கை. செல்லத்தங்கம்
தாத்தா, அப்பா வந்தாச்சு என்று பேத்தியின் குரல் கேட்டு வாசலுக்கு வந்தார் ராஜன். வாப்பா எப்படியிருக்க என்ற தந்தைக்கு நான் நல்லாயிருக்கேன். நீங்கள் எப்படி இருக்கீங்க என்று கேட்டபடி தந்தையை லேசாக கட்டிப்பிடித்தான் கோகுல். நில்லுப்பா ஆரத்தி எடுக்கிறேன், அம்மா. எனக்கும் சேர்த்து எடுங்க பாட்டி என்ற பேரனுக்கும், மகன், மருமகள், பேத்தி சேர்ந்தே ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் வந்தனர். நான் தான் மூணு மாசத்துக்கு ஒரு தடவை வாறேனே… இதுக்கு போய் என்னம்மா என்றவன் மனைவி கொடுத்த காப்பியைக் குடித்து விட்டு உள்ளே சென்றான்.
ராஜன் மாதவி தம்பதியினருக்கு மகன் கோகுல், மூன்று பெண்கள் மூத்தவர்கள். இளைவன் மகன்., கொஞ்சம் செல்லம். நன்றாக படித்து வெளிநாட்டில் நிதிநிறுவனம் ஒன்றில் நல்லப் பணி. நினைத்த நேரம் வரலாம் போகலாம்.
ராஜனின் நினைவுகள் முப்பது வருடங்களுக்கு முன்னோக்கி சென்றது. ஓர் அண்ணன் இரண்டு தங்கைகளுடன் பிறந்தவர். தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்து தானும் திருமணம் செய்தார். கொத்தனார் வேலை. நல்ல பழக்கவழக்கங்கள். நல்ல மனைவி, பெற்றோர் உறவுகளை அனுசரித்து சென்றாள். முதலில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்தது. நான்காவது மகன். பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி படிப்பு, திருமணம் என்ன செய்வது. இங்குள்ள வருமானம் பத்தாது என்று நண்பர் ஒருவர் ஆலோசனையில் வெளிநாடு சென்றார். அரபு நாட்டிற்கு சென்று வேலை பார்த்து சம்பாதித்தார். அப்போதெல்லாம் நினைத்த உடன் குடும்பத்தோடு போனில் கூட பேச முடியாது. கடிதங்கள் தான். மனைவியின் கடிதத்திற்காக காத்திருந்த நாட்கள் சுகமானது. எப்போதாவது ஊரில் அரசு வேலை பார்க்கும் ஒருவர் வீட்டில் போன் பண்ணி மனைவி மற்றும் குழந்தைகளின் குரலை கேட்பதற்காக காத்திருப்பது எல்லாமே சுகமானது. இரண்டு ஆண்டுக்கொரு முறை தான் ஊருக்கு வருவது. ஊருக்கு வந்தாலே கூடப்பிறப்பு, உறவுகள் வீட்டில் கூடி விடுவார்கள். எனக்கு என்ன வாங்கி வந்தீங்க மாமா. தங்கை பிள்ளைகள், எனக்கு என்ன தங்கைகளின் குரல், எதுவுமே பேசாமல் மவுனமாக எதிர்பார்க்கும் மைத்துனர்கள். என்னப்பா எங்களை எல்லாம் கண்டுக்கிறதில்லை என்று உறவுகள். என்னடா எங்களை நினைச்சியா என்று நண்பர்கள். ஊருக்கு வருமுன்னரே எல்லோரையும் நினைத்து பார்த்து பொருட்கள் வாங்கி விநியோகித்து அப்பப்பா… ஒரு வழியாகி விடுவார் ராஜன்.
இப்படியே ஆண்டுகள் பல கழிந்தன. எல்லாக் குழந்தைகளும் நன்றாக படித்தார்கள். ஊரிலே எங்கள் வீடு பாரின்காரர் வீடு ஆனது. பெண் குழந்தைகளுக்கு திருமணமும் ஆனது. ஓரளவு சுமை தீர்ந்ததும் மகன் கோகுல் வெளிநாடு போக வேண்டாம். இனி ஓய்வெடுங்கள் நான் பார்த்து கொள்கிறேன் என்றான். இங்கே எனக்கு சின்ன சின்ன கட்டுமான பணிகளை ஆள் வைத்து வேலை. மகன் தற்போது வெளிநாட்டில் பணி. இப்போதும் எங்கள் வீடு பாரின்கார வீடு தான். தற்போதோ போய் வருவது எப்படி எளிதாகி விட்டது. எதிர்பார்ப்புகள். குறைந்து விட்டன.. எப்போ வந்தே… உறவுகள் அத்தோடு நிறுத்தி கொண்டார்கள். பெண் பிள்ளைகளும் அதிகமாக தம்பியிடம் எதிர்பார்க்கவில்லை. இயல்பாக இருக்கிறது மகனுக்கு… ராஜனுக்கு அந்த நாட்களில் இருந்த சுகமான சுமைகள் அவரது மகனுக்கு இல்லை… மனதுக்குள் சிரித்துக் கொண்டார் ராஜன். சாப்பாடு மேசைக்கு வந்ததும் ராஜனின் மகன் அவன் அம்மாவிடம் கண்ணால் காட்டி, என்னம்மா? என்று பார்க்க உங்க… அப்பாவுக்கு பழைய நினைவுகள் வந்திருக்குதுடா… என்றாள் அவன் அம்மா மாதவி, சிரித்து கொண்டே.
Leave a Reply