A. தர்மராஜ் (த.ராசு)
முந்தைய பாகத்தின் தொடர்ச்சி…
தற்போது தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் உட்பட 18 நலவாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பதிவு செய்த தொழிலாளர்கள் கல்வி, திருமணம், மகப்பேறு, வீட்டுவசதி, வீடு கட்டும் திட்டம், கண் கண்ணாடி ஆகியவற்றிற்கு நிதி உதவி கோரி விண்ணப்பிக்கலாம். புலம் பெயர்ந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு பணியிடத்தில் மரணம் ஏற்பட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு சொந்த ஊருக்கு கொண்டு செல்ல அதிகபட்சம் ஒரு லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த வரிசையில் அனைத்து வகை மாற்று திறனாளி இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கம் திட்டம் செயல்படுத்துகின்ற வகையில் 10-ஆம் வகுப்பு வரை உள்ளவர்களுக்கு மாதம் 600 ரூபாயும், அதற்கு மேல் டிப்ளமோ வரையுள்ளவர்களுக்கு 750 ரூபாயும், பட்டப்படிப்பு படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.1000 வழங்கவும் ஏற்பாடு உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விரும்புவோர் ஒவ்வொரு நிதி ஆண்டிலும் சுய உறுதி ஆவணத்தை நேரில் சமர்பிக்க வேண்டும். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், கிண்டி, சென்னை- 32.
திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கும் போது மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க கட்டாயப்படுத்தக் கூடாது என்று ஏற்கெனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆயினும் அப்படி அவர்கள் எழுந்து நிற்காமல் அவமதித்ததாக நாட்டில் பல பகுதிகளில் இருந்த தியேட்டர்களில் மாற்று திறனாளிகள் மீது தாக்குதல் நடந்ததாக செய்திகள் வந்தன. அந்த வழக்கின் மீது உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பில் திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்க வேண்டியது கட்டாயமில்லை என்று தெரிவித்து விட்டது.
மாற்றுத் திறனாளிகள் சுய தொழில் தொடங்குவதற்கான ஒரு திட்டத்தின் கீழ் நிதியாண்டு துவக்கத்தின் போது மானியம் ஒதுக்கீடு செய்வது பரிசீலிக்கப்படுகிறது. மாற்றுத் திறனாளிகள் சுயதொழிலில் ஈடுபட வங்கிக் கடனுதவிக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
மாற்றுத் திறனாளிகள் இந்த மானியத்துடன் கூடிய கடனைப் பெற்று சிறிய பெட்டிக்கடை, மளிகைக்கடை, பேன்ஸி ஸ்டோர்கள், ஆடு வளர்த்தல், பால்மாடு வளர்த்தல், தேனீர்கடை, இட்லிக்கடை, டிபன் கடைகள் , நொறுக்குத் தீனிக்கடைகள், கணினி மையம், நகலகம் போன்றவை நடத்தி வருமானம் பார்க்க வழி காட்டப்படுகிறது. மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலமும் கடன் வழங்கப்படுகிறது.
எம்.ஃபில், பி.எச்.டி பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய கல்வி உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இதற்கு தகுதி பெற்ற மாற்றுத்திறன் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான இணைய தளமுகவரி தனியே உள்ளது. மார்ச் 31-க்குள் அதற்கு விண்ணப்பிக்க வேண்டியது.
தென் இந்தியாவில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் அனைத்தும் சாத்தியம் என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் தகுந்த உபகரணங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஜீன் 2022-ல் தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது. அப்போது சமூக நலத்துறை அமைச்சர் உடனிருந்தார். மாற்றுத் திறனாளிகளுக்கு தனியார் நிறுவனங்களில் தகுந்த வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்கு மேற்கொள்ளப்படுதல் வேண்டும் என்று அப்போது வலியுறுத்தப்பட்டது.
சென்னை ஐ.ஐ.ட்டி மாணவர்கள் பலர் சேர்ந்து 2015-ல் தொடங்கப்பட்ட நியோ மோஷன் நிறுவனம் மாற்றுத் திறனாளிகள் எளிதாகக் கையாளும் விதத்தில் நவீன சக்கர நாற்காலிகளை உருவாக்கியது. ஏற்கனவே சக்கர நாற்காலிகளை பயன்படுத்தி வரும் மாற்றுத்திறனாளிகளின் அதன் வடிவத்தை மேலும் மேம்படுத்தி இந்த நாற்காலி தயாரிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. இவை மின் மோட்டாரில் இயங்கக் கூடியவை.
இதுபோன்று திட்டங்களையும் ஆலோசனைகளையும் செயல்படுத்துவதையும் கண்காணிக்கின்ற பொறுப்பை சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் ஏற்கிறது. ஆனால் அவர்களுக்கான தேசியக் கொள்கைகள் போதிய அளவுக்கு விளம்பரபடுத்தவில்லை என்று மேற்படி அமைச்சகம் ஏற்கனவே பதிவு செய்துள்ளது. அந்த நிலையே தொடர்ந்து காணப்படுவதாகவும் தெரிகிறது. இதிலே இன்னும் கூடுதல் கவனம் செலுத்தப்படுவது அவசியம் என்கிற கருத்தே எப்போதும் நிலவுவதாகத் தெரிகிறது.
சாதனை கண்ட மாற்றுதிறனாளிகள்
நாத ப்ரம்மம் யுனைடெட் கியான் அகாடமி சார்பில் நாதப்ரம்மம் 21-ஆம் ஆண்டு தொடக்கவிழா மற்றும் உலக இசை, யோகா தினத்தை முன்னிட்டு விருது வழங்கும் விழா ஜீன் 2022-ல் சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற போது அப்போது இருந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கலந்து கொண்டு உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த மாற்றுத்திறனாளிப் பெண் ஓவியர் ஒருவருக்கு நாதவிநோதினி பட்டத்தை வழங்கி கவுரவித்தார்.
அந்த பெண் ஓவியர் சிறு வயதில் மின் விபத்தில் சிக்கியதால் கை கால்களை இழந்தவர். இருப்பினும் தன்னம்பிக்கை உணர்வோடு தனது செயல்திறனை வளர்த்துக் கொண்டு ஓவியம் வரைவதில் வல்லவராக விளங்கினார். உடலால் அவருக்கு தடைகள் இருந்தாலும் உள்ளத்தால் தடைகளைத் தகர்த்து சாதனையாளராக மாறினார். சாதனை புரிய விழைபவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழா 2024 செப்டம்பர் 8-ல் பாரீஸ் நகரில் நடந்த போது கண்கவர் கலைநிகழ்ச்சி வியப்பூட்டும் சாகசங்களுடன் நிறைவடைந்தது. எங்களாலும் சாதிக்க முடியும் என்று நிரூபிப்பது போல் இருந்தது அந்த சாகச நிகழ்ச்சி.
வாழ்வியல் அனுபவங்கள்
ஒரு சமயம் பெங்களுருவில் மாற்றுதிறனாளி ஒருவர் அங்குள்ள உணவு விடுதி ஒன்றில் புதிதாக பணியில் சேர்ந்திருந்தார். அன்றைய தினம் பலமாக மழை பெய்ததால் அருகிலுள்ள ஒரு வாடிக்கையாளர் வழக்கம் போல் விடுதிக்கு வந்து சாப்பிடாமல் பார்சல் கட்டி வீட்டுக்கே அனுப்பி விடும் படி தொலைபேசியில் ஆர்டர் செய்தார். மழை ஓயவில்லை, அன்றைய தினம் பணியில் சேர்ந்திருந்த வேலையாளிடம் மழைக் கோட்டு இல்லாததால் உடனே புறப்படாமல் மழை சற்று வெறிக்கட்டும் என்று காத்திருந்தது சற்று தாமதமாகவே பார்சலை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.
வாடிக்கையாளர் பார்சலுக்காக அதிக நேரம் காத்திருக்க நேரிட்டதால் சற்று கோபமடைந்து விட்டார். சப்ளையர் வந்தால் திட்டுவதற்கு காத்திருந்தார். சப்ளையர் உடல் ஊனமுற்றவராக மழையில் மெதுவாக நகர்ந்து நகர்ந்து வந்ததைப் பார்த்ததும் அவர் கோபமெல்லாம் பறந்து விட்டது. செல்வந்தராகவும் அதே நேரத்தில் உயர்ந்த மனிதாபிமானியாகவும் அவர் இருந்தபடியால், அந்த மாற்றுத் திறனாளியான வேலையாளுக்கு ஏதேனும் தொழில் செய்வதற்கு மூலதனம் கொடுத்து முன்னேற்றுவதற்கு முடிவெடுத்தார். அதை உடனடியாக செயலிலும் காட்டினார்.
அந்த மாற்றுத்திறனாளி பெங்களூரு நகரத்தில் உள்ள பெரிய உணவு விடுதி ஒன்றின் உரிமையாளர் ஆகிவிட்டார். தமிழக அரசின் மாற்றுத் திறனாளி நல இயக்குநர், சமூக நல ஆணையருக்கு 2024 மே மாத இறுதியில் அனுப்பிய சுற்றறிக்கையின்படி இதற்கு தேவைப்படும் கூடுதல் நிதி ரூ.15 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய்க்கான நிர்வாக அனுமதியும் கூடவே வழங்கப்பட்டது. இதன்படி அரசு நிதியுதவி பெறும் சிறப்புப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்படுவது போலவே, ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிலும் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் இணை உணவாக சத்துமாவும், மதிய உணவுடன் வாரத்துக்கு 3 முட்டைகள் மற்றும் நாளொன்றுக்கு 60 கிராம் செறிவூட்டப் பெற்ற பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்கள் அருகில் உள்ள குழந்தைகள் மையங்களின் மூலம் வழங்கப்படுவதற்கு திட்டம் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
மேற்படி திட்டங்கள் யாவும் அரசின் சார்பில் பெரிதளவில் திருப்திகரமானதாக அறியப்படுகின்ற போதிலும், அவற்றையெல்லாம் செயல்படுத்துவதில் குறைபாடுகளும் சுட்டிக் காட்டப்படுகின்றன. கலை அறிவியல் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2016-ல் நிறைவேற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டத்தின்படி அனைத்து அரசு மற்றும் பிற அரசு உதவி பெறும் உயர்கல்வி நிறுவனங்களிலும் இது கடைபிடிக்கப்படுவது அவசியம். பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் பொதுவாக இது கவனத்தில் கொள்ளப்படுவதும், கடைப்பிடிக்கப்படுவதுமாக தெரிய வருகிறது. ஆனால் கலை அறிவியல் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் அவர்களை சேர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை.
Leave a Reply