– முனைவர் முல்லைத்தமிழ்
பூவல் வர்மம்
சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான மலப்பிற வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் பூவல் வர்மம் பற்றி அறிவோம்.
பூவல் வர்மம் மூலத்தின் கடைசி எல்முனையின் அடியில் அமைந்துள்ளது. இவ்வர்மம் மூலவர்மம், கண்கலங்கி வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது.
“மேருவெல்லின் கீழ் பாகம் குமிள்போல்
இருக்கும் எலும்பின் முறை பூவல்வர்மம்”.
– வர்ம குருநூல்
“கண்ணியமாம் பூவல்வர்மம் கொண்டிட்டாலோ
கொளுத்துடனே களைப்புண்டாகி தரிப்புமாகும்
தண்ணியமாம் தலைவலியும் விறுவிறுக்கும் விசநீர்போலே
தள்ளாடி விறைவிறைக்கும் கால்கள் இரண்டும்
வண்ணியமாம் வலிமிஞ்சி தொடர்ந்து ஏறில் தொடராக
விசமேறி கண்ணடைக்கும் விறுவிறுக்கும் மூச்சு
கண்ணியமாய் நிமிர்ந்திருக்க முடியாதாகி நிலையும் குன்றி
நின்றுளையும் மூலமென்றறைந்தார் தாமே”.
– கால வர்மநூல்
“மேருவடிவளைக்குழிவினகம் கூர்முனைவுறவுறும்
குருநாடியகஞ் சுழிக்கு முனைவடிவில் பூவல்வர்மம்
ஆருமடித்தப்பியங்கம் அடிவீழ் பொடிந்து போயிடிலோ
எங்கும் வியர்த்து அசதியாகி இருக்கொணாது இடுப்பைப்
பாருவடிகளைத்து படபடத்து வயிறுறைவன்னுறுபடி
கடுத்துழையும் கால்தளரும் நடக்கொணாது
காருவடி கண்கள் குழிந்து தலைகனத்து வலிவலிக்கும்
தக்கமுறை தடவலுடன் கூட்டறிந்துபாரே”
– வர்ம குருநூல்
“பாரிவ்வர்மமிளக்குதற்கு பரிவான அடங்கல் பல
பார்த்தறிந்து செய்பக்குவங்கள் பாகமதாய்
வேரில் வீழ் கனிபோலே வீழ்த்தும் இவ்வர்மம்
குற்றம் அணுகாதொரு நாளும் அடக்கம் செய்ய
ஏரில் உழவுசெய் சால்போலுறும் நட்டெல் பற்றியே
தட்டித்தடவி மணிபூரகம் வாரிகோரி வகையறிந்து
வாரியே யணைத்து வகைவகையாய் கைபாகமதாய்
அவுசதங்கள் அறிந்துசெய் வகையதாகும்”.
– வர்ம குருநூல்
“தானென்ற இவ்வர்மம் இளக்குதற்கு வகையைக்கேளு
தனித்துடனே உச்சியிலோர் அமத்தல் போடு
மானென்ற முதுகுவரி தடவித்தாத்து மெல்லவே
முன்வரிசை மேலேந்தி முட்டுகொடு முதுகினிலே
கானென்ற தரிப்பெல்லாம் தீருதற்கு காய தலம்
கண்டிந்த கழுத்தடியில் அமத்திப்போடு
நானென்ற நிலை தள்ளி தாரை செய்து நலமான
முறிவெண்ணெய் போட்டுவர சுகமாம் பாரே”.
– கால வர்மநூல்
குறிப்பிடுகிறது. மேலும்,
தெள்ளுறும் புறந்தண்டின் தாழ்குமிழின்கமுறவே
உள்ளுறும் அனல்நாடி பற்றியொரு தாக்கமுறில்
கள்ளுறும் கண்நிலையாமடைக்குமாம் நாட்டம்
தள்ளுறும் கால்கள் நடுநடுங்குமஃதேபூவலென்பார்.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
உடலின் முதுகுத்தண்டில் தாழே உள்ள எலும்பின் குமிழினகம் பற்றி பூவல்வர்மம் உள்ளது. இந்த வர்மத்தில் அனல்நாடி எனப்படும் சுழிமுனை நாடி பற்றி தாக்கம் கொண்டால், மது அருந்தியவர்கள் போல் ஆகி கண்கள் திறந்து, முழுமையாய், பார்க்கமுடியாமல் அடைத்து அடைத்து திறக்கும். கால்கள் ரண்டும் நடுக்கமுற்று தள்ளாடும். இதுவே பூவல் வர்மமாகும்.
பூவலஃது ஊக்கமுறக் கொண்டிடிலோ மனம் பதறி
காவலஃது கடுகடுத்துமூலமதும் தலைதரித்துவலியும்
சாவலஃது போல் துடித்து தரித்துழையும் கால்கள்
பூவலஃது கைவிதத்தில் கணக்குறுமாம் காண்.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
பூவல் வர்மம் மாத்திரை மிஞ்சி ஊக்கமாய்க் கொண்டால் மனம் பதறி, மூலம் கடுத்து தலைவலியும் உண்டாகும். கால்கள் சாகத்துடிப்பதுபோல் தரித்து உழைந்து வலிக்கும். எனினும் கைபாகம் அறிந்து மருந்து செய்தால் குணப்படும் என்பதாம்.
பூவல்வன்மம் கொண்டிடில் நாட்கடந்து பலபிணிகள்
ஆவலுடன் நன்மருந்ததும் செய்யாட்டிலுறுதியாகும்
நாவலது பூத்தாற்போல் நாசி நாறும் நவிரம்வலியும்
கூவலது நிமிந்திருக்க ஒட்டாது அடியும் தானே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
பூவல் வர்மம் கொண்டால் சரிவர மருத்துவம் செய்யாவிடில் நாட்கள் செல்லச் செல்ல பல பிணிகள் உண்டாகும். நாவல்மரம் பூப்பது போல் நாசிதனில் நாற்றமுண்டாகும். அதனோடு தலைவலியும் தோன்றும். நிமிர்ந்து சரிவர இருக்கமுடியாத அளவு உடலின் அடிப்பாகம் வலிக்கும் என்பதாம்.
வலிக்குமது பூவலிலே நாடியுற்று கொண்டிடிலோ
பலிக்குமிது ஊக்கமறும்பயமும்தோன்றும்படபடத்து
சலிக்குமந்த மனமதுவும் தள்ளிப்போகும் தளராமல்
ஒலிக்குமந்த வன்மமதன் விளைவும் தானே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
பூவல் வர்மம் நடுநாடி பற்றி தாக்கம் கொண்டால் உடலின் வலிமை குன்றி, அச்சம் தோன்றும். மனம் சலித்து எல்லா செயல்களையும் தள்ளிப்போடும். இவை விடாமல் தொடர்ந்து பின்விளைவாய் வந்துகொண்டே இருக்கும் என்பதாம்.
தொட்டுத் தூண்டிடில் பூவல் வன்மம் போக்கிடும்
தட்டு தடுமாறும் கண்மசவல் கலங்கல் சோர்வும்
மட்டுப்படுத்து மாண்மைத்தளர்வும் மனக்கலக்கம்
விட்டு விட்டு வரும் மயக்கமசதி போமே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
பூவல் வர்மத்தை முறையாய் தொட்டுத் தூண்டிவர கண் பார்வைக்குறைவு, கண்கலக்கம், சோர்வு, ஆண்மைக்குறைவு, மனக்கலக்கம், விட்டு விட்டு உண்டாகும் மயக்கம், அசதி போன்றவை அகன்று போகும்.
கட்டுப்படுத்தும் மருந்து கேளிஃது மறப்புற தீருதற்கு
உட்டுபடுத்தும் மறியின் முதுகும் கோரைக்கிழங்கும்
சட்டுபுட்டென சீந்தில் மாவிலங்கு உழிஞையொடும்
வட்டத்திருப்பி வாங்குநல் காட்டுழுந்துமாமே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
இவ்வர்ம பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கு மருந்து கேள்: ஆட்டின் முதுகெலும்பு, கோரம்கிழங்கு, சீந்தில், மாவிலங்கு, உழிஞை, வட்டத்திருப்பி, காட்டு உளுந்துமாகும்.
காட்டுளுந்தொடும் தாளிசப்பத்திரி தாலத்தின்வேரும்
வேட்டு வடமரப்பட்டையும் திருமரம் மருதத்தோடும்
கூட்டுக்குமரி முண்டகம்காஞ்சனப்பட்டைநொச்சிவேர்
பூட்டு கதிரமும் மதுகக்காதலும் கண்டூதியாமே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
தாளிசப்பத்திரி, பனை வேர், ஆலம்பட்டை, அரசம்பட்டை, திருமரம் பட்டை, மருதம்பட்டையும், குமரி, நீர்முள்ளி, புங்கம்பட்டையும், நொச்சிவேரும், கருங்காலிக்காதல், இலுப்பைக்காதல், காஞ்சொறியுமாமே.
கண்டூதிக்கடம்பொடும் கடம்பலும் கூவிளம் திருமலரல்லியும்
பண்டுறும் உயிரதும் வாசமும் பாங்குறும் சிவனருள்வேம்பதும்
கொண்டுறும் மருந்தினியரியாறுஅமுக்கூரம் ஆனதிறிபலையும்
உண்டுறும் திறிகடுகோமம் திற்பிலி மூலமே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
கடம்பு, குமிழ், வில்லை, தாமரை அல்லியும், இராமிச்சம், சிறுநன்னாரி, சிவனார்வேம்பு, அரிசிவகை ஆறு, அமுக்கூரம், திறிபலை, திறிகடுகு, ஓமம், திற்பிலி மூலமுமாமே.
மூலமொடும் கோலம் கொம்பரக்கானதும் கூடுறும் சாதி மூன்றதும்
பாலொடும் கண்டியும் கணமுறு மீறை வலம்புரிவெண்குந்திரிக்கம்
சேலோடும் செவ்வியம் நல்கார்சீரகமும் சதக்குப்பை ஏலமுடன்
வாலொடும் மிளகும் வகையதும் சமனே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
தக்கோலம், கொம்பரக்கு, திறிஜாதி, கண்டிவெண்ணெய், மீறை, வலம்புரி, வெண்குந்திரிக்கம், செவ்வியம், கருஞ்சீரகம், சதக்குப்பை, ஏலம், வால்மிளகும் வகைக்கு சம அளவாம்.
வாங்குறும் மருந்து வகையதை யறிந்துரலதில் சதைத்துமே
தேங்குறும் மறியதின்எலும்பும் வெண்புடை ஈரிடை எடுத்து
பாங்குறப் பொதித்து பக்குவம் அறிந்து பானையில் வைத்து
தீங்கறக் காலை மாலையும் மதுவினிலுண்டிடே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
மருந்துகளை வகைக்களவாக வாங்கி உரலிலிட்டு சதைத்து, ஆட்டு முதுகெலும்பும், மருந்தின் எடைக்கு இரண்டு மடங்கு வெள்ளைபூண்டும் எடுத்து இவைகளை துணியில் கிழிகெட்டி, மற்ற மருந்துகளையும் சேர்த்து 8 முதல் 10 மடங்கு தண்ணீரில் கசாயம் வைத்து எட்டொன்றாக வற்றச்செய்து, அதில் காலை, மாலை 250மி.லி வீதம் எடுத்து சுமார் 10-20மி.லி சாராயம் சேர்த்து உண்டுவரவும்.
உண்டிட விலக்குறும் வகையதுமதுவும் மாதும்புளிபுகையும்
கண்டிடும் தாலக்கிழங்கும் தணுப்பறும் கோழியும் மாடும்
கொண்டிடில் விட்டுறும் கொடும் பிணி பலதுடன்
தண்டுறும் பிணிகளும் தடம் விட்டோடுமே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
இம்மருந்தை உண்ணும் வேளையில் மது, புணர்ச்சி, புளி, புகையிலை, பனங்கிழங்கு, கோழி, மாடு இறைச்சி போன்றவற்றை தவிர்த்திட பலவித கொடிய பிணிகளும், முதுகெலும்புநோய்களும் முழுமையாக குணமாகும் என்பதாம் என வர்ம யோகச்சூத்திரமும் குறிப்பிடுகிறது.
இவ்வர்ம பாதிப்படைந்தவர்களுக்கு, தலையில் தரிப்புண்டாகி தாங்கமுடியாத வேதனையும், களைப்பும் தோன்றும், மூலம் கடுக்கும். விருவிருத்து, வலி மிஞ்சி, முதுகெலும்பு வழி விசமேறியது போல் சென்று கண்ணடைக்கும். அபானம் விரிந்தது போல் இருக்கும். நிமிர்ந்து பதிந்து இருக்கமுடியாத அளவுக்கு வேதனை காணும். கால்களில் களைப்பு உண்டாகும். மனதில் பதட்டமும், படபடப்பும் தோன்றும். வயறு பொருமும், வாய் கசத்து புளிப்பு சுவை உண்டாகும்.
இவ்வர்மத்தை இளக்குவதற்கு உச்சியில் தட்டி, கழுத்துறை வழியே முதுகுத்தண்டை பிரித்துத் தடவி, உள்ளங்கால் வரை தடவி அனுக்கி, மார்பு வழியே பக்கதாரை தடவி, அடங்கல்களை தூண்டி, வர்மாணி அடங்கல் பத்தும் செய்து விட சுகம் உண்டாகும் என வர்ம நூல்கள் குறிப்பிடுகின்றன.
இவ்வர்மத்தில் தாக்கம் கொண்டவர்களுக்கு கண்நோய்கள், சோர்வு, தலைவலி, மயக்கம், மன அழுத்தம், ஆரோக்கியமின்மை, நிமிர்ந்து உட்கார முடியாமை போன்ற பல நோய்கள் பின்னாட்களில் ஏற்பட வாய்ப்பு உண்டு என வர்ம சுவடிகள் குறிப்பிடுகின்றன.
இவ்வர்மத்தை நடுவிரல், பெருவிரல், மூவிரல், கூட்டுவிரல் போன்றவைகளினாலான தூண்டுமுறை நுட்பங்களை பயன்படுத்தி தூண்டிவர கண்நோய்கள், சோர்வு, தலைவலி, மயக்கம், மன அழுத்தம், ஆரோக்கியமின்மை போன்ற பல நோய்கள் குணமாகும் என வர்ம வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
Leave a Reply