– முனைவர் முல்லைத்தமிழ்
உள்ளங்கை வெள்ளை வர்மம்
சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான பூவல் வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் கையில் உள்ள வர்மமாகிய உள்ளங்கை வெள்ளை வர்மம் பற்றி அறிவோம்.
உள்ளங்கை வெள்ளை வர்மம், பெருவிரலுக்கடியில், நடுவிரலோடு சேரும் உள்ளங்கைப் பகுதியில் அமைந்துள்ளது. இவ்வர்மம் உள்ளங்கை வர்மம், வெள்ளை வர்மம், கைவெள்ளை வர்மம், ஒளிச்சக்கர வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது.
“பேறான உள்ளங்கை வெள்ளைவர்மம்”.
– வர்மக்கண்ணாடி
“நடுவிரலின் பதிவுக்குள்ளே
இதமான உள்ளங்கை வெள்ளைவர்மம்”.
– வர்ம குருநூல்
“வகையான வெள்ளையில்
கை வெள்ளைவர்மம் தானென்று”.
– இலாடச்சூத்திரம்-300
என குறிப்பிடுகிறது.
“அடவதற்கு வெள்ளைவர்மம் குணமேதென்றால்
அப்பனே தரிப்புடனே உளைச்சல் குத்து
விடவதற்கு புகைச்சலுடன் காச்சலுண்டாம்
விதமான நாளெட்டில் மாறிப்போச்சே”.
– வர்மக்கண்ணாடி
“வருத்துமே கை வெள்ளைவர்மம்
வலி தரிப்பு உளைச்சல் குத்து
வருத்தமாய் புகைச்சல்
உள் குறி இவைகளாகும்
திருத்தமாய் கை பாகத்தால்
தீருமே எட்டாம் நாளில்
பொருத்தமாய் அவுசதங்கள்
புகன்றதை கொடுக்க நன்றே”.
“புகன்றதோர் கடிகைக்குள்
புஜம் களைத்து இடறுண்டாகும்
சிகன்றதோர் தைலத்தாலே
இதன் கேட்டை மாற்றிப்போடு”.
– இலாடச்சூத்திரம் -300
வாறான கை வெள்ளை வர்மங் கொண்டால்
வருந்தும் கை தரிப்புழைச்சல் கழைப்பு காணும்
வேறான சுரமுடனே கண்புகைச்சல்
விரிவான நாளெட்டில் மாறும் சொன்னோம்
கூறான தைலந்தான் தீர்த்துப்போடு சுகம் பாரு
கூறதுவும் ரோகவும் அறிந்து பார்த்துடன்
வாறான முறையதுவும் பலதாய் கண்டுகொண்டு
விதிமுறையால் அறிந்துமுனி முடித்திட்டாரே.
– வர்ம கருவிநூல்
“ஆதியுறும் அவதியோர் மண்டலத்தில் பனிசுரம் தான்
படபடத்து தளர்ச்சையாகில் சன்னிமயக்கம்
விதியென்றுரைத்த முன்னோர் சதிசெய்யுமிஃதென்று
சாற்றினார் அவுசதங்கள் சாரவே மேலிருந்து கீழ்
கதியென்றிழுத்து கரம்புறம் திசை தடவி மெள்ளக்
கூட்டடங்கல் தொட்டுக்கவளியுறத் தூண்டி
பதிவடங்கல் பழிவராதிருந்திட சுழியாடிசென்னி
பார்த்தனுக்கு சூத்திரம் ரண்டோடவுசதம் பார்”.
– வர்ம குருநூல்
வெள்ளைவர்மம் கொண்டபேரை வேண்டியே
தூசி மேல்தாரை செய்து
பள்ளை மேல்தாரை தன்னில் பணிவுடன்
புறச்சூத்திரம் கூட்டடங்கல் செய்ய
கள்ளையுண்டார் போல் வளரும் மனகுழப்பம்
மாறி போகுமென்று அவுசதங்களீய
தாயை சேர்ந்த தளிர்போல
தானுடன் மகிழ்வுண்டாமே”.
– அனுபவக் குறிப்பு
குறிப்பிடுகிறது. மேலும்,
அணிந்துலவும் அங்கை தன்னில் வெள்ளை வன்மம்
பணிந்துலவும் படிவன்மம் கொண்டிடிலோ தரிக்கும்
தணிந்துலவும் தரிப்புடனுளைச்சல் குத்தும் தளர்ச்சை
குணிந்துலவும் குளிர்வறட்சை கொண்டுடனேநடுங்குமென்னே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
அகங்கையின் நடுவில் அமைந்துள்ள வெள்ளை வர்மத்தில் தாக்கம் கொண்டால் தரிப்பு, உளைச்சல், குத்துவலி, தளர்ச்சையுடன் குளிர், வறட்சை தோன்றி உடல் நடுக்கமும் உண்டாகும் என்பதாம்.
நடுக்கமுறும் அவதிதன்னில் சுரமே தோன்றில்
கிடுக்கமுறும் குத்துளைச்சல் குழையும் தேகம்
அடுத்துவரும் குளிருடனே ஜன்னி தோன்றும்
படுத்துவிடும் நாளது நாற்பத்தொன்றில் தானே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
இவ்வர்மம் மாத்திரையாய் கொண்டால் அவதி நாட்களில் (13, 41 நாட்கள்) சுரம் தோன்றி உடலில் உட்புறமாக நடுக்கம் உண்டாகி வலிமை குன்றும். தாக்கம் கொண்ட இடத்தில் தாங்க முடியாத குத்துளைச்சல் உண்டாகி உடல் குழைந்துவிடும். தொடர்ந்து குளிர் நடுக்கமுடன் ஜன்னி தோன்றி மயக்கமுண்டாகும் அல்லது மரணம் சம்பவிக்கும் என்பதாம்.
வெள்ளை வன்மம் கொண்டிடிலோ பத்து மூன்றுக்குள்ளே
கள்ளமின்றி கடுமருந்து செய்யாராகில் நாலுபத்தொன்றில்
அள்ளிடவே நமன்வருவான் என்று முன்னோர் நாட்டினார்
தள்ளிடவே வேண்டாம் காண் இவ்வன்மம் கடுத்ததாமே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
வெள்ளை வர்மத்தில் தாக்கம் கொண்டால் பதிமூன்று நாளுக்குள் நல்மருந்து எடுக்காவிட்டால் 41 நாளில் மரணம் உண்டுபண்ணும் கடுத்த வர்மம் என முன்னோர் உரைத்ததாமே.
ஆமெனும் வெள்ளை வன்மம் கொண்டிட்டாலும்
தாமெனும்தளர்வுடனே குளப்பமாகுமச்சம் தோன்றும்
வாமெனும் வலியுடனே தரிப்புதோன்றும் பின்னாளில்
நானெனும் நலம்குன்றிநடுங்குமுடல் நன்றாய்காணே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
வெள்ளை வன்மம் கொண்டால் பின்னாட்களில் உடல் தளர்வுடன் குளப்பமும் அச்சமும் தோன்றும். வலியும் தரிப்பும் மிஞ்சி உடல் நலமும் குன்றி நடுக்கமும் உண்டாகும் என்பதாம்.
காணுறும் வெள்ளைவன்மம் கருத்துற தொட்டுறில்
நாணுறு மச்சம் நடுக்கமும்மறதி படபடப்புடன்குளிர்
தாணுறும்தளர்ச்சையும் உள்ளுறும்நடுக்கமும்உணர்வுற
கோணுறும்குளப்பமும் இனிபலபிணிகளும் அற்றுறுமென்னே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
வெள்ளை வர்மத்தில் கவனமாக தொட்டு தூண்டிவர நாணமுடன் கூடிய அச்சம், நடுக்கம், மறதி, படபடப்பு, குளிர், தளர்ச்சையுடன் உடலினுள் உண்டாகும் நடுக்கமும், மனக்குளப்பமும் இன்னும் பல பிணிகளும் அற்றுப்போகும் என்பதாம் என வர்ம யோகச்சூத்திரமும் குறிப்பிடுகிறது.
இவ்வர்ம பாதிப்படைந்தவர்களுக்கு, கையில் வலியும், தரிப்பு உளைச்சலும், குத்தும் உண்டாகும். சிலருக்கு கண் புகைச்சலுடன் சுரமும் உண்டாகும். இதற்கு சரியான மருந்துகள் செய்து தடவி விட எட்டு நாளையில் மாறி நல்ல சுகம் உண்டாகும். ஒரு சிலருக்கு கலைநிலையில் இவ்வர்மம் கொண்டு ஏழு, பதினொன்று வரையிலும் வீக்கமும் விடாத சுரமும் இருந்தால் நாற்பத்தொரு நாளில் ஜன்னி தோன்றி அசாத்தியமாகும் என்பது அனுபவ வல்லுநர்களின் கருத்தாகும்.
இவ்வர்மத்தை இளக்குவதற்கு புயத்திலிருந்து கீழ்நோக்கி நீரோட்டமாக தசை வழியே முன்னும் பின்னும் நடுவும் சேர்த்தணைத்து தடவி, கைவெள்ளையின் மேல் துணியினை சுற்றி எண்ணெயை நன்றாக நனைத்துவிட வேண்டும். பின்பு அடங்கல்களை தூண்டி தடவி விட வலியும், தரிப்பும் குறைந்து மனதில் தோன்றும் அச்சமும், குழப்பமும் மாறிப்போகும். இதற்கு தகுந்த மருந்துகள் கொடுத்துவர தாயை சேர்ந்த பச்சிளம் குழந்தை மகிழ்ச்சி அடைவது போல் நோய்கள் மாறி மகிழ்ச்சி உண்டாகும் என வர்ம நூல்கள் குறிப்பிடுகின்றன.
இவ்வர்மத்தில் தாக்கம் கொண்டவர்களுக்கு கைவலி, தலைவலி, தளர்ச்சை, படபடப்பு, ஞாபகமறதி, அச்ச உணர்வு, எரிந்து விழுதல் போன்ற பல நோய்கள் பின்னாட்களில் ஏற்பட வாய்ப்பு உண்டு என வர்ம சுவடிகள் குறிப்பிடுகின்றன. இவ்வர்மத்தை நடுவிரல், மூவிரல், பெருவிரல் போன்றவைகளினாலான தூண்டுமுறை நுட்பங்களை பயன்படுத்தி தூண்டும்போது உடல் தளர்ச்சி, காக்கைவலி, குளிர், ஞாபகமறதி, வர்ம தாக்கங்களின் பின்விளைவுகள், ஆரோக்கியமின்மை போன்றவைகள் மாறும். பிறவி நோய்கள், அறுவைசிகிட்சையின் போது ஏற்படும் மனக்குழப்பம், மகப்பேறின்போது ஏற்படும் அச்சம் போன்றவைகளுக்கு இவ்வர்மத்தை தொடர்ந்து தூண்டும்போது சிறந்த பயனுடையதாகும் என்பது வல்லுநர்களின் அனுபவ கருத்தாகும்.
Leave a Reply