– பசுமை சாம்பியன் விருதுபெற்ற அக்ரி.ஒய்.ராஜகுமார்
உணவு இல்லாமல் மனிதனால் உயிர் வாழ முடியாது அத்தகைய உணவு கிடைப்பதற்கு விவசாயிகள் உயிர்நாடியாக செயல்படுகிறார்கள் விவசாயம் இல்லாவிட்டால் மக்கள் பட்டினியால் உயிர் இழக்க வேண்டிய நிலை வரும் ஆனால் அந்த விவசாயிகளை கவுரவிக்கவோ பாராட்டவோ யாரும் முன்வருவதில்லை மட்டுமல்ல இன்றைய தலைமுறையினர் யாரும் விவசாயத்தை விரும்பவில்லை என்பதுடன் விவசாயம் செய்வது இன்று கேலிக்குரிய தொழிலாக மாறியிருக்கும் சூழலில் விவசாயிகளை ஊக்குவித்து கவுரவித்து விவசாயம் பற்றிய விழிப்புணர்வை விதைத்து ஏற்படுத்தி விவசாயத்திற்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது
கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கி வரும் கிரீன் அக்ரி கிளப் என்ற அமைப்பு.
இந்த அமைப்பின் நிறுவனர் மாநில அரசின் பசுமை சாம்பியன் விருது பெற்ற அக்ரி ஒய். ராஜகுமார். அவர் ஒரு அமைப்பின் தலைவர் என்று அல்லாமல் பிறருக்கு முன்மாதிரியாக தனது வீட்டிலேயே சிறிய அளவிலான உணவுக்கான மீன் வளர்ப்பு , நாட்டு கோழிகள், மூலிகைகள், கீரைகள், மாடித் தோட்டம் போன்றவற்றை தனது வீட்டிலேயே அமைத்திருந்தார். பயிற்சி தேவைப்படுபவர்களுக்கு இலவச ஆலோசனையும் வழங்கி வருகிறார்
அவரை புதிய தென்றலுக்காக மார்த்தாண்டத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தோம்.
விவசாயத்தின் மீது தங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது எப்படி?
நான் சிறு பிள்ளையாக இருக்கும் போது நிலக்கிழாராகிய எனது தாத்தா என்னை வயல்களுக்கு அழைத்துச் செல்வார். அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரான என்னுடைய அப்பா தினமும் தோட்டங்களை பராமரித்து விட்டுத்தான் பள்ளிக்கூடம் செல்வார். வீட்டு வளர்ப்பு கால்நடைகளை கவனிப்பதுடன், தோட்டத்து விளைபொருட்களை எங்களுக்கு உணவாக ஊட்டிவிடுவது அம்மாவின் வழக்கம்.
இப்படி எனது முன்னோர்கள் விவசாயத்துடன் இணைந்து வாழ்ந்து வந்ததால் விவசாயத்தின் மூலம் பெறக்கூடிய நன்மைகளை அறிந்து வளர்ந்ததால் எனக்கும் விவசாயத்தின் மீது மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது.
தாங்கள் விவசாயம் செய்து வருகிறீர்களா?
நான் சிறு வயது முதலே விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன். இப்போதும் எனது தோட்டங்களில் பல்வேறு உணவு பயிர்களை விவசாயம் செய்து வருகிறேன். மட்டுமல்லாமல் எனது வீட்டிலேயே எனது வீட்டு தேவைக்காக மீன் வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு, போன்றவற்றுடன் காய்கறிகள், கீரை வகைகள், மூலிகைகள் போன்றவற்றை மாடித்தோட்டம் முறையிலேயே அமைத்து வீட்டு தேவைகளுக்கு பயன்படுத்தி வருகிறோம். இன்றளவும் காலையிலும் மாலையிலும் ஒரு மணிநேரமாவது தோட்டவேலையில் ஈடுபடாவிட்டால் எனக்கு தூக்கமே வராது. சிறுவயதில் தொடங்கிய பசுமைப்பயணம் இன்றளவும் தொய்வின்றி தொடர்கிறது.
தாங்கள் விவசாயத்தில் என்ன படிப்புகளை டித்திருக்கிறீர்கள்?
தாவரங்கள் மீது கொண்ட காதலினால் மதுரை பல்கலைக் கழகத்தில் தாவரவியல் பட்டம் பெற்ற நான், அலகபாத்தில் வேளாண்மை பட்டம் படித்து, பல்கலைக் கழக முதல் தரத்தில் தேர்ச்சி பெற்றேன். பின்னர் அரசின் வேளாண்மை துறையில் பல்வேறு ஊர்களில் பணிபுரிந்து வந்தேன் வேலையிலிருந்து ஓய்வு பெற்றது முதல் விவசாய மறுமலர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறேன்.
விவசாயம் தொடர்பாக தாங்கள் என்னென்ன நூல்களை எழுதி உள்ளீர்கள் ?
நான் விவசாயம் தொடர்பாக சுமார் 20 விவசாய புத்தகங்களை வெளியிட்டுள்ளேன். அவற்றில் நஞ்சில்லா வேளாண்மை, வேதாகமத்தில் வேளாண்மை, வீட்டு தோட்டம், மாடி தோட்டம், அக்ரி பிசினஸ், தோட்ட மருத்துவம், பசுமை தொழில்நுட்பங்கள், காய்கறி கையேடு, வயலோர செய்திகள், வேளாண் தலைவன் ஆகியவை முக்கியமானவை. சில ஆன்லைனிலும் கிடைக்கின்றன.”
விவசாயம் சம்பந்தமாக எந்தெந்த நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறீர்கள்?
விவசாயத்தை சிறப்பான முறையில் செய்வதற்காகவும் அதற்கான ஆலோசனைகள் வழங்குவதற்காகவும் சுமார் 41 மேலை நாடுகளுக்குச் சென்று அங்குள்ள வேளாண்மை முறைகளை அறிந்து கொண்டுள்ளேன்,
கிரீன் அக்ரி கிளப் ஏன் தொடங்கப்பட்டது?
எனது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே தெருவுக் கடை என்ற ஊர் ஆகும்.
வாழ்க்கையில் பிறந்தோம், வாழ்ந்தோம், மறைந்தோம் என்று இல்லாமல் இந்த சமுதாயத்திற்கு நம்மால் இயன்ற எதையாவது செய்ய வேண்டும் .நமது பெயரை நிலை நாட்ட வேண்டும் என்ற எண்ணம் சிறு வயது முதலே உண்டு ஆகவே நான் விவசாய கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது பல விவசாயக் கூட்டங்களில் என்னை உரையாற்ற அழைப்பார்கள்.
நானும் சென்று மக்களுக்கு தேவையான விவசாய ஆலோசனைகளை வழங்குவது வழக்கம் ஆகவே என்னை கண்டதும் மக்கள் அக்ரி வருகிறார்…!!! அக்ரி வருகிறார்….!!! என்று பெருமையாக கூறுவார்கள் இதைக் கேட்டதும் எனக்கு மகிழ்ச்சி ஏற்படும் ஆகவே விவசாயத்தில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.
அதற்கு ஒரு அமைப்பு தேவைப்பட்டது. 1980-களில் YMCA மார்த்தாண்டத்தில் விவசாய விரிவுரையாளராக பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றேன். அப்போது பல ஆளுமைகளின் அறிமுகம் எனக்கு கிடைத்தது, தொண்டு நிறுவனங்களின் தொடர்பு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அரசுப்பணியில் அமர்ந்தேன்.
பின்னர் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவுடன் கிரீன் அக்ரி கிளப் என்ற பெயரில்1980-ம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி இந்த அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறேன்.
உங்கள் அமைப்பிற்கு எத்தனை கிளை அமைப்புகள் உள்ளன? எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்.
எங்களது கிரீன் அக்ரி கிளப்பிற்கு சுமார் 14 கிளை அமைப்புகள் உள்ளன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் விவசாய மறுமலர்ச்சிக்காக பாடுபட்டு வருகின்றனர் . இந்த அமைப்பு சுயமாக இயங்கி வருகிறது நாங்கள் யாரிடமும் நன்கொடை பெறுவதில்லை.
இந்த அமைப்பின் மூலம் நீங்கள் விவசாயிகளுக்கு என்ன சேவை வழங்குகிறீர்கள்?
விவசாயம் ,கால்நடை, சுற்றுச்சூழல்,இயற்கை மருத்துவம் இது சார்ந்த பயிற்சிகள் ஆலோசனைகள் உதவிகள் ஆகியவற்றை வழங்கி வருகிறோம் மட்டுமல்லாமல் விவசாயிகளை ஊக்கப்படுத்தக்கூடிய போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் திருவிழாக்கள் ஆகியவற்றை நடத்துகிறோம்.
உதாரணமாக பழக் கண்காட்சி, மூலிகை கண்காட்சி, மலர் கண்காட்சி, உணவு திருவிழா, பசுமை திருவிழா போன்றவற்றை நடத்துவதுடன் அவற்றில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் வழங்கி கௌரவித்து வருகிறோம்.
இந்த நிகழ்ச்சிகள் பெரும்பாலும் கல்லூரிகளில் வைத்து நடத்தப்படுவதால் மாணவ, மாணவிகளுக்கும் விவசாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுகிறது. மட்டுமல்லாமல் எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களை அவ்வப்போது சுற்றுலா அழைத்து செல்கிறோம் அது பலருக்கு புத்துணர்ச்சியையும் மகிழ்ச்சியை யும் மன அமைதியையும் கொடுக்கிறது . வேலை ,வீடு என்று இயங்கி வந்த பலருக்கு விவசாயம் , கண்காட்சிகள், சுற்றுலா போன்றவற்றால் இப்போதுதான் இன்னொரு உலகம் இருப்பது போன்று உணர்கிறார்கள் என்றால் அது மிகையல்ல.
தாங்கள் விவசாயம் சார்ந்த வேறு என்னென்ன சேவைகளை செய்து உள்ளீர்கள்?
“நான் படிக்கும் காலத்திலிருந்தே பள்ளிகள், கல்லூரிகள், தொண்டு நிறுவனங்களில் விவசாய ஆலோசனைகளை வழங்கி வருகிறேன். விவசாயிகளுக்கும் தொடர்ந்து இலவச ஆலோசனைகள் அளித்து வருகிறேன். ”பள்ளிகள், கல்லூரிகள், நற்பணிமன்றங்கள். ஆலயங்கள், அரசு நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள். மருத்துவமனைகள் ஆகியவற்றில் விவசாயம் குறித்த கருத்துரைகளை வழங்கியுள்ளேன்.
தங்களது விவசாய கருத்துரைகளுக்கு தனியார் நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதா?
நான் பல்வேறு தனியார் நிறுவனங்கலில் கருத்தாளராக சென்று விவசாயத்தைப் பற்றிய ஆலோசனைகள் வழங்கியுள்ளேன். RUC, HEAL, MIDS, JCI, KIDS, RMP, CRD, SEDA, VAI, YMCA, JYOTHI, ROTARY, LIONS, WISEMEN, NSS, RELIANCE, APPTA, YWCA, KSSS, NGC, DPRC, BIRAVI, CARE-T, CSI DCC, CMS போன்ற சமூக சேவை நிறுவனங்கள் எனக்கு பட்டுக்கம்பள வரவேற்பை அளித்தன. இவற்றிற்கெல்லாம் கருத்தாளனாக நான்சென்று வந்த காலம் எனது பசுமைப் பயணத்தின் பொற்காலம் எனலாம்.இப்போதும் ரிலையன்ஸ் பவுண்டேஷன் அறக்கட்டளைக்கு வேளாண்மை தொழில்நுட்ப ஆலோசகராக இருந்து வருகிறேன்.
உங்களுக்கு என்னென்ன விருதுகள் கிடைத்துள்ளன?
எனது விவசாய சேவையை அங்கீகரித்து 2022 ஆம் ஆண்டு ஒரு லட்சம் ரூபாய் பரிசு தொகையும் பசுமை சாம்பியன் என்ற விருதையும்தமிழ்நாடு அரசு வழங்கி கௌரவித்துள்ளது.
தற்போது டெல்லியில் நடைபெற்ற விழாவில் எனது விவசாய சேவையை பாராட்டி சேவா ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவசாய பயிற்றுநர், கவிமணி இலக்கிய விருது, அமைதி வேளாண் பணி விருது, பசுமை போராளி விருது, வேளாண்மை சாதனையாளர் விருது, சூழியல் வித்தகர் விருது, மாடித்தோட்ட மன்னன் விருது, போன்ற பல விருதுகளை தனியார் அமைப்புகள் வழங்கியுள்ளன.
விவசாயிகளுக்கு நீங்கள் அளித்துள்ள விருதுகள் எவை?
எங்களது அமைப்பின் மூலம் பழப் பயிர் சாம்பியன் விருது, மூலிகை சாம்பியன் விருது, போன்ற பல விருதுகளை வழங்கி கௌரவித்து உற்சாகப்படுத்தி வருகிறோம்.
தங்களது அமைப்பின் உறுப்பினர்களை எந்தெந்த ஊர்களுக்கு சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றுள்ளீர்கள்?
பெங்களூர், ஹைதராபாத் ,மூணாறு ,சிம்லா ,குறிஞ்சி குளு குளு சுற்றுலா ,நெய்தல் நேரலை சுற்றுலா, பொன்முடிக்கு ஒரு மகிழ்ச்சி உலா, என்ற பல்வேறு தலைப்புகளில் சுற்றுலாக்களை ஏற்பாடு செய்து விவசாயிகளை சுற்றுலா அழைத்துச் சென்று உற்சாகப்படுத்தி வருகிறோம்.
மற்ற விவசாய பொருள்களுக்கு சந்தை உள்ளது போல் இயற்கை விவசாய பொருள்களுக்கு சந்தை ஏற்பட வாய்ப்பு உள்ளதா ?
அப்படி ஒரு வாய்ப்பு ஏற்பட வேண்டும் எனறால் அதனை அரசாங்கம்தான் செய்ய வேண்டும் எந்த பொருள் இயற்கை விவசாயத்தால் விளைவிக்கப்பட்டது மற்றும் எந்த பொருள் ரசாயன உரங்களால் விளைவிக்கப்பட்டது என்பதை விஞ்ஞான சோதனை அடிப்படையில் கண்டுபிடித்து இயற்கை விளை பொருட்களுக்கென்று தனி சந்தை ஏற்பாடு செய்தால் மட்டுமே இயற்கை விவசாயத்திற்கு தனி மதிப்பு ஏற்பட வழி பிறக்கும். சில வெளிநாடுகளில் இந்த நடைமுறை உள்ளது அதுபோன்று நமது நாடுகளிலும் இந்த முறையை அரசு விரைவில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உங்களது அமைப்பின் முக்கிய நோக்கம் என்ன?
முடிந்தவரை இயற்கை வேளாண் பொருட்களை அதிகமாக உற்பத்தி செய்து அதனை விற்பனைக்கு கொண்டு வரலாம் அல்லது வீடுகளிலேயோ, தோட்டங்களிலேயோ முடிந்த அளவு உற்பத்தி செய்து பயன்படுத்துவதன் மூலம் நமது உடல் நலம் மட்டுமின்றி பொருளாதாரமும் மேம்படும் இவற்றையெல்லாம் விட முக்கியமாக உணவை உற்பத்தி செய்யும் உழவர்களின் கஷ்ட நஷ்டங்கள் மக்களுக்கு தெரிய வரும், அப்படி தெரிய வரும்போது உணவை வீணடிப்பது மிகவும் குறையும் மட்டுமல்லாமல் உலகுக்கு உணவளிக்கும் உழவர்களை மதிக்க வேண்டிய உணர்வு மக்களின் மனதில் ஏற்படும் குறைந்தபட்சம் ஒருவர் தனது வீட்டிற்கு தேவையான உணவு பொருட்களை விளைவித்து பயன்படுத்தினால் அதுவே போதுமான பசுமை புரட்சியாக இருக்கும்.”
தங்களது லட்சியம் என்ன?
அன்றும் இன்றும் என்றும் விவசாயத்தையும், விவசாயிகளையும் நேசிப்பதை வாழ்வின் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். ஆயுள் முழுவதும் விவசாயிகளின் விஞ்ஞானியாகத் திகழவேண்டும் என்ற இலட்சியத்தில் வாழ்ந்து வருகிறேன். எனது இதயத்தில் ஒரு இயற்கை விவசாயி எப்போதும் இருக்கிறார் என்றார் அவர்.
“விவசாயம் ஒரு தொழிலல்ல; அது வாழ்வாதாரம், விவசாயிகளை கவுரவித்து, ஊக்குவித்து, அவர்கள் மீது பெருமை கொள்ளும் சமூகமே வளமான சமூகம்.” ஆகவே உணவு அளிக்கும் உழவர் சமூகத்திற்கு கலப்பையாக செயல்பட்டு வரும்.
திரு.ராஜகுமார் அவர்களை பசுமை மறுமலர்ச்சி பணிகளுக்காக வாழ்த்து கூறி விடை பெற்றோம்.
பேட்டி கண்டவர்
G. ஜெய கர்ணன் இணை ஆசிரியர்,
உதவி : R. அஜோய்
Leave a Reply