வெடிக்கும் பேட்டரிகள்  காரணங்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள்

வெடிக்கும் பேட்டரிகள்  காரணங்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள்

  • By Magazine
  • |

 காளீஸ்வர்

தற்காலத்தில் தினம் தோறும் செய்திகளில் “வெடிக்கும் பேட்டரிகள்” என தலைப்புகள் வைத்து பரபரப்பு செய்திகள் வெளியிடப்படுவதை  கவனிக்க முடிகிறது. மொபைல் போன் பேட்டரி வெடித்து மாணவர் பலி. கையில் வைத்துக் கொண்டிருந்த மொபைல் போன் வெடித்து, உயிருக்கு ஆபத்தான காயங்களுடன்  மருத்துவமனையில் அனுமதி என தினம் தோறும் படித்து வருகிறோம்.எதனால் பேட்டரிகள் வெடிக்கிறது? பேட்டரிகள் வெடிப்பதற்கு நூற்றுக்கணக்கான காரணங்கள் இருக்கின்றன. ஆனால், அதை வெடிக்காமல் பாதுகாப்பதற்கான வழிகளை தான்  பார்க்க இருக்கிறோம்.

காரணம்

உண்மையிலேயே ஒரு பேட்டரி இந்த குறிப்பிட்ட காரணத்தினால் தான் வெடிக்கிறது என குறிப்பிட்டு விட முடியாது.தற்காலத்தில், லித்தியம் அடிப்படையிலான பேட்டரிகள் தான் மொபைல் போன்களில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.லித்தியம் அயன் பேட்டரி மற்றும் லித்தியம் பாலிமர் பேட்டரி ஆகியவை தான் நாம் அடிக்கடி கேட்கக்கூடிய பெயர்களாக இருக்கின்றன.இந்த இரண்டு வகையான பேட்டரிகளுமே எளிதில் தீப்பிடிக்கக் கூடியவை. இவற்றின் மேல் இருக்கக்கூடிய பாதுகாப்பு உறையானது நீக்கப்படும் போது, இவை எளிமையாக தீப்பிடித்து விடுகின்றன.வளிமண்டல காற்றோடு நேரடியாக வினை புரியும் போது, எளிமையாக தீப்பற்றக்கூடிய பொருளாகவே லித்தியம் பேட்டரிகள் அறியப்படுகின்றன.ஆகவே! பழைய பேட்டரிகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி விடுவது சிறப்பு.

தரம்

பேட்டரிகள் விஷயத்தில் அடுத்தபடியாக எழக்கூடிய மிக முக்கியமான பிரச்சனை, தரம் குறைந்த பேட்டரிகளை வாங்குவது. உங்களுடைய மொபைல் போனில் ஏற்கனவே பயன்படுத்தி வந்த பேட்டரியில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு, அதை நீங்கள் சரி செய்ய முற்பட்டால், சரியான மற்றும் பொருத்தமான பேட்டரியை தேர்வு செய்ய வேண்டும்.500 ரூபாய்க்கு கிடைக்கிறது! மற்றும் முந்தைய பேட்டரியை விடவும் அதிக நேரம் பயன்படுத்தலாம் என கடைக்காரர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு,ஏதோ ஒரு பேட்டரியை வாங்கி மொபைல் போனில் போட்டு விடாதீர்கள்.

பாதுகாப்பு

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான மொபைல் போன்களைப் போல தற்போது உள்ள மொபைல் போன்களில் பேட்டரிகளை நம்மால் கழற்ற முடியாது.எனவே, உள்ளே வெப்பமாகும் பட்சத்தில் நீங்கள் கவனிக்காமலேயே உங்கள் கைகளில் இருக்கும் நேரத்திலேயே வெடிக்கின்ற அபாயம் இருக்கிறது.அதேநேரம், மொபைல் போனில் பேட்டரி மாற்றி சில நாட்களிலேயே பேட்டரியில் பிரச்சனை ஏற்படுகிறது என்றால்! உங்கள் மொபைல் போனின் இன்ன பிற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கவனிப்பது சிறப்பு. ஏனெனில், உங்களுடைய மொபைல் போனின் எலக்ட்ரானிக் அமைப்புகளில் ஏற்படும் ஏதாவது பிரச்சனையின் காரணமாக கூட, உங்கள் மொபைல் ஃபோனின் பேட்டரியில் பிரச்சனை ஏற்படக்கூடும்.

கவனம்

உங்கள் மொபைல் பேட்டரியில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், பொதுவாகவே அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர்களுக்கு சென்று சரி பார்த்துக் கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது.மேலும், உங்களுடைய மொபைல் போனுக்கான சார்ஜரை மட்டுமே பயன்படுத்துங்கள்.  ஒருவர் தன்னுடைய மொபைல் போனுக்கு, வேறு ஒரு நிறுவனத்தின் 90 வாட் அளவிலான சார்ஜரை பயன்படுத்தியுள்ளார். மேற்படி, அவர் பயன்படுத்தக்கூடிய மொபைல் போனின் பேட்டரி தாங்கக்கூடிய மின்சாரத்தின் அளவு வெறும் 18 வாட் தான்.

இதனால், கைக்கு வந்து சில நாட்களே ஆன மொபைல் போனின் பேட்டரி, காற்றடைத்த பலூன் போல பெரிதாகிவிட்டது.இத்தகைய பொருந்தாத மின் ஆற்றல் குறியீடு (wrong power rating) கொண்ட சார்ஜர்களை பயன்படுத்தும் போது, மொபைல் போனில் உள்ள எலக்ட்ரானிக் அமைப்புகளும் பாதிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதேபோல மொபைல் பேட்டரிகள் வெடிப்பதற்கு முக்கியமான காரணம் மொபைல் போன்கள் தண்ணீரில் விழுவது, உங்கள் மொபைல் போனிற்குள் தண்ணீர் சென்றிருக்கிறது என்று உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக அதை சர்வீஸ் செய்து விடுவது சிறப்பு. ஒருவேளை, உங்களுடைய மொபைல் போனில் சிறந்த தண்ணீர் தடுப்பு அமைப்பு இருந்தாலும் (water resistant) கூட, அதிகப்படியான தண்ணீர் உள்ளே நுழையும் போது பேட்டரிகளின் மின் முனைகளின் இடையே நேரடியாக இணைப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

கீழே விழுவது

உங்களுடைய மொபைல் போன்கள் கையில் இருந்து கீழே விழுந்து உங்கள் கண்களுக்கு தெரியும் படியாக வெளியில் சேதம் ஏற்பட்டு இருந்தால், உடனடியாக அந்த மொபைல் போனை சர்வீஸ் செய்து விடுவது நல்லது.இதன் காரணமாக கூட, மொபைல் பேட்டரியின் இணைப்புகளில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படலாம். ஒழுங்காக மின்னாற்றல் செல்லாமல், பேட்டரி பெரிதாகி வெடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

கைக்கடிகாரங்கள்

தற்கால இளைஞர்கள் பலரும், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் போலவே, வெறும் 500 ரூபாய்க்கு கிடைக்க விடக்கூடிய தரம் குறைந்த ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை பயன்படுத்துவதை பார்க்க முடிகிறது.தயவு செய்து, இது போன்ற போலியான மற்றும் முறையான நிறுவனத்தால் தயாரிக்கப்படாத எலக்ட்ரானிக் பொருட்களை பயன்படுத்தாதீர்கள். அதனுள் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பேட்டரிகள் மிகவும் குறைந்த தரத்தில் தயாரிக்கப்பட்டு இருக்கும். நீங்கள் இந்த கைக்கடிகாரங்களை முறையாக பராமரிக்காவிட்டால், கையிலே வெடிக்க கூடிய அபாயம் இருக்கிறது.

அதேபோல் காதில் பயன்படுத்தக் கூடிய இயர்போன்களுக்கும் பொருந்தும். பொதுவாகவே, பேட்டரிகள் இல்லாத சாதாரண கம்பி இயர்போன்களை (normal wired earphones) பயன்படுத்துவது சிறப்பானது.மேலும், உங்களுடைய மொபைல் போன் திரையில் வழக்கத்திற்கு மாறாக அழுத்தம் அதிகமாக இருப்பதாக, நீங்கள் உணர்ந்தால் உடனடியாக கவனிப்பது சாலச் சிறந்தது. பேட்டரி பெரிதாகி வருவதன் காரணமாகத்தான் இத்தகைய அழுத்தம் ஏற்படும்.

இவற்றுக்கெல்லாம் மேலாக நம்மை விட்டு இன்னும் நீங்காத ஒரு கெட்ட பழக்கம் “விடிய விடிய மொபைல் போனுக்கு சார்ஜ் போடுவது” ஓவர் நைட்டில் ஒபாமா ஆவது போல, நீங்கள் இப்படி ஓவர் நைட்டாக சார்ஜ் போடும்போது, உங்கள் வீட்டிலேயே ஒரு ரெடிமேட் வெடிகுண்டை தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அதேபோல, மொபைல் ஃபோன்களுக்கு இறுக்கமான கவசங்கள் (mobile cases) அணிவதையும் தவிர்க்கவும்.மொபைல் கவசங்களுக்கு உள்ளே உங்கள் வீட்டிற்கு தெரியாமல் பணத்தை ஒழித்து வைப்பதையும் தவிர்த்து விடுங்கள். இதனால், மொபைல் போனுக்குள் உருவாகும் வெப்பமானது வெளியில் செல்லாமல் உள்ளேயே அடைபட்டு போகும்.அப்படி வெப்பம் அதிகமானால், முதலில் தீ பிடிப்பது ரூபாய் தாளாகத்தான் இருக்கும்.மொபைல் போன் சார்ஜ் செய்து கொண்டிருக்கும்போதே பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டியது முக்கியமானது. அனைவரும் பாதுகாப்பாக பயன்படுத்துங்கள் உங்கள் குடும்பத்தினருக்கும் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *