முதல் இந்தியத்தளபதி கரியப்பா

முதல் இந்தியத்தளபதி கரியப்பா

  • By Magazine
  • |

பழனி அரங்கசாமி

இந்தியாவின் மக்கட்தொகை 140 கோடி. முப்பதுக்கு மேற்பட்ட மாநிலங்கள் மேற்கு எல்லையில் பாகிஸ்தானும், வடகிழக்கில் சீனாவும் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நமது நிலையான எதிரிகள். வட மேற்கில் ஆப்கன் நாடும், நேர் வடக்கில் நேபாளமும், கிழக்கில் பங்களதேசமும் நம்ப முடியாத நடுநிலை நாடுகள். இந்தச் சூழ்நிலையில் இந்தியாவின் பாதுகாப்பினை ஏற்றுக் கொண்டுள்ள தானைத்தலைவரே நம் நாட்டின் இராணுவத் தளபதி. இமயமுதல் குமரி வரை பரந்துபட்ட இந்தியப் பெருநிலத்தை 13 லட்சம் போர் வீரர்களோடு கட்டிக் காத்து வருகின்ற பெரும் பொறுப்பு இவருடையது.

விடுதலை பெற்ற இந்தியாவின் முப்பதாவது தளபதியாக இப்போது இருப்பவர் உபேந்திர துவிவேதி. முதல் தளபதியாக இருந்தவர் ஜெனரல் கரியப்பா. இந்திய ராணுவத்தில் பன்னெடுங்காலம் இந்தியர்கள் வெறும் சிப்பாய்களாக மட்டுமே பணிபுரிந்து வந்தனர். ஒரு கட்டத்தில் ஆங்கில அரசு இந்தியர்களுக்கும் இராணுவப் பயிற்சி கொடுத்து அதிகாரிகளாகச் சிலரை அமர்த்தலாம் என்னும் திட்டத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்தியது. சென்னையில் மாநிலக்கல்லூரியில் மாணவராக இருந்த கரியப்பா அந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி ராணுவத்தில் சேர்ந்தார். வெள்ளையர்களே அதிகாரிகளாக இருந்த சூழ்நிலையில் இந்திய அதிகாரிகளுக்கு அவர்கள் மதிப்புக் கொடுப்பதில்லை. பதவி உயர்விலும் பாகுபாடு காட்டினர். இருப்பினும் தனது உழைப்பாலும், திறமையாலும் கரியப்பா படிப்படியாக பதவி உயர்வு பெற்றார். கர்நாடக மாநிலம் மடிகேரியில் பிறந்த வளர்ந்த இளைஞன் கரியப்பா இருபது வயதில் பட்டாளத்தில் சேர்ந்து பணிபுரிந்து ஒரு இணையற்ற  மாமனிதன் என்ற பெருமை பெற்றார்.

விடுதலைக்குப் பின்னர் நமது பட்டாளத்தின் முதல் இந்தியத் தளபதியாக கரியப்பா பதவியேற்ற பின், அன்றைய அரசியல்வாதிகள் ராணுவத்திலும் சாதிவாரியான இட ஒதுக்கீடு வேண்டும் என்று கூறினர். நாட்டுப்பற்று, உழைப்பு, உடல்தகுதி கொண்ட எந்த இந்தியனுக்கும் பட்டாளத்தில் இடம் உண்டு. சாதியும், மதமும், கோவிலும், குளமும் இராணுவத்திற்கு அப்பாற்பட்டவை என்று மறுமொழி கூறிவிட்டார். ராணுவ அதிகாரிகள் தங்கும் விடுதிகளில் பார்ப்பனரே சமையல்காரராக இருந்தனர். அதனை மாற்றி சமையல் கலையில் திறம்வாய்ந்த  இந்தியனை அந்தப் பதவியில் அமர்த்தினார்.

இந்திய ஆட்சிப் பணியின் முதுநிலை அதிகாரி (மி.சி.ஷி) ஒருவர் வான்படை, கப்பற்படை, தரைப்படை கமாண்டர்களுக்கு அதிகார தோரணையில் அழைத்து உத்தரவு கொடுக்கத் துவங்கினார். கரியப்பா மட்டும் நேரில் போகாமல், அடுத்தநிலை அதிகாரியை அனுப்பி வந்தார். இது ஒரு பிரச்சனையாகி பிரதமர் நேரு வரை சென்றது. ராணுவம் நாட்டின் பாதுகாப்பினை முதல் பணியாகக் கொண்டது. எல்லைப்பிரச்சனை, உள்நாட்டு குழப்பம், அயல்நாடுகளின் ஊடுருவல், போர் ஆகிய இவற்றைக் களத்தில் நின்று தீர்வு காணுவது இராணுவத்தின் பொறுப்பு. குளிர்பதன அறையில் இருக்கும் ஒரு நிர்வாக அதிகாரி இவற்றைக் கண்காணிக்க இயலாது. அத்தோடு மக்களால் தேர்ந்தெடுக்க பெற்ற பாதுகாப்பு அமைச்சர், பிரதமர், குடியரசுத்தலைவர் ஆகியோருக்கு ராணுவம் கட்டுப்பட்டதே ஒழிய கோப்புகளைப் பார்த்து முடிவு செய்யும் அதிகாரிக்கு ஏற்புடையது அல்ல என்று கூறி இந்திய ராணுவத்தின் தனித்தன்மையை நிலைநாட்டினார். காக்கி உடை அணிந்த இந்த இராணுவ அதிகாரி கட்டுப்பாடும், கடமை உணர்வும், மனித நேயமும், இளகிய உள்ளமும், இரக்கமும், அன்பும் கொண்டவராக இருந்தார்.

மேஜராகப் பதவி உயர்வு பெற்று பிரிட்டிஷ் ராணுவத்தின் சார்பில் சிரியா நாட்டின் தேரஸ் நகரைப் பிரெஞ்சு படையினரிடமிருந்து மீட்க வேண்டியிருந்தது. இந்திய படைகளால் எமது பெண்டிருக்கு எந்த தீங்கும் வரக் கூடாதென்று அந்நகரின் மேயர் கரியப்பாவை கேட்டுக் கொண்டார். பெண்டிரின் பாதுகாப்புக்குத் தானே பொறுப்பு என்று கூறி அவர்களுக்கு எந்தத் தொல்லையும் நேராதவாறு பார்த்துக் கொண்டார்.

பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான வாசிரிஸ்தான் கரடும், முரடும், காடும் மேடும் நிறைந்த பகுதி. அங்குள்ள மலைவாழ் முகதியரும் அப்படியே கொலை, கொள்ளைக்கு அஞ்சாதவர்கள். இப்போதும் கூட பாகிஸ்தானிய அரசு அந்தப் பகுதிக்குள் சுற்றுலா பயணிகளை அனுமதிப்பதில்லை. கரியப்பா பிரியேடியராகப் பதவியேற்று அங்கு பணிபுரியும் போது அங்குள்ள மதத்தலைவர்களை அழைத்து விரோத உணர்வின்றி இணக்கமாகப் பழகினார். பகை உணர்ச்சி இன்றி சகோதரனாக ஒரு இந்தியனாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார். நீர் இல்லாத ஓரிரு இடங்களில் பெண்டிர் மைல்கணக்கில் நடந்து போய் தலையில் நீர்க்குடம் சுமந்து வருவதைப் பார்த்து ராணுவ வீரர்களின் உதவியோடு ஆங்காங்கு கிணறு வெட்டி நீர் வசதிக்கு ஏற்பாடு செய்தார். பெருமகிழ்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கடவுளின் தூதர் என்று பொருள்படும் காலிபா என்று அழைத்து அவரைப் பாராட்டினர்.

கடுமையான உழைப்பும், நேர்மையான நிர்வாகமும் அவரது வெற்றிக்கு மூலதனங்கள், பகைமை உணர்ச்சியை மறந்து விட்டு இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்று சேர்ந்து விடுவது முழுமையான இந்தியாவுக்கு வலிமை சேர்க்கும். பிரிந்து போய் இருப்பது பிணக்கினையும், விரோதத்தையும் உண்டு பண்ணுவதோடு பிற நாட்டினர் உள்ளே புகுந்து லாப நோக்கத்தோடு பிளவினைப் பெரிதாக்கி விடுவர் என்று கூறி அயூப்கானும் அன்றைய இந்தியத் தலைவர்களும் ஒருங்கமர்ந்து உரையாட ஏற்பாடுகளும் செய்தார். ஜெனரல் கரியப்பாவின் அந்த முயற்சி வெற்றி பெறுவதற்கு முன்னதாகவே அயூப்கான் பதவி விலக நேரிட்டது. அம்முயற்சியும் கைவிடப்பட்டது.

1947-ஆம் ஆண்டு ஆகஸ்டு பதினைந்தாம் நாள் இந்தியா விடுதலை பெற்ற ஒரு சில வாரங்களுக்குள்ளேயே, பாகிஸ்தானியத் தலைவர் முகமது அலி ஜின்னாவும், பிரதமர் லியாகத் அலிகானும் எப்படியாவது காஷ்மீரத்தை பாகிஸ்தானுடன் சேர்த்துவிடத் திட்டம் போட்டனர். தொண்ணூறு விழுக்காடு முஸ்லீம்கள் உள்ள காஷ்மீர் மதரீதியாக எங்களுக்குத்தான் சொந்தம் என்பது அவர்கள் கோரிக்கை. மதச்சார்பற்ற இந்தியாவிலும் 14 மில்லியன் மக்கள் முஸ்லீம்கள். எனவே மதரீதியான கணிப்பை ஏற்க இயலாது என்பது இந்தியாவின் முடிவு. இதற்கிடையில் மலைவாழ் பத்தானியர்களுக்கு ராணுவ உடை கொடுத்து காஷ்மீரைத் தாக்க ஜின்னா ரகசிய ஏற்பாடு செய்துவிட்டார். இந்திய ராணுவத்தலைமையில் இருந்த வெள்ளைய அதிகாரிகள் இந்த உண்மை தெரிந்தும் அதனை இந்திய அரசுக்கு அறிவிக்கவில்லை. அவர்களது துரோகச் செயலை அறிந்த நேருஜி அவர்களைக் கூப்பிட்டு கண்டித்தார். உடனே அவர்கள் தத்தம் பதவியை ராஜினமா செய்துவிட்டு இங்கிலாந்துக்கு சென்று விட்டனர். அத்தகைய இக்கட்டான நெருக்கடி நிலையில், கிழக்குப்பிராந்திய கமாண்டராக இருந்த மேஜர் கரியப்பா மட்டுமே ஏனைய அதிகாரிகளுடன் கலந்து நிலைமை சீராகும் வரை கடுமையாக உழைத்தார்.

இதற்கிடையில் முன்னரே திட்டமிட்டபடி ஜின்னாவால் அனுப்பப்பட்ட மலைவாழ் பத்தானியப் படை பாகிஸ்தானிய எல்லையிலிருந்து இரண்டு மூன்று நாட்களுக்குள் காஷ்மீரப்பகுதிக்குள் சுமார் 2 மைல் உள்ளே வந்து சில மணி நேரத்தில் சீறி நகரைக் கைப்பற்றி விடும் நிலை. இதுபற்றி நேருஜி ஐக்கிய நாடுகள் சபையில் முறையிட்டார். ஐ.நா.சபை போர் நிறுத்த ஆணையினை வெளியிட்டது. அதற்கு சற்று முன்னதாகவே காஷ்மீருக்குள் ஊடுருவிய பத்தானியப் படைகளை உடனடியாகத் துரத்தி பழைய நிலைக்கே விட்டு விடுகிறேன் என்று கூறிய கரியப்பாவின் வேண்டுகோளை நேரு அனுமதிக்கவில்லை. இப்படி ஊடுருவல் செய்த காஷ்மீரப் பகுதியைத்தான் பாகிஸ்தான் அப்படியே வைத்துக் கொண்டு ஆஜாத் காஷ்மீர் என்று பெயரும் இட்டு அதனைச் சீனாவின் நடமாட்டத்துக்கும் இடம் கொடுத்து விட்டது.

இதே போன்று இந்தியாவின் கிழக்குப் பகுதியில் சீனாவின் ரகசியமான ஊடுருவலை கொரில்லாப் போர் முறையில் தடுப்பதற்கு அனுமதி கேட்ட கரியப்பாவின் வேண்டுகோளையும் நேருஜி புறக்கணித்து விட்டார். இதனால் இமாலய வனப்பகுதியில் ஊடுருவிய சீனத்துருப்புகள் பின்னர் திபெத்தின் உள்ளேயும் புகுந்து விட்டனர். அமைதியே உருவான தலாய் லாமா இரவோடு இரவாக தன் சொந்த மண்ணை விட்டு இந்தியாவில் தஞ்சம் புக நேர்ந்து விட்டது. பண்டித நேருவின் இந்தத் தவறான இரண்டு முடிவுகளால் இன்று வரை இந்தியாவுக்கு முடிவில்லாத பிரச்சனையாக இவை தொல்லை கொடுத்து வருகின்றன.

தனிமனித வாழ்வில் ஏற்படும் பொறாமையும், புகைச்சலும், எதிர்ப்பும், வதந்தியும் கடமையே உருவான ஜெனரல் கரியப்பாவையும் விடவில்லை. தனது நண்பர் அயூப்கானுடன் சேர்ந்து இவரால் இந்தியாவில் ராணுவ ஆட்சி வரப்போகிறது என்று ஒரு வதந்தி இந்திராகாந்தி அறிவித்த நெருக்கடி நிலையிலும் இப்படி ஒரு பேச்சு. இவற்றையெல்லாம் புறந்தள்ளி நேர்மைக்கும், நியாயத்திற்கும், உண்மைக்கும், உழைப்பிற்கும் கட்டுப்பட்ட ஜெனரல் கரியப்பா கடமை தவறாது பணிபுரிந்தார். ஓய்வுபெற்ற இராணுவத்தினருக்கும் போரில் வீரமரணம் எய்தியோரின் குடும்ப நலனையும் கருத்தில் கொண்டு அவர்களது நன்மைக்காக நாடு தழுவிய அலுவலகத்தை ஏற்படுத்தினார்.

விண்ணிலே ஒளிவிடும் நிலாவிலும் ஒரு கரும்புள்ளி போல, மண்ணிலே பணிபுரிந்த இந்த மாவீரனின் குடும்ப வாழ்வு சரியாக அமையவில்லை. கணவன் மனைவி இருவருக்கும் இருந்த வயது வேறுபாடு ஒரு புறம். இராணுவப்பணி என்றே அலையும் கணவர் தன்னைக் கவனிக்கவில்லையே என்கிற இளம் மனைவியின் ஏக்கம் மறுபுறம். ஒரே மகனையும் மகளையும் கணவரிடம் விட்டுவிட்டு மனைவி பிரிந்து விட்டார்.

நந்தா கரியப்பா என்னும் அவர்களது மகன் வான்படையில் சேர்ந்து வைஸ் அட்மிரலாகப் பணியாற்றினார். எல்லையில் நடந்த போரில் நந்தாவும் சில அதிகாரிகளும் பாகிஸ்தானில் சிறைப்பட்டு விட்டனர். கரியப்பா விரும்பினால் அவரது மகனை விடுதலை செய்கிறேன் என்று அயூப்கான் வானொலியில் அறிவித்தார். உங்கள் சிறையில் உள்ள அனைவருமே என் பிள்ளைகள் என்று கூறிய கரியப்பா அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளவில்லை.

நாட்டுப்பற்றோடு இராணுவத்திற்கு தொடர்ந்து 34 ஆண்டுகள் சிறப்புடன் பணியாற்றிய ஜெனரல் கரியப்பாவை பண்டித நேரு ஆஸ்திரேலியாவில் இந்தியத் தூதராக பணி அமர்த்தினார். காலங்கடந்தே இந்திய அரசு இவருக்கு இராணுவத்தின் உயரிய விருதாகிய பீல்டு மார்ஷல் எனும் பட்டத்தை அளித்து பெருமைப்படுத்தியது. தனது 93- -ஆம் வயதில் பெங்களூர் ராணுவ மருத்துவமனையில் காலமான இம்மானிதர் இன்றைய இராணுவத்தினரும் பின்பற்றுதற்குரிய வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுத்த முதல் தானைத்தலைவர் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *