டாக்டர். பழனி அரங்கசாமி
உலகம் முழுதும் மக்களாட்சியின் மகத்தான கட்டுமானத்தைத் தாங்கி நிற்கும் தூண்கள் நான்கு. நீதிமன்றங்கள், அரசுத்துறை, சட்டமன்றங்கள் என்பதோடு செய்தி ஊடகங்களும் அவற்றுள் ஒன்றாகும். நீதி என்பது இந்திய மண்ணில் குறிப்பாகத் தமிழகத்தில் காலம் காலமாக வேரூன்றி நிற்கும் அரியதோர் நெறிமுறையாகும். மன்னராட்சியோ, மக்களாட்சியோ எதுவாக இருப்பினும் ஆட்சிகள் மாறலாம். ஆளுவோர் மாறுவர். ஆனால் நேர்மை என்னும் ஆணிவேரில் முகிழ்த்து நிற்கும் நீதி என்பது சாகாமல் வாழும் ஒரு சமூகப்பண்பு.
பசுவின் கன்றைக் தேர்க்காலில் அறியாமல் கொன்ற தன் ஒரே மகனைத் தானே கொன்ற மனுநீதிச் சோழன் கதை கற்பனையாக கூட இருக்கலாம். ஆனால் அது நீதியின் உயர்வினை, அதன் ஒப்பற்ற நெறியினை உயர்த்திக் காட்டும் ஒரு ஒளி விளக்கு. முத்தமிழ் நாட்டை மூவேந்தரும் ஆண்ட காலத்தில் ஐம்பேர் ஆயமும், எண் பெருங்குழுவும் நீதியின் வயப்பட்ட நெறிமுறைகள் தான்.
பண்டைத்தமிழ் இலக்கிய வளர்ச்சியில் காப்பியங்கள், கதைகள், கட்டுரைகளோடு, நீதி இலக்கியங்களும் ஒரு சேர வளர்ந்துள்ள உண்மை நிதியும், நெறியும் சாகாது நிற்கும் சரித்திரச்சான்றுகளாகும். அந்தப் பாரம்பரியத்தின் படிநிலை வளர்ச்சியாகத்தான் ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப் பெற்ற இந்திய நீதிமன்றங்கள் இன்றைய நாள் வரை நீடித்து நிற்கின்றன. ஆனால் நேர்மை தவறாமல் நீதி வழுவாமல் நீடித்து நிற்கிறதா? அவற்றை இயக்கும் நீதிபதிகளின் கரங்கள் கறை படியாமல் உள்ளதா, நீதிதேவனுக்கு நெருக்கடி உள்ளளதா என்றும் பார்க்க வேண்டும்.
கர்நாடக மாநிலத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மேனாள் பிரதம மந்திரியின் பேரனும் ஆகிய ரேவண்ணா பன்னிரண்டு பாலியல் வழக்குகளில் குற்றம் சாட்டப் பெற்றவர். சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப வெளிநாட்டுக்கு ஓடினார். அது ஒரு தற்காலிக நிம்மதி. தாயகம் திரும்பிய அக்குற்றவாளியைக் கூண்டிலேற்றி, வழக்குகளின் தீவிரத் தன்மையை உணர்ந்த நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து விட்டது. வழக்குகளை மேல்முறையீடு செய்து கொண்டே காலம் கடத்தும் நொண்டிச்சாக்குக்கு இடமில்லாமல் போய்விட்டது. அந்த நிகழ்ச்சியில் நீதிதேவன் பிழைத்துக் கொண்டான்.
ஆனால் கடந்த 2025- மார்ச் மாதம் தொடங்கி இன்று வரை முடிவின்றி நீடித்துக் கொண்டுள்ள ஒரு சிக்கல் ஊடகங்களின் பேசு பொருளாகி விட்டது. குற்றவாளியாகக் கருதப்படும் டில்லி உயர்நீதிமன்ற (High court) நீதிபதி யஸ்வந்த சர்மா எப்படியாவது சட்டத்தின் சந்து பொந்துகள் வழியில் கூனியும், குறுகியும், நெளிந்தும், வளைந்தும் தப்பிவிட பார்க்கின்ற பரிதாப நிலையே விஞ்சி நிற்கிறது.
மார்ச் திங்கள் 14-ஆம் நாள் டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஸ்வந்த வர்மாவின் அரசு இல்லத்தில் மூட்டை மூட்டையாக எரியத் தொடங்கிய குவியலில் இருந்து கோடிக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டது. செய்தி வெளியானதும் உச்சநீதிமன்ற (Supreme court) தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா உயர்நீதி மன்றத்தில் வர்மாவுக்கு நீதித்துறைப் பணி ஒதுக்ககூடாது என்று அறிவித்து விட்டு, மூன்று நீதிபதிகள் அடங்கிய ஒரு குழுவையும் அமைத்து அவரை விசாரணை செய்ய கூறினார். விசாரணைக்குப் பிறகு அந்தக் குழுவினர் நீதிபதி வர்மா வீட்டில் பணம் கைப்பற்றப்பட்ட உண்மையினை உறுதி செய்தனர். தலைமை நீதிபதி கன்னா அவர்கள் வர்மாவை பதவி விலகச் சொன்னார். வர்மா அந்த வேண்டுகோளை மறுத்து விட்டார். எனவே தற்காலிக ஏற்பாடாக வர்மாவை அலகாபாத் நீதிமன்றத்துக்கு பணிமாற்றம் செய்தனர். இதனை அறிந்த அலகாபாத் வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டப்பட்ட நீதிபதி வர்மா இங்கு வந்து பதவியேற்றால், அவரது கோர்டில் வழக்காடமாட்டோம் என்று கூறி விட்டனர். எனவே அலகாபாத் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அவருக்குப் பணியினை ஒதுக்கவில்லை.
மரியாதைக்குரிய ஒரு உயர் பதவியில் அதுவும் நீதிமன்றத்தில் கறைபடிந்தவராக ஊடகங்களில் செய்தி வந்த பின்னரும், விசாரணைக்குழுவும் அதனை உறுதி செய்த பின்னரும் பதவியினை விட்டு விலகாத வர்மாவின் மனநிலையைப் புரிந்து கொள்ள முடியவில்லை. சுயமரியாதையினை இழக்கும் நிலையிலும் அவர் பதவியினை ராஜினாமா செய்ய விரும்பவில்லை. நம்மால் நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுகிறதே என்று அவர் கவலைப்படவும் இல்லை.
எனவே வேறு வழியின்றி அரசியல் சட்டப்படி வர்மாவைப் பதவியை விட்டு நீக்கச் செய்யும் நடைமுறையைத் தொடங்கக் கூறி குடியரசுத்தலைவர் திரவுபதி மூர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார். இந்த நிலையிலும் பதவியை விட்டு நீங்காமல் தன்னைப் பதவி நீக்கம் செய்வதற்கான பரிந்துரையினை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் யஸ்வந்த வர்மா வழக்குத் தொடர்ந்துள்ளார்.
லஞ்ச ஊழலுக்கு ஆளான ஒரு உயர்நீதிபதியை நாடாளுமன்றத் தீர்மானம் மூலமே பதவி நீக்கம் செய்யமுடியும் என்பதால் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இத்தீர்மானத்துக்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்னும் வேறுபாடு இன்றி ராஜ்யசபை உறுப்பினர்கள் 50-க்கு மேற்பட்டோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுள் 208 பேரும் நீதிபதி வர்மா அவர்களை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தில் கையொப்பம் இட்டுக் கொடுத்துள்ளனர்.
மக்களவைத் தலைவர் ஒம் பிர்லாவும் ஒரு குழுவை அமைத்து வர்மாவை பதவியிலிருந்து நீக்கும் நடவடிக்கையைத் தொடங்கி விட்டார். உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரை நாடாளுமன்றமே நீக்கிவிட ஏற்பாடு செய்வது இது இரண்டாவது முறையாகும். தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி இராமசாமியை இது போன்று நீக்கும் முயற்சியில் போதிய ஆதரவு கிடைக்காதால் நாடாளுமன்றத்தில் அத்தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.
இப்படியெல்லாம் நிலைதடுமாறாமல், நீதிக் கொடியினை உயர்த்திப் பிடிக்கும். புனிதப் பணியில் ஆட்சி பீடம் ஏறியுள்ள அரசினரும் உளப்பூர்வமான ஒத்துழைப்பை நீதிமன்றங்களுக்கு நல்க வேண்டும். நீதித்துறையின் மீது சந்தேகம் ஏற்படுவதே ஒரு களங்கமாகும். சீசரின் மனைவியது நடத்தை அய்யத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்பது ஒரு ஆங்கில பழமொழி ஆகும். காலம் சென்ற தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கர் மங்கை சூதகம். ஆனால் கங்கையில் மூழ்கித் தூய்மை பெறுவாள். கங்கையே சூதகமானால் எங்கே மூழ்குவது என்று கேட்பார். அநீதியைப் போக்கவும், நீதியைக் காப்பதுமான நீதி அரசர்களே நிலைகுலைந்து நேர்மை தவறி நின்றால் பொதுமக்கள் எங்கே போவது?
பணபலமும் அரசின் ஆணையும் ஒரு தனிமனிதனைப் பாதிக்கும் போது அவனது நேர்மைக்கு கை கொடுப்பது நீதிமன்றம் அல்லவா? எனவே நீதியின் நேர்மைக்கு அரசினரும் ஒத்துழைப்புக் கொடுத்துத் துணைபுரிய வேண்டும். அப்போது தான் மக்களாட்சியின் மாண்பும் காப்பாற்றப் பெறும்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெற்றவுடன் ஆளுநர் பதவி அல்லது அதனையொத்த பெரும் பதவியினை அளிக்கும் செயல் என்பது அவர் உச்சநீதிமன்றப் பதவியில் இருந்தபோது அரசினருக்கு செய்த உதவிக்கான பிரதி உபகாரமோ என்கிற சந்தேகம் ஏற்படுகிறது. இதுவேயன்றி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியைத் தலைவராகக் கொண்ட கொலீசியம் என்னும் அதிகாரபூர்வமான அமைப்பு யாரை பரிந்துரைக்கிறதோ அவர்களை ஏற்றுக் கொண்டு பதவி வழங்காமல் அரசு அத்தகைய கோப்புகளை காலவரையறையின்றி கிடப்பில் போடுவதை தவிர்க்க வேண்டும். இத்தகைய தாமதத்தினால், நீதிபதி நாற்காலிகள் காலியாக இருப்பதனால், ஆயிரக்கணக்கான வழக்குகள் மேலும் தேங்கிக் கிடக்க நேரிடும். இப்பொழுதே 2025 ஆகஸ்டு மாத நிலவரப்படி உச்சநீதிமன்றத்திலே மட்டும் சிவில் வழக்குகள் 68,915 என்றும் கிரிமினல் வழக்குகள் 18,93,264 என்றும் சட்டத்துறை இணையமைச்சர் அர்ச்சுன்ராம் மேக்வால் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
கொலிஜியம் என்கிற அமைப்பும் சட்டத்திற்கு புறம்பாக நெடுங்காலம் ஒரு அரசியல் கட்சியைச் சாந்திருப்போரை நீதிபதியாகப் பரிந்துரைக்கக் கூடாது. இத்தகையோர் நீதிமன்றங்களில் அமரும் போது அவரது தீர்ப்புகள் கட்சிக் கண்ணோட்டம் இன்றியும், பாரபட்சமின்றியும் இருக்கும் என்று எப்படிக் கூற முடியும்? மும்பையில் மூன்றாண்டு காலம் பாரதீய ஜனதாக் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளராக இருந்த வழக்கறிஞர் ஆர்த்தி என்பாரை அண்மையில் கொலிஜியம் பரிந்துரைத்து அவர் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப் பெற்றுள்ளார். இந்நிகழ்ச்சி நீதித்துறையின் தன்னாட்சித் தன்மையினைப் பாதிக்கும் என்பதை அரசினர் உணர வேண்டும். எனவே நீதித்துறையும், நிர்வாகத்துறையும் மனச்சான்றுக்கு விரோதம் இன்றி நடுநிலை மனதோடு இணைந்து பணிபுரிந்தால் மட்டுமே நீதியும் நேர்மையும் நிலைத்து வாழ முடியும்.
Leave a Reply