புரட்சி வீராங்கனை  பிரித்திலதா வதேதார்

  • By Magazine
  • |

பேராசிரியர் முளங்குழி பா.லாசர்

வங்கம் வணங்குகின்ற வீரமங்கை பிரித்திலதா. வெள்ளையரை எதிர்த்து ஆயுதமேந்தி நேருக்கு நேர் போர் செய்து வரலாற்றில் இடம் பிடித்த வீரமங்கை பிரித்திலதா. இன்றைய வங்காள தேச சிட்டகாங் நகரில், நகராட்சி தலைமை எழுத்தரின் மகளாய் செல்வக்குடும்பத்தில் பிறந்தார். கல்கத்தா பெதுனே கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார்.

விடுதலை வேட்கையால் மாபெரும் புரட்சி வீரன் சூர்யா சென்னின் யுகாந்தர் அமைப்பில் சேர்ந்தார். அவரின் நம்பிக்கையைப் பெற்று கல்பனாதத்தாவும், பிரித்திலதாவும் வீர சாகசங்கள் செய்தனர்.

சூர்யாசென் தலைமையில் சென்று சிட்டகாங் ஆயுதக்கிடங்கிலுள்ள ஆயுதங்களைக் கைப்பற்றி, ஆயுதக்கிடங்கை அழித்தனர். சிட்டகாங் நகரைக் கடந்து திரும்ப வரும் போது ஜலாலாபாத் மலைப்பகுதியில் ஆங்கிலப்படை பின்தொடர்ந்து வந்து போரிட்டது. 17 நாட்கள் அவர்களுடன் எதிர்த்து வீரத்துடன் போரிட்டுப் பின்னர் சூர்யாசென் கல்பனாதத்தா, தஸ்தகீர் ஆகியோருடன் பிரித்திலதா தப்பிச் சென்றார். காலகட்டம் ஆற்றோர கிராமத்தில் சாவித்திரி என்ற விதவைதாயின் இல்லத்தில் தங்கினர்.

ஜாலாலாபாத் போரில் சிறைப்பட்ட புரட்சி வீரர்களை சிறைச்சாலையில் சென்று சந்திக்கும் படி சூர்யா சென் பிரித்திலதாவைக் கேட்டுக் கொண்டார். யாரும் கண்டுபிடிக்க முடியாதாவாறு மாறுவேடங்கள் போட்டு வெள்ளை வீரர்களின் பலத்த கட்டுக்காவலையும் தாண்டி அவர்களை ஏமாற்றி 42 தடவைகள் புரட்சி வீரர்களை சந்தித்து வீர சாகசம் செய்தார். புரட்சி வீரர்கள் அனைவரும் பிரித்திலதாவை பாராட்டினர். பிரித்திலதாவின் செயல் யாருமே செய்ய முடியாத மாபெரும் செயலாகும்.

கிராமத்திலிருந்த போது இவர்கள் அங்கிருப்பதை வெள்ளையர் அறிந்தனர். வெள்ளையர் படைப் பிரிவொன்று அங்கு வந்து புரட்சி வீரர்கள் அனைவரையும் சுற்றி வளைத்தது. சூர்யாசென் தலைமையில் புரட்சி வீரர்களும், பிரித்திலதா, கல்பனாதத்தா ஆகியோர் எதிர்த்துப் போரிட்டனர். புரட்சி வீரர்கள் வீசிய  வெடிகுண்டில் கேப்டன் கெம்சன் மரணத்தைத் தழுவினான். அனைவரும் தப்பிச் சென்றனர்.

சிட்டகாங் நகரில் வெள்ளையர் மதுவருந்தி மகிழும் கேளிக்கை விடுதி ஒன்றிருந்தது. அதில் நாய்களும், இந்தியரும் உள்ளே வரக்கூடாது என்ற எழுதிய விளம்பரப்பலகை ஒன்று மாட்டப்பட்டிருந்தது. இதைப் பார்த்த வீரமங்கை பிரித்திலதா பொங்கி எழுந்தார். கல்பனாதத்தாவுடன் இணைந்து அந்த விடுதியை அழிக்கத் தீர்மானித்தார். கேளிக்கை விடுதியை வேவு பார்க்க ஆணுடையில் மாறுவேடத்தில் சென்ற கல்பனா தத்தா எதிர்பாராத விதமாக வெள்ளையர் கையில் சிக்கி கைது செய்யப்பட்டார்.

கல்பனா தத்தாவின் கைது புரட்சி வீரர்களுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இருந்தாலும் பிரித்தி லதாவின் உயிரிலும் உடம்பிலுமிருந்த விடுதலை வேட்கை குறையவில்லை. மனம் தளராமல் 20 வயதே ஆன பிரித்தி லதா புரட்சி வீரர்களுடன் சிட்டகாங் கேளிக்கை விடுதிக்குள் ஆவேசமாகப் புகுந்தார். வெள்ளையர் மீது வெடிகுண்டை வீசினார். கடுமையாக போரிட்டார். பல வெள்ளை  வீரர்களைச் சுட்டு வீழ்த்தினார்.

தன் துப்பாக்கியிலிருந்த குண்டுகள் தீர்ந்து விட்டதை அறிந்தார். வெள்ளையர் படை அவரைச் சுற்றி வளைத்தது. இனி தப்ப முடியாது என்பதை உணர்ந்த வீரமங்கை பிரித்தி லதா வெள்ளையரிடம் சிக்கக் கூடாது என எண்ணி சயனட் தூளை வாயில் போட்டு தன்னுயிரை விட்டார். இந்திய நாட்டு விடுதலைக்காக தன்னுயிரையே தியாகம் செய்த வீரமங்கை பிரித்திலதா. வங்க தேச எழுத்தாளர் செலினா ஹீசைன் ஒவ்வொரு இந்தியப் பெண்ணுக்கும் எடுத்துக்காட்டாக இருப்பவர் பிரித்திலதா என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *