புத்தக வியாபாரி

புத்தக வியாபாரி

  • By Magazine
  • |

கிருஷ்ணகோபால்

கோடைக்கால நடுப்பகல் ஒன்றில்  50 வயது மதிக்கத்தக்க  எழுத்தாளரான  புத்தக வியாபாரி ஒருவர் உங்கள் கேட் வாசலை வந்து  தட்டுகிறார்.

சற்று முன்புதான் உங்களுக்கும் மனைவிக்கும் சண்டை நடந்து ஓய்ந்திருந்ததை அவர் அறிந்திருக்கவில்லை.

  சமூக மதிப்பில்லாத உடலுழைப்புச் சார்ந்த சில வேலைகளை குடும்பத்தை நடத்திச் செல்வதற்கு  நீங்கள்  கண்டுப்பிடித்து வைத்திருக்கிறீர்கள்.ஆனால் இப்போது அந்த வேலையும் தொடர்ந்து இல்லை.அதனால்  உங்கள் அன்றாடத் தேவைகளுக்கான வருமான பற்றாகுறையை எவ்வாறு சரிசெய்வது என்ற யோசனையில் கண்களை மூடி வெறும் பாயில் ஒருகளித்துப் படுத்திருக்கிறீர்கள்…

அப்போது உங்கள் பெயர்ச் சொல்லி ஒருவர் கேட்வாசலில் நின்றுக் கொண்டு அழைப்பதைப் பார்த்து  போஸ்ட்மேனாக இருக்குமோ என பதறியடித்துப் போய் கதவை திறக்கிறீர்கள்..

 எதிரே நின்றவருக்கு உங்களைத் தெரிந்திருக்கிறது.நீங்களும்  அவரை ஏதோ இலக்கிய நிகழ்வில்  சந்தித்திருப்பது ஞாபகத்திற்கு வருகிறது.

உங்கள் நாவலில் வெளிவந்திருக்கும் உங்கள் முகவரியைக் கொண்டு உங்களைக் கண்டுபிடித்து வந்ததாக அவர் சொல்கிறார்.

 வீட்டிற்கு மதிய நேரத்தில் வந்திருக்கும் ஒருவர் பசியோடு வந்திருக்கக் கூடும் என  உணவருந்த வேண்டுகிறீர்கள்.அப்போது மனைவியின் முகத்தை அன்னிச்சையாக கவனிக்கிறீர்கள்.அவள் பல்லை நெறுநெறுவென கடித்தபடி நின்றுக் கொண்டிருக்கிறாள்.

 அவரோ 12 மணிக்குத்தான் ஒரு கல்யாண வீட்டில் சாப்பிட்டேன் எனச் சொல்கிறார்.ஒருவகையில் அது நல்லதெனவே மகிழ்ச்சியடைகிறீர்கள்.

அவரை இருக்கையில் அமரச் சொல்கிறீர்கள் ..அவர் வந்த விசயம் என்னவென்று புரியாமல் விழிக்கிறீர்கள்..அவர் சுற்றி வளைத்துப் பேச விரும்பாமல் நேரடியாகவே விசயத்திற்கு வருகிறார்.

“சாதனையாளர் பட்டியலில் உங்கள் பெயரை சேர்க்க வேண்டும்   நீங்கள்  2000 ஆயிரம் ரூபாய் மட்டும் தந்தால் போதும்” என்கிறார். எங்கோ ஓரிடத்தில்  இதுக் குறித்துப்  அவர் பேசியிருப்பது உங்கள் ஞாபகத்திற்கு வருகிறது.

“நாம உயிரோடு வாழ்றதே பெரிய  சாதனதான்  சார், நான் அப்படி என்னச் சாதனப் பண்ணிட்டதா நினைக்கிறீங்க”என்கிறீர்கள்

‘நீங்க எழுத்தாளர்  சார் உங்களப் பத்தி உங்க பக்கத்து வீட்டுக்காரருக்கு  கூடத் தெரியாது சார்…ஆனா  சாதனையாளர் பட்டியலில் பெயர்  வந்திச்சினா உலகத்துக்கே தெரியும் .” என பெருமைப் பொங்கச் சொல்கிறார்.

“பக்கத்து வீட்டுக்காரருக்கு தெரியாம இருக்கிறதுதாங்க பாதுகாப்பு ..நம்ம பொருளாதார நிலமச் சரியும் போது கடன் கொடுத்து உதவுறவங்க… எழுத்தாளர்னு தெரிஞ்சுப் போச்சுனா ஒத்தப் பைசா கடனாக் கேட்டு வாங்க முடியாதுப் பாத்துக்குங்க…எழுத்தாளன நம்பி ஒத்த பைசா தர மாட்டாங்க..” என நீங்கள்  அவரை புறக்கணிக்கும் நோக்கில் யதார்த்த  வாழ்வை  பேசுவதை  எதிர் பார்க்காத புத்தக வியாபாரி சுதாகரித்தபடி “இதெல்லாம் பெரிய தொகையாங்க… உங்களால முடியக் கூடியதுதான்..

இந்தக் காலத்துல மட்டும் இல்லீங்க எல்லாக் காலத்திலேயும் விளம்பரம் பண்ணுணாதாங்க  வளர்ந்து வர முடியும்” என்கிறார்.

“ரெண்டாயிரம் ரூபாயெல்லாம் உடனே எடுக்க முடியாதுங்க அவ்வளவு ரூபா ஏதும் எங்கிட்ட கிடையாதுங்க அவ்வளவு ரூபா எங்கிட்ட இருந்திச்சினா ஒரு மாத குடும்பச் செலவ ஓட்டிடுவேன்…உங்க கிட்ட ஏதாவது இருந்தா தந்திட்டுப் போங்களேன்”  என அவரை விரட்டி விடும் நோக்கில் பேசுகிறீர்கள்.

உண்மையில் புத்தக வியாபாரி அவர் மனைவியிடம் சொல்லிக் கொண்டு வந்த சவால் உங்களுக்கு தெரிந்திருந்தால் நீங்கள் இப்படிப் பேச மாட்டீர்கள்..

“ என்னச் செய்வீயோ யாதுச் செய்வீயோ எனக்கு ஆயிரரூபாய் சாயாங்காலத்துக்குள்ள வேணும். குழுவுக்கு ரூபாக் குடுக்கணும், வத்தல், மல்லி இவை வாங்கிட்டு வரணும். கல்யாண வீட்டுக்கு மொய் எழுதணும் என பட்டியலிட்டதை உங்களுக்கு தெரிந்திருக்கவில்லை…

“ உங்களப் போலதான் நானும் என்னிடம் ஏதும் காசு இல்லீங்க….” என்கிறார் அவர்.

“சரி உங்க நிலமைய அனுசரிச்சி ஆயிரம் ரூபாய் தந்தாப் போதும்” என பிடிவாதத்தை தளர்த்தி இரண்டாயிரத்திலிருந்து  ஆயிர ரூபாய்க்கு  இறங்கி வருகிறார்.

பிறகு அவரின் கைப் பையில் இருந்த சில புத்தகங்களை எடுத்து உங்கள்  கையில் திணிக்கிறார்…

புத்தகத்தை புரட்டுகிறீர்கள் அதில்  புகைப்படமுள்ள  ஒரு பக்கத்தை ஆவலோடு  சுட்டிக்காட்டிப் “பாத்தீங்களா இதேப் போலதான் உங்கப் பற்றிய குறிப்புகளோடு புகைப்படமும் புத்தகத்தில இடம்பெறும் “ என்கிறார்.

இதையெல்லாம் அடுத்த அறையிலிருந்து கவனித்துக் கொண்டிருந்த உங்களது மனைவி  உங்களை தனியே அழைக்கிறாள்..

அவள் அருகில் சென்றதும்  உங்கள் காதில் குசுகுசுத்தபடி பேசுகிறாள்.. “அவனுக்கு  ரூபா குடுகிறதுக்குத்தான் உட்கார வச்சி பேசிட்டிருக்கிறியோ.. கண்டவனுக்கெல்லாம் அவுச்சிப் போடதுக்கா நான் இங்க ஒருத்தி  குத்துக் கல்லாட்டும்  இருக்கேன்.சும்மா வந்தவன்ட  எதுக்கு சாப்பிடிறீயானு கேக்கியா….” என அவள் முறைக்கிறாள்.

“கரண்டுக்கு  அடைக்கிறதுக்கே  காசு இல்லேனுச் சொன்னேன் பொறவு எப்படி அவருக்கு காசுக் கொடுப்பேனு நீ நெனக்கலாம்..”

“அதானப்பாத்தேன் பிறவு ஏன் அவன இருக்க வச்சி பேசிட்டு இருக்க.. நா விரட்டி விடுறதுக்குள்ள ஒழுங்கு மரியாதையா அனுப்பி வைச்சிரு…”

“இருந்து பேசிட்டிருக்கிறவர போகச் சொல்லி  விரட்டுறது மரியாதையில்ல.. உடனே அவரு போயிருவாரு…”

“நான் யாசி அனுப்புறதுக்கு முன்னால அந்த பிராடு பயல பேசி வெளில அனுப்பி விடுறீயா இல்லையா….”என அவள் எகிறினாள்.. முகம் மாறியது.

அவள் அத்து மீறி வந்து  மரியாதைக் குறைவாக நடத்துவதற்குள் அறையிலிருந்து வெளியே வந்து புத்தகவியாபாரியின் அருகில் சென்று நிற்கிறீர்கள்.

உள்ளே மனைவியோடு நீங்கள் சாதனையாளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெறுவதைக் குறித்து    ஆலோசனையில் ஈடுப்பட்டிருப்பதாகப் புரிந்துக் கொண்டவர் .

“சார் பொண்டாட்டியோடப் பேச்சக் கேட்ட எழுத்தாளர்கள் உருப்பட்டதாகவே சரித்திரம் இல்ல சார்…

நீங்களா ஒரு முடிவெடுங்க..” என உங்களுக்கு  மட்டும் கேட்க்கும் குரலில் பேசிவிட்டு நிலைமையை புரிந்துக் கொண்டவர் போல் இருக்கையை விட்டு எழும்புகிறார்.

அவன் பேசியது உங்கள் மனைவியின் பாம்புக் காதிலும் விழுந்து விடுகிறது. மனைவி ஆவேசம் கொள்கிறாள்.

“ பிராடு பயல…. எத்தன பேருல இப்படி அடுத்தவங் குடியக் கெடுக்கதுக்குனே அலஞ்சுதிரியுறிய வெளிலப் போல” என அவன் மீது சாடினாள் .  மனைவியின் ஆட்டத்தை எதிர் பார்க்காத அவர் பதுங்கி பதுங்கி வெளியேறுகிறார்.

“எப்படிசார் உங்க பொண்டாட்டியோட குடும்பம் நடத்திரீங்க …அடுத்து பேச வேண்டிய வார்த்தையை விழுங்கிக் கொண்டு , தெருவில் இறங்கிச் செல்வதைப் கவலையோடுப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

அவர் மீது உள்ள கோபத்தில்  உங்களுக்கு தந்த புத்தகத்தை எடுத்து பலம் கொண்ட மட்டும் கிழித்து கசக்கி தெருவில் எறிகிறாள் உங்கள் மனைவி.. ‘உங்கள் புத்தகங்களை எல்லாம் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என அடிக்கடிச் சொல்பவளுக்கு ‘ சிறு பரிசோதனை முயற்சியாக முன்னோட்டம் காண்பிக்கப்பட்டிருப்பதை  உங்களால் உணர்ந்துக் கொள்ள முடிந்தது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *