– முனைவர் முல்லைத்தமிழ்
மலப்பிற வர்மம்
சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான சலப்பிற வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் மலப்பிறவர்மம் பற்றி அறிவோம்.
மலப்பிற வர்மம், ஜலப்பிற வர்மத்திற்கும், பூவல் வர்மத்திற்கும் இடையே முதுகுப்பகுதியில் அமைந்துள்ளது. அதாவது மலாசயத்தின் நேர் எதிர்புறம் அமைந்ததே இந்த வர்மம் ஆகும். இவ்வர்மம் மலப்புற வர்மம், மலபந்த வர்மம், சரடு அயர்ந்த காலம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது.
“வன்னெல்லின் ஆறிறை கீழ் தப்பிறவர்மம்
மாத்திரையாம் ஒட்டையின் கீழ் மலப்பிறவர்மம்”.
– ஒடிவுமுறிவு நூல்
“மலாசயத்தினுட சார்வில் தானே
சொல்வார்கள் மலப்பிறவர்மமென்று மேலோர்”.
– வர்ம குருநூல்
மேலும்,
“அறியவே மலப்பிற வர்மம் கொண்டால்
அப்பனே வயிறூதும் மூத்திரம் விழும்
குறையான பனி குளிரும் அதிகமுற்று
கூடியே மலமடைத்து குன்மமானால்
விறையான தேகமடைத்து குன்மமானால்
விரண்டோடி அசாத்தியமென்று சொல்லில்
நிறையான கடிகையது எட்டதாகும்
நிச்சயமாய் விலகியே அகல நில்லே”.
– வர்ம அகஸ்தியசாரி
“மலப்பிறம் ஒடுக்கும் சடம் விடும் காலம் பலம்
தொடுக்குமிக்குணங்கள் விடுக்கவே செய்யடங்கல்
தலப்பிறம் தடவி முதுகுவரியோடே மெல்ல வாரிகோரி
வகைமுன் மூட்டடங்கல் பூட்டு நாங்ஙணமும் தொடு
வலப்புறம் சென்னி தொட்டறி யிருவசமும் உறவுற
கூட்டாய் தடவி பத்தும் பய்யவே செய் அஃது
உலப்பறும் உடலின் உணர்வறிந்து உவந்துரைத்த
முன்னோர் வாக்குமுறை தப்பாதே”.
“ஆனென்ற அசாத்திய வர்மமிது மலப்புறமிளக்கிட
ஆளதனைத்தூக்கியே எடுத்திருத்தி தொடராக
நானென்ற கழுத்துறை நலமுற ஏந்தியே தடவி
நல்முதுகு பின்னுற முன்னுற மாறல் அறிந்து
கோனென்ற குறிகுணம் தவறாது மாத்திரையும் செய்து
வானென்ற வல்லடங்கல் வகையறிந்து நல்லோருரை
மானென்ற மருந்துவகை செய்துவிட மாறிவிடும்
பிணிகள் பல பற்றிடினும் பகர்ந்தார் தாமே”.
– கால வர்மநூல்
என குறிப்பிடுகிறது. மேலும்,
வன்மம் மலப்பிறம் வன்னெல் நடுவதிலாம்
தன்மம் அத்தலத்தில் கொண்டிடிலோதாக்கம்
கன்மம் வழிபோல் ஊதும் வயிறும் தரிக்கும்
குன்மம் எனவாம் குடலுள்ளுமஃதெனலே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
மலப்பிற வர்மம் என்பது, வன்னெல் எனப்படும் கீழ் முக்கோண எலும்பின் நடுவில் அமைந்ததாகும். அத்தலத்தில் தாக்கம் கொண்டால் வயிறூதும், குடலுக்குள் கழைப்புண்டாகும் என்பதாம்.
என்னவே வன்மம் மாத்திரை மிஞ்சிடிலோ
கன்னவே கனத்துடல் களைத்துறும் அசதி
அன்னவே அரைகீழ் தளர்ந்து படப்படப்பும்
உன்னவே அல்லாதுறும் தலைசுற்றுமாமே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
இந்த வர்மம் மாத்திரை மிஞ்சிக்கொண்டால் உடல் கனத்து களைப்புடன் அசதியாகும். அரை கீழ் தளர்ந்து படபடப்புடன் சொல்லொண்ணா தலைசுற்றும் உண்டாகும் என்பதாம்.
ஆமே நவிரம் தான் சுற்றும் அடரும்குளிரும்பனியுடனே
தாமே தளரும் கைகால்கள் தனியாய் விந்துதான் கழியும்
போமே நீரும் மலமுடனே பொல்லாவலியும் தான் மிஞ்சி
நாமேநமக்குதுணையின்றி நடுங்கும்கடமும்முறைதானே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
தலைசுற்றும், பனிகுளிரும் உண்டாகி கால்களும் கைகளும் தளர்ச்சையாகும். விந்து தனியாகவே கழிந்துவிடும். தொடர்ந்து மலமும் சிறுநீரும் கழியும். கொண்ட இடத்தில் வலி மிஞ்சி, நாமே நம் துணையின்றி நிற்க முடியாத அளவிற்கு உடலில் நடுக்கம் உண்டாகும் என்பதாம்.
தானே நல்லமருந்தறிந்து தளமாயுடனே வுண்டிடிகில்
ஆனே அகமும்தானுறைக்கும் அடவாய்மருந்தறிவீரே
வானே நல்ல வாரணமும் வளரும்முட்டி மூன்றுடனே
மானே நல்ல மாவிலங்கு மகத்தாம் நத்தை சூரியதே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
மலப்புற வர்மம் கொண்டவுடன் அதற்கு சரியான தளமருந்து உண்டுவிட்டால் உள் நடுக்கம் குறைந்து உடல் வலிமை பெறும். அதற்கான மருந்தை இனி கேட்பாயானால், இளவயது கோழியும், மூன்றுவித குறுந்தட்டியும் (சிற்றாமுட்டி, பேராமுட்டி, யானைமுட்டி) மாவிலங்குப்பட்டை, நத்தைச்சூரியுமாமே.
அதுவாம் நல்ல நன்னாரி அடுத்துநல்ல உயிரதுவும்
பொதுவாம் நல்லசெஞ்சட்டி போடேநல்லசற்பங்கும்
இதுவாம்நல்உழிஞையொடுஇதமாய்முல்லைவேரதும்
முதுவாம் களஞ்சி மூவிரண்டே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
நல் நன்னாரி எனப்படும் சிறுநன்னாரி, உயிர் எனப்படும் இராமிச்சம் வேர், செஞ்சட்டி, சற்பங்குகாதல், உழிஞை எனும் முடக்கறுத்தான், முல்லைவேர் வகை வகைக்கு ஆறு கழஞ்சு.
மூவிரண்டு மருந்துடன் முனைந்தெடுப்பாயதிமதுரம்
ஆவிரண்டு அமுக்கூரம் அரிசிவகையும் ஆறுடனே
தாவிரண்டு தற்கோலம் தனித்த நல்லவால்மிளகும்
காவிரண்டு கற்கடகம் கனத்த நல்ல ஜீரகமே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
மேல்மருந்து மூவிரண்டு ஆறு களஞ்சாய் எடுத்த பின் அதிமதுரம், அமுக்கூரம், அரிசி வகை ஆறுடன் தக்கோலம், வால்மிளகு, கற்கடகசிங்கியும், ஜீரகமே.
சீராய் நல்ல செண்பகமும் சிறந்த ஒமம் மாரீசம்
சேராய் நல்ல அக்கறாவும் சிறப்பாயந்த மூலமதும்
பாராய் நல்ல பற்படாகம் பண்பாயந்த கொட்டமதும்
காராய் நல்ல கறிமஞ்சள் கணக்காயந்த ஏலமதே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
செண்பகமொட்டு, ஓமம், நல்லமிளகு, அக்கறா, நறுக்குமூலம், பற்படாகம், கொட்டம், கறிமஞ்சள், ஏலமும் சேர்க்கவேண்டும் என்பதாம்.
ஏலமொடும் பலை மூன்று சுக்குடனே திற்பிலியும்
கோலமொடும் கொம்பரக்குமீறையுடன்குக்கிலதும்
தாலமொடும் முச்சாதிக் கசகசாவும் பத்திரிரண்டும்
காலமொடும் கருஞ்சீரகம், கணக்காகமுக்கழஞ்சே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
ஏலம், திறிபலை, சுக்கு, கொம்பரக்கு, திற்பிலி, மீறை, குக்கில், ஜாதிக்காய், ஜாதிபத்திரி, கிராம்பு, கசகசா, தாளீசபத்திரி, வசுவாசிபத்திரியும் கருஞ்சீரகமும் மூன்று கழஞ்சு.
ஆமுறும் பூழில் சாந்தம் அழகுநல் இலஞ்சிவேரும்
போமுறும் சிவனார்வேம்பும் புகழுறும் சீந்தில்தானும்
வேமுறும் கதிரகாதல் கணக்குறும் மதுகத்தின்காதல்
காமுறும் கணியின்காதல் காக்குநல் குமிழின்வேரே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
பூழில் எனும் அகில், சாந்தம் எனும் சந்தணமும், இலஞ்சி எனும் மகிழம்வேர், சிவனார்வேம்பு, சீந்தில், கதிரம் எனும் கருங்காலிக்காதல், மதுகம் எனும் இலுப்பைக்காதல், கணி எனும் வேங்கைக்காதல் குமிழின் வேரே.
வேரொடும் பூதவம் விளங்கு நல் வில்லைவேரும்
பேரொடும் பேயின்பீர்க்கும் புடலமும் பேயின் கூட
காரொடும்கருவிலாஞ்சி கணக்குறும் சூரைதோடும்
தேரொடும் திருமரம் திறம்படும் ஆமணக்குமே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
பூதவம் எனும் ஆலமரத்தின்பட்டை, வில்லைவேர், பேய்ப்பீர்க்கு, பேய்ப்புடோலம், கருவிலாஞ்சிக்கூடம், கருஞ்சூரைத்தோடு, திருமரம் எனப்படும் அரசின்பட்டையுடன் ஆமணக்குவேரே.
கழஞ்சிமூன்று கணக்கதாயெடுத்துமே கடைமருந்து
விளஞ்சநல் பாவு நாற்கழஞ்சும் சேர்த்தொன்றாயுற
அழஞ்சிடித்துபொடியாக்கியறைகுறையாய்சதைத்து
தழஞ்சாறு புனல்மடக்கி அனலேற்றிக் காய்ச்சே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
வகைக்கு கழஞ்சு மூன்றாக மருந்தையெல்லாம் எடுத்து கடைசியான பாவு எனும் மருந்தினையும் நாலு கழஞ்சாக சேர்த்து ஒன்றாய் கலந்து சதைத்து பொடித்து ஆறு மடங்கு தண்ணீரில் வைத்து அனல்மூட்டி வற்றக்காய்ச்சே.
காய்ச்சேநீ ஒருபாகமொன்றாக்கி நன்றாய் பகர்பிணிக்கு
பாய்ச்சேநீ எழுங்காலம் விழுங்காலம் இருநேரம் தான்
போச்சேநீ பலபிணிகள் காயமும்கனத்தவலிவர்மம்கூட
மாச்சேநீ கொள்ளாமல் விலக்குபொருளறிந்துதேறே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
ஆறு மடங்கு தண்ணீரில் மருந்துகளைப் போட்டு ஒரு பாகமாக வைத்து காலையும், மாலையும் இருநேரம் குடித்துவரவும். பல பிணிகள் தீருவதும், காயம், வர்மம், கனத்த வலிகளும் போகும். மருந்துண்ணும் காலத்து விலக்கவேண்டிய பொருட்களையும் அறிந்து தேறிக்கொள்வாயாக.
தேறவே மாதுடனே மதுவும் போதைப்பொருள் நீக்கியே
கூறவே புளிகுறைத்து புண்ணியமாய் பெருமீன்கள்தானும்
வேறவே புகையுடனே பெரும்பயறு தாலக்கிழங்கும் நீக்க
மாறவே மணித்துளியில் பலபிணிகள் பறக்கும்தானே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
மருந்துண்ணும் காலத்தில் மாது தொடர்பு, மதுவருந்துதல், போதைப்பொருட்கள் உபயோகித்தல் நீக்கி, புளியும், பெருமீன்களும் குறைத்து புகைத்தலும், பெரும்பயறும், பனங்கிழங்கும் மாற்றிவிட்டால் பல பிணிகள் பறக்கும் என்பதாம்.
தானே நல்ல தளர்ச்சையும் தளரும் காலும் கைகளதும்
மானேநல்ல உரம்பெற்றுஉறைத்தேபோகும்உவப்புடனே
ஆளே நீயும் அளவறிந்து அழகாய் மையன் தண்டுடனே
கோனே நீயும் கொடுத்துவிட்டால்கொடுபிணிகள் தீருமதே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
இம்மருந்தை உண்பதால் தளர்ச்சை, கைகால் தளர்தல் நீங்கி நல்ல திறன் பெற்று உடல் வலிமையடையும். இம்மருந்தை அளவறிந்து ஆட்டின் முதுகுடன் சேர்த்து மருந்தாக்கி கொடுத்துவிட்டால் கொடிய பிணிகளும் தீரும் என்பதாம்.
வன்மம் மலப்புறம் வழங்கும் கொடையதாம்
வன்மம் வளமுறத்தொட்டிடில் சிக்குறும் பலம்
தன்மம் மாறியே தளவதும் போமூக்கம் உள்வளி
தன்மம் கொண்டுறும் குணம் பல வலிகளுமாமே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
மலப்புற வர்மம் வழங்கும் நற்குணங்கள் பலவாகும். இவ்வர்மத்தை தொட்டுத் தூண்டிடில் மலச்சிக்கல் மாறும். உடல் தளர்வும் மாறி அகத்தில் வலிமை உண்டாகும். பலவிதமான வலிகளும் போகும் என்பதாம்.
போக்கும் பல வலி தண்டுற பற்றும் மிஞ்சுறும்
ஆக்கும் பெண்டுற வாசையும்பெருமூச்சானதும்
தீர்க்கும் தலைவலிதிமிரதும் போக்குறும்வாதவும்
ஏக்கும் வன்மமும் வழித்தடம் போக்குமே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
முதுகுந்தண்டில் பற்றி வரும் பலவித வலிகளையும் போக்கும், பாசம் கூடும், பெண்ணாசை உண்டாகும், பெருமூச்சு நோயும் மாறும், தலைவலி, கைகால் திமிர் உண்டாதலும், வாயுத்தொல்லைகளும் மாறும், பல வழிகளில் உண்டான வர்ம தாக்கங்களையும் போக்கும் என்பதாம் என வர்ம யோகச்சூத்திரமும் குறிப்பிடுகிறது.
இவ்வர்மம் கொண்டால் வயிறு விம்மி, மூத்திரம் சொட்டுச்சொட்டாக விழுந்துகொண்டே இருக்கும். சிறுநீர், மலம் தன்னையறியாமல் போகும். இடுப்பின் கீழ்பக்கம் செயல்படாமல் படுத்த படுக்கையாகும். அதிவியர்வை, அதிதாகம், படபடப்பு, தலைச்சுற்று காணும். பனியும், குளிரும் அதிகமுற்று வயிற்றுவலி உண்டாகி, மலம், மூத்திரம், விந்து கழிதல் போன்றவை காணப்படுமாயின் அசாத்தியமாகும். இதற்கு நாழிகை எட்டு ஆகும் என வர்ம சுவடிகள் குறிப்பிடுகின்றன.
இவ்வர்மத்தால் பாதிக்கப்பட்டவரை தூக்கி இருத்தி, முதுகுவரியினை முன்னும் பின்னும் மேல் ஏந்தி தடவி, பக்கதாரை வழியே தடவி, பாதிக்கப்பட்ட மாத்திரை அறிந்து, அடங்கல்களை தூண்டி, வர்மாணி அடங்கல்களையும் செய்து, சிறந்த மருந்துகளும் கொடுத்துவர நல்ல சுகம் உண்டாகும் என வர்ம நூல்கள் குறிப்பிடுகின்றன.
இவ்வர்ம பாதிப்படைந்தவர்களுக்கு பின்னாட்களில் ஆண்மைக்குறைவு, குன்மநோய், மலச்சிக்கல், கைகால் செயலிழப்பு, அதிசாரம், முகர்வுதிறன் குறைவு, ஆரோக்கிய குறைவு போன்ற பல பின்விளைவுகள் உண்டாகும் என வர்ம சுவடிகள் குறிப்பிடுகின்றன.
இவ்வர்மத்தை உள்ளங்கை, பெருவிரல், மொழி, பாதத்தட்டல், பாதத் தடவல், பாத புறம்தட்டல், முழங்கைத் தடவல், கால்மூட்டு தடவல், கைமூட்டு தடவல், சூடேற்றித் தடவுதல் போன்ற பல தூண்டுமுறை நுட்பங்களால் தூண்டி தடவும்போது, மலச்சிக்கல், வாயுநோய்கள், குளிர், ஆண்மைக்குறைவு, கால்கள் சோர்வு, வாதம், வலிகள், புட்டிவலி போன்ற பல நோய்கள் குணமாகும் என வர்ம வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
Leave a Reply