டை அமுக்குவார்கள், வெடித்து சத்தம் வந்தால் காதல் கைகூடும் என்று நம்புவார்கள். அன்றும் மொட்டை வெடித்து விளையாடினான் வீரா. மீதி பேர் புத்தகப் பைகளையும், சைக்கிளையும் புதர் மறைவுக்குள் வைத்து நிறுத்தினார்கள். இவர்களும் புதர் மறைவுக்குள் வட்டமாக உட்கார்ந்து கொண்டார்கள். தமிழ்மாறன் பேண்ட் பைக்குள் வைத்திருந்த தீப்பெட்டியையும், சிகரெட் பாக்கெட்டையும், அனைவரும் உட்கார்ந்திருக்கும் நடு மையத்தில் எடுத்துப் போட்டான். வீராவுக்கு ஆச்சரியமாகவும் ஆர்வமாகவும் இருந்தது. சிகரெட் பெட்டியைப் பிரித்து ஆளுக்கு ஒரு சிகரெட் எடுத்தனர்.சஞ்சய் தீப்பெட்டியை எடுத்தான். தீக்குச்சியை தீப்பெட்டியின் ஓரம் உரசி பற்ற வைத்து, குபுக்கென வந்த நெருப்பில் சிகரெட்டை பற்ற வைப்பதற்குள் காற்றில் அனைந்து விட்டது.
“இங்க கொடுடா எத்தனை தடவ பயிற்சி எடுத்தாலும் சரியா பத்த வைக்க மாட்டே நீ” என்றபடி திருநாவுக்கரசு தீப்பெட்டியை வேகமாக பிடுங்கினான். அவசரமாக தீக்குச்சியை எடுத்து தீப்பெட்டியில் உரசி,குபுக்கென்று வந்த தீயை, இரு கைகளுக்குள் மறைத்து, இரண்டு உதடுகளின் நடுவில் வைத்திருக்கும் சிகரட்டை பற்ற வைத்தான். பெருமையோடு அவர்களைப் பார்த்து மூச்சை இழுத்த படி தீக்குச்சியை அனைத்து வீசினான். பற்ற வைத்த சிகரட்டிலேயே மீதி இருந்த அனைவரும் தங்களுடைய சிகரெட்டுகளை பற்ற வைத்தனர். தமிழ்மாறன் மட்டும் தனியாக ஒரு சிகரெட்டை எடுத்து, தானே பற்ற வைத்து கண்களை மூடி மூச்சை இழுத்து புகையை ஊதினான். புகை குபுக்குபுக் என்று வெளியேறியது.
வீரா அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான்.”நீதானடா ஆசைப்பட்டு வந்த, ஏன் சும்மா ஒக்காந்து இருக்க? என்றான் தமிழ் மாறன். வேணாண்டா எனக்கு.இது பழக்கம் இல்லடா என்று வீரா தயங்கினான். செந்தமிழ் தான் புகைத்துக் கொண்டிருந்த சிகரட்டை வீராவின் வாய்க்குள் நுழைக்க சிகரெட்டைக் கொண்டு சென்றான். வேண்டாம் வேண்டாம் என்றபடி வீரா தானே வாங்கி உதடுகளின் நடுவில் வைத்து, ஒரு இழு இழுத்தான், புகை மூக்கையும், தொண்டையையும்,அடைக்க குமட்டியபடி இருமல் வர தொடங்கியது. சிகரெட்டை வெளியே எடுப்பதற்குள் மூக்கு வழியாகவும், வாய் வழியாகவும், புகை பீறிட்டு வந்தது.கண்கள் சிவந்துவிட்டன.வீராவை பார்த்து அனைவரும் சிரித்தனர். முதல் தடவை அப்படி தாண்டா இருக்கும், பழக பழக எல்லாம் சரியாயிடும் டா என்றனர்,அந்த புதரே புகை மூட்டமாய் காட்சி தந்தது. அனைவரும் சிகரட்டை ஊதி முடித்து கீழே போட்டு நசுக்கினர். “சிகரெட் பிடிப்பவர்களின் வாழ்வு சாம்பலாகிக் கொண்டிருப்பதும், முடிந்த பிறகு கீழே நசுங்கி வீணாவதையும் சிகரெட்களே உணர்த்தும். அப்போது அது யாருக்கும் புரியாது. தமிழ்மாறன் ஒரு சரம்”பாஸ்பாஸ்” பாக்கை பாக்கெட்டில் இருந்து எடுத்தான். ஆளுக்கு ஒரு பாக்கெட்டை பல்லில் கடித்து பிரித்து உள்ளங்கையில் கொட்டி வாயில் போட்டு மென்றனர். வீராவுக்கும் ஒரு பாஸ்பாஸ் பாக்கு கொடுத்தனர். அவனும் முன்பக்கமும் பின்பக்கமும் திருப்பித் திருப்பிப் பார்த்து,பாக்கெட்டை பிரித்து உள்ளங்கையில் கொட்டி வாயில் போட்டு மென்றான். அனைவரும் புத்தகப் பைகளை எடுத்தனர். வீராவுக்கு இப்போது அந்த வாசனை எப்படி வருகிறது என்று புரிந்தது.புகையும் பாக்கும் கலந்த வாசனை தான் இது என்று உணர்ந்தான். அனைவரும் புதர் செடிக்குள் இருந்து வெளியே வர அவ்வழியே பஜாஜ் மொபட்டில் கெமிஸ்ட்ரி ஆசிரியர் வந்தார். புதருக்குள் இருந்து வெளியே வரும் மாணவர்களை ஓரக்கண்களால் பார்த்தார். வீராவும் அந்த கூட்டத்தில் ஒருவனாக வெளியே வருவதை பார்த்ததும் கெமிஸ்ட்ரி ஆசிரியர் மொபட்டின் வேகத்தை குறைத்து உற்றுப் பார்த்தார் .கெமிஸ்ட்ரி ஆசிரியர் அருணாச்சலம் எல்லோருக்கும் உதவி செய்பவர். தந்தையை இழந்த மாணவர்கள், ஏழை மாணவர்கள் என அனைவருக்கும் இலவசமாக டியூஷன் எடுப்பவர், நோட்டு புத்தகங்கள் வாங்கவும் பணம் தேவைப்பட்டால் உதவி செய்பவர்.அப்படித்தான் வீராவின் தந்தை இறந்ததை கேள்விப்பட்டு வீட்டிற்கே சென்று ஆறுதல் சொன்னார். நீ ஒன்றும் கவலைப்படாதப்பா.
படிப்பு செலவுக்கு என்ன வேணும்னாலும் நான் உதவி செய்கிறேன். நீ மட்டும் கவனமா படி. என்னோட டியூஷன்லயும் வந்து படி என்று கூறி வந்தவர். அந்நாளில் இருந்து அறிவுரைகளையும், இலவச டிவிஷனும் எடுப்பவர். கெமிஸ்ட்ரி ஆசிரியர் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் நல்லா படிக்கிறியா என்பதோடு அல்லாமல் குடும்பத்தில் சாப்பாட்டுக்கு என்ன பண்றீங்க என்று கொஞ்சம் அக்கறையோடும் கேட்பார். அம்மா படும் கஷ்டங்களை எனக்கு தெரிந்த அளவுக்கு அவரிடம் சொல்லுவேன். எல்லாம் மாறிடும் சரியாயிடும் நீ நல்லா படிச்சு,நல்ல வேலைக்கு போய் தான் எல்லாத்தையுமே மாத்தணும், என்று தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தி அனுப்புவார். அவரிடமே மாட்டிக் கொண்டதும், வீராவின் மனம் என்னவோ செய்தது. மௌனமாய் நின்றான். ஆசிரியரை நிமிர்ந்து பார்க்க இயலாதவனாய் தடுமாறினான். மற்ற மாணவர்கள் ஏன்டா அங்கே நிக்கிற வாடா என்றபடி அவனை அவசரப்படுத்தினார்கள். அவன் அவர்களோடும் போகவில்லை.
அவர்களிடமிருந்து பிரிந்தான். பேருந்து நிலையம் நோக்கி நடக்கத் தொடங்கினான். குடும்ப சுமையும்,குற்ற உணர்ச்சியும் புத்தக பைக்குள் நுழைந்து அமுக்கு அமுக்க, மூச்சு வாங்கியது. வழக்கத்தை விட வியர்வை பெருக்கெடுத்தது. ஒரு வழியாய் பேருந்து நிலையம் வந்தடைந்தான். புறப்பட தயாராக இருந்த பேருந்தில் ஏறினான். வீராவுக்காகவே காலியாக இருந்தது சன்னலோர இருக்கை. புத்தகப் பையை மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்தான்.
சன்னலின் வெளியே தன் பார்வையை திருப்பினான். பேருந்து கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து கொண்டிருந்தது. தமிழ்மாறனின் கடை கண்ணிலிருந்து மறையத் தொடங்கியது. காற்று சன்னலின் வழி அவன் முகத்தில் வீச இதமாய் இருந்தது. ஒட்டுமொத்தமாய் ஆசுவாசமடைந்தான்.
Leave a Reply