சன்னலோர பயணமும்! வேடிக்கை மனிதரும்

சன்னலோர பயணமும்! வேடிக்கை மனிதரும்

  • By Magazine
  • |

கா. திலிபன், தமிழாசிரியர்

சன்னலோரப் பயணத்தில் வேலைத் தேடி வேடிக்கைப் பார்த்து வந்த நேரம் அது. கூட்ட நெரிசலில் பயணிகள் இருக்கைக்குப் போட்டிப் போட்டுக் கொண்டு இருந்தனர்.

கையில் சில்லரைப்பையுடன் நடத்துனரின் தோற்றம் சற்று வேடிக்கையாகவே இருந்தது. வயிறுபெருத்தும், கொஞ்சம் பார்ப்பதற்கு பயங்கரமாகவே இருந்தார்.

உள்ளே வா!   உள்ளே வா!  படியில் நிக்காத!   டிக்கெட் !   டிக்கெட்,  என அந்த பெருத்த உடலுடன் எப்படித்தான், அந்த கூட்ட நெரிசலில் அங்கும் இங்கும் செல்கிறாரோ!  பேருந்தில் சிலர் மேற்கம்பியைப் பற்றிக் கொண்டு வெளியில் வேடிக்கைப் பார்க்க, சன்னோலோர இருக்கைக்கு ஆசைப்படுவதைப் போன்று தெரிந்தது.

வெளியில் வேடிக்கைப் பார்க்க ஆசைப்படுபவன் சன்னலோர இருக்கையை விரும்புகிறான், சன்னலோர இருக்கையைப் பெற்ற நான் பேருந்தின் உள்ளேயே வேடிக்கைப் பார்த்தேன்.

இவற்றிலிருந்து ஒன்றை மட்டும் நினைவில் கொண்டேன். விருப்பம் நிறைவேறியப் பின் எண்ணம் மனமாறுகிறது.

பேருந்தில் இருக்கையில் அமர்ந்துக் கொண்டு சிலர் மகிழ்ச்சியுடன் உரையாடிக் கொண்டும், சிலர் கூட்ட நெரிசலில் கோபம், எதிர்ப்புடனும், அதில் ஒரு இளைஞன் ஒரு பெரியவரைக் கண்டு ஐயா, இங்க வந்து உக்காருங்க! என்றான். அடேயப்பா! நல்லகுணம் அந்த இளைஞனுக்கு என்று நினைத்து முடிப்பதற்குள் சித்தி எங்க சித்தப்பா? என்றான்.  உறவினர் என்றதால் தான் அமரச் செய்தான் போல.

“ஒரு முழுகதை புத்தகத்தை வாசித்து முடிக்கும் அனுபவத்தை, ஒரு சன்னலோரப் பயணம் கற்றுக் கொடுத்துவிடும்”. எத்தனை எத்தனை வேறுபட்ட மனிதர்கள் நாம். சரி ஒரு வழியாக நான் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது. என்னுடைய இருக்கைக்கும் என்னை இறங்கவிடாமல் போட்டிப் போட்டுக் கொண்டனர். அண்ணே!  இறங்க விடுங்க என்று சொல்லி வெளியே இறங்கினேன்.

மழைப்பெய்து ஓய்ந்த காலைப் பொழுது , வாகனப் புகையை விளக்கி சென்றது சில்லென்ற காற்று. அருகில் இருந்த ஆவின்கடையில் ஆவி பறக்க சூடான சமோசா!  

சிலர் அருகாமையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர். நானும் ஓர் தேநீர் விரும்பி. தேநீர் குடித்துக் கொண்டிருக்கும் பொழுது, வேடிக்கையான மனிதர் ஆவின்கடையில் ஏதோ ஓர் அறிமுகம் என்னை கண்டு சிரித்தார். அண்ணோ, குமிட்டிப்பதிக்கு எப்படி போனும்?

அவர் கூறியவழி அமைப்பு கூகுள்மேப் கூட தோத்துப் போய்விடும்.  ஏனோ வழியறிந்த என்னாலும் அவ்விடத்தை விட்டு நகர முடியவில்லை. சிறிது நேரத்தில் கையில் ஒரு தடியுடன் அவர் நடக்க ஆரம்பித்தார்.

நானும் மெதுவாக அவரைப் பின் தொடர்ந்தேன்.    மங்கிய தெருவிளக்கின் ஒளியில் திடிரென்று கீழே குனிந்து கீழே கிடந்த இரண்டு குப்பிகளை எடுத்தார்.       என்ன ஓர் நல்லமனிதர்! அவர் ஓர் சமூகஆர்வலர் போல தெரிகிறதே!  என்று என் மனதில் அவருக்கென்ற ஓர் உயர்ந்த எண்ணம் எனக்குள்ளே ஓடிக் கொண்டிருந்தது. தோற்றத்தில் எளிமையாக இருந்தாலும், இவ்வயதில் கூட நடைப்பயிற்சி செய்து கொண்டே சமூகசேவை செய்யும் அவர் என்வாழ்வில் உயர்ந்த இடத்தைப் பெற்று விட்டார் அதிர்ஷ்டசாலி போலஅவர்.

குப்பைத் தொட்டியின் அருகாமையில் தெருநாய்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தது.  அவர் கையில் இருந்த பிஸ்கட்டை ஒவ்வொன்றாக தூக்கிப் போட்டார்.   உணவுக் கிடைத்தால் தெருநாய்களும் சமாதானம் அடைந்து விடும் போல பிரிந்து ஓடியது. ச்சே….  என்ன மனிதர் அவர் காலையிலையே நாய்களுக்குக் கூட உணவளிக்கிறாரே!

ஆனால் ஓர் வியப்பு எடுக்கப்பட்ட குப்பிகளை அவர் குப்பைத் தொட்டியில் போடவில்லை. ஆனால், மாறாக குப்பைத் தொட்டியில் இருந்து மேலும் சில குப்பிகளை எடுத்தார். என்னவாக இருக்கும் என சற்று சிந்தித்துப் பார்த்தேன்! ஓ…. தெருநாய்கள் உணவிற்காக குப்பைகளை கிளறும் போது காயம் ஏற்பட்டு விடும் என்ற நல்ல எண்ணம் காரணமாகத்தானோ அவற்றை எடுத்தாரோ! சேகரிக்கப்பட்ட குப்பிகளை எங்கேயும் வீசாமல் ஒரு பையிற்குள் போட்டு நடக்க ஆரம்பித்தார்.

நானும் அவரையே பின் தொடர்ந்துச் சென்றேன்.  செல்லும் வழியில் ஒருகோவில் இருந்தது விரைவாக உள்ளே சென்றார்.   அடடே!  என்ன ஒரு இறைபக்தி ! நான் அவர் வரும் வரை அங்கேயே நின்று கொண்டிருந்தேன். நேரமும்கடந்தது. காலையில் ஒன்பதுமணி இருக்கும். அமைதியாய் அவரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கையில்,  மக்கள் நடமாட்டம் சிறிது சிறிதாக அதிகரித்தது.   அங்கேகையில் அலுவலகப் பையுடன் சிலர், பள்ளி புத்தகபையுடன் சில மாணவர்கள், என மக்கள் நடமாட்டம் எங்கும் நிரம்பியது. பேருந்துகள் வர! வர! அடித்துப் பிடித்து உள்ளே நுழையும் பொதுமக்கள்! வெளியே வர முயற்சி செய்யும் சிலர்.

நெருக்கடியில், ஆத்திரத்தில் கத்தும் பெரியவர்கள்,     பேருந்தை பிடிக்க ஓடோடி வரும் பெண்கள். என்ன ஒரு அற்புதமான உலகம்!    ஒரே நேரத்தில் ஏகப்பட்ட நிகழ்வுகள். பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கும்,  அலுவலகம் செல்லும் பெரியவர்களுக்கும் சிறிய வேறுபாடுதான், மகிழ்வுடன் மாணவர்கள்  ஆத்திர அவசரத்துடன் பெரியவர்கள். இருவரின் கையிலும் ஒரு பை தான்.

இவற்றுக்கு இடையில் அந்த நல்ல மனிதரை நாம் மறந்து விடக்கூடாது. ஒரு வழியாக மகான் வெளியில் வந்தார்.  என் கண்களில் வள்ளலார் கூறிய ஒளி தெரிவதைப் போன்று பிரகாசித்தது அவரைக் கண்டவுடன், மீண்டும் நடக்க ஆரம்பித்தார்.  மீண்டும்  பின் தொடர்ந்தேன்.  

வருகின்ற போகின்ற அனைவரையும் கைக்கூப்பி வணக்கம் செலுத்தினார். யார் சாமி இவர்  என மனதில் நினைத்துக் கொண்டு,  எவ்வளவு உயர்ந்த எண்ணம் அவருக்கு,   இப்படி உறவினர்களை கண்டால் கூட கண்டும் காணாமல் போகும் மக்களின் மத்தியில், அனைவருக்கும் வணக்கம் செலுத்தி செல்கிறாரே!    அதில் ஒரு ஆச்சரியமும் இருந்தது.  சிலர் அவருக்கு கை குலுக்கியும் சென்றனர். ஒருவன் தன் வாழ்க்கையை வாழ வேண்டுமென்றால் அவரைப் போலத் தான் வாழ வேண்டும்.

என்னாலையே என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எப்படியாவது அவரை நெருங்கி அவரிடம் சில  அறிவுரைகளாவது கேட்டுக் கொள்ள வேண்டுமென்று வேகமாக நடந்துச் செல்ல ஆரம்பித்தேன். சட்டென்று அருகில் உள்ள பழைய இரும்புக்கடைக்குள் நுழைந்தார்.   நான் அங்கு நடக்கும் நிகழ்வுகளை கவனித்துக் கொண்டிருந்தேன். ஆம் அவர் ஒரு யாசகர். குணத்தை மட்டும் கவனித்த நான்,   அவரின் உடையை கவனிக்க மறந்துவிட்டேன்.

காலையில் தெருநாய்களை விரட்டியதன் காரணம்,  அவர் எடுக்கும் குப்பிகளுக்கு இடையூறாக இருந்ததனால். கோவிலுக்கு சென்று திரும்பியது உணவிற்கும் யாசகத்திற்கும் தான். தெருவில் அனைவரையும் கும்பிட்டதும் யாசகமே!

எல்லாம் நாம் காணும் கண்ணோட்டத்திலேயே அமைந்து விடுகிறது பலரின் வாழ்க்கை. குப்பிகளை பொறுக்கியது  பசி! இறைவழிபாட்டுக்கு கோவிலினுள் நுழைந்ததும், பசி என்ற இறைக்காகத்தான் அனைவரையும் வணங்கியது  அவர் பசியின் அடையாளம். எதுஎப்படியோ, சுதந்திரமாக சுற்றித் திரிந்தது அந்த பட்டாம்பூச்சி.            அப்பா வறியவர்க்கு உதவ வேண்டுமென்றால் யாரோ ஒருவர் எனக்கு தான் உதவிருக்கவேண்டும். யாரோ ஒருவரின் உதவியை நான் எதிர்பார்த்திருந்தால் என் தந்தை பட்ட கஷ்டம் பயனற்று போய்யிருக்கும். என் பொன்மயமான பாதங்களுக்குள் மறைந்து கிடக்கின்றது. என் தந்தையின் கரடுமுரடான கூற்பாதங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *