– வழக்கறிஞர் பி. விஜயகுமார்
வாகன விபத்து வளர்ப்பு பிராணிகளுக்கு பொருந்துமா?
கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் 2022-ஆம் ஆண்டு ஒரு வழக்கு நடந்தது. அதாவது ஒருவர் செல்லமாக வளர்த்து வந்த உயர்ரக நாய் மீது ஒருவர் தமது வண்டியை கவனக்குறைவாக ஒட்டி, அந்த நாய்க்கு விபத்து ஏற்படுத்தி அதை சாகடித்து விட்டார். இதனால் மனம் நொந்ந நாயின் சொந்தக்காரர் நீதிமன்றத்தை நாடி விபத்து ஏற்படுத்திய டாக்சி டிரைவர் மீது இ.த.ச பிரிவு 304 A (கவனக் குறைவால் இறப்பு ஏற்படுத்துவது) படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முறையிட்டார்.
அவர் நீதிமன்றத்தில் வைத்த வாதம் என்னவென்றால் ஒருவேளை என்னுடைய நாய் ஒரு வழிபோக்கரை விரட்டி அவரை கீழே விழ வைத்து அவர் கை எலும்பு முறிந்தால் என் மீது இ.த.ச பிரிவு 326 (கொடுங்காயம் விளைவித்தல்) படி பத்து வருடம் வரைக்கும் தண்டனை வழங்கலாம் என்றுள்ளது. அதே போன்று என் செல்ல பிராணியை விபத்து ஏற்படுத்தி கொன்றவருக்கு இ.த.ச பிரிவு 304 A படி வாகன விபத்தால் இறப்பு ஏற்படுத்தியவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை தண்டனை வழங்கலாம் என சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது.
இந்த வழக்கை ஆராய்ந்த உயர்நீதிமன்றம் இ.த.ச பிரிவு 304 A மனிதர்களுக்கு விபத்தால் ஏற்படுத்தியதற்கு மட்டுமே பொருந்தும் என்றும் மிருகங்களுக்குரிய இறப்பு பற்றி அங்கு குறிப்பிடப்படவில்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.
இ.த.ச பிரிவு 326 கொடுங்காயம் விளைவிப்பதற்குரிய தண்டனை. அதாவது ஒரு நாய் தெருவில் போகிற ஒருவரை விரட்டி கீழே விழ வைத்து அவருக்கு கொடுங்காயம் ஏற்படுத்தினால் நாய் உரிமையாளர் மீது இவ்வழக்குப் பதிவு செய்யலாம் என்று உள்ளது. ஆனால் நாய் உரிமையாளர் குற்றம் செய்யும் எண்ணத்தோடு நாயைத் தூண்டிவிட்டு ஒருவர் கையை முறித்தால் மட்டுமே இச்சட்டம் வரும். அப்படி இல்லாத பட்சத்தில் நாய் உரிமையாளர் மீது பாதிக்கப்பட்டவர் Law of Torts -சின் கீழ் இழப்பீட்டு தொகை மட்டுமே கேட்க முடியுமேத் தவிர இ.த.ச வழக்கு பதிவு செய்ய முடியாது.
மற்றபடி இ.த.ச 428, 429 பிரிவுகளும் விலங்குகளுக்கு உரியவை தான். இங்கு ஒருவர் தமது காளை மாட்டை பக்கத்து வீட்டுக்காரர் கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டிருந்த இன்னொரு காளை மாட்டை திட்டமிட்டு முட்ட வைத்து அக்காளைக்கு இறப்பு ஏற்படுத்தினால் இ.த.ச பிரிவு 429 படி ஐந்து வருடம் வரை அவருக்குத் தண்டனை வரும். சும்மா இரு காளைகள் சண்டையிட்டு அவைகளுக்குரிய கொம்பை முறித்துக் கொண்டால் மாட்டுக்காரர்கள் மீது வழக்கு வராது. மேற்படி அனைத்து சம்பவமும் குற்ற உணர்வோடு செய்தால் மட்டுமே இ.த.ச பிரிவுகள் வரும். அப்படி இல்லையென்றால் பாதிக்கப்பட்டவர்கள் நஷ்ட ஈடு வழக்கு மட்டுமே தொடுக்க முடியும்.
Leave a Reply