பாவலர் கருமலைத்தமிழாழன்
சோலைக்குப் பூவழகு; நீலவானை
சொக்கவைக்கும் நிலவழகு; செம்மைபூசும்
காலைக்குக் கதிரழகு; கிராமத்திற்குக்
கரும்பச்சை வயலழகு; இல்லத்திற்கு
மாலையிட்ட நல்மனையாள் அழகு; தூய்மை
மனங்கள் தாம் மாந்தர்க்கழகு; ஓங்குயர்ந்த
ஆலைகளே நாட்டழகு; வளத்தைக் கூட்டும்
அருந்தொழில்கள் உழைப்பிற்கே அழகைச் சேர்க்கும் !
புல்லிற்குப் பனிமுத்தே அழகு; தேனே
புறவழகுப் பூவிற்கு அழகு; நிற்கும்
கல்மலையே பூமிக்கு அழகு; அந்தக்
கல்மலைக்கு வெண்முகிலே அழகு; பாட்டின்
பல்சுவைக்கோ உவமைகளே அழகு; நேயம்
பதிந்த நெஞ்சே மாந்தர்க்கு அழகு; நாட்டைப்
பல்வகையில் உயர்த்துகின்ற உழைப்பின் மூலம்
படைக்கின்ற தொழில்வளமே அழகாம் என்றும் !
மலையளவு பொன்னிருந்தும் உழைக்காவிட்டால்
மணலளவு பொன்கூடத் தங்கிடாது
அலையலையாய்த் தோல்வி வந்து வீழ்த்தும் போதும்
அடுத்தடுத்து நாம் முயன்றால் தழுவும் வெற்றி
தலையான அறிவியலைப் பயன்படுத்தித்
தரமான தொழில்வளத்தைப் பெருக்குவிப்போம்
நிலையாக நாமுழைத்தால் தொழிலில் நாடும்
நிமிர்ந்து நிற்கும் ;அழகாகப் பொலியும் வாழ்வே !
Leave a Reply