சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்

  • By Magazine
  • |

– வழக்கறிஞர்   பி. விஜயகுமார்

எப்படியெல்லாம் சட்டம் வேலை செய்யுது பாருங்க!

கண்ணன் மற்றும் ராதா இருவரும் கணவன் மனைவியர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஆனால் கண்ணன் பெயரில் ஏகப்பட்ட சொத்துக்கள் இருந்தன. வயது ஆகிக் கொண்டே இருந்தது. தமது காலத்திற்குப் பிறகு தமது சொத்துக்களை யாருக்காவது சென்றடைய வேண்டும் எண்ணத்தில் கண்ணன் ஒரு உயில் எழுதினார்.

தனது இறப்பிற்குப் பிறகு மனைவி ராதா உயிரோடு இருந்தால் அவரது சொத்துக்கள் அனைத்தும் ராதாவிற்கு செல்ல வேண்டுமென்றும், ஒருவேளை ராதா தனக்கு முன்பாக இறந்து விட்டால் அவரது சொத்துக்கள் அனைத்தும் அவரது தம்பி மகன் அர்ஜீனுக்கு செல்ல வேண்டும் என உயில் எழுதி வைத்தார். உயில் பதிவு செய்யப்பட்ட உயில்.

இப்போது கண்ணனும், ராதாவும் ஒரு விபத்தில் ஒரே சமயத்தில் இறந்து போகிறார்கள். இப்போது கண்ணன் உயில் பிரகாரம் அவரது சொத்து யாருக்கு செல்ல வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

கண்ணன் விபத்தில் இறந்து ராதா உயிருடன் இருந்தால் சொத்துக்கள் ராதாவிற்குத்தான் சென்றிருக்கும். ஆனால் இங்கு இருவருமே ஒரே சமயத்தில் இறந்துள்ளார்கள். அப்படி இருக்கையில் கண்ணன் சொத்து அவரது தம்பி மகன் அர்ஜீனுக்கு செல்லுமா என்ற கேள்வி எழுகிறது. பதில் அர்ஜீனுக்கு செல்லாது என்பதாகும்.

ஏனென்றால் இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் கணவன், மனைவி இருவரும் ஒரே சமயத்தில் இறந்திருந்தால் அவர்களில் யார் வயதில் மூத்தவரோ அவர்தான் முதலில் இறந்தவராக கருதப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. இங்கு கண்ணன், மனைவி ராதாவை விட வயதில் மூத்தவர். ஆதலால் அவர்தான் விபத்தில் முதலில் இறந்தவராக கருதப்பட்டது.

சரி இப்போது கண்ணன் சொத்து யாருக்குச் செல்லும் என்று பார்ப்போம். கண்ணன் ராதா இறந்ததும் அர்ஜீன் கண்ணன் சொத்துக்கள் அனைத்தும் அவருக்குத்தான் என உரிமை கோரினார். அதே சமயம் கண்ணனின் மூத்த சகோதரர் மகன் ரவீந்தர் என்பவரும் இருந்தார். ரவீந்தரரோ கண்ணன் சொத்துக்களில் பாதி பங்கு அவருக்கு வரும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

நீதிமன்றம் ரவீந்தர் தொடுத்த வழக்குப் பிரகாரம் கண்ணன் சொத்தை அர்ஜீனுக்கும், ரவீந்திரருக்கும் சரி சமமாக வீதித்துக் கொடுத்தது. ஏனென்றால் விபத்தில் கண்ணன் முதலில் இறந்து விட்டதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என சட்டம் சொல்லுகிறது. அவர் உயில் பிரகாரம் அவர் இறக்கும் போது அவரது மனைவி ராதா உயிரோடு இருந்தால் மட்டுமே அவரது சொத்து ராதாவுக்குச் செல்ல வேண்டும் என்பதாகும். இங்கு அவர் இறக்கும் போது ராதா உயிரோடு இல்லை. ஆதலால் கண்ணன் எழுதிய உயில் செல்லா உயிலாக ஆகிறது. இத்தருணத்தில் கண்ணன் சொத்துக்கு 2-ம் கட்ட வாரிசுதாரர்களாக அவரது தம்பி மகன் அர்ஜீனும் அண்ணன் மகன் ரவீந்தர் மட்டுமே இருக்கிறார்கள். ஆதலால் கண்ணன் சொத்து அர்ஜீனுக்கும் ரவீந்தருக்கும் சமமாக பங்கிட்டுக் கொடுக்கப்பட்டது. ஒருவேளை விபத்திற்குப் பிறகு ராதா மட்டும் 5 நாட்கள் சிகிட்சையில் உயிரோடு இருந்து அதற்குப்பிறகு இறந்திருந்தால் கூட கண்ணன் சொத்துக்கள் அர்ஜீன் மற்றும் ரவீந்தருக்குத்தான் சென்றிருக்குமே தவிர ராதா வாரிசுகளுக்குச் சென்றிருக்காது. ஏனென்றால் இந்து மனைவிகளின் சொத்து முதலில் கணவன் வாரிசுக்கு சென்ற பிறகுதான் மனைவி வாரிசுகளுக்கு வரும். இங்கு ராதா 5 நாட்கள் உயிரோடு இருந்தால் உயில் பிரகாரம் கண்ணன் சொத்து முதலில் ராதாவிற்கு வரும். பிறகு ராதாவும் இறந்து விடுவதால் கண்ணன் சொத்து கண்ணன் வாரிசுத்தாரர்களுக்கு தான் வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *