– முனைவர் மோகனா, பழனி
அற்புதமான அறிவியல்..!
அறிவியல் உலகில், அதிரடித் திருப்பு முனையாக, உலகத்தைத் திருப்பிபோட்ட, பிரமிக்கச் செய்த ஒரு தகவல் இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது . அது என்ன என்று தெரிந்தால் நீங்களெல்லாம் ஆச்சரியத்தில் மயக்கம் போட்டு விடுவீர்கள் . உடலிலிருந்து இரத்தம் வெளியேறிய, கண நேரத்தில், காற்று அதன் மேல் பட்டவுடன், இரத்தம் இறுகிக் கட்டியாகிவிடும். இதுதான் இரத்தத்தின் இயல்புத் தன்மையும் கூட. அது நிகழவில்லை என்றால், சின்ன காயம் பட்டால் கூட அது வழியே இரத்தம் வடிந்து இறந்து விடுவோம். இரத்தம் கட்டியாதல் என்பது இயற்கை நம்மைப் பாதுகாக்க செய்திருக்கும் ஓர் ஏற்பாடு. சிவப்பணுக்களின் ஆயுள் என்பது சுமார் 120 நாட்கள் மட்டுமே. அதற்குள் அவை தன் உருவிழந்து மறைந்து விடும். ஆனால் சுமார் 5,300 ஆண்டுகளுக்கு முன் இறந்த மனிதன் ஒருவனின் உடலிலிருந்து இரத்தம் எடுக்கப்பட்டு, அன்றைய மனித இரத்த செல்களின் தன்மையும் கண்டறியப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பழமையான இரத்தம்.. 5300 ஆண்டுகள் ஓட்சி என்ற பனி மனிதனை 1991 -ல் இரண்டு மலையேறிகள் ஆஸ்திரிய இத்தாலிய எல்லையில் அமைந்துள்ள ஆல்பைன் பனியாற்றிலிருந்து கண்டெடுத்தனர். தற்போதைய அறிவியல் தகவல் படி, உலகில் அதிக வயதுள்ள மிக நன்றாக இயற்கையான முறையில் பதப்படுத்தப்பட்டுள்ள மனித மம்மி இது மட்டுமே.
இதில் பல ஆராய்ச்சிகள் செய்து, இந்த கற்கால மனிதன் ஒரு காயத்தினால் உடனே இறந்திருக்கிறான். அது மட்டுமல்ல, அவனின் இறுதி நிகழ்வு வலியின்றி மௌனமாய் வந்து முடிந்திருக்கிறது என்றும் கண்டறிந்துள்ளனர். இதனைக் கண்டு பிடித்து 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட, இதனைப் பற்றிய ஆராய்ச்சிகள் இன்னும் முடிந்தபாடில்லை. வளர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த பனிமனிதனைக் கண்டு பிடிக்கும்போது, அதில் இரத்தம் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அப்போது நடத்திய ஆய்வுகள், பனி மனிதன், மிகக் கொடூரமான தாக்குதலுக்குப் பின்னர் கொடூரமான முறையில் மோசமான நிலையில் இறந்திருக்கிறான் என்பதே . ஆஸ்திரியாவிலுள்ள ஆறாவது உயரமான மலை இது. இதன் உயரம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3, 210 மீ(10 ,500 அடி ). ஆனால் இதில் ஜோசப் ராபைனேர் மற்றும் தொயோடோர் காசெரெர் (Josef Raffeiner and Theodor Kaserer.) இருவரும்,அந்த மலை மீது ஏறுகின்றனர். இதன் மலைச் சரிவில்தான் ஹெல்முட் சைமன் மற்றும் எரிக்கா சைமன் (Helmut simon and Erika simon) என்ற இருவரும், 1991-ம் ஆண்டு அங்குள்ள பனியாற்றில் ஒரு மனிதனைக் கண்டுபிடிக்கின்றனர்.
ஓட்சி பனி மனிதன்.. பெயர் சூட்டல்..!
ஓட்சி என்ற இடத்திலிருந்து அந்த மனிதனைக் கண்டுபிடிக்கப்பட்டதாலும், அவன் பனியில் உறைந்து பதப்படுத்தப் பட்டிருந்ததாலும் “ஓட்சி பனி மனிதன்” என்று செல்லமாய் அழைக்கின்றனர். ஆனால் அவன் தாமிர காலத்திற்கு முற்பட்ட ஐரோப்பிய மனிதன் என்றும் கருதப்படுகிறது. இப்போது அந்தப் பனிமனிதனும், அவனது சொத்துக்களான உடை மற்றும் பொருள்களும், இத்தாலியின் தெற்கு டைரோளில் உள்ள, போல்சானோவின்அருங்காட்சியத்தில் (South tyrol museum of Archaeology in Bolzano, South tyrol, italy.) வைக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்த ஒரு மம்மியிலிருந்து இப்போது இரத்தம் எடுக்கப்பட்டு அதிலுள்ள சிவப்பணுவின் செல் பிரித்தெடுக்கப்பட்டு ஆராயப்பட்டுள்ளது என்ற தகவல்தான் மிகவும் வியப்பளிக்கும் செய்தி. இந்தப் பனிமனிதன் காயத்திலிருந்து எடுத்த இரத்தம்தான்,.நாம் இதுவரை அறிந்தவற்றில் மிக மிகப் பழமையான இரத்த செல்.
பனி மனிதன் கிடைத்த காலத்திலிருந்து, கொஞ்சம், கொஞ்சமாக, அவனைப்பற்றி நிறைய அறிவியல் கருத்தோட்டங்கள் நம்மிடையே உலவி வருகின்றன. ஏனெனில் அவன் உடம்பில் இரண்டு காயங்கள் காணப்படுகின்றன. . அதில் ஒன்று கூர்மையான ஆயுதம் தாக்கிய தடயம் உள்ளது.
இன்றைய அறிவியல் ஆராய்ச்சியில் ஓட்சி ..!
உலகில் இதுவரை அதிகமாக ஆராயப்பட்ட ஒரு மம்மி உண்டென்றால் அது ஓட்சிதான்.ஒட்சியின் பின்னணியைப் பார்ப்போமா? பனியாற்றில் காயம்பட்டு, இரத்தம் உறைந்த நிலையில் ஒரு மனிதன் கிடக்கிறான். அவனை இரு மலையேறிகள் அடையாளம் கண்டுள்ளனர். அவன் நெடுந்தொலைவு நடந்து அலைந்து திரிந்து, வந்து நிலை தடுமாறி ஆற்றில் விழுந்து இறந்திருக்கிறான். அவன் பனியாற்றில் உறைந்து போய் கிடந்ததால் பனிமனிதன் என்றே அழைக்கப்படுகிறான். அவன் பைநேல்ச்பிட்ஸ் மற்றும் சிமிளௌன் மலைகளுக்கிடையே (Fineilspitze similaun) உள்ள ஹாச்லாப்ஜூ (Hauslabjoch) என்னும் இடத்தில் ஓட்சி பள்ளத்தாக்கில் கிடந்திருக்கிறான் இந்த பனி மனிதன். இந்தப் பகுதியில் ஓட்சி பள்ளத்தாக்கின் ஓரங்களை அலங்கரிக்க அடுக்கி வைத்தது போல வரிசையான ஆல்ப்ஸ் மலைத்தொடர்கள் காணப்படுகின்றன. அங்கே ஓட்சி ஆல்ப்ஸ் பள்ளத்தாக்கில் இன் (Inn river) நதியில், பனிப்பாளங்களுக்கிடையே சொருகிக் கிடந்திருக்கிறான் இந்த மனிதன். இப்பகுதி ஆஸ்த்திரிய , இத்தாலிய எல்லையில் உள்ளது என்பதால், இது இரு நாடுகளுக்கும் சொந்தமானது. இதுவரை கிடைத்த ஐரோப்பிய மம்மிகளிலேயே இதுதான் நன்கு இயற்கையில் பதப்படுத்தப்பட்ட மனித மம்மியாகும், இந்த பனி மனிதன் சுமார் 5 ,300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவன்.
ஓட்சி பற்றிய புதிய உண்மைகள்..!
ராயல் சொசைடி இண்டர்பேஸ் (Royal society interface) என்ற அறிவியல் பத்திரிகையில் 2012 மே முதல் நாள் ஓட்சி பற்றிய புதிய கண்டுபிடிப்புத் தகவல் வந்துள்ளது.அதுதான் ஒட்சியின் இறப்பு பற்றிய தெளிவான கதையை விலாவாரியாக நம் முன்னே விரித்து வைக்கிறது . இந்தப் பனி மனிதன் மிக மிக நன்றாகப் பதப்படுத்தப்பட்டு இருக்கிறான் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கின்றனர். அவனது வயது 46 இருக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது . அவன் நல்ல ஆரோக்கியமான உடல் நிலையில் இருந்திருக்கிறான்; அவன் இறப்பதற்கு முன் தானிய ரொட்டியையும், சிவப்பு மானின் இறைச்சியையும் உண்டிருக்கிறான். அவன் ஏன் இறந்தான் என்பதன் காரணமும் கூட கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. ஓர் அம்பு அவனது தோளில் இறங்கி, அங்குள்ள தமனியை ஊடுருவிச் சென்றதன் விளைவால், உதிரப்போக்கு அதிகம் ஏற்பட்டு, இறப்பு நிகழ்ந்திருக்கிறது. ஆனால் இதுவரை யாரும் இறந்த ஆதிகால மனிதனின் இரத்த செல்களைப் பார்த்ததே இல்லை.
ஆல்பர்ட் ஜின்க் & குழுவும் கண்டறிந்த ஓட்சியின் இரத்தம்..!

போயசனோ நகரில் ஐரோப்பிய அகாடமியின் மனிதவியல் துறை தலைவரும், இத்தாலிய மனிதவியலாளரும், ஆய்வாளருமான ஆல்பர்ட் ஜின்க் (Albert zink) தான்ஓட்சி பற்றிய உண்மைகளைக் கண்டறிந்தவர். அவர் நழுவும் நிலையிலுள்ள இரத்த செல்கள் (Elusive cells) பற்றி ஆய்வு செய்து அதன் அதிசயங்களைப் பகிர்ந்தவர். அவரின் கூற்றாவது: “உண்மையிலேயே எங்களுக்கு இது ரொம்ப ரொம்ப ஆச்சரியமாய்ப் போய்விட்டது. ஏனெனில் நாங்கள் அங்கே முழுமையான சிவப்பணுவைப் பார்ப்போம் என்று கற்பனையிலும் கருதவில்லை. நாங்கள் நிஜமாகவே, அங்கே ஏதாவது சுருங்கிய அல்லது சிதைந்த ஓரிரு சிவப்பணுக்கள் இருக்கும் என்றுதான் நம்பி இருந்தோம். ஆனால் அங்கே, நவீன கால மாதிரி /சாம்பிள் போல அதே பரிமாணத்துடன், சிவப்பணுக்கள் முழுமையாகக் கிடைத்தன (doughnut-shaped red blood cells in a sample of tissue taken from around the deadly arrow wound in Oetzi’s back). எங்கள் கண்களை எங்களால் நம்பவே முடியவில்லை,’’என்று சொல்கிறார்.
உன் இரத்தமா இது ?
ஆல்பர்ட் ஜின்க்கும் அவரது குழுவினரும் ஒட்சியின் காயத்திலிருந்து திசு மாதிரிகளை எடுத்தனர். அது போலவே, அவனின் வலது கைக்காயத்திலிருந்தும் திசு மாதிரிகள் எடுத்தனர். வெறும் சாதாரண உருப்பெருக்கி கொண்டு பார்த்தபோதே, அவை வட்ட வடிவ சிவப்பணுக்கள் போலவே காணப்பட்டன. ஜின்க் இது கட்டாயமாய் இறந்த மனிதனின் சிவப்பணுக்கள்தான் என்று உறுதியாய் நம்பினார். மேலும் இது தொடர்பான நவீன தொழில்நுட்ப அளவிலான ஆராய்ச்சிகள் செய்யவும் விரும்பினர். அந்த ஆராய்ச்சிகளும் அப்போது தேவைப்பட்டன
உன் கண் உன்னை ஏமாற்றினால் ..!
ஆராய்ச்சியாளர்கள் அணு அழுத்த உருப்பெருக்கி (an atomic force microscope) என்ற நவீன சாதனம் மூலம் இரத்த திசுக்களைப் பார்த்தனர். அது ஒரு பொருளைப் பார்ப்பதை விட, அதனை நன்கு ஊடுருவி உணரவே (feeling) செய்யும் தன்மை கொண்ட கருவி அது. எனவே அதன் நுணுக்கமான ஆய்வை நம்மால், நமது வெறும் கண்ணால் பார்க்கவே முடியாது.இந்தக் கருவி உள்ளே நுழைந்து ஊடுருவித் தேடிப் பார்ப்பது , ஓர் ஒலித்தட்டின் மேல் ஓர் ஊசி ஓடுவதைப் போலிருக்கும். அந்த சாதனம் ஒரு பொருளின் உருவரைப் பரப்புகளில் மேலும், கீழும் குதித்து ஊடுருவும். அதிலிருக்கும் லேசர் ஒரு நொடியின் பல துணுக்குக்களையும் கூட விடாமல், அதன் ஒவ்வொரு சிறிய நகர்வையும் அளக்கும். இதன் மூலம் அந்தப் பொருளின் முப்பரிமாண அளவுகளை அப்படியே அச்செடுத்துவிடும். இந்த நடைமுறைகளால் புதிரான ஓட்சியின் உடல் பொருட்களிலிருந்து ஆச்சரியப்படத்தக்க படங்கள் கிடைத்தன.
ஓட்சியின் சிவப்பணுக்களும், இனறைய சிவப்பணுவும்..!
ஓட்சியின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட சிவப்பணுக்கள் இப்போதுள்ள நமது சிவப்பணுக்களின் அளவையும் உருவையும் பெற்றுள்ளன . சின்ன மாவு உருண்டையை பரோட்டாவுக்கு அமுக்கி வைப்பது போன்ற தோற்றத்துடன் இருக்கின்றன . அதன் பரிமாணமும் கூட, இன்றுள்ள செல்களின் அளவே . அவை நிச்சயமாய் சிவப்பணுக்களே.. ஆனால் 5,300 ஆண்டுகளுக்கு முன்பு பதப்படுத்தப்பட்டவை என்கிறார் ஜின்க். ஓட்சி 5 ,300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து கொண்டு, இபெக்ஸ் மற்றும் மானின் இறைச்சியை உண்டு, ஆல்ப்ஸ் மலைகளில் ஏறி இறங்கித் திரிந்திருக்கிறான் . 1991 ல் அவனைக் கண்டுபிடித்தபோது, அவனது இரத்தக் குழாய்களில் இரத்தம் இல்லை. வெறுமனே இருந்தன. ஓட்சி இறந்து வெகு காலமாகி விட்டபடியால், அவன் உடம்பிலிருந்த இரத்தம் தோள் காயத்தின் வழியே முழுதும் வடிந்திருக்கலாம்; அல்லது அவனது இரத்தம் கால ஓட்டத்தில் உருமாறி அழிந்து போயிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதினர்.
இருப்பினும் அம்பு சொருகி காயம் பட்ட தோள் பகுதி, மற்றும் வலக்கையின் காயம் என இரண்டு இடங்களையும், விஞ்ஞானிகள் பெரிது பண்ணிப் பார்த்தனர். இரத்தக் கட்டு /இரத்தத் திசு எதுவும் அப்போது தென்படவில்லை. இருப்பினும் வன்முறையாய் அம்புத் தாக்குதல் மற்றும் மற்ற காயங்களால் இறப்பைத் தழுவிய அந்த மனிதனின் காயத்தை வேறு செயல்கள் மூலம் ஆராய்ந்தனர். இரத்தக் குழாய்களைத் திறந்தபோதும் கூட ஒரு துளி இரத்தத் துணுக்கு கூட இல்லை, இரத்தம் பதப்படுத்தப்படவில்லை/ பாதுகாக்கப்படவில்லை என்றே எண்ணினர். இருப்பினும், நானோ கருவி (Nano probe) கொண்டு தேடியபோதுதான் அம்பு தைத்த இடம் மற்றும் வலது கையின் வெட்டில் முழுமையான சிவப்பணுவின் பரிமாணம் கிடைத்தது. நானோ கருவியின் ஒவ்வொரு நிமிட தேடலும் பதிவு செயப்பட்டது. அதன் ஸ்கேன் (Scan) படிவம், பனி மனிதனின் இரத்த சிவப்பணு , தற்போதைய நவீன மனிதனுடையதைப் போலவே இருந்ததும் ஆச்சரியத்துடன் கண்டறியப்பட்டது.

. கொலையுண்ட பனி மனிதன்..!
பனிமனிதனின் இறப்பு என்பது ஏதோ இயற்கையில் நிகழ்ந்தது அல்ல. பனி மனிதன் பற்றி விஞ்ஞானிகள் பலப் பல வழிகளில் அக்குவேறு ஆணிவேராக ஆராய்ந்தனர். இவன் ஆட்டிடையன், தெய்வத்திற்குப் பலி கொடுக்கப்பட்டவன், என்றெல்லாம் கருதப்பட்ட்து. . இறுதியில் பல ஆய்வுகளுக்குப் பின் அவன் கொலை செய்யப் பட்டிருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.அவர்கள் சொல்லும் கதையை, அல்ல அல்ல நிஜத்தைக் கேட்போமா?
இத்தாலி நகரில் அப்போது வசந்தம் விடை பெறக் காத்திருந்தது; லேசாக கோடை எட்டிப் பார்த்தது . சாதாரண உயரம் கொண்ட ஹாப் கொம்பு (Hophorn) மரங்கள் தன் கொத்து கொத்தான மஞ்சள் மலர்களை விரித்து உலகுக்குக் காண்பித்தன. அந்த செங்குத்தான பள்ளத்தாக்கு முழுவதும், மஞ்சள் மலர்களால் மூடப்பட்டிருந்தன. இங்கேதான் இத்தாலிய ஆல்ப்ஸ் மலைகளின் ஊடேதான் இந்த ஓட்சி பள்ளத்தாக்கு இருந்தது. அந்த காடுகளில், அதனை நன்கு அறிந்திருந்த, எப்போதும் அதன் வழியே நடந்து பழப்பட்ட அவன், வேகமாக ஓடினான் தனது வலது கையில் இருக்கும் காயத்தைப் பார்த்துக் கொண்டும், அதன் வலியை பொறுத்துக் கொண்டும். போகும்போது ஆங்காங்கே நின்று ஏதாவது சத்தம் வருகிறதா என்றும் கவனித்துக் கொண்டே சென்றான். அவனை யாரோ பின் தொடருகிறார்கள் என்றும் நினைத்தான்.
அவன் செங்குத்தான உயரத்துக்கு ஏறியதும், கொம்பு மரத்தின் சுகந்தமான மஞ்சள் மலர்கள் பூத்து , காண முடியாத மெல்லிய மழையாய்ப் பொழிந்தது ; நீர் உப்பானது ; அவன் கொஞ்சம் ஓய்வெடுக்க நின்றபோது , அப்படியே கொஞ்சம் உணவையும் போட்டு விழுங்கினான். இவையெல்லாம் 5,300 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தவைதான். ஆனால் அந்த மனிதன், நாம் இப்போது பனிமனிதன் என்று பாசத்துடன் அழைக்கும், புதிய கற்கால வேட்டைக்காரன்,
அவன் பழமை வாய்ந்த உடலின் உள்ளே, மேலே குறிப்பிட்ட அனைத்தின் துகள்களும் உள்ளன அது மட்டுமல்ல, அவன் அங்கு கானகத்தின் ஊடே சென்று, மலையடிவாரத்தின் அருகில் சென்றான். அங்கேதான் அவனது விதியும் முடிந்தது எனபதும், அவன் சென்ற காலத்தின் துல்லியமான கணிப்பு கூட கண்டறியப்பட்டுள்ளது.
அறியப்படும் ஓட்சியின் உண்மைகள்..!
பனிமனிதனின் உடலை வைத்தே அவனது வாழ்க்கை முறைகளைக் கட்டிக் கணித்துள்ளனர் விஞ்ஞானிகள். அவனுடன் இருந்த மதிப்பு மிக்க தாமிர பட்டை கொண்ட கோடரி இருந்ததை வைத்து, அவன் உயர்ந்த சமூக அந்தஸ்துள்ளவனாக இருந்திருக்க வேண்டும் என்றும் கருதுகின்றனர். அவன் தன் பயணத்தின் போது மூன்று அடுக்குகள் கொண்ட உடைகளைப் போட்டிருந்தான்; எனவே அப்போது மிகுந்த குளிர் இருந்திருப்பது தெரிகிறது.அவனது கால் ஷூக்கள் அழுத்தமாக, கடினமாக இருந்தன. அதன் அடிப்பகுதி கரடியின் தோலினால் செய்யப்பட்டிருந்த்து.அவன் கூர்மையான பழக்கப்பட்ட கல் கத்தியை வைத்திருந்தான். அதற்கு உறையும் கூட இருந்தது. அவனுக்கு நெருப்பை உண்டாக்கத் தெரிந்திருந்தது . அதற்காக அவன் நெருப்பு உண்டாக்கும் கருவிகள் கொண்ட ஒரு பையும் வைத்திருந்தான். மேப்பிள் இலைகளால் சுற்றப்பட்ட சாம்பலையும் இடுப்பின் பிரீச்பட்டையில் வைத்திருந்தான். அவன் முழுமையான கவசம் போன்ற உடை அணிந்திருக்க வேண்டும் என்றே நம்பினர். அவன் உடலில் தைத்த அம்பு அவ்வளவாய் கூர்மை இல்லை. அவன் அப்போது தான் அவனிடமிருந்த போர்க்கருவிகளைஎல்லாம் எரித்து விட்டு, புதிதாக அவைகளை புதிப்பிக்க தயாராக இருந்தான். இந்த சமயத்தில் தான் அவனை ஒரு பசுமரத்தின் கூர்மையான பெரிய தண்டாலாகிய அம்பு கொண்டு பலமாய்த் தாக்கி உள்ளனர். அதனால் பெரிய காயம் ஏற்பட்டு அதில் இரத்தம் வழிந்து, வடிந்து, மயக்கம் போட்டு பின்னர் இறந்திருக்கிறான்.
இரத்த பைபிரின் சொல்லும் உண்மைக் கதை..!
ஓட்சியின் இரத்த செல்களுடன், அதன் அருகிலேயே பைபிரினும் (Fibrin) காணப்பட்டது.எந்த இடத்தில் அம்பு குத்தி உள்ளே இறங்கியதோ அந்த அம்பு முனை பட்ட இடத்தில்தான் பைபிரின் இருந்தது. பைபிரின் என்பது இரத்தம் உறைவதற்கான புரதம். இரத்தம் உறைதலுக்கு ஆயத்தம் செய்யும் துவக்க புரதம் இது. இந்த பைபிரின் துணுக்கு , நமக்கு ஓர் அருமையான உண்மையை நம் முன்னே பிட்டு வைக்கிறது.அதுதான் அவன் காயம் பட்டவுடனேயே இறக்கவில்லை என்பதே. ஏனெனில் பைபிரின் புதிதாக ஏற்பட்ட கயாத்தில்தான் உருவாகும். பின்னர் சிதைந்து விடும். அதன் பின் ஆராய்ச்சியாளர்கள் அந்த இரத்த செல்களில், கடந்த காலங்களில் மூலக்கூறு அமைப்பில் என்னென்ன மாற்றங்கள் நடந்துள்ளன என்றும் அதிலுள்ள நீர் இழப்பு மற்றும் வயது மூலம் தெளிவாக அறியலாம் என்று தெரிவிக்கின்றனர். இம்முறை மூலம் எதிர்காலத்தில் குற்றத் தடயவியல் துறைக்கு உதவி செய்யும் என்று நம்பப்படுகிறது. இதற்காக ஆய்வாளர்கள் ராமன் Spectros copy (Raman spectroscopy) யைப் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் அந்த செல்லில் உள்ள ஹீமோகுளோபின் (Hemoglobin) புரதம் அது எவ்வளவு ஆக்சிஜனைச் சுமந்து செல்கிறது என்றும் கண்டறியலாம்.
ஓட்சியின் இறப்பு இதய இயக்கமின்மையால் !
மற்ற ஆய்வாளர்கள் பழங்கால கற்கால கருவிகளில் இரத்தம் அறிய ஆராய முயற்சி செய்யும்போது, இந்த பனிமனிதனின் இரத்த சான்று நேரிடையாக நின்று மனிதவியல் துறைக்கு பெரிதும் உதவு கிறது.அவன் அம்பால் குத்துப் பட்டும் கூட பல மணி நேரம், அல்லது சில் நாட்கள் இறக்காமல் இருந்திருக்கிறான். அவன் தோள்பட்டையில் உள்ள இரத்த தமனி அறுபட்டு, அதிகமாக இரத்தம் வடிந்து, இதயம் இயங்க மறுத்து மரணித்திருக்கலாம் என்றும் சொல்கின்றனர் ஆயவாளர்கள்.

பனி மனிதன் உலா வந்த இடம்..!
பதப்படுத்தப்பட்ட அந்த பனி மனிதனின் உடல் இப்போது, இத்தாலியின் தெற்கு தைரோளில் போல்ஸ்சானோ என்ற இடத்தில் அருங்காட்சியகத்தில், பத்திரமாகப் பனிப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. அவனது முதுகில் அம்பின் தலை குத்திக் கிடக்கிறது.அது 6 .5 செ.மீ ஆழமான காயத்தை உண்டு பண்ணியுள்ளது. அவன், அந்தப் பனியாற்றைச் சுற்றியுள்ள அந்த இடத்தைச் சுற்றி சுமார் 65 கி.மீ சுற்றளவில் மட்டுமே சுற்றி வந்திருக்கிறான் என்று அறியப்படுகிறது. .
ஓட்சி பல்வேறு காரணங்களால் முன்னிறுத்தப்படுகிறான் .
அவை:
இதுதான் நாம் அறிந்த உலகின் முதல் மனிதக் கொலையும்.. முதல் மனித இரத்தமும்
Leave a Reply