– இரா. அரிகரசுதன்
தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களுக்கு ஊதியம் வழங்க இயலவில்லை எனும் செய்திகளை படிக்கும்போது நம்மால் கவலைபடாமல் இருக்க இயலவில்லை. இதைவிட ஒரு துயரம் வேறு இருக்க முடியாது. சமூகத்தின் பல்வேறு துறைகளிலும் பல ஆக்கப்பூர்வமான பங்கேற்புகளை வழங்கி சமூகமுன்னேற்றத்தில் பங்கெடுத்துக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்கள் இன்று ஊழியர்களுக்கு மாதச் சம்பளம்/ஓய்வூதியம் வழங்கக்கூட அரசைக் கையேந்தும் அவலநிலையில் உள்ளது. சான்றிதழ்களை அச்சிடக்கூடப் பணமின்றித் தவிப்பதை படிக்கையில் துயரம் கௌவுகின்றது.
“இந்தப் பொருளாதார நெருக்கடிக்கான முதன்மைக் காரணம், மாநில அரசின் நிர்வாக அலட்சியம்தான் என்றும் 17.05.1999 தமிழ்நாடு அரசின் அரசாணைப்படி, பல்கலைக்கழகப் பணியாளர்களின் சம்பளம் மற்றும் படிகளை ஈடுசெய்ய வேண்டியது அரசின் கடமை என்றும், ஆனால், 2007 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை, இந்த அரசாணைப்படி மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திற்கு அரசு நிதி வழங்கவில்லை. 2007-08 ஆம் ஆண்டில் வெறும் ?7.74 கோடியாக இருந்த இந்த நிலுவைத் தொகை, கடந்த 17 வருடங்களில் பன்மடங்கு அதிகரித்து, 2023-24 ஆம் ஆண்டில் ?299.09 கோடி என ஏறத்தாழ 300 கோடி ரூபாய் நிலுவையாக நிற்கிறது. இந்தத் தொகையை உரிய நேரத்தில் கொடுத்திருந்தால், இன்று பல்கலைக்கழகத்தின் கையில் 500 கோடி உபரி நிதி இருந்திருக்கும் என்று தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பல்கலைக்கழகப் பணியாளர் நியமனங்களில் உள்ள விதிமீறல்களை அரசு காரணமாகக் கூறினாலும், விதிமுறைகள் வகுக்கப்படாதது, சில பதவிகளுக்கு அரசுச் சம்பளத்தைவிட அதிக ஊதியம் அளிப்பது போன்ற நிர்வாகக் காரணங்களோடு, அரசின் நிலுவைத் தொகையே இன்றைய நிதி வறட்சிக்கு ஆணிவேர்!” என்று தி. லஜபதிராய் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தி¢ன் நிலை¢ பற்றி மிகவும் விரிவாகவும் தெளிவாகவும் எழுதியிருக்கின்றார்.
தனியார் கல்வி நிலையங்களுக்கான சலுகைகளை வாரி வழங்குவதும். அரசு கல்வி நிலையங்கள் கவனிப்பாரில்லாது இருப்பதும் எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. தமிழகத்தில் மாநில பல்கலைக்கழகங்கள் அனைத்தின் நிலைமையும் இவ்வாறு கவலைக்கிடமாக இருப்பதாகவே பல்வேறு பேராசிரியர்களும் கல்வி குறித்து சிந்திப்போரும் குறிப்பிடுகின்றார்கள். இது தமிழகத்தின் கல்வி எதிர்காலத்தின்மேல் சவால்விடும் நிலையாகும். எனவே, உயர்கல்வியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது பட்டவர்த்தனமாகவே அனைவருக்கும் தெரிகின்றது. அரசிற்கும் தெரியாமல் இருக்க வழியில்லை. இனியும் கால தாமதமின்றி, பல்கலைக் கழகங்களுக்கான நிலுவைத் தொகையை வழங்குவது, நிர்வாகச் சீர்கேடுகளைச் சரிசெய்வது, காலியாக உள்ள முக்கியப் பதவிகளை நிரப்புவது ஆகிய நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுக்க வேண்டும். தமிழ்நாட்டின் புகழ்பெற்ற அடையாளங்களில் ஒன்றான “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்ற அடையாளத்தை நாம் இழக்கக் கூடாது. அதற்கு அரசும் உரிய ஆன்றோர்களும் சரியான திட்டமிடுதலையும் உடனடி நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று புதியதென்றல் வேண்டுகின்றது.
Leave a Reply