செஞ்சோற்றுக்கடன்

செஞ்சோற்றுக்கடன்

  • By Magazine
  • |

கை. செல்லத்தங்கம்

ராமசாமி… ஏ.ராமசாமி என்னப்பா கூப்பபிட்டது கூட காதில் கேட்காமல் அப்படியென்ன யோசனையில் போய்க்கிட்டு இருக்க… ஒன்றுமில்லண்ணே… வயலுக்கும் போய்க்கிட்டு வாறேன்… ஆமா அது தான் தெரியுதே… நான் என்ன யோசனைன்னு கேட்டேன். அதாண்ணே பிரியா படித்து முடிச்சுட்டா. பக்கத்து இங்கிலீஷ் மீடியம் ஸ்கூலுக்கு டீச்சராகப் போறா. கலியாணம் பாக்கணும் இல்லா அதை தான் நினைச்சிக்கிட்டே வந்தேன். நல்ல யோசனை தானப்பா உனக்கு. நான் ஒண்ணு சொல்லட்டுமா… சொல்லுங்கண்ணே… பேசாம உன் தங்கச்சி பையன் கண்ணனுக்கு கட்டிக் கொடுக்கலாமில்ல… என்னண்ணே அவன் படிப்பென்ன… உத்தியோகமென்ன… நாம போய் கேட்டா தப்பா போகாது… வளர்த்த கடனுக்கு கேட்டது மாதிரி ஆயிடாது… வேண்டாண்ணே… எனக்கு ஏதோ நீகையிலே வெண்ணெயை வச்சிக்கிட்டு நெய்யைத் தேடுற மாதிரி தெரியுது பாத்துக்க… சொல்லிக்கிட்டு போயிட்டார். ஒண்ணுவிட்ட அண்ணன் தங்கத்துரை.

கண்ணன் ராமசாமியின் தங்கை மகன். ஐந்து வயது பருவத்திலேயே விபத்தில் தாயையும் தந்தையையும் இழந்து தாய் மாமன் பராமரிப்பில் வளர்ந்தவன். ஆம் அவன் தான் வளர்ந்தான். என்னால் வளர்க்கப்படவில்லை. என் பொண்டாட்டி அவனை என்னென்ன பாடுபடுத்தினாள். அதையெல்லாம் தாண்டி அவனாக வளர்ந்தான். நன்றாக படித்தான். படிக்கும் போதே அரசு வேலை என்ற குறிக்கோளோடு தன்னை தயார்படுத்தி அரசுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இன்று நல்ல பதவியில் பட்டணத்தில் இருக்கிறான். சின்ன வயசில் படிக்கும் போதே என்னோட சேர்ந்து எல்லா விவசாய வேலையும் படிச்சிட்டான். மாமா மாமான்னு காலைச்சுற்றுற நாய்க்குட்டி மாதிரி சுத்தி சுத்தி வருவான். அவன் வயசுலே என் மகன் அருண். வயல்வெளி, தோப்பு பக்கம் வாறதே இல்லை. ஆனால் கண்ணன் அப்படியில்ல… வயலுக்கு உரம் போடுற நாள் தெரியும். இரண்டு மூன்று நாள் முன்னே ஞாபகபடுத்தி அவனும் கூட வந்துடுவான். தேங்காய் வெட்டுற நாள் கரெக்டா ஞாபகம் வச்சி லீவு நாள் வெட்டச் சொல்லுங்க மாமான்னு சொல்லுவான். அத்தனை தேங்காயும் பொறக்கி சேத்துடுவான். பள்ளிக்கூடம் போறதுக்கு முன்னாடியும் போய்க்கிட்டு வந்தப்பிறகும் அதிக நேரம் வீட்டிலே இருப்பதில்லை. படிக்கிற நேரம் போக மீதி நேரம் என் பொண்டாட்டிக்கிட்டே இருந்து அவனை காப்பாத்த என்னோட கூட்டிக்கிட்டு போயிடுவேன். என் பொண்டாட்டி அந்த பாடுபடுத்துவாள். நல்ல எடுபிடி வேலை வாங்குவாள். படிக்கிற பையனை ஏவல் செய்ய வைப்பாள். என் பையனையும் அவனையும் ஒருநாள் கூட சரியா நடத்தினதில்லை. சொல்லி சொல்லி எனக்கு அலுத்துப் போச்சி… அவளை திருத்த முடியாதுண்ணு அவனை நான் பாத்துக்குவேன். பள்ளி படிப்பிலே முதல் மாணவன். அவனை வெளியூரில் உள்ள கல்லூரியில் சேர்த்தேன். நன்றாக படித்து வேலை கிடைச்சி முதல் மாத சம்பளத்துடன் ஊருக்கு வந்தான். என்னையும் என் பொண்டாட்டியையும் நிக்க வைத்து காலில் விழுந்து சம்பளத்தை எங்கிட்ட கொடுத்தான். நான் வாய்விட்டு அழுதிட்டேன். கல் மனசுகார என் பொண்டாட்டி வேற கலங்கிட்டா. நான் சொன்னேன் உன் செலவு போக மாதம் மாதம் மீதியை பேங்கில  போடு என்றேன். 21 வயசிலே கவர்ண்மென்ட் வேலை… இப்போ வயசு 27… அவன் சேர்த்த காசிலே ஊரிலே இடம் வாங்கி… வீட்டுக்கடன் வாங்கி ஒரு வீடும் கட்டி கொடுத்திட்டேன். ஒரு கலியாணம் பண்ணி வச்சா என் கடமை தீரும். நல்ல வரனா பார்க்க தரகரிடம் சொல்லியிருக்கேன்.

                மாமான்னு கூப்பிட்ட சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்தேன். என் மருமகப்பிள்ளை கண்ணன் தான். என் பொண்டாட்டிக்கிட்ட பேசிக்கிட்டு இருக்கான். இவள் இப்போ நல்லா மாறிட்டா. வந்தா காபி, சோறு கொடுக்கிறாள். என் மகள் பிரியா. அப்பா கண்ணன் அத்தான் வந்திருக்காங்க என்றாள். வாப்பா என்றேன்… காப்பி சாப்பிட்டான்… அருண் எங்க மாமா… என்றான். அவன் சென்னையிலே ஒரு கம்பெனியிலே வேலையிலே சேர்ந்துட்ட தகவலை சொன்னேன்… கையிலே பார்ச்ல் தந்தான் தீபாவளி இல்லையா… எல்லோருக்கும் துணி எடுத்தேன் மாமா என்றான். தீபாவளி அன்றைக்கு எல்லோரும் என் வீட்டிலே சமைச்சி சாப்பிட்டு கொண்டாடலாமா மாமா என்றான். என் வீட்டுக்காரி சரிப்பா என்று முந்திக்கிட்டு சொன்னாள். மாமா அப்படி தோப்பு வரை நடந்து போய்க்கிட்டு வருவோமா என்றான். சரின்னு சொன்னேன். மாமி, பிரியா இன்னைக்கு இங்கே தான் சாப்பிடுவேன் என்றாள். என் மனைவியின் முகத்திலே வந்த சந்தோசத்தைப் பார்க்கணுமே… நடந்தே அவன் வேலை, அலுவலகம், தங்குமிடம் எல்லாம் பற்றி பேசினோம். சற்றுநேர அமைதிக்குப்பின் தயக்கத்தோடு கேட்டான். மாமா எனக்கு பிரியாவை கல்யாணம் பண்ணித் தருவீங்களா… என்று கேட்டான். நான் அவன் முகத்தை பார்த்தேன். மாமா நீங்க எனக்கு வெளியே பொண்ணு பார்க்கிறதா அறிஞ்சேன். ஏன் மாமா உங்க பொண்ணைக் கட்டிக்க எனக்கு தகுதி இல்லையா? இல்லை நான் யாருமில்லாதவன்னு நினைச்சிங்களா? அவன் வாயை பொத்தி இறுகக் கட்டி பிடிச்சேன். இருவர் கண்களிலும் கண்ணீர்…  சற்று நேர அமைதிக்குப்பின் அவனே பேசினான். பிரியாவிடம் கேட்டு சொல்லுங்க மாமா… என் மகளை பற்றி எனக்கு தெரியும். அவள் மனசையும் எனக்கு தெரியும். அவனது வருகைக்காக காத்திருப்பதும், அவனை மறைந்து நின்று ரசிப்பதும், அவனைப் பற்றி அதிகம் பேசுவதும், அப்பா கண்ணன் போன் பண்ணினாங்களாண்ணு என்கிட்டே கேட்கிறதும், அவள் போன் பேசினால் போனை வாங்கி பேசும் போது கண்ணில் தோன்றும் காதலும் எனக்குத் தெரியும். பிள்ளைகளின் முகத்தையும், நடவடிக்கை களையும் பார்த்து யூகிக்கத் தெரியாத அப்பனல்ல நான். அவள் மனசிலே அதிக ஆசையை வளர்த்து ஏமாறி விடக் கூடாது என்று நினைத்த அப்பன் நான். கண்ணனிடம் சரிப்பா என்றேன். உணவு உண்ட பின் என் மகளிடம் கேட்டேன்.  மவுனமாக தலையசைத்து சம்மதம் சொன்னாள். என் மகனிடம் தொலைபேசியில் தகவல் சொன்னேன். என் வீட்டுக்காரிக்கு மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வருகிற கார்த்திகையில் நிச்சயதார்த்தம். தை மாதம் கல்யாணம் என்றேன். மகிழ்ச்சியோடு சென்றான் என் மருமகன் கண்ணன். முகம் நிறைய பூரிப்போடு மகிழ்ந்தாள் என் மகள். கண்ணன் நடையில் ஒரு மிடுக்கு… முகத்தில் ஒரு திருப்தி… நம்மை வளர்த்து ஆளாக்கிய தாய் மாமன் மனதை நிறைத்து விட்டான் கண்ணன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *