செம்மணிப் படுகொலைகள்

  • By Magazine
  • |

பூ.வ.தமிழ்க்கனல்

தமிழீழம் யாழ்ப்பாணத்திலுள்ள செம்மணி கிராமத்திற்கு அருகில் பல நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் உயிரோடும் உயிரற்ற நிலையிலும் புதைக்கப்பட்டனர்.

தமிழீழத் தமிழ் மக்கள் முள்ளிவாய்க் காலில் மட்டும் இனப் படுகொலை செய்யப்படவில்லை. அதற்கு முன்பாகவே பல்வேறு திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் ஈழத் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்கள். அப்படியான ஒரு நிகழ்வே செம்மணிப் படுகொலை.

1998, 1999 ஆம் ஆண்டுகளில், செம்மணிப் படுகொலைப் புதை குழி உலகத்துக்குத் தெரிந்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

2001-ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டில் செனீவாவில் நடந்த ஈழத்தமிழர் பேரணியில் பங்கேற்கச் சென்ற ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், மனித உரிமை ஆணையத்தின் அலுவலகத்திற்குச் சென்று ஐ.நா. மனித உரிமை ஆணையரிடம் செம்மணிப் படுகொலைகள் பற்றி எடுத்துரைத்தார். ஐ.நா. மன்றத்தின் விசாரணைக் குழுவை அனுப்பிச் செம்மணியில் கொன்று குவிக்கப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ள 400 ஈழத் தமிழர்களின் புதை குழிகளைத் தோண்டி உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன் பின்பே ஐ.நா. மன்றம் சர்வதேசக் குழு ஒன்றைச் செம்மணிக்கு அனுப்பியது.

எவராலும் மறக்க முடியாத இனப் படுகொலைப் புதைகுழி. சிங்களப் படைகளின் கொடுஞ்செயலான செம்மணிப் புதைகுழியை அம்பலமாக்கும் கிளர்ச்சிக்குரிய நிகழ்வொன்று 1998-ஆம் ஆண்டு சூலை 3-ஆம் நாள் நடந்தது.

கிருசாந்தி கொலைவழக்கில் இறப்புத் தண்டனை விதிக்கப்பட்ட சிங்களச்சிப்பாய் சோமரத்தின ராசபக்சே கொழும்பு நீதிமன்றத்தில் வெளியிட்ட வாக்குமூலத்தில், ‘செம்மணியில் கிருசாந்தி, அவரது தம்பி பிரணவன், தாயார் இராசம்மா அயலவர் சிதம்பரநாதன் மட்டுமல்ல இன்னும் பலர் -300 இல் இருந்து 400 வரை – புதைக்கப்பட்டள்ளார்கள். நான் கிருசாந்தியையோ, மற்றவர்களையோ கொலை செய்யவில்லை. எனது மேலதிகாரிகள் கொன்று விட்டுக் கொண்டு வந்த சடலங்களை அவர்களின் கட்டளையின் பேரில் புதைப்பது தான் எனது வேலை; என்னைச் செம்மணிக்குக் கூட்டிச் சென்றால் அப்படிப் புதைக்கப்பட்ட தமிழர்களின் புதைகுழிகளை என்னால் அடையாளம் காட்டமுடியும்”என்றான்.

அப்போது தான் கொடுமைகள் முழுமையாக வெளியாகி உலகத்தை அதிரவைத்தன.

கால் நூற்றாண்டு கடந்து விட்ட பின் இப்போது அக்கிராமத்தில் கட்டடமொன்று கட்டுவதற்காக நிலத்தைத் தோண்டிய போது ஏராளமான எலும்புக் கூடுகள் வெளிப்பட்டன.

அதிர்ச்சியடைந்த மக்கள் அங்கு மேலும் தோண்டிய போது, ஒரு தாய் தன் குழந்தையைக் கட்டியணைத்த படியே இறந்து போயிருந்த காட்சி மட்டுமின்றி இன்னும் பல்வேறு நிலைகளில் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

ஆனால், இது குறித்து உள்ளூர் தாண்டி எங்கும் செய்திகள் வராமல் பார்த்துக் கொள்கிறது சிங்களக்கொலை வெறி அரசு.

செம்மணிக்கு அருகே உள்ள சிந்துபாத்தி மனிதப் புதைகுழியில் இரண்டாவது கட்டமாக அகழ்வுப் பணிகள் சூன் 6- ஆம் நாள் நடைபெற்றது. 11 நாள்களாக இந்த அகழ்வுப் பணிகள் நடைபெற்றன.

இந்த அகழ்வில் ,பள்ளிக்குச் செல்லும் சிறுவனின் எலும்புக்கூடு ஒன்று புத்தகப் பையுடன் கண்டெடுக்கப்பட்டது உலகை உறைய வைத்தது.

அங்கு காணும் எலும்புக் கூடுகளின் நிலை நெஞ்சை உலுக்கி நிலைகுலையச் செய்ய வைப்பதாக இருக்கின்றன.

செம்மணியில் இதுவரை 44 எலும்புக் கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டதுடன் 47 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.

இந்த அகழ்வுப் பணிகள் நடைபெறும் பகுதிக்கு அருகில் டிரோன் மூலம் ஆய்வு செய்யப்பட்டன. அந்த இடத்திலும் புதைகுழிச் சான்றும் பொருள்களும் அடையாளம் காணப்பட்டன. கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடுகள் அதிக அதிர்ச்சியையும் வேதனையையும் ஈழத் தமிழர் நடுவில் தோற்றுவித்து உள்ளது. கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடுகளின் வடிவத்தை வைத்துக் கொண்டு அவை எதிலும் ஆடைகள், அணிகலன்கள் எதுவும் அற்ற நிலையில் புதைக்கப்பட்டது என்பது மெய்யாகி உள்ளது. இதன் வடிவங்களைச் சட்ட மருத்துவ அதிகாரிகளும் நீதிமன்றமும் சட்ட வல்லுநர்களும் ஊடகங்களுக்கு வெளிப்படுத்துகின்ற தகவல்களை வைத்துப் பார்க்கின்ற போது அதன் உண்மைத்தன்மை வெளிப்படுகின்றது.

அதே போன்று அப்படுகொலையோடு தொடர்புடைய இராணுவக் குற்றவாளியான சோமரத்தின ராசபக்சே நீதிமன்றத்தில் தெரிவித்த ஒப்புதல் வாக்கு மூலம் அத்தகைய படுகொலையின் உண்மைத் தன்மையை உணர்த்துகிறது.

குழந்தைகள் மற்றும் கைக்குழந்தைகளோடு குவியலாக மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் அத்தகைய படுகொலையின் உண்மைத்தன்மையை மேலும் உறுதிப்படுத்துகின்றது.

இது வெளிப்படையாகவே இனப்படுகொலை என்பதையும் திட்டமிடப்பட்ட நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட படுகொலை என்பதையும் உணர்த்துகிறது.

இவர்கள் போரிலோ,போரின் எல்லைகளிலோ, போர்க் கருவிகளோடு சென்றவர்களோ கிடையாது. அதனால் இது ஓர் இனப் படுகொலை என்பதற்கான ஆதாரங்களைக் கொண்டிருக்கிறது அல்லது உறுதிப்படுத்துகிறது. தமிழர்கள் என்பதற்காகவும் காணாமல் போனவர்களைத் தேடியவர்கள் என்பதற்காகவும் வியாபார அனுமதிப் பத்திரம் கோரியவர்கள் என்பதற்காகவும் படுகொலை செய்யப்பட்டவர்கள்.

அவ்வாறெனில் இது திட்டமிடப்பட்டு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நிகழ்த்தப்பட்ட படுகொலையாகவே உள்ளது. இது சார்ந்து நீதிமன்றங்களும் சட்டவல்லுநர்களும் முன்வைக்கும் கருத்துக்கள் ஒருபுறம் அமைய, மறுபக்கத்தில் இதன் அரசியல் முக்கியத்துவத்தையும் ஈழத் தமிழர்களின் அரசியலில் இவ்வகைத் துயரங்கள் நீண்டது என்பதை ஆதாரங்களோடு வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு காணப்படுகிறது.

ஒரு சிங்கள இராணுவ முகாமின், ஒரு இராணுவச் சிப்பாய் அளித்த வாக்கு மூலமே, தமிழ் மக்கள் மீது செலுத்திய பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தி இருக்கிறது என்றால், நூற்றுக்கணக்கான இராணுவ முகாம்களில் 2009 இனப் படுகொலைப் போரில், போருக்கு முன்பான, பின்பான காலகட்டங்களில் தமிழர்கள் இனவெறிச் சிங்கள இராணுவத்தால் சந்தித்த துயரங்கள் சொற்களில் வடித்து விடக் கூடியவை இல்லை. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இன்னும் தோண்டப்படாத எத்தனை புதைகுழிகளில் இருப்பார்களோ என்னும் அச்சம் கூட, தங்களின் சொந்தங்களுக்கு நேர்ந்தவற்றை அறியாமல் வீதிகளிலே ஆண்டுக் கணக்கில் தாய்மார்கள் கண்ணீரோடு போராடும் காட்சிகள் மனதை உருக்குலைப்பவையாக இருக்கின்றன.

செம்மணிப் படுகொலையில் இராணுவம் ஈடுபட்டிருக்கிறது. சர்வதேசஅழுத்தங்களினால் அடிமட்ட ஊழியர்களுக்குத் தண்டனையும் புதைகுழிகளிலிருந்து சடலங்களை மறைத்து மேலதிகாரிகளைக் காப்பாற்றவும் செய்திருக்கிறது. இப்படிப்பட்ட இனவெறிச் சிங்கள இராணுவத்தின் கீழும் இனவாத அரசின் கீழும் தமிழர்கள் இருக்கமுடியுமா? என்பதைச் சர்வதேசம் இப்போதாவது உணர்ந்து கொண்டு தனது கடமையைச் செய்ய முன் வர வேண்டும். இலங்கை மீது ஒரு சர்வதேச விசாரணை உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும்.

ஆர்மேனியாவில் ஆர்மீனிய மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு அந்நாட்டு இராணுவ வீரர்கள் துணை நின்றார்கள் என்பதற்காகச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்குத் தண்டனையும் வழங்கப்பட்டது. அதைப் போல ஈழத்திலும் செம்மணி முதற்கொண்ட பல பகுதிகளிலும் இலங்கை இனவெறி அரசு நடத்திய படுகொலைகளை முன்வைத்து இனப் படுகொலை செய்த இராணுவத்தினரையும் அவர்களுக்குக் கட்டளையிட்ட இனப்படுகொலை இலங்கை அரசையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிகிடைக்கச் சர்வதேச நீதிமன்றம் இப்போதாவது முயற்சிக்க வேண்டும். செம்மணி மனிதப் புதைகுழி என்பது 60 ஆண்டுகாலமாக இலங்கை இனவெறி அரசு ஈழ மக்கள் மீது பல காலகட்டங்களில் நடத்திய இனப்படுகொலை ஆதாரங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த இனப் படுகொலைகளுக்கு தனித் தமிழ் ஈழம் மட்டுமே தீர்வாக இருக்கமுடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *