ஊனமறு நல்லழகே…

ஊனமறு நல்லழகே…

  • By Magazine
  • |

ராஜன் ஆத்தியப்பன்

கவிதைகள் வாசிக்கையில் சில நேரங்களில் மனம் நிலைத்து நின்று விடுவதுண்டு. எப்படி இந்த வரிகளை கவிஞர் கற்பனை செய்திருப்பார். இயல்பாகவே சொற்கள் தங்களைப் பிணைத்துக் கொண்டதா கவிஞன் ஏற்கெனவே திட்டமிட்டிருப்பானா எழுதுவதற்கு முன் அந்த வரிகள் எங்கிருந்தன?

எழுதியபின் அந்த கவியின் மனநிலை எப்படியிருந்திருக்கும்.சற்று நேரம் புளகாங்கிதம் அடைந்திருக்கக்கூடுமா. (நிச்சயமாக அடைந்திருப்பார்)

                விலை மதிப்பற்ற அக்கணம் வாசிப்பவரின் முகவிரிவில் மீண்டும் மீண்டும் மீட்கப்படுகிறது என்பதுவே கவிதையின் வாழ்வாக இருக்கிறது.

                அப்படியானால் பாரதிக்கு வயது பலநூறு ஆண்டுகள். வாக்கில் ஔ” படைத்தவன். எத்தனை அற்புத வரிகள் அவனிடமிருக்கின்றன.

                நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையுடையவராகத்தான் பாரதி இருக்க முடியும். அது அவனது கவிச்செருக்கு. ஞானச்செருக்கு. சோழனின் வீதிகளில் கம்பனும்  இப்படி நடந்திருப்பான்.

                வனவாசத்தில் கண்ணதாசன் எழுதுகிறார். (ஞாபகத்திலிருப்பது) கவிஞன் என்றால் எனக்கு உடனடியாக நினைவுக்கு வருவது பாரதிதான். புதுச்சேரியில் ஜன்னலில்லாத எட்டுக்கு எட்டு அளவுள்ள அறையின் புழுக்கத்திலிருந்து கொண்டு “எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா” என்று அவனால்தான் பாடமுடியும்’.மகாகவி.

                நேற்று தற்போதமாக இந்தவரி ஞாபகத்திலெழுந்தது.  ஊனமறு நல்லழகே’

இந்த வரிகளை எழுதிவிட்டு பாரதி துள்ளிக் குதித்திருப்பாரா, குட்டிக்கரணம் அடித்திருப்பாரா, செல்லம்மாவை அணைத்து முத்தங்கள் பொழிந்திருப்பாரா.

                வானத்தைச் சிமிழுக்குள் அடைத்து வைத்த சாகசம் இது. ஒருவேளை அந்த நாளில்தான் தெருவிலிறங்கி கழுதைக்குட்டியை தழுவியிருப்பானா யிருக்கலாம்.

                அழகு என்பது ஒரு மனநிலை. மாற்றத்தின்பாற்பட்டது. உடலழகு பொருளழகு அன்பழகு அறிவழகு தத்துவஅழகு வாழ்வின்அழகு எல்லாமே காலத்தின் முன்னே குறைபாடுள்ளவைதான். அடையும் போது தென்படுகிற குறைகளுடனே ‘அழகு’ நிலவுகிறது

                அப்படியிருக்க இவர் ஏன் ஊனமறு நல்லழகே என்கிறார். இந்த சொற்கள் எளிதில் புரியக் கூடியதுபோலத் தோன்றினாலும். அதன் அர்த்த முழுமை தனது எல்லையை விரித்துக்கொண்டே செல்கிறது. விரித்து விரித்து முடிவிலியாய்  அப்பாலுக்கு அப்பாலாய் சென்றுகொண்டே இருக்கிறது.

                பம்மிச் சென்று ஒரு பட்டாம்பூச்சியைப் பிடிக்கச்செல்வதைப் போல இந்த சொற்களைப் பிடிக்கத் தாவுகிறேன்.       அது எழுந்து பறந்து வேறு வேறு வண்ணப் பூவினில் அமர்கிறது.

                வெகுதூரம் என்னை இழுத்துச் செல்கிறது. கோபதாபங்கள் இன்பதுன்பங்கள் கோட்பாடுகள் வழிபாடுகள் எல்லாம் பின் தங்க ஒற்றை வெறியாய் செல்கிறேன். பட்டாம்பூச்சி பிடிதராமலே அலையலையாய் பறந்து அடிவானத்தின் தூய ஒளி யொன்றில் புகுந்துவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *