பழனி அரங்கசாமி
உலக வாழ்வில் செடியும், கொடியும், புல்லும், புதரும், மாடும், மனையும் ஒரு கட்டத்தில் வாடி வதங்கி மக்கி மடிந்து விடுகின்றன. மக்கள் கூட்டமும் பிறந்து வளர்ந்து முதிர்ந்து மடிவது தான். வாழ்வாவது மாயம் மண்ணாவது திண்ணம் என்பது எச்சரிக்கை. ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவதில்லை என்பது கசப்பான உண்மை. மரணத்தின் முன்னர் ஆண்டானுக்கும் அடிமைக்கும், ஏழைக்கும், பணக்காரனுக்கும் ஒரே நிலை தான். மரணம் என்பது அனைவர்க்கும் உறுதி என்றால் நாம் ஏன் அதனைத் தவிர்க்கும் வழிமுறைகளைச் சிந்திக்க வேண்டும்? வெந்ததைத் தின்று வினை வரும் போது மடிவோமே என்பது ஒரு விரக்தியான வேதாந்தம்.
இயற்கை அளித்த இந்த உலக வாழ்வில் நல்லன செய்து நோய் நொடியின்றிக் கழித்து முதிர்ந்த வயதில் மூச்சு நிற்கட்டுமே. நோயில்லாத நல்வாழ்வைத் தான் வள்ளற் பெருமானும் மரணம் இலாப் பெருவாழ்வைப் பெறலாம் கண்டீர் என்று குறிப்பிட்டுள்ளார். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்னும் நம் நெஞ்சில் நிலைத்த பழமொழி.
எனவே மரணத்தைப் பற்றிய கவலையை ஒதுக்கி நோய் அணுகாத நல்வாழ்வைப்பற்றி சிந்திப்பது நல்லது.
மனிதர்க்கு வரும் நோய்கள் இருவகைப்படும். காசநோய், வலிப்பு, தொழுநோய், அரிப்பு, பார்வை மங்குதல் போன்ற சிக்கல்களை நெடுங்காலம் போராடித்தான் தீர்க்க வேண்டும். இவை ஒரு வகை. மற்றொரு வகை திடீர் நோயானது விண்ணில் பறக்கும் கழுகு மண்ணில் விளையாடும் கோழிக்குஞ்சைக் கண்மூடித் திறப்பதற்குள் கவ்விக் கொண்டு போவது போல், கண நேரத்தில் உயிரைப் பறிக்கும் மாரடைப்பு உள்ளிட்ட நெஞ்சுவலி, குருதியோட்ட நாடி வெடிப்பு, கொழுப்பு அடைப்பு, மூச்சையே அடைக்கும் நெஞ்சு சளி இவை இரண்டாம் வகை. இத்தகு திடீர் மரணங்களினின்றும் உடலைப் பேணும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றினாலே, மரணத்தைச் சற்று பின்தள்ளிய ஒரு நல்வாழ்வைப் பெறலாம்.
பிறந்த நாள் தொடங்கி கடைசி மூச்சு அடங்கி இறக்கும் நாள் வரை, நாம் மூச்சு விடும் செயல் மட்டும் தானாகவே நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. மூச்சை இழுப்பதும் வெளியிடுவதுமாகிய இந்தப் பணி இரவு பகலாக நடக்கும் ஒரு அனிச்சைச் செயல்.
வெகுதூரம் பயணிக்கும் போது நமது காரினைப் பரிசோதித்து விட்டுப் பின்னர் அதில் பயணம் செய்கிறோம். அதுபோல் நீண்ட வாழ்க்கைப் பயணத்துக்கு உதவி புரியும் இருதயத்தை, தேவைப்பட்டால் அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். எதிரலை நெஞ்சுவலிப் பரிசோதனை, எக்ஸ்ரே தேர்வு மற்றும் நடை ஓட்டத் தேர்வு செய்து நாம் காணுகின்ற நம் இருதயத்தின் வலிமையை எண்பது விழுக்காடு நம்பலாம். ஆஞ்சியோகிராம் பரிசோதனை இரத்தக்குழாயில் உள்ள அடைப்புகளை வெளிப்படுத்தி தேவைப்பட்டால், அறுவை சிகிச்சைக்கு வழிகாட்டும்.
ஐ.நா சபையின் புள்ளிவிபரப்படி உலக முழுதும் ஆண்டுதோறும் இரண்டு கோடியே ஐம்பது இலட்சம் மக்கள் மாரடைப்பினால் மரணம் அடைகின்றனர். இந்திய மக்கள் தொகை கணக்கீட்டு ஆணையரது 2003-ஆம் ஆண்டு அறிக்கையின்படி நம் நாட்டில் இதய நோய்களால் மட்டும் நூற்றுக்கு 31 பேர் இறந்து போகின்றனர். இத்தகைய திடீர் மரணத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்குத்தான் உலக உடல் நல அமைப்பு (WHO) ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 29-ஆம் நாளை உலக இருதய தினமாக அறிவித்துள்ளது. இருதய நோய்கள் பலவிதமாக இருந்தாலும், மாரடைப்பு தான் மக்களின் இறப்புக்கு முதல் காரணமாகும்.
வருமுன் காப்போம் நாமே மாரடைப்பினைத் தவிர்க்கும் பொருட்டு நம் வாழ்க்கை முறைகளையும் அன்றாட அலுவல்களையும் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். உணவில் கட்டுப்பாடும், உடற்பயிற்சியில் தவறாமையும், மன உளைச்சலை தவிர்ப்பதையும் பின்பற்ற வேண்டும். ஆழ்ந்த உறக்கத்தை சீர்குலைத்து விடக் கூடாது. ருசி மிகுந்த அறுசுவை உண்டியாயினும் அளவுக்கு அதிகமாக உண்ணுதல் தவறு. உணவுப்பையில் கொஞ்சம் காலி இடம் இருந்தே ஆக வேண்டும். இந்தப் பழக்கம் குடலுக்கும், நெஞ்சுக்கும் தொல்லை கொடுக்காமல் ஆழ்ந்த உறக்கத்துக்கும் உணவின் செரிமானத்திற்கும் உதவி புரியும். அன்றாடம் ஏழு மணிக்கு குறையாத ஆழ்ந்த உறக்கம் நீண்ட ஆயுளுக்குத் துணைபுரியும்.
தினமும் உடற்பயிற்சினை குறைந்தது அரைமணியாயினும் செய்ய வேண்டும். இல்லையாயின் ஓய்வு பெற்றோர், அதிலும் முதியோர் தினமும் பத்தாயிரம் அடிகள் நடப்பது நல்லது. அத்தோடு முழங்கால், இடுப்பு, முதுகு, தோள்பட்டை ஆகிய இணைப்புப் பாகங்களுக்கும் பயிற்சி கொடுக்கலாம். எழுபது வயதிற்கு மேற்பட்டோர் அந்த அளவி உடற்பயிற்சி செய்யவில்லையாயினும், நாலாயிரம் அடி தூரம் நடக்க வேண்டும்.
குடும்ப பிரச்சனை, எதிரிகள் தொல்லை, கடன்பளு, பணத்தை இழந்த ஏமாற்றங்கள், நேரம் கடந்த அலுவலகப்பணி ஆகியவற்றால் மன உளைச்சல் ஏற்படலாம். சிக்கலை பற்றியே சிந்தித்து மன இறுக்கத்தை அதிகப்படுத்தினால் தீர்வு வரப்போவதில்லை. அதிலிருந்து மீள்வது எப்படி என்பதைப்பற்றி அமைதியாக சிந்திக்க வேண்டும் அல்லது அப்போதைய தீர்வாக நமக்குப் பிடித்தமான திரைப்பட பாடல்கள், இசை இவற்றை வானொலி அல்லது ஒலி, ஒளி காட்சிகள் கேட்கலாம. பிடித்தமான கதை, கட்டுரைகளை படிக்கலாம். மன உளைச்சலில் அமிழ்ந்து விடாமல் நமது மன இறுக்கத்தை தளர்த்துவதற்கு இசையும் படிப்பும் துணை புரியும்.
ஒழுங்கில்லாத இதயத் துடிப்பினையும், கடுமையான வலியினையும் ஏற்படுத்தி மரணத்தை விளைவிக்கும் மாரடைப்பை தவிர்க்க வேண்டுமாயின், குடிப்பழக்கம், புகைத்தல், உடலுழைப்பு இல்லாமை, ரத்த அழுத்தம், உப்பு, இனிப்பு, கொழுப்பு உணவு ஆகியவற்றை கட்டுப்படுத்த வேண்டும். தலைசுற்றல், மயக்கம், உடல்சோர்வு, மூச்சுவிட திணறுதல் ஆகியவையே மாரடைப்பின் அறிகுறிகளாகும். நெஞ்சு எரிச்சல், வலி இடது தோள்பட்டையில் தொடங்கி, கழுத்து, முதுகு, தாடை வழிப்பரவும். வெப்பம் இல்லாத குளிர்ந்த நேரத்தில் கூட அதிகப்படியான வியர்வை ஏற்படும். இத்தகைய சூழ்நிலையில் தாமதம் இன்றி மருத்துவரை அணுக வேண்டும்.
அவசர காலங்களில், மருத்துவ வண்டியினை வீட்டுக்கோ, அலுவலகத்துக்கோ அழைத்திடலாம் அப்படி மருத்துவமனைக்கு போகும் வரை நடப்பதோ, காரை ஒட்டுவதோ தவறு. அமைதியாக நீண்ட சாய்மானங்களிலோ அல்லது படுக்கையிலோ அமர்ந்து கொள்ளலாம். நெஞ்சு வலியும், வியர்வையும் இருந்தால் டிஸ்பிரின் (325), அடர்வாஸ்டின் (80), குளோபிடாகிரின் (150) ஆகிய ஒவ்வொரு மாத்திரையை தண்ணீருடன் பருகலாம். தேவைப்பட்டால் இந்த மாத்திரைகளை வீடுகளில் கூட வாங்கி வைத்துக் கொள்ளலாம். சிறந்த பன்னோக்கு மருத்துவமனைகளில் இவை கிடைக்கின்றன. இந்த முதல் உதவி செயற்பாட்டினால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது. முன்னெச்சரிக்கையாக விழுங்கிய இந்த மாத்திரைகளைப் பற்றி மருத்துவருரிடம் கூறி விடலாம்.
இருதயப் பரிசோதனையை கால்மணி நேரத்துக்குள் செய்து பார்த்து உரிய சிகிச்சையினை மேற்கொள்ள இப்போதெல்லாம் உடற்கூறாய்வு எந்திரங்கள் வந்து விட்டன. சற்று வசதியுள்ளவர்கள் பலநோக்கு மருத்துவமனையில் இத்தகைய ஆய்வுக்குத் தம்மை உட்படுத்தி உரிய மருத்துவத்தை உடனடியாக மேற்கொள்ளலாம்.
மூன்று வேளை நிதானமான உணவு என்பதோடு வாரத்தில் மூன்று நாட்கள் விரல் அளவு இஞ்சித்துண்டு, மூன்று அல்லது நான்கு வெள்ளைப்பூண்டு இவற்றை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி தேநீர் அல்லது பாலில் வேகவைத்து உண்டால் நலமுடன் வாழலாம்..
Leave a Reply