– ஓஷோ
நானூறு வருடங்களுக்கு முன்னால் ஒரு துறவி இந்தியாவிலிருந்து சீனா போனார். சீனாவின் மன்னர் அவரை பார்க்க வந்துவிட்டு சொன்னார். என்னுடைய நான் என்பதை நிரப்ப நான் எல்லா வழிகளிலும் முயன்று விட்டேன். பூமியில் கண்ணுக்குத் தெரிந்த வரையிலும், பூமியைக் கைபற்றி விட்டேன். என்னுடைய ராஜ்ஜியம் தொலைதூர எல்லைகளுக்கெல்லாம் விரிந்திருக்கிறது. ஆனால் எனக்கும் நிறைவில்லை. என்னுடைய தன்னகந்தையும் நிறைவு பெறவில்லை. எனக்கு வயதாகத் துவங்கிய போது என் தன்னகந்தை நிறைவு பெறவில்லையே என்கிற பயம் வந்துவிட்டது. சில சாமியார்கள், பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டேன். அவர்கள் எல்லாவற்றையும் துறக்கச் செய்கிறார்கள். அதனால் நான் எல்லாவற்றையும் துறக்க முயன்றேன். ஆனால் என் தன்னகந்தை அப்படியே இருக்கிறது. இப்போது நான் நம்பிக்கையற்று போய்விட்டேன். நான் என்ன செய்ய வேண்டும்? யாரோ நீங்கள் இங்கே வருகிறீர்கள் நான் உங்களிடம் போய் பேச வேண்டுமென்றார்கள்.
அந்தத் துறவி சொன்னார், இப்போது திரும்பிச் செல்லுங்கள். காலையில் நான்கு மணிக்கு வாருங்கள். நாளைக்கு நீங்கள் இருப்பீர்கள் அல்லது உங்கள் தன்னகந்தை இருக்கும். நான் இதில் ஏதாவது ஒன்றை முடித்து விடுகிறேன்.
அந்தத் துறவி சொன்னது முற்றிலும் வினோதமாக இருந்தது. ஆனால் இந்தத் துறவிகளே வினோதமான மனிதர்கள், மன்னர் அதற்கு பணிய வேண்டுமென்று நினைத்தார். அவர் சொன்னார் சரி நான் நான்கு மணிக்கு வருகிறேன். என்னுடைய தன்னகந்தையை முழுவதுமாக அழித்து விடுவீர்கள் என்று உத்திரவாதம் கொடுக்க முடியுமா?
அந்தத் துறவி சொன்னார். நிச்சயமாக ஆனால் வரும் போது உங்கள் தன்னகந்தையை கொண்டு வர மறந்து விடாதீர்கள். அதை வீட்டில் வைத்து வந்தால் பிறகு எப்படி தான் எதை அழிப்பது?
இந்த மனிதர் நிச்சயம் பைத்தியம் தான் என்று மன்னர் நினைத்தார். யாராவது தன்னகந்தையை வீட்டில் வைத்து வர முடியுமா? அது ஒருவரின் இருத்தலில் ஈர்க்கப்பட்டிருக்கிறது. அதை விட்டு வர வழி இருக்கிறதா? அப்படியானால் மன்னர் அதை எப்போதே செய்திருப்பாரே. அவர் எல்லா வழிகளிலும் முயன்று விட்டார். அவரால் அதைக் கீழே போடமுடியவில்லை. இந்த முட்டாள் அதை வீட்டில் வைத்து விட்டு வராதே என்கிறார்.
அவர் நான்கு மணிக்கு வந்தார். அது கரிய இரவு அந்தத் துறவி கையில் ஒரு மரகட்டையோடு இருந்தார். இந்த மனிதர் பைத்தியமாக இருக்க வேண்டும் என்று மன்னர் பயந்தார். இந்தக் கரிய இரவில், தனிமையாக மலையில் அவர் கையில் கட்டையுடன் இருக்கிறார். அவர் என்ன செய்ய நினைக்கிறார், அவருடைய நோக்கமென்ன?
துறவி கேட்டார், உன் தன்னகந்தையைக் கொண்டு வந்திருக்கிறீர்களா?
மன்னர் சொன்னார் நீங்கள் வினோதமான விஷயத்தைச் சொல்கிறீர்கள். தன்னகந்தை எனக்குள்ளேயே அமர்ந்திருக்கிறது. அதை நான் எப்படி விட்டுவிட்டு வர முடியும்?
துறவி சொன்னார், அப்படியானால் சரி ஆனால் நீங்கள் எப்போதாவது அதை உள்ளுக்குள் தேடியிருக்கிறீர்களா? அல்லது உங்களுக்குள் அமர்ந்திருக்கும் அந்த தன்னகந்தையை தேடாமலேயே சொல்கிறீர்களா? பரவாயில்லை. நீங்கள் கொண்டு வரவாது செய்திருக்கிறீர்களோ? நீங்கள் உங்கள் கண்களை மூடிஅமருங்கள். உள்ளுக்குள் அது எங்கே இருக்கிறது என்று தேடுங்கள். நான் இங்கே இந்த உருட்டைக் கட்டையோடு அமர்ந்திருப்பேன். நீங்கள் அதைக் கண்டுபிடித்தவுடன் எனக்கு சொல்லுங்கள்.
மன்னர் தன் கண்களை மூடினார். அது கரிய இரவு மலையில் மரணமௌனம். அந்த கிறுக்குத் துறவி அவர் எதிரே கட்டையோடு அமர்ந்திருந்தார். மன்னர் தன் மனதில் மூலை முடுக்குகளிலெல்லாம் தேடத் துவங்கினார். அவர் உள்ளே பார்த்தார். இந்த ‘நான்’ எங்கே இருக்கிறது என்று தேடினார். சில நேரம் கழித்து, துறவி அவரை உலுக்கினார். நீங்கள் தூங்கிப் போய்விட்டீர்களா என்ன? நீங்கள் தேடுகிறீர்கள் என்று நம்புகிறேன்.
மன்னர் சொன்னார் ‘உங்கள் கையில் இருக்கும்’ தடியின் மீதுள்ள பயத்தால் நிச்சயமாக நான் தூங்க முடியாது. நான் தேடுகிறேன் நான் எல்லா இடங்களிலும் பார்க்கிறேன் ஆனால் அதை எங்கும் பார்க்க முடியவில்லை என்பது உண்மையிலேயே வியப்பாக இருக்கிறது.
துறவி சொன்னார், மறுபடியும் தேடி பாருங்கள். அது ஏதாவது ஒரு மூலையில் ஒளிந்திருக்கலாம்.
மன்னர் மறுபடியும் கண்களை மூடி தேடினார். அவர் வந்தடைந்த போது அவர் பதட்டத்தோடும், மன அழுத்தத்தோடும் இருந்தார். ஆனால் காலை சூரியன் உதிக்க தயாரான போது, அவர் இன்னும் கண்களை மூடியபடியே இருந்தார். அவர் முகத்தில் இருந்த பதட்டம் காணாமல் போயிருந்தது. அவர் ஏதோ ஒரு மௌன சிலையாகிப் போனதை போல, ஏதோ அவர் ஒரு மௌன ஏரியானதைப் போல, அவருக்குள் ஏதோ ஒன்று காணாமல் போனதைப் போல எல்லாமே அவரது முகத்தில் எதிரொலித்தது.
துறவி கேட்டார், நண்பரே, அதைக் கண்டுபிடித்து விட்டீர்களா?
மன்னர் சிரிக்கத் தொடங்கினார். அவர் அந்தத் துறவியின் கால்களைத் தொட்டு விட்டு சொன்னார், நான் போகிறேன். என்னால் அதை காண முடியவில்லை. அது இல்லவே இல்லை என்பதை நான் உணர்ந்து கொண்டேன். அது இருந்தது நேற்று வரை. காரணம் நான் அதை எனக்குள் தேடவில்லை. ஆனால் நான் தேட முயன்ற போது, அது அங்கே இல்லை.
தன்னகந்தை என்பது இருட்டைப் போல நீங்கள் அதை ஒரு எரியும் விளக்கைக் கொண்டு தேடினால், நீங்கள் அதை எங்கேயும் காண முடியாது. நமக்குள் விழிப்புணர்வு என்கிற விளக்கை ஏற்றாத வரையில் அது அங்கே இருக்கும். நமக்கு விழிப்பு வந்த நாளில், நமக்குள் தேட முயலுகிற போது, அந்த நாளில் அதைப் பார்க்க முடியாது.
Leave a Reply