மஞ்சள் வானம்

மஞ்சள் வானம்

  • By Magazine
  • |

– கை. செல்லத்தங்கம்

காரை நிறுத்தி டிரைவரை பார்க்கிங் செய்ய சொல்லிவிட்டு அலுவலகத்தில் வேகமாக செல்ல திரும்பிய போது மெத்தென்று ஏதோ ஒன்றில் மோதியதை உணர்ந்தான் எழில். மலர் பந்து போல்மிருதுவாக இருந்த மோதலுக்கு சொந்தாக்காரி ஒரு பெண் என டக்கென்று தலையை நிமிர்த்திய போது உணர்ந்தான். சாரி சாரி மேடம் என்றான். தன்னை சுதாரித்துக் கொண்ட இளம்பெண் என்ன மிஸ்டர் பார்த்து வரதில்லையா? என்றாள்.  அவள் வதனம் நோக்கியவன் உள்ளம் ஒருவித உணர்வுக்குள்ளானது. மஞ்சள் நிற காட்டன் புடவையில் நீண்ட கூந்தலை விரித்துப்போட்டு கோபுர வடிவில் பொட்டிட்டு ஒரு செகன்டில் அனைத்தையும் கண் உள்வாங்கி கொண்டது. அவள் நகர்ந்து சென்றுவிட்டாள். ஆனால் அவள் மீது மோதியதால் ஏற்பட்ட பாரிஜாத மலரின் வாசனை மூக்கில் நின்றது. அடடா தன்னை சுதாரித்துக் கொண்டான். இந்த மனசை கட்டிப்போட வேண்டும் என நினைத்துக் கொண்டு அலுவலகத்திற்குள் நுழைந்தான். அனைவரும் எழுந்து வணக்கம், குட்மார்னிங் என மரியாதை செய்தனர். நேர்முகத் தேர்வுக்காக பலர் காத்திருந்தனர். தன்னுடைய அறைக்கு சென்றான். அவனது அம்மா ஆனந்தி உள்ளே அமர்ந்திருந்தார். சாரிம்மா வார வழியிலே டிராபிக் அம்மா அதான் நேரமாகி விட்டது என்றான். சரி, சரி பரவாயில்லை என்ற தாயார் அதிகாலையிலேயே கோவிலுக்கு போய் விட்டு மங்களகரமாக அமர்ந்திருந்தார். அப்பா எங்கேம்மா… என்று கேட்ட மகனிடம் அப்பா ராஜா அண்ணனிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்றார்.

எழிலின் தந்தை ராகவன் வளர்ந்து வரும் ஒரு நிறுவனத்தின் தொழிலதிபர். அவரது நண்பரான ராஜா என்பவர் அதே நிறுவனத்தின் மேனேஜராக இருக்கின்றார். இருவரும் பால்ய காலம் முதல் நண்பர்கள். வெளிநாடு சென்று வியாபாரம் சம்பந்தமான மேற்படிப்பு படித்து தாய்நாடு திரும்பி வந்துள்ள எழில், கடந்த ஆறுமாத காலமாக தந்தையோடு அலுவலகம் வந்து செல்கிறான். தாயாரும் டைரக்டர்களில் ஒருவர். எனவே அவரும் ராகவனுடன் அடிக்கடி அலுவலகம் வருவதுண்டு. எழில் சில மாற்றங்ளை செய்ய விரும்பியே சில புதிய நபர்களை பணிக்கு எடுக்க இன்றைக்கு நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளது.

காலிங்பெல்லை அழுத்தி உதவியாளரை அழைத்தான் எழில். எத்தனைபேர் வந்திருக்காங்க என்றான். சார் 15 பேர் என்றான். 20-க்கு மேற்பட்டோர் ஆன்லைனில் ரெஸ்யூம் அனுப்பி இருந்தாங்க. சரி சரி அப்பாவை வரச் சொல்லி விட்டு வருகை தந்ததன் அடிப்படையில் ஒவ்வொருவராக அனுப்பு என்றான். சரி சார் என்று வெளியேறினான். உதவியாளர் அம்மாவும், அப்பாவும் நேர்முகத்தேர்வு நடத்துவது என ஏற்கெனவே ரெஸ்யூம் பார்த்துவிட்டப் படியால் அப்செர்வராக உடனிருப்பேன் என்று சொல்லியிருந்தான். அப்பாவும் மாமா ராஜாவும் உள்ளே வந்தனர். ராஜாவும் உடனிருப்பதாக அப்பா சொன்னார். அப்பாவின்  வளர்ச்சியில் முக்கிய பங்கும், நிறுவனத்தை முழுமையாக கவனித்துக் கொள்பவரும் அவரே தான். அங்கிள் வாங்க என்றான் எழில்.  எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன். அங்கிள் வேண்டாம் மாமா தான் சிரித்துக்கொண்டே ராஜா. அங்கிள் என்றழைத்தால் அவருக்கு ஏனோ பிடிக்காது.

இன்டர்வியூ நடந்து கொண்டிருந்தது. அம்மாவும் அப்பாவும் கேள்விகள் கேட்டனர். எழில் கவனித்துக் கொண்டிருந்தான். எழிலுக்கு ஏதோ ஒரு போன்கால் வர ஒருநிமிஷம் அப்பா என்று சொல்லி வெளியே வந்து விட்டான். தொழில் சம்மந்தமாக பேசிவிட்டு உள்ளே சென்ற போது இன்டர்வியூ முடிந்திருந்தது. மூன்று பேரை தேர்வு செய்யும் பொறுப்பை பெற்றோரிடமே விட்டு விட்டான். அவன் சொல்லியிருந்த காரணிகளின் படி இரண்டு பெண்களும் ஒரு நபரும் தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தனர். அப்பாயின்மென்ட் ஆர்டர் அடித்துக் கொடுத்து 1-ம் தேதி வேலையில் ஜாயின் பண்ணச் சொல்லுங்க என்று சொல்லி விட்டு வெளியே சென்றான்.

ஒன்றாம் தேதி புதிய நபர்களை மற்ற பணியாளர்களுக்கு அம்மா அறிமுகம் செய்து வைத்தார். மரியாதை நிமித்தம் இவனது அறைக்கும் வந்தனர். ஏதோ ஒரு வாசனை வித்தியாசமாக உணர்ந்தான். ஓ… வந்திருந்தவர்களில் அன்றைக்கு அவன் மோதிய பெண்ணும் ஒருத்தி. இவள் நம்ம ஆபீஸ்க்கு தான் வந்திருக்காளா என்ற பெயரை பார்த்தான் வெண்ணிலா. பெயருக்கேற்றபடி அழகானவள். அவள் பயன்படுத்தும் பெர்ப்பூம். அவளைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு வித்தியாசமான அனுபவம் மனதிற்குள் வருவதை உணர்ந்தான் எழில். கண்களல் அவளை அடிக்கடிப் பார்க்கிறான். ஆனால் அவன் மனதை கட்டிப் போட்டாள். நம்ம ஆபிஸில் வேலை பார்க்கிற பெண் நம்மை பற்றி தவறாக நினைத்து விடக் கூடாது என்று மாதம் ஒன்றானதும் புதிய பணியாளர்களின் பணியை ஆய்வு செய்தான். அனைத்து விசயத்திலும் சிறப்பாக இருந்தாள் வெண்ணிலா. அப்பாவும் அம்மாவும் பாராட்டினர். அப்படி ஆறுமாதங்கள் கடந்து விட்டது.  வெண்ணிலா தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பாள். சக பணியாளர்களிடமும் அரட்டை அடிப்பது பேசி சிரிப்பது என்றிருப்பதில்லை. எழிலியையும் கூட அதிகம் நிமிர்ந்து பார்ப்பதில்லை. கேட்ட கேள்விக்கு மட்டுமே பதில் வரும். ஆனால் எழிலின் மனதில் சிம்மாசனமிட்டு விட்டாள் வெண்ணிலா. அது எழிலுக்கே மட்டுமே தெரியும். அவள் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் அம்மா அப்பாவிடம் பேச முடியாது. எனவே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உதவியாளர் மூலம் வெண்ணிலாவை அழைத்தான். ஆபீஸ் வேலை சம்மந்தமாக பேசிவிட்டு வெண்ணிலா உங்ககிட்ட நான் கொஞ்சம் பர்சனலா பேசணும் என்றான். பேசுங்க சார் என்றாள் தலைநிமிர்ந்து. இவனது கூரிய பார்வையை சந்திக்க இயலாது தலை கவிழ்ந்தாள். கேன்டீனில் பேசலாமே.. இங்கே வேணாம் என்றான். தயங்கியபடியே ஒத்துக்கொண்டாள். மாலை 6 மணிக்கு கேன்டீனில் எதிரெதிராய் இருவரும் கையில் ஆளுக்கொரு காப்பிக் கோப்பையோடு வெண்ணிலா எனக்கு சுற்றி வளைத்து பேச தெரியாது. மனசில பட்டதைச் சொல்றேன். எனக்கு உங்களை பிடிச்சிருக்கு. உங்களோட பதிலை எதிர்பார்க்கிறேன். உடனடியாக இல்ல டைம் எடுத்துக்கோங்க என்றான். நேரடியான இந்த கேள்வியை எதிர்பார்க்கல . வெண்ணிலாவுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது. அமைதியாக இருந்தவள் நிமிர்ந்து என் மனசில ஒன்றுமில்லை. ஆனால் எனக்கு டைம் கொடுங்க என்று சொல்லிவிட்டு எழுந்து விட்டாள். ஓ.கே. தாராளமாக டைம் எடுங்க. உங்க பதிலுக்கப்புறமாக தான் எங்க அம்மா அப்பாகிட்ட பேசணும் என்றான்.

அவள் ஒரு பார்வை பார்த்தாள் அது அவனை குறுகுறுக்க செய்தது. ஆம் அவளது ஒவ்வொரு செயலையும் மனதிற்குள் அசை போட்டான். அவளது டிரஸ்ஸின் கோட், மேக்கப், பேச்சு, சிரிப்பு என எல்லாமே அவனுக்கு பிடித்திருந்து. சாப்பாட்டு ஓய்வு நேரத்தில் புத்தகம் படிப்பது, சகபணியாளர்கள் எல்லாம் மேடம் மிகிஷி எழுத போறீங்களா. எப்பவுமே படிப்புத்தானா? என்றால் புன்னகையால் சமாளிப்பது. எல்லாவற்றையும் கடந்த ஆறுமாதமாய் மறைமுகமாய் கவனித்து கொண்டு தானிருந்தான்.

வெண்ணிலா சீட்டில் இருந்தவாறே ஏதோ யோசனையில் இருப்பதைக் கண்டு பக்கத்து சீட் ஸ்டாப் என்ன மேடம் பகல் கனவா என்று கிண்டலடித்தனர். அய்யய்யோ … அப்படி எல்லாம் இல்லை சார் என்றாள். ஆம் அவள் மனதில் எழில். எவ்வளவு கண்ணியமாக அவன் காதலைச் சொன்னான். ஆறரை அடி கம்பீரமான உயரம், நல்ல படிப்பு, வசதி, நற்பண்புகள், சகபணியாளர்கள் பேசியதில் தெரிந்தது. திறம்பட நிர்வாகம் பணியாளர்களிடம் கரிசனம், தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் சாமர்த்தியம் எல்லாமே பிடித்திருந்தது.  ஆனால் அவன் உயரத்தில் நாம் அவனை பற்றி எண்ணக் கூடாது என்று நினைத்து இருந்தவளிடம் அவன் கூறிய வார்த்தை கிளுகிளுப்பை ஏற்படுத்தியது. அம்மா அப்பாவிடம் சொல்லலாமா? அப்பாவும் வரன் தேடத் தொடங்கி விட்டார். தம்பியும் படிப்பை முடித்து வேலை தேடத் தொடங்கி விட்டான். என்ன செய்வது- எழிலின் பார்வை பதிலை எதிர்பார்க்கிறது. அவன் பார்வையை சந்தித்து புன்னகைக்கிறாள். ஆலோசனை கேட்க ஒரு டீப் பிரண்ட்ஸ் இல்லையே எல்லாம் காலேஜ் படிப்போடு முடிந்து அவங்க அவங்க கலியாணமாகி செட்டிலாகி விட்டார்கள். அம்மாவிடம் பேசலாம் என்ற முடிவோடு இரவு அம்மா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என்றாள். என்னம்மா என்று அருகில் அமர்ந்த தாயின் மடியிலே படுத்தபடியே அம்மாவிடம் பேசினாள். அம்மா எங்க ஆபிஸ் எம்.டி. எழிலை பற்றி உங்ககிட்ட சொல்லியிருக்கேன் இல்லா. அவர் என்கிட்ட பேசினாரும்மா என்று தாயிடம் விவரத்தை சொன்னாள். தன்னிடம் நேர்மையாக விருப்பத்தை சொன்னதை கூறினாள். தாயார் கொஞ்சம் நேரம் யோசித்து விட்டு உன் மனசிலே என்னம்மா இருக்கு என்றார். அவரை எனக்குப் பிடிக்கும் அம்மா. ஆனால் உங்க விருப்பத்தை மீறி எதுவும் நடக்காது என்றாள். தாயார் சென்று விட்டார். காலையிலே சொன்னார் முறைப்படி பெண் கேட்டு வரச் சொல்லு என்றார்.

அலுவலகம் வந்த வெண்ணிலாவின் கண்கள் எழிலை தேடியது. லஞ்சு டைம் ஆயாச்சு. ஆளைக்காணோம். எம்.டி எங்கே சார் என்று சக ஸ்டாப்பிடம் கேட்க அவர் வெளியூர் போயிருக்கார் வர ஒரு வாரமாகும் என்றார். ஒரு வாரமும் வெண்ணிலாவுக்கு ஒரு யுகமாக கழிந்தது. ஒவ்வொரு நிமிடமும் மனம் அவனை எதிர்பார்த்தது. அவனது ஒவ்வொரு செயலும் இவள் மனத்திரையில் ஓடியது. ரசித்தாள்… இந்த மனம் காதல் வசப்பட்டு விட்டது. முன்பை விட அழகாக டிரஸ் செய்தாள். அனைவரிடமும் சிரித்துப் பேசினாள். ஏன் இந்த மாற்றம் என்று அவளே மனதிற்குள் மகிழ்ந்தாள். எழில் அன்று அலுவலகம் வந்தான். அப்படியே போய் பேச தயங்கினாள். அவராக கூப்பிட்டு கேட்கலாமே. நாம் தானே டைம் கேட்டோம். பெண் மனம் தயங்கியது. அவராக கேட்பாரா… மாலை 6 மணி அலுவலகம் முடிந்து வெளியே வந்த வெண்ணிலா கேன்டீன்க்குள் செல்லும் எழிலைப் பார்த்து அவளும் அவருக்கெதிரே சென்று அமர்ந்தாள். புன்முறுவலோடு அவன் பார்க்க அவள் தலைகுனிந்தபடியே நாணத்தோடு சொன்னாள் முறைப்படி எங்க வீட்டிலே திருமணம் பேசுங்க. எழில் மனதில் சந்தோச பூக்கள். இவ்வளவு நாளாச்சா என்னை பற்றி முடிவெடுக்க என்றான். இல்ல…இல்ல தயங்கினாள். அம்மா அப்பாகிட்ட சொல்லி முறைப்படி கேட்கிறேன். ஏற்கெனவே சொல்லிட்டேன்  என்றான்… இனி இந்த வெண்ணிலா எழிலின் மஞ்சள் வானத்தில் உலா வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *