நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்- “லிச்சி”

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்- “லிச்சி”

  • By Magazine
  • |

நமது மூலிகை மருத்துவர்

அழகான, மணமான, சுவையான லிச்சி பழத்தை கொடுப்பது 15 முதல் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய மரம். இது சீனாவை பூர்விகமாக கொண்டது.

தற்போது இந்தியா, தாய்லாந்து, மலேசியா, இலங்கை, வியட்நாம் போன்ற நாடுகளில் பயிராகிறது. இதன் காய் பச்சையாக முட்டை வடிவத்தில் இருக்கும். பழுக்கும் போது ரோஜாபூ நிறத்தில் (pink) இருக்கும்.

சிலர் காக்கி (பழுப்புநிறம்) நிறத்தில் உருண்டையாக இருக்கும் “லாங்கன்” பழத்தை லிச்சிபழம் என்று கருதுகின்றனர். லிச்சிபழம் வேறு, லாங்கன் பழம் வேறு. இரு வகை பழங்களும் தோலை உரித்தால் ஒன்று போலவே இருக்கும். குணங்களும் ஏறக்குறைய ஒன்றே தான்.

லிச்சிபழத்தின் தோல் மெல்லியதாக இருக்கும். அதனை உரித்தால் உண்ணக்கூடிய  வெண்ணிற சதைப்பற்று பகுதி இருக்கும். நடுவில் ஒரு விதை காணப்படும்.

லிச்சியின் பச்சைகாய்கள், விதைகள்,  தோல்பகுதியை உண்ணக் கூடாது. நச்சுத்தன்மை உள்ள  methylene cyclopropyl glycine  என்ற வேதிப்பொருள்களும் Hypoglycine A  என்ற புரதமும் இருப்பதால் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும்.

பழச்சதை சத்துமிக்கது, சுவையானது அதிக மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. தினம் 200 கிராம் வரை உண்ணலாம். சத்துமிக்கது என்பதால் இப்பழம் மட்டும். முழு வயறு சாப்பிடக்கூடாது.

தாவரவியல் பெயர்:  Litchi chinensis

ஆங்கில பெயர் : Chinese chery

வேறுபெயர்கள்: விழுதிபழம், விளச்சிபழம்

அடங்கியுள்ள விட்டமின் சத்துக்கள்

அதிக அளவில் விட்டமின் C சத்து உள்ளது. மேலும் விட்டமின் A, விட்டமின் B1, விட்டமின் B3, விட்டமின் B6, விட்டமின் B9  போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளது.

தாதுசத்துக்கள்

அதிக அளவில் பொட்டாசியம், தாமிரசத்து உள்ளது. மேலும் இரும்பு சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், கால்சியம், செலினியம் போன்றவைகள் குறைந்த அளவில் உள்ளன.

தாவரவேதிப் பொருள்கள்

Oligonols, Proanthocyanidins, Epicatechin, Rutin.

பிறசத்துக்கள்

நார்சத்து, நீர்சத்து

லிச்சி பழத்தின் மருத்துவப்பயன்கள்

1. நோய் எதிர்ப்பு சக்திக்கு

நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான விட்டமின் C சத்து லிச்சி பழத்தில் அதிகமாக உள்ளது. 10 லிச்சி பழத்தில் நமக்கு ஒருநாள் தேவையான விட்டமின் C சத்து கிடைத்து விடுகிறது. ஆகவே லிச்சிபழத்தை தொடர்ந்து சாப்பிட நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.

2. ஆரோக்கியமான இரத்த ஓட்டத்திற்கு

லிச்சிபழத்தில் அதிக அளவில் பொட்டாசியம் இருப்பதால் அதிக இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் தாமிரசத்து, இரும்புசத்து, விட்டமின் B9 (Folate) போன்றவைகள் இரத்த சிவப்பணு உற்பத்திக்கு உதவியாக இருப்பதால் இரத்தசோகை ஏற்படாமல் செய்து இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

மேலும் ஆன்டி ஆக்சிடன்டுகள் அடங்கியுள்ள பினாலிக் கூட்டுபொருள்கள் (Phenolic compounds) லிச்சிபழத்தில் அதிகம் இருப்பதால் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்து கொழுப்பு அடைப்பு ஏற்படாமல் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

3. எலும்பு ஆரோக்கியத்திற்கு

எலும்பு உறுதியாவதற்கு தேவையான சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ் சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, தாமிரசத்து, இரும்புசத்து போன்றவைகள் லிச்சிபழத்தில் அடங்கியுள்ளதால் இப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவது எலும்பு ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

4. மலச்சிக்கல் மாறுவதற்கு

லிச்சிபழத்தில் நார்சத்தும், நீர்சத்தும் இருப்பதால் மலச்சிக்கலை தடுத்து நல்ல ஜீரண சக்தியை உண்டாக்குகிறது.

5. கோடைக்கு சிறந்த பழம்

லிச்சி பழத்தில் 80 விழுக்காட்டிற்கு மேல் நீர்சத்து உள்ளது. மேலும் தாது சத்துக்களும், விட்டமின் சத்துக்களும் இருப்பதால், கோடைக்காலங்களில் இப்பழத்தை சாப்பிட உடலில் நீர்சத்து குறையாமல் சரி செய்வதுடன் சோர்வடையாமல் பாதுகாக்கிறது.

6. முகப்பருவிற்கு

லிச்சிபழத்தின் சதையுடன் தயிர் கலந்து அரைத்து முகப்பருவிற்கு பூசி உலரவிட்டு பின் குளிர்ந்த தண்ணீரால் கழுவி வர முகப்பரு மறையும்.

7. புற்றுநோய் தடுப்பிற்கு

லிச்சிபழத்தில், Oligonol, Proanthocyonidins, Epicatechin, Rutin போன்ற ஆன்டி ஆக்சிடன்டுகள் அதிகமாக இருப்பதால் புற்றுநோய் உருவாக காரணமாக இருக்கும் காரணிகளை வெளியேற்றி புற்றுநோய் உண்டாகாமல் பாதுகாக்கிறது.

8. தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு

லிச்சிபழத்தில் உள்ள விட்டமின் C சத்து, விட்டமின் A சத்து, இரும்பு சத்து, தாமிரசத்து, Oligonol  போன்ற  ஆன்டி ஆக்சிடன்டுகள் இருப்பதால் லிச்சிபழத்தை தொடர்ந்து சாப்பிட தோல் சுருக்கம் மாறி பழபழப்பாகும். மேலும் முடி உதிர்தல் மாறும்.

9. கண்பார்வைக்கு

விட்டமின் A, விட்டமின் C மற்றும் Anti oxidant தாவர வேதிப்பொருள்கள் அதிகம் இருப்பதால் லிச்சிபழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் வெள்ளெருத்து என்னும் கண்புரை நோயை தள்ளி போடலாம் மற்றும் கண்பார்வையையும் தெளிவாக்கும்.

10. கவனிக்க வேண்டியவைகள்

  1. சிலருக்கு ஒவ்வாமையாக ஊரல், தோல் தடிப்பு, உதடு வீக்கம், மூச்சு விட சிரமம் ஏற்படலாம்.
  2. பச்சை நிற காயாகவோ, தோலுடனோ, விதையுடனோ உண்ணக் கூடாது. பழச்சதையை மட்டுமே உண்ண வேண்டும்.
  3. கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் சிறிதளவில் உண்ணலாம். மேலும் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
  4. தினம் 100 கிராம் முதல் 200 கிராம் வரை பழச்சதை உண்ணலாம்.

வேறு உணவுப்பொருள்கள் எடுக்காமல் இப்பழம் மட்டும் வயறு நிரம்ப சாப்பிடக் கூடாது. அவ்வாறு உண்டால் செரிமானம் தடைபட்டு இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென குறைந்து உயிர் பாதிப்பு ஏற்படலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *