போதைப் பழக்கத்தால்   மதியிழந்த மனிதர்கள்

போதைப் பழக்கத்தால்   மதியிழந்த மனிதர்கள்

  • By Magazine
  • |

C. முருகன்

மக்கள் சமுதாயத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் எதிராக உலகளவில் எழுந்திருக்கும் பிரச்சனை போதைப்பழக்கம் ஆகும். வயது வித்தியாசம் இன்றி சமுதாயத்தில் போதைப்பழக்கம் வேரூன்றி உள்ளது என்பது கவலைக்குரியது ஆகும்.

போதைப்பழக்கத்தை தடுக்கும் விதமாக பல சட்டங்கள் முன் வைக்கப்பட்டாலும் அதை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை.

இப்பழக்கம் ஆண்கள் மட்டுமின்றி பெண்களிடத்தும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 26-ம் தேதி சர்வதேச போதை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் நோய்களும், தற்கொலைகளும் போதை மருந்துகளின் நடமாட்டத்தால் அதிகரித்துள்ளது. போதை பழக்கத்தால் மஞ்சள் காமாலை, வலிப்பு, விபத்து மற்றும் புற்றுநோய், இதயநோய், பால்வினை நோய் போன்றவைகளுக்கு போதை வஸ்துக்களே பிரதான காரணமாகும்.

இளைஞர்கள் (அதாவது பள்ளி கல்லூரி படிக்கும் மாணவர்கள்) தங்களது எதிர்காலத்தைப் பற்றி நினைப்பதில்லை. போதைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகளைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. விளைவுகளை நினைத்துப் பார்ப்பதில்லை.

இன்றைய சமுதாயம் சந்திக்க வேண்டிய மிகப் பெரிய சவால்! என்னவென்றால் மாணவர்களிடையே, இளைஞர்களிடையே பெருமளவில் தொடர்ந்து பரவிக் கொண்டிருக்கும் போதைப் பொருள் பழக்கம் தான்.

நாளைய மனிதராக வேண்டிய இன்றைய மாணவன் ஆக்கப்பூர்வமாக சிந்திக்கவும், அறிவுப்பூர்வமாக செயல்படவும், எழுச்சியுடன் ஈடுபடவும், இயக்கமாய் ஒன்றிணையவும், சமுதாய மாற்றத்திற்கு குரல் கொடுக்கவும் பெரும் இடைஞ்சலாகவும், இடையூறாகவும் இருப்பது போதைப் பொருளாகும்.

எந்த மாணவனும் தன்னை எதுவும் கட்டுப்படுத்துவதை ஏற்பதில்லை. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் போதைப் பொருளுக்கு மட்டும் தானாக முன்வந்து கட்டுபட்டு கிடக்க சம்மதிக்கின்றான்.

மது குடிப்பவரை மட்டுமின்றி அவரைச் சார்ந்த மொத்த குடும்பத்தையும் பாதிக்கின்றது. மது குடிப்பதை ஏன் நிறுத்த வேண்டும்? என்று விழிப்புணர்வினை அறிவின் விளிம்பில் நின்று எண்ண வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நடைபெறுகின்ற குற்ற நிகழ்வுகள் குடிபோதையில் தான் அதிகமாக நடக்கின்றன. காவல் நிலையங்களுக்கு வரும் புகார்களில் 80% கணவன்மார் குடித்துவிட்டு வீட்டில் நடத்தும் குழப்பங்கள் சார்ந்தவையாக இருக்கின்றன. நெடுஞ்சாலை விபத்துகளில் மூன்றில் இரண்டு போதையில் ஏற்படுகின்றன.

மதுவால் வெறுப்படைதல், சண்டை போடுதல், அடித்தல், மனமுடைதல், விரக்தியடைதல் பிரிந்து வாழ்தல், விவாகரத்து பெறுதல், விதவையாதல், சக நோயாளியாதல் போன்ற குடும்ப பாதிப்புகள் ஏற்படுகின்றன.

மதுவால் திருட்டு, கொள்ளை, வழக்கு, விபத்து, அடிதடி, கொலை, தற்கொலை, குழப்பம், கலவரம், பொதுச்சொத்து சேதம், பொதுமக்கள் அச்சம், பாலியல் கொடுமை போன்ற சமூகப் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

தமிழ்நாட்டில் குடிக்கும் வயது குறைத்து 11 வயதாக குறைந்து விட்டது என்ற தகவல் நம்மை அதிர்ச்சி அடையச் செய்கின்றது.

புகைப்பிடிப்பவர்களுக்கு காசநோய் ஏற்படும் வாய்ப்பு அதிக அளவில் உள்ளது. 200 சிகரெட் குடிக்கும் போது 7.8 கிராம் வரையிலும் நுரையீரலில் தார் படிகிறது என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றது. புகைபிடிப்பவர் கூட புகைப்பவருடன் இருக்கும் போது இரண்டாம் நிலைப் புகைத்தலுக்கு ஆளாகின்றனர். மேலும் புகையிலைப் பொருள்களில் 3000 வகையான நச்சுப்பொருள்கள் இருக்கின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

 ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என் மாற்றுச்

  சான்றோர் முனத்துக் களி      (குறள் 923)

யாது செய்தாலும் மகிழும் தாய் முன்பானாலும் கள்ளுண்டு மயங்குதல் துன்பந் தருவதாகும். குற்றம் எதையும் பொறுக்காத அறிவுடையோர் முன்பு மயங்குதல் மிக்க வெறுப்பை தரும்.

நல்லோர்களிடத்தில் போதை அருந்தியவன் நின்று பேச அருகதை அற்றவன். அரசாங்க வேலை பார்பவனும் கூட வேலை நேரத்தில் மது அருந்தி விட்டு தான் வேலைப் பார்க்கிறான். மேல் அதிகாரி கண்டித்தால் நான் தற்கொலை செய்து விடுவேன் என்று பயமுறுத்துகிறான். மேல் அதிகாரி என்ன செய்வார். இவன் நம்மால் மரணமடைய கூடாது என்று மவுனமாக இருப்பார். இது அலுவலகங்களில் நடக்கிறது. அரசாங்கமே மதுவிற்பனை செய்யும் போது மக்கள் எப்படி திருந்துவார்கள்.

மூளையின் அமைப்பில் மாற்றம்

மண்டை ஓட்டுக்குள் பாதுகாப்பைக் கொடுக்கும் மூளைக்கு அத்தகைய பாதுகாப்பைக் கொடுக்கும் அந்த திரவத்துக்கு செரிபரோச்பைனல் திரவம். அதாவது மூளைத் தண்டுவடத் திரவம் என்று பெயர்.

இத்திரவத்தில் காபாவின் அளவு குறையும் போது மன அழுத்தத்தின் தாக்கம் அதிகரிக்கும். குறிப்பாக தற்கொலை எண்ணமும் அதற்கான முயற்சியும் அதிகமாக இருக்கும் என்று ஆய்வுகள் அறிவிக்கின்றன.

மிக தீவிரமான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மூளையை பலவித ஹிப்போகேம்பால் (Hippo campal) எனும் மூளையின் பின் ஏற்றபகுதி இவர்களுக்கு இயல்பை விடச் சுருங்கியிருப்பது தெரிய வந்தது. இது மன அழுத்தம் ஏற்பட்ட காலகட்டம் அதன் தீவிரத்தன்மை அதன் தாக்கத்தை பொறுத்து கண்டறியப்பட்டது.

மிக அதிக நாட்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இப்பகுதி அதிக அளவில் சுருங்கியிருந்தது. அதே சமயம் அந்நோயாளிக்கு சிகிச்சை அளித்து மன அழுத்தத்தில் இருந்து வெளிவந்த பிறகும் இந்த ஹிப்போகேம்பல் பகுதியில் மாற்றம் இல்லை அப்படியே தான் இருந்தது.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இறந்த ஒரு நோயாளியின் மூளை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில் முன் மூளை பகுதியில் (Cortex) நியூரான்களின் இழப்பு கண்டறியப்பட்டது.

டாக்டர் எ.வி ஸ்ரீனிவாசன் நரம்பியல்கள் துறை அவர் கூறியதாவது

மதுநோய் மனது வைத்தால் இப்போது அல்லது எப்போது வேண்டுமானாலும் நிறுத்த முடியும். மதுபழக்கம் சிகரெட் பழக்கம் உள்ளவர்கள் எனக்கு தெரிந்த நிறைய நண்பர்கள் முற்றிலும் நிறுத்தி விட்டார்கள். பதிலாக குடிநோயால் பிடிக்கப்பட்ட மூளை மனக்கட்டுபாட்டை தகர்த்து விடுகிறது.

 தொடர்ந்து குடிப்பதற்கான காரணங்கள்

  1. மதுவில் அடிமையாகிப் போன உடல் மதுவில்லா நிலையில் நடுங்குவது, தடுமாறுவது. பேதலிப்பு அடைகிறது, குழம்பிப் போகிறது.
  2. மது கட்டுபாடின்மை அளவோடு நிறுத்த முடியாமல் சுயக்கட்டுப்பாடு முற்றிலும் போய் விடுகிறது.
  3. மதுவேட்கை, மதுசார்புநிலை உடலளவில் ஏற்படுவதால் உடல் உறுப்பு செயல்பட இயலாத நிலையில் மதுவை நாடி தாகத்தோடு தேடி தவிக்கின்றது.
  4. மது கடமைகளையும், பொறுப்புகளையும், விருப்பங்களையும் பற்றி அக்கரை இல்லாமல் இருக்க செய்கிறது.
  5. மது அருந்துவதால் பல சிக்கல்கள், பிரச்சனைகள், கஷ்டங்கள், நோய்கள் இவற்றை பற்றி எல்லாம் தெரிந்த பின்பும், உணர்ந்த பின்பும் கூட மதுவை அருந்த தான் செய்கிறார்கள்.
  6. மது அருந்துவதால் மறதி நிலை ஏற்பட்டு போதையில் என்ன செய்கிறோம் என்று கூட  தெரியாமல் குடித்த பின்பு என்ன நடந்தது என்று எதுவுமே மூளையில் பதிவாகாத நிலை ஏற்படுகிறது.

மதுகுடிக்கும் ஆசையை குறைக்க அரசு அங்கீகரிக்கின்ற நான்கு வகையான மாத்திரைகள் உள்ளன. இவைகள் Naltrexone, Acomprosate, Balcofen, Topiramate ஆகியவையாகும். இவைகளை குடிநோய் மனநல மருத்துவரின் பரிந்துரைப்படி பயன்படுத்தலாம்.  மது அருந்துவதை நிறுத்துவதற்கான மாத்திரை சாப்பிட்டபிறகு மது அருந்தினால் வாந்தி, மயக்கம், நெஞ்சுவலி, மூச்சுமுட்டல் போன்ற எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும். போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீள்வதற்கு தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் அதிலிருந்து மீண்டு வரலாம். மேலும் போதைப்பொருள் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வரும் போதெல்லாம் கவனத்தை திசை திருப்பி நல்ல செயல்களில் ஈடுபட வேண்டும். குடிமக்கள் திருந்தியிருந்தால் என்றோ மது ஒழிந்திருக்கும். போதைப்பழக்கம் தனிமனிதனை மட்டுமின்றி சமுதாய பயத்தையும் சீரழித்து விடும் என்பதை உணர்ந்து அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *