– இரா. அரிகரசுதன்
மக்கள் கூடும் நிகழ்வுகளான, அரசியல் பேரணிகள், விளையாட்டு மைதானங்கள், கேளிக்கை நிகழ்ச்சிகள், வழிபாட்டுத் தலங்கள் போன்ற இடங்களில் எதிர்பாராத விதமாக நெரிசல் ஏற்பட்டு, சிலர் உயிரிழக்கும் துயரச் சம்பவங்கள் நிகழும்போது நாம் மிகவும் வருந்துகிறோம். ஆனால் இப்பகுதிகளில் ஒரு தனிநபராக நம் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கின்றன அல்லது இருக்க வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு நம் மக்களிடம் இருக்கின்றதா என்பதைப் பற்றியும் நாம் யோசிக்க வேண்டும். போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளின்மை, திட்டமிடல் குறைபாடுகள் மற்றும் பொதுமக்களின் பொறுமையின்மையே இந்த விபத்துக்களுக்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. இத்தகைய கூட்ட நெரிசல் Crowd crush) விபத்துகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள தனிநபர்கள் மற்றும் அமைப்பாளர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பற்றி கூறியே ஆக வேண்டும்.
தனிநபர்களுக்கான வழிமுறைகள்
ஒரு நெரிசலான சூழலில் இருக்கும்போது நாம் அனைவரும் விழிப்புடனும், அமைதியாகவும், விரைவாகச் செயல்படத் தயாராகவும் இருக்க வேண்டும்.
1. விழிப்புடன் இருங்கள்
சுற்றுப்புறத்தை கவனியுங்கள்: நீங்கள் நிற்கும் இடத்தை, வெளியேறும் வழிகளை, நெருக்கடி ஏற்பட்டால் செல்லக்கூடிய மாற்றுப் பாதைகளைக் குறித்து எப்போதும் விழிப்புடன் இருங்கள். நெருக்கடி நிலையின் ஆரம்ப அறிகுறிகள் திடீரென மக்கள் அதிக அளவில் ஒரு திசையில் ஓடுவது, அசாதாரணமான சத்தம் அல்லது முழக்கங்கள், அல்லது கூட்டத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுவதை உணர்வது போன்ற அறிகுறிகளை கவனியுங்கள். பொதுவாக நடைபெறும் நிகழ்வின் மகிழ்ச்சியில் அல்லது நிகழ்ச்சியின் ஆர்வத்தில் இதனை மக்கள் கவனிப்பதில்லை.
அவசர வழிகளை அறியுங்கள்
நீங்கள் இருக்கும் இடத்தில் உள்ள அவசர கால வெளியேறும் வழிகளை முன்கூட்டியே கண்டறிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
2. நெருக்கடி ஏற்பட்டால் என்ன செய்வது?
அமைதியைக் கடைப்பிடிங்கள்: நெரிசல் ஏற்படும்போது, பீதி அடையாமல் இருப்பது மிக முக்கியம். உங்களால் முடிந்தவரை அமைதியாகவும், நிதானமாகவும் இருங்கள்.
கைகளை மார்பில் வையுங்கள்
கூட்ட நெரிசலில் உங்கள் கைகளை உங்கள் மார்புக்கு முன்னால் முழங்கையில் மடித்து, குத்துச்சண்டை வீரர் போலப் பிடித்துக் கொள்ளுங்கள். இது நெஞ்சின் மீது அதிக அழுத்தம் விழுவதைத் தடுத்து, மூச்சு விடத் தேவையான இடைவெளியை ஓரளவு உருவாக்கும்.
ஒதுங்கிச் செல்லுங்கள்
கூட்டத்தின் விளிம்புகள் அல்லது நிரந்தரமான தடைகள் (சுவர்கள், தூண்கள்) நோக்கிப் பக்கவாட்டாக மெதுவாக நகர்ந்து செல்லுங்கள்.
குழந்தைகளை கவனியுங்கள்
இப்படிப்பட்ட கூட்டங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லாமல் இருப்பது நல்லது. அவ்வாறு அழைத்துச் செல்கையில் அவர்களுக்கு முன்னெச்சரிக்கை குறிப்புகள் கொடுத்து அழைத்துச் செல்லுங்கள். சிறுகுழந்தைகளை கீழே விடாதீர்கள்.
விழுவதைத் தவிர்க்கவும்
ஒரு நெரிசலில் நீங்கள் கீழே விழுந்தால், எழுவது மிக மிக கடினம். கீழே விழுந்தால், காலால் மிதிபட அதிக வாய்ப்புள்ளது. அதனால், திடமான பிடியுடன் நிற்க முயற்சி செய்யுங்கள்.
3. மற்றவர்களுக்கு உதவுங்கள்
குழந்தைகள் மற்றும் முதியோரை பாதுகாக்க உங்களுடன் குழந்தைகள், முதியவர்கள் அல்லது மாற்றுத்திறனாளிகள் இருந்தால், அவர்களை உங்கள் அருகில் இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.
மனிதாபிமானம்
யாராவது கீழே விழுந்தால், முடியுமானால் அவர்களை எழுப்ப உதவுங்கள். ஆனால், உங்கள் உயிரைப் பற்றியும் கவனத்தில் கொள்ளுங்கள்.
பதட்டமும் மூச்சுவிடுதலும்
கூட்டம் அதிகரிக்கையில் நம்மைச்சுற்றி ஆக்சிஜன் அளவு குறைவாகும் எனவே மூச்சு விடுவது சிரமமாக மாறலாம். இதனால் பதட்டம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அவ்வாறான சமயங்களின் வான்நோக்கி முகத்தை நிமிர்த்தி மூச்சுவிட முயிற்சி செய்யலாம்.
அமைப்பாளர்கள் கவனிக்க வேண்டியவை
கூட்ட நெரிசல் விபத்துக்களைத் தடுப்பதில் மிக முக்கியப் பங்கு நிகழ்வுகளை நடத்தும் அமைப்பாளர்களைச் சாரும். அந்த அக்கறையோடுதான் நிகழ்ச்சிகளையே திட்டமிட வேண்டும்.
1. சரியான திட்டமிடல் மற்றும் கட்டுப்பாடு
நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் மொத்த கொள்ளளவை முறையாக மதிப்பிட்டு, அதற்கேற்பவே மக்களை அனுமதிக்க வேண்டும். அதிகப்படியான கூட்டத்தைத் தவிர்ப்பதற்கான திட்டங்களை முதலிலேயே தயார் செய்திருக்க வேண்டு¢ம்.
வெளியேறும் வழிகள்
போதுமான எண்ணிக்கையிலான வெளியேறும் வழிகள் அமைக்கப்பட்டு, அவை எப்போதும் தடை இல்லாமல் இருக்குமாறு உறுதி செய்ய வேண்டும்.
கூட்டத்தைப் பிரித்தல் (Segmentation)
பெரிய கூட்டங்களைச் சிறிய பிரிவுகளாகப் பிரித்து நிர்வகிக்க, தடுப்புகள் (Barricades) மற்றும் தனிப்பாதைகளைப் பயன்படுத்த வேண்டும். இது மொத்த கூட்டமும் ஒரே நேரத்தில் ஒரு இடத்திற்குச் செல்வதைத் தடுக்கும்.
2. தகவல் தொடர்பு மற்றும் அவசர கால ஏற்பாடுகள்
அவசர காலத் திட்டம்:
எதிர்பாராத நெரிசல் அல்லது விபத்து ஏற்பட்டால், எப்படி மக்களை வெளியேற்றுவது, காயமடைந்தவர்களுக்கு எப்படி உதவுவது என்பதற்கான தெளிவான அவசர காலத் திட்டம் (Emergency plan) இருக்க வேண்டும்.
பணியாளர்கள் / தன்னார்வலர்கள்
நிகழ்ச்சி¢க்கான தன்னார்வலர்ளோ அல்லது பணியாளர்களோ போதுமான அளவு இருத்தல் மிகவும் அவசியம். இவர்களும் முறைப்படியான பாதுகாப்பு நடைமுறைகள் பற்றிய அடிப்படைகள் தெரிந்தவர்களாக இருத்தல் நலம்.
சுகாதார வசதிகள்
போதுமான அளவில் முதலுதவி குழுக்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
அறிவிப்புகள்
கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் முக்கிய அறிவிப்புகளை (வெளியேறும் வழி, அமைதியாக இருக்குமாறு) ஒலிபெருக்கிகள் மூலம் அவ்வப்போது தெளிவான குரலில் அறிவிக்க வேண்டும். இந்த அறிவிப்பாளர் ஒரு அவசரகாலம் ஏற்படும்போது அதிவிரைவாக இயங்கும் வல்லமையும் ஓர் இராணுவத் தளபதியைப்போல மிகவும் கட்டுப்பாடுகளுடன் கூடிய நம்பிக்கைத் தரும் கட்டளைகளை இடும் திறன் கொண்டவராகவும் இருத்தல் நல்லது.
3. பாதுகாப்புப் படையினரின் பங்களிப்பு
பயிற்சி பெற்ற பணியாளர்கள்: நெரிசலைக் கையாளும் நுட்பங்கள், முதலுதவி மற்றும் மக்களை வழிநடத்துவதில் பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் மற்றும் காவலர்களைப் போதுமான எண்ணிக்கையில் பணியமர்த்த வேண்டும்.
நுழைவு/வெளியேற்றம் மேலாண்மை
மக்கள் உள்ளே வருவது, வெளியேறுவது ஆகியவற்றைக் கட்டுப்படுத்த முறையான சோதனைச் சாவடிகள் (Check points) மற்றும் வரிசை மேலாண்மை (Queue management) நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். கூட்ட நெரிசல் என்பது இயற்கைப் பேரிடர் அல்ல; அது மனிதத் தவறுகளால் ஏற்படுவது. போதுமான விழிப்புணர்வு, பொறுப்புணர்வுடன் கூடிய திட்டமிடல் மற்றும் தனிமனித ஒழுக்கம் ஆகியவை இருந்தால், இத்தகைய துயரச் சம்பவங்களைத் தவிர்க்க முடியும். பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் அனைவரும் இத்தகு விழிப்புணர்வு கொண்டவர்களாக இருக்க வேண்டும். அதற்கு, பேரிடர் கல்வி பள்ளிகளிலிருந்தே கட்டாயப் பாடமாக இருத்தல் அவசியம் என்பதை உணர முடிகிறது. அரசும் ஆன்றோர் பெருமக்களும் ஆவன செய்ய வேண்டும் என புதியதென்றல் அக்கறையோடு கேட்டுக்கொள்கிறது.
Leave a Reply