கே.பி.பத்மநாபன்
அண்ணலார் அமரராகி ஆண்டுகள் எழுபத்தேழும்
மண்ணிதில் மறைந்து போச்சு; மகானையே மறந்து மாச்சு;
உண்மையே உரைத்தோன் நாட்டில் ஊழலும் பெருகிப் போச்சு;
பெண்மையை மதித்தோன் நாட்டில் பெண்மைவன் முறையுமாச்சு;
கண்ணியம் கட்டுப்பாட்டைக் கடமையாய்க் கொண்டோன் மண்ணில்
பண்ணிடும் பாதகங்கள் பலப்பல பெருகியாச்சு;
அண்டியோர் தம்மை அன்பாய் ஆதரித்தோனின் மண்ணில்
எண்ணிலாக் கலவரங்கள் எனதினம் ஆகியாச்சு;
உண்ணுதல் உடுத்தல் தம்மில் உயரிய எளிமை கண்ட
கண்ணிய காந்தி மண்ணில் கருநிதி பெருகியாச்சு;
புண்ணியன் வாழ்ந்திம் மண்தான் புதுமைகள் என்னும் பேரில்
பண்ணிடும் பாவங்கள் தம் பல்கலைக்கழக மாச்சு;
எண்ணிலா ஏழைக்காக என்றுமே உழைத்தே ஓய்ந்தோன்
நண்ணிய நன்மை எல்லாம் நாட்டினில் குறைந்தே போச்சு;
எண்ணிடும் பணத்தாளில் தான் ஏந்தலும் சிரிக்கின்றார் காண்
விண்ணிலே இருந்து கண்ணீர் விடுவதை யாரறிந்தார்?
Leave a Reply