சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்

  • By Magazine
  • |

வழக்கறிஞர் பி. விஜயகுமார்

திறமையான சி.பி.

ஹிமாச்சல் பிரதேசம் சிம்லா ஊரில் 2017-ம் ஆண்டு நடந்த சம்பவம் இது. 8 வயது பள்ளி பெண் குழந்தை மக்காச்சோளத் தோட்டத்து வழியாக நடந்து சென்று கொண்டிருந்த போது அவளைப் பின் தொடர்ந்த காமுகன் ஒருவன் அவள் கழுத்தை டவ்வல் கொண்டு இறுக்கி மயக்கமுறச் செய்து அவளை சீரளித்து கொன்று சென்று விட்டான்.

மறுநாள் ஹிமாச்சல் முழுக்க இந்த செய்தி தீயாய் பரவியது. டி.ஜி.பி தலைமையிலேயே விசாரணை முடுக்கி விடப்பட்டது. யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஊர் கூட்டம் நடத்தி ஆயிரக்கணக்கான பொதுமக்களை ஒரு இடத்தில் வரவழைத்து துப்புக்கான ஆதாரம் தேடப்பட்டது. பிரயோஜனம் இல்லை. போலீசாருக்கு அதிக நெருக்கடி ஏற்பட்டது.

இறுதியில் போலீசார் ஆறுபேரை விசாரணைக்கு கொண்டு சென்று அடித்துத் துவைத்தனர். இந்த ஆறு பேர்களும் உயரமானவர்கள், கறுப்பானவர்கள், கூலித் தொழிலாளிகள், அழகில்லாத பசங்க. அழகான நல்ல நிறமுடைய பணக்கார பசங்களை சந்தேக வழக்கில் போலீசார் பிடித்துச் செல்லமாட்டார்கள். இப்படியொரு மனநிலை போலீசாருக்கு எப்போதும் உண்டு.

இந்த ஆறுபேரில் போலீசாரின் அடிதாங்காமல் ஒருவர் இறந்து விட்டார். பிறகு பொதுமக்கள் மத்தியில் இது ஒரு பெரிய விஷயமாகி விட்டது. கற்பழிப்பு வழக்கு சின்னதாகி விட்டது.

பிறகு மாநில போலீசார் சரியில்லை என்று கூறி வழக்கு சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டது. சி.பி.ஐ வழக்கின் விசாரணையை வேறு கோணத்தில் தொடங்கினார்கள். வழக்கில் கைதான ஆறுபேர்களும் (இறந்த நபருடன் சேர்த்து) அவர்களுக்குரிய Y-STR DNA சோதனை நடத்தப்பட்டது. (Y- Chromosome short tandem repeat D.N.A analysis). அதாவது இறந்த பெண்ணின் பாதிக்கப்பட்ட உடல் பாகத்திலிருந்து தடயங்களை சேகரித்து அதனுள் காணப்படும். Y-Chromosome எந்த ஆணுடையது என்பதை கண்டுபிடிப்பது தான் Y-STR- DNA பரிசோதனை ஆகும்.

மேற்படி பரிசோதனை அந்த ஆறு நபர்களின் Y-Chromosome – உடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது. ஆனால் ஒருவரின் குரோமோசோம் கூட அந்த பெண்ணின் தடயங்களுடன் ஒத்துப் போகவில்லை. இப்போது இந்த அப்பாவிகள் ஐந்து பேரும் சி.பி.ஐ விசாரணையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். பாவம் ஒரு மனுசர் போலீஸ் அடியில் இறந்தே போய்விட்டார். பாருங்கள் பொய் வழக்குகளில் ஒன்றும் தெரியாத அப்பாவிகள் எவ்வாறு கஷ்டப்படுகிறார்கள் என்று!

பிறகு கையை பிசைந்து கொண்டு ஒன்றும் புரியாத சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணையை வேறு கோணத்தில் முடுக்கி விட்டனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் பலரிடமும் இந்த டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்பட்டது. ஒரே ஒருவர் மட்டும் சந்தேகத்தில் பிடிபட்டார். அவருக்கு டி.என்.ஏ சோதனை நடத்தியதில் இருபத்தைந்து சதம் மட்டுமே உறுதியானது. அதனால் அவரையும் விசாரணையிலிருந்து விடுவித்து விட்டனர்.

இருப்பினும் சி.பி.ஐ தமது விசாரணையிலிருந்து பின் வாங்கவில்லை. அந்தப்பகுதியில் வீடு வீடாய் சென்று துப்பு துலக்க ஆரம்பித்தனர். இந்த சம்பவத்துக்குப் பிறகு எவராவது இவ்வூரிலிருந்து வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்துள்ளார்களா என கேட்டறிந்தனர். சிலர் இங்கு ஒரு மரம் வெட்டுபவர் உண்டு. அவர் மீது சில களவு வழக்குகளும் உண்டு. அவர் இந்த சம்பவத்துக்குப் பிறகு இரண்டு மாதமாக இவ்வூரில் இல்லை என்று கூறினர். இப்போது தான் சி.பி.ஐ-க்கு தெம்பு வந்தது. அவனைத் தட்டித் தூக்கினர். அவனிடம் நடந்த  டி.என்.ஏ பரிசோதனையில் அவன் தான் அந்தச் சிறு பிள்ளையை பாலியல் செய்து கொன்றவன் எனத் தெரிய வந்தது. அவனுக்கு சி.பி.ஐ போராடி தூக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்தது. இது சி.பி.ஐ-யின் திறமையான செயல்.

தற்போது 2023-ல் கொண்டு வந்த புது பாரத நாகரிக குடிமக்கள் பாதுகாப்புச்சட்டம் பிரிவு 176(3)-ல் சில வழக்குகளில் டி.என்.ஏ பரிசோதனை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஏழு வருடங்களுக்கு மேலான எந்த தண்டனை பெறும் வழக்காக இருந்தாலும் தடய அறிவியல் அறிக்கை (Furensic report) கட்டாயம் என வரையறுக்கப்பட்டுள்ளது. டி.என்.ஏ பரிசோதனையும் தடய அறிவியல் அறிக்கையில் அடங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *