– ஓஷோ
நல்ல குணம் எதையும் உண்டாக்குவதில்லை. ஏனெனில் நீங்கள் முற்றிலும் நற்குணம் உடையவராக இருப்பின் உங்களுக்கு எதுவும் தேவையில்லை. நீங்கள் நற்குணம் உடையவராக இருப்பின் அங்கு ஆசை இல்லை. அங்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை. நீங்கள் முற்றிலும் சரியாக இருக்கின்றீர்கள். முற்றிலும் சரியாக இருப்பது எங்கும் நகர்வதில்லை. அரைகுறையானது தான் நகர்கிறது. அரைகுறையானது தான் எதையாவது உண்டாக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறது. ஒரு முற்றிலும் சரியான ஓவியன் ஓவியம் தீட்டுவதில்லை. ஒரு முற்றிலும் சரியான இசைக்கலைஞன் அவனுடைய வாத்தியக் கருவியைத் தூர எறிந்து விடுவான். ஒரு சிறந்த வில்லாளி வில்லையும் அம்பையும் முறித்து தூர எறிந்து விடுவான். முற்றிலும் சரியான மனிதன், புத்தரை போன்றவன் முற்றிலும் உபயோகமற்றவனாக இருப்பான். புத்தன் என்ன உண்டாக்கினார் ஒரு கவிதை , ஒரு சிற்பம், ஒரு ஒவியம், ஒரு சமூகம்! அவர் எதையும் செய்யவில்லை; அவர் உதவாக்கரை போல் தோன்றினார்.
நல்ல குணம் எதையும் உண்டாக்குவதில்லை. ஏனெனில் அதற்கு எதுவும் தேவையில்லை. உண்டாக்குதல் என்பது தேவையிலிருந்து எழுகிறது. உண்டாக்குதல் வருவதற்குக் காரணம் நீங்கள் சரியானவராக இல்லை. நீங்கள் முற்றிலும் நிரம்பியவராக, முற்றிலும் திருப்தியுடையவராக உணராததால், எதையாகிலும் செய்து அதைச் சரிக்கட்ட நினைக்கின்றீர்கள். நீங்கள் முற்றிலும் திருப்தியடைந்தவராக இருப்பின், நீங்கள் ஏன் எதையாவது செய்ய வேண்டும்? பிறகு நீங்களே இந்தப் படைப்பின் பெருமைக்குரியவராக ஆகிவிடுவீர்கள். பிறகு உங்கள் உள் எல்லாம் சரியாக இருப்பதால் எதுவுமே தேவைப்படுவதில்லை.
நல்ல குணம் எதையும் உண்டாக்குவதில்லை. இந்த உலகமே நற்குணமுடையதாகி விட்டால் எல்லா உபயோகரமான லாபம் தரக்கூடிய செயல்கள், இலட்சியங்கள் இல்லாமல் போய் விடும். உண்மையிலேயே இவ்வுலகம் நற்குணமுடையதாகி விட்டால், பிறகு இங்கு ஆடல் பாடல் தான் இருக்கும். உற்பத்தி இருக்காது. பிறகு எல்லாமே விளையாட்டாக ஆகி விடும். நீங்கள் இதை வெகுவாக ஆனந்திப்பீர்கள். ஆனால் இது உங்களுக்கு தேவை இல்லை. ஒரு முற்றிலும் சரியான ஞானி, முற்றிலும் உபயோகமற்றவராக இருக்கிறார்.
ஒன்றுமில்லாத சுயமே உண்மையான சுயம். நீங்கள் இல்லை என உணரும் போது, அப்பொழுது தான் முதல் முறையாக நீங்கள் இருக்கின்றீர்கள். ஏனெனில் சுயம் என்பது தன் முனைப்பின் மற்றொரு பெயராக இருக்கிறது. இதனால் தான் புத்தர், லாவோத்ஸே, சுவாங்தஸீ எல்லாரும் சுயம் என்பது கிடையாது என்றும், ஆத்மா என்பது கிடையாது என்றும் சொல்லுகிறார்கள். உண்மையில் அவை இல்லாமல் இல்லை. அவர்கள் ஆத்மா என்பது இல்லை, சுயம் என்பது இல்லை என்று சொல்லுகிறார்கள். ஏனெனில் உங்கள் தன் முனைப்பு மிகத் தந்திரமானது, அது அதன்பின் ஒளிந்து கொள்ளும். நீங்கள் சொல்லலாம், அஹம் பிரம்மாம்ஸி- நான்தான். பிரம்மன்- அனல் ஹக் நான் தான் கடவுள். தன் முனைப்பு இதன் பின்னே ஒளிந்து நிற்கும்.
புத்தர் சொல்லுகிறார். அங்கு உரிமை கொண்டாட யாரும் இல்லை. உங்களுக்குள் சுயம் இல்லை. நீங்கள் வெங்காயம் போன்று இருக்கின்றீர்கள். வெங்காய தோலை உரிக்க உரிக்க வந்து கொண்டே இருக்கும். முடிவில் ஒன்றும் இருக்காது. உங்கள் மனம் ஒரு வெங்காயத்தைப் போன்றது. உரித்துக் கொண்டே போகலாம். இதுதான் தியானம் என்று சொல்லப்படுவது உரித்துக் கொண்டே போதல். உரித்துக் கொண்டே போதல், ஒரு களம் வருகிறது. அங்கு எதுவும் மிஞ்சி இருக்கவில்லை. இந்த ஒன்றுமில்லா தன்மை தான் உண்மையான சுயம் ஆகும். எந்த சுயமும் உன்மையான சுயம் இல்லை. படகு வெறுமையாக இருக்கும் பொழுது தான், முதன் முறையாக நீங்கள் படகில் இருக்கின்றீர்கள்.
Leave a Reply