பெண்ணே வாள் ஏந்து

  • By Magazine
  • |

கே.பி.பத்மநாபன்

பெண்ணென்றும் ஆணென்றும் காண்பதெல்லாம்

                பிறவியெனும் இயற்கை தன் உருவாக்கங்கள்;

பெண்ணுக்கும் ஆணுக்கும் உருவமன்றிப்

                பெரும்பண்பில், பேரறிவில், பேதம் இல்லை;

பெண்ணென்றும் ஆணுக்கே அடிமை என்றே

                பிழையுரைப்போர் யாவருமே மூடராவர்;

பெண்நீதி ஆண்நீதி என்றில்லாமல்

                பிழையற்ற சமநீதி காணல் நீதி!

பெண்ணுக்குள் மென்மையெனும் மேன்மைப் பண்பு

                பேராற்றல் கொண்டொளிந்து நிற்றல் உண்மை;

பெண்ணவளின் மென்மையினால் சக்தியற்ற

                பேதையவள் என்றெண்ணும் மூடரெல்லாம்

பெண்மையினை வன்புணர்வால் ஆள எண்ணிப்

                பெருங்குற்றம் செய்வதெலாம் சமூகத் தீது;

பெண்ணுரிமைக் காத்திடவே பெண்களெல்லாம்

                பெருமளவில் எழுந்திட்டால், வீழும் ஆண்மை!

பெண்களெலாம் தற்காப்புக் கலையைக் கற்றுப்

                பெரும் வீர மங்கையராய் வலமும் வந்து

பெண்மையினைத் தரம் தாழ்த்தும் விளம்பரங்கள்,

                பேசுதிரை வசனங்கள் தமை எதிர்த்து

மண்ணிதிலே மறவாளை உயர்த்தி விட்டால்

                மறையாதோ பாலியலின் வன்முறைகள்?

பெண்ணடிமை எனும் கறையை மாய்ப்பதற்குப்

                பெண்ணே நீ முன்னுரிமை வாளை ஏந்து!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *