மாற்றுத் திறனாளிகள் குறித்த பார்வைகள்

மாற்றுத் திறனாளிகள் குறித்த பார்வைகள்

  • By Magazine
  • |

A. தர்மராஜ் (த.ராசு)

முந்தைய பாகத்தின் தொடர்ச்சி..

மாற்றுத் திறனாளிகளின் நலன் கருதி, இந்திய அரசின் மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுத் துறையின் கீழ் ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டுக்கான தேசீய நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனம் 2023 பிப்ரவரியில் திருப்போரூரை அடுத்த முட்டுக்காடு ஊராட்சியில் மாற்றுத் திறனாளிகளால் உருவாக்கப்பட்ட பொருட்களை பொது மக்களுக்கு காட்சிப்படுத்தும் தேசீய அளவிலான கண்காட்சி மற்றும் அவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ஒன்றினை நடத்தியது. இந்தக் கண்காட்சியில் 23 மாநிலங்களைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு 60 அரங்குகளில் தாங்கள் தயாரித்த பொருட்களை காட்சிபடுத்தினர். வேலை வாய்ப்பு முகாமில் 9 தனியார் நிறுவனங்கள் பங்கு பெற்றனர். சுமார் 150 மாற்றுத் திறனாளிகள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டனர்.

மாற்றுத் திறனாளிகள் திறன் மேம்பாட்டு பயிற்சிகளில் சேர்ந்து பயிற்சி பெறவும், வேலை வாய்ப்புகளை கண்டறிந்து பயன் பெறவும், பி.எம், தக் ஷ் என்ற இணையதளத்தை மத்திய அரசு 2023 செப்டம்பரில் துவங்கியது. இதன் மூலம் தேவையும் ஆர்வமும் உள்ள துறைகளில் படிப்பை தேர்ந்தெடுத்து இவர்கள் பயிற்சியும், வேலைவாய்ப்பும் பெறுவதற்கு வழி கிடைக்கும்.

அரசு நிதி உதவி பெறும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் சிறப்புப் பள்ளிகளால் நடத்தப்படும் சிறப்பு பள்ளிகள் மற்றும் ஆரம்ப நிலைய பயிற்சி மையங்களில் பயிலும் 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஒன்றில் மாற்றுத் திறனாளிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்த போது முன் வைக்கப்பட்ட கோரிக்கையில் ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.3 ஆயிரமும் கடுமையாய் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரமும் உதவித்தொகை வழங்கப்படுவது போல் தமிழகத்திலும் வழங்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டது. அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்களில் அவர்களுக்கு 5 சதவீதமும் அதுபோல் தனியார் துறைகளிலும் 5 சதவீதமும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், கடற்கரை, திரை அரங்குகள், வணிக வளாகங்கள் போன்ற பொது இடங்களிலும் அவர்களுக்கான கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் இதற்கென ஒருங்கிணைப்பு குழு அமைத்து முறையாக செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்ட்டிருந்தது.

2022-ல் மாற்றுத் திறனாளி மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஒரு குறிப்பிட்ட தூரம் சென்று வரும் சிரமத்தை தவிர்ப்பதற்காக அவர்களது வீடுகளுக்கே ஆசிரியர்கள் சென்றும் கற்பிப்பதற்கும், இயன்முறை மருத்துவம் பார்ப்பதற்கும் ஏற்பாடு செய்வதற்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்து தரப்பட்டது. இந்த ஏற்பாடு முறைப்படி செயல்பாட்டிற்கு வந்துள்ளதா என்று கண்காணிக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.

ஒரு சில கல்லுரிகள் மாற்று திறனாளிகளுக்கு சீட் அளித்தாலும், அவர்கள் விரும்பிக் கேட்கிற  துறையைத் தராமல், யாரும் கேட்காமல் காலியாக இருக்கும் துறைகளையே தருவதாக அறியப்பட்டது. இதிலே மாற்றுத் திறனாளிகள் நலத்துறை கூடுதல் கவனம் செலுத்தி கண்காணிக்கும் பணியை உறுதியாக மேற்கொள்ள வேண்டும் என டிசம்பர்-3 (மாற்றுத்திறனாளிகள் தினம்) இயக்கத்தின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு கல்லுரியிலும் எத்தனை மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது என்று மாணவர் சேர்க்கையின் போது பலகையில் எழுதி வைக்க வேண்டும் என்பதும் ஒரு கூடுதல் வெளிப்படைத் தன்மையின் பொருட்டு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்ட்ராவின் மும்பையைச் சேர்ந்த பெண் அவள். பிறப்பில் ஒரு மாற்றுத்திறனாளி. அவளுக்கும் மணநாள் என்று ஒன்று வந்தது. காதல் திருமணம். மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமை ஆர்வலராகவும் செயல்பட்டு வந்த வீட்டிலும் வெளியிலும் சக்கர நாற்காலி உதவியுடன் தான் நடமாடி வந்தார்.

திருமணம் முடிந்ததும் அதை பதிவு செய்வதற்கு புதிய கணவருடன் வந்தார். பதிவு அலுவலகம் இரண்டாவது மாடியில் இருந்தது. அந்த கட்டிடத்தில் லிஃப்ட் வசதி இல்லை. சக்கர நாற்காலியில் அமர்ந்த அந்தப் பெண் எப்படி மேலே போவது என்று புரியாமல் திகைத்தார். உடன் வந்த நபர் நிலைமையை புரிந்து கொண்டு பதிவுத்துறை அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். தரை தளத்துக்கு அவராகவே வந்து திருமண பதிவை முடித்துக் கொடுத்து உதவும்படி கோரிக்கை விடுத்தார். ஆனால் அதிகாரி இதை ஏற்கவில்லை. தம்பதியின் புகைப்படம் மற்றும் விரல் ரேகைகளை பதிவு செய்ய வேண்டியிருப்பதால் இரண்டாவது மாடிக்கே வந்து விடுமாறு கூறிவிட்டார். ஆகவே அந்த மாற்றுத்திறனாளியான பெண்ணை சக்கர நாற்காலியுடன் சேர்த்து தூக்கிக் கொண்டு கவனமாக படிக்கட்டுகள் வழியாக இரண்டாவது  மாடிக்குச் சென்று திருமணத்தை முடித்தனர்.

இதையடுத்து, மாற்றுத்திறனாளியான அந்த புதுமணப்பெண் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அது வருமாறு:

என் உடலில் உள்ள குறைபாட்டுக்கு இந்த அரசும், நாட்டு மக்களும் இடம் அளிக்காதது என்னை மனமுடையச் செய்துள்ளது. இந்த சம்பவத்தின் வாயிலாக, மனித இனத்தின் மீதான என் நம்பிக்கை தகர்ந்து விட்டது.

இரண்டு மாடிகள் தூக்கிச் செல்ல நான் ஒன்றும் உயிரற்ற உடைமை அல்ல. உயிருள்ள மனித பிறவி. திருமண நாள் அன்று என்னை இரண்டாவது மாடிக்கு தூக்கி செல்லும் போது கை தவறி கீழே போட்டிருந்தால் யார் பொறுப்பு? இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவை பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் பகிர்ந்தனர். நடந்த சம்பவத்துக்கு மகராஷ்டிரா துணை முதல்வரும் வேறு சில அரசியல் தலைவர்களும் மன்னிப்பு கோரினர். சம்பந்தப்பட்ட அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளியான மணப்பெண்ணை இரண்டாம் மாடிக்கு வரும்படி கட்டாயப்படுத்திய பதிவுத்துறை அதிகாரியை சஸ்பெண்ட் செய்து வருவாய்த் துறை உத்தரவு பிறப்பித்தது.

மாற்றுத் திறனாளிகளுக்கு சுய தொழில், வங்கிக்கடன் பெறுதல் குறித்த ஒரு நாள் பயிலரங்கம் நடத்துவதற்கென திட்டம் உள்ளது. இந்த பயிலரங்கம் அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவரால் நடத்தப்படுவது ஆகும். மாற்றுத் திறனாளிகள் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் வகையில் செயல்பட பல்வேறு தொழில் வாய்ப்புகள் உள்ளன. அவை குறித்து தெரிந்து கொள்வதற்கும், அதற்கான நிதி ஆதாரங்கள் குறித்து அறிந்து கொள்வதற்கும் இந்த திட்டம் உதவுகிறது. இப்படி ஒரு பயிலரங்கம் சென்னை ஈக்காட்டுத் தாங்கலில் அமைந்துள்ள தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தில் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொள்ள விரும்பும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் போன்ற விபரங்களை தெரிவித்து விண்ணப்பிக்க வேண்டியது. இதற்கு கட்டணம் இல்லை. விண்ணப்பத்தை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், டி.எம்.எஸ் வளாகம், தேனாம்பேட்டை, சென்னை  – 600 006 என்ற முகவரிக்கு குறிப்பிட்ட தேதிக்குள் அனுப்ப வேண்டியது. அழைப்புக்கடிதம் உரிய நேரத்தில்  அனுப்பப்படும்.

ஒவ்வொரு பொதுத் தேர்தல்களிலும் நாட்டிலுள்ள அனைத்து வாக்காளர்களும் மாற்றுத் திறனாளிகள் உட்பட தவறாமல் ஓட்டுப் போட வேண்டும் என்று தேர்தல் கமிஷன் விரும்புகிறது. கடந்த 2011-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கண்க்கெடுப்பின்படி 2.68 கோடி பேர் மாற்றுத் திறனாளிகளாய் இருந்தனர். மொத்த மக்கள் தொகையில் இரு 2.21 சதவீதம் பார்வை குறைபாடு, காது கேளாமை, கை கால்கள் பாதிப்பு, மனநோய் என்று பலவற்றால் மாற்றுத் திறனாளிகள் பாதிக்கப்பட்டிருந்தனர். வாக்காளர்களில் மாற்றுத்திறனாளிகள் எத்தனை பேர் என்ற விபரம் தேர்தல் கமிஷனிடம் இல்லை. மாற்றுத் திறனாளிகளுக்கு ஓட்டளிப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தாலும் அவர்கள் பற்றிய முழுமையான விபரங்கள் சேகரிக்கப்பட்டதாக தெரியவில்லை. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதே இல்லை. தேர்தல்களில் 100 சதவீதம் வாக்குப்பதிவை எட்ட வேண்டும் என்று தேர்தல் கமிஷன் விரும்புகிறது. மாற்றுத் திறனாளிகளும் வாக்களித்தால் மட்டுமே இது சாத்தியமாகும். ஆகவே, வாக்களிப்பின் போது அவர்கள் வரிசையில் நிற்காமல், நேரடியாக உள்ளே சென்று ஓட்டளிக்க  அனுமதிக்கலாம் என முடிவானது. அவர்களை வீட்டிலிருந்து வாக்குச் சாவடிக்கு அழைத்து வந்து, வாக்களித்த பின் வீட்டில் கொண்டு விடவும் சிறப்பு வாகன ஏற்பாடுகள் செய்யவும் ஆலோசிக்கப்பட்டது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 3-வது மாநில மாநாட்டின் 2-ஆம் நாள் நிகழ்வு திருப்பூரில் 2018 செப்டம்பர் முதல் வாரத்தில் நடந்த போது அதில் பேசிய முன்னாள் நீதிபதி கே.சந்துரு மாற்றுத்திறனாளிகள் யாசகம் கேட்கவில்லை. மாறாக சம உரிமை, சம வாய்ப்பை கேட்கிறார்கள். அதனை மறுக்கக் கூடாது. மாற்றுத்திறனாளிகள் தொடர்பான பல்வேறு வழக்குகளை நீதிமன்றம் சந்தித்திருக்கிறது.

இரண்டு கால்களும் இல்லாத பெண்ணை சங்கிலியால் கட்டி போட்டிருந்தார்கள். அந்த பெண் ஓடிவிடுவார் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்கள் . புகைப்படத்தை காட்டிய பின்னால் நீதிபதி கடுமையாக கண்டித்தார். நீதிமன்ற உத்தரவு வாங்கினால் மட்டும் போதாது. அதனை அமல்படுத்தவும் போராட வேண்டியுள்ளது.

ரயில்களில் ஏறுவதற்கு அனைத்துப் பெட்டிகளிலும் சாய்வுதளம் மற்றும் தளிக் கழிப்பறை வைப்பதாக ரயில்வே அமைச்சகம் ஒப்புக் கொண்டது. ஆனால் இன்று வரை அமல்படுத்தப்படவில்லை. அதே போல, பேருந்து போக்குவரத்திலும் மாற்று திறனாளிகள் ஏறுவதற்கு உரிய வசதிகள் இல்லை. போக்குவரத்து, மின்சாரத் துறைகளில் பணியின் போது விபத்தில் சிக்கி மாற்றுத்திறனாளி ஆபத்துக்கு ஆளாகி விட்டால் அவர்களை வேலையை விட்டு நீக்கும் நிலை உள்ளது. மாறாக, அவர்கள் ஓய்வு பெறும் வரையில் சம்பந்தப்பட்ட துறைகளில் வேறு ஏதேனும் ஒரு வேலையில் ஈடுபடுத்த வேண்டும். பொதுத்துறையில் பணிபுரிவோரின் நிலை இது. தனியார் துறையில் பணிபுரிந்தால், இந்தச் சட்டம் பொருந்துவதில்லை. ஆகவே சட்டத்தை திருத்தம் செய்ய வேண்டும்.

மனநலம் குன்றியவர்களும் மாற்று திறனாளிகள் தான். பணிக்காலத்தில் ஒரு மனநலம் குன்றினால் மாற்றுத் திறனாளிதான் . அவர்களை பணியை விட்டு அனுப்ப முடியாது. சட்டம் எளிமையாக இல்லாமல் இருப்பது, இருக்கும் சட்டத்தை அமல்படுத்த நீதிமன்றம் செல்ல வேண்டி இருப்பது, நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்துவது போன்ற ஒவ்வொன்றுக்கும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. இதற்கெல்லாம் இன்றைக்கு இயக்கங்கள் தேவைப்படுகின்றன. நீதிமன்றத் தீர்ப்புகளை நிறைவேற்ற போராடுவதுதான் வேதனையான செயல். இவ்வாறு முன்னாள் நீதிபதி கே.சந்துரு பேசினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு தேவைப்படுவது இரக்கம், கருணை, பச்சாதாபம் அல்ல. அவர்களுக்கு மற்றவர்களுக்கு தரப்படுவதை போல் சம வாய்ப்பு தந்தால் போதும். அவரவரும் தங்கள் தன்த்திறமையை வெளிக்காட்டி அவர்கள் மற்ற எவருக்கும் குறைந்தவர்கள் அல்ல என்று நிரூபிப்பார்கள் இப்படி சொல்கிறார். கேட்கும் சக்தி இல்லாதவர்களுக்கென்று ஐரோப்பா, ஆசியா கண்டங்களுக்கென்று நடந்த அழகிப் போட்டியில் செக் குடியரசு நாட்டின் பிரேக் நகரில் மிஸ் ஐரோப்பா, ஆசியா ஆக தேர்வு பெற்ற ஹரியானா மாநிலத்தை சேர்ந்த நிஷ்தா துடேஜா என்பவர் கேட்கும் திறன் அற்றவர்களுக்கான அழகிப் போட்டியில் மிஸ் இந்தியா 2018 ஆக வந்திருப்பதும் இதே நிஷ்தா தான்! இவர் கேட்கும் திறமையை மீட்டெடுக்கும் கருவிகளை தயாரிப்பதில் முன்னணியில் இருக்கும் சைமன்ஸ் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக செயல்பட்டு வருபவர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான ஏற்பாடு தலைநகர் சென்னையில் கே.கே.நகரில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில வள மற்றும் பயிற்சி மையத்தில் பிரதிவாரம் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்த முடிவானது. இந்த முகாமுக்கு சம்பந்தப்பட்ட சிறப்பு மருத்துவர்கள் அழைக்கப்பட்டனர். மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாற்றுத் திறனாளிகள் நலத்துறைச் செயலர் 2021- ஜீன் மாதத்தில் பிறப்பித்தார். அதில் தெரிவிக்கப்பட்ட 21 வகையான மாற்றுத்திறனாளிகளில் 40 சதவீத மற்றும் அதற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர் ஒருவருடன் தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இச்சலுகைகளைப் பெற அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டையை பேருந்து நடத்துநரிடம் காண்பிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *