தலையங்கம்
வயிற்றுக்குப் போராடும் ஏழைகளுக்கு தான் வாழ்க்கைப் போராட்டம்… அந்த ஏழைகளை வைத்துப் பிழைக்கும் போராட்டம் தான் ஒரு சூட்சும போராட்டம். வாழ்க்கையின் எல்லா தளங்களிலும் வஞ்சிக்கப்படுபவர்கள் ஏழைகளே! ஏழ்மையும், இயலாமையும், இல்லாமையும் இவர்களை பிறர் காலடியில் வீழ்ந்து கிடக்க வழிவகுக்கிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் தன்னை மறந்து, தன் வாழ்வை மறந்து, சிந்தனை மறந்து வாழும் சிறகிழந்த பறவைகள். பறக்கவிட்டால் பறந்துவிடும். ஆனால் பறக்கமுடியாத அளவிற்கு முடமாக்கப்படும் மூடம். காற்றை சுவாசிக்கக் கூட கடமையாற்றும் இவர்களை மூளை சலவை செய்து முட்டாளாக்குவது மிக சுலபம். இன்றைய அரசியல், சமயம் போன்ற கருத்தாக்கங்களின் பயன்மிக்க பாதைகளில் கூட இவர்களின் அறியாமையே மூலதனமும் உழைப்புமாகும். சிந்திக்கத் தொடங்கி சிறகடிக்கத் தொடங்கிவிட்டால் பந்திக்கும் முந்தி பகல் கொள்ளையடிக்கும் பலருடைய வாழ்க்கை, சந்திக்கு வந்து சல்லடையாக்கப்படும்.
சூட்சிகளாலும், சூட்சும வார்த்தைகளாலும் சிம்மாசனம் ஏற்றப்படும் ஏழைகள், தாங்கள் சின்னாபின்னமாக்கப்படுகிறோம் என்பதையும் மறந்துவிடும் சோகம். தானே தலையைக் கொண்டு கொலை கருவிக்குள் சொருகி விளையாடும் ஏழைகளுக்கு தங்கள் உழைப்புதான் பலர், நம்மை ஏறி மிதிப்பதற்கு காரணம் என்று எப்போதுமே புரிந்ததில்லை. சாதி-மதம்-அரசியல்-மொழி-நாடு-தேசம் என வெறியூட்டப்படும் இந்த அப்பாவிகளுக்கு பலர் வாழ நாம் தான் விசம் தோய்ந்த அம்புகளாக ஆக்கப்படுகிறோம் என்பதே புரியவில்லை.
சமயநெறிக் கதைப்புனைவுகள், அரசியல் அணிகலன்கள் எல்லாமே ஏழைகளை ஏதோ ஒருவழியில் கோழைகளாக்கிக் கொண்டே வருகிறது என்பதைப் புரிய முடிகிறது. வயிற்றுக்கு வழியில்லாமல் போனால் வாழ்க்கையில் என்ன வேலை? யாருக்கேனும் எதையேனும் செய்து வயிற்றை நிரப்ப வேண்டியது தான். இதுதான் இந்தியாவில் பலகோடி மக்களின் பரிதாபமான நிலை.
உயிருள்ள மனிதர்கள் இறந்தவர் கணக்கிலும், இறந்தவர்கள் உயிரோடு இருப்பார் கணக்கிலும்… இது புரியாத புதிர். நல்லாட்சியில் இறந்தவர்கள் வாக்களிக்க முடியும் என நம்பும் அளவிற்கு ஆகிவிட்டது என தெருமுனைகளில் பேசும் பேச்சுகள் நம்மை நிலைகுலைய வைக்கிறது.
காலங்காலமாகவே நேர்மையாகவும், உண்மையாகவும், எளிமையாகவும் பல தலைவர்கள் வாழ்ந்து மடிந்துவிட்டனர். இன்றும் அப்படி வாழ்ந்து கொண்டிருக்கின்ற பல தலைவர்களை நம் நாட்டில் ஒருவர் கூட கண்டுகொள்வதே இல்லை. அவர்கள், வாழ்நாள் முழுவதும் பிறருக்காகவே வாழ்ந்து தன் அறிவுத்திறன், உழைப்பு அனைத்தையும் அர்பணித்தும் எவராலும் அடையாளம் காணப்படாமலேயே இருக்கின்றனர்.
இவ்வாறு தன்னை அழித்து மண்ணையும், மக்களையும் காப்பாற்ற நினைப்பவர்களை எவரும் மனதில் நினைத்து கூட பார்க்கக்கூடாது எனும் அளவிற்கு உலாவரும் பரப்புரைகளும், விமர்சனங்களும், புனைவுகளும், ஏன் சிறு ஊடகங்களும் கூட காரணமாகி விடுகின்றன. இதையும் தாண்டி காமராஜர், ஜீவா போன்ற இரண்டு மூன்று விரல்விட்டு எண்ணுபவர்கள் மட்டும் அத்தகைய தலைவர்களாக மக்கள் மத்தியில் ஓரளவு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அறிவுடையவர்கள் கூட அடிமாடுகள் போல் அடிமை கருத்துக்குழிக்குள் விழுந்துவிட்டால் அவர்களும் ஆபத்தானவர்களாக மாறிவிடுவர். இன்று ஜனநாயக நாட்டில் எல்லோருமே வேட்டைக்காரர்கள் போல் காட்சி தந்தாலும், வேட்டையாடி வெற்றி பெறுபவர்கள் சூட்சி நிறைந்தவர்கள் மட்டுமே. இந்த சூழலில், தன்னலம் கருதா தனித்தலைவர்கள் எப்படி காட்சிக்கு வரமுடியும்?
தேர்தல் ஆணையம் என்பது, ஒரு நாட்டின் வலிமைமிக்க அமைப்புகளுள் ஒன்று. அதற்கு எந்தவிதமான கட்சி பாகுபாடுகளும் இருக்காது… இருக்கவும் கூடாது. ஆனால் இன்றைய தேர்தல் ஆணையம் அணைப்போர் கைகளின் அடைக்கலக் குருவியாகி விட்டதோ என எண்ணும் அளவிற்கு இருந்து வருவதாக சந்தை பேச்சுக்கள் முந்தி வந்து காதுகளில் விழுகின்றன. வலிமை மிக்க தேர்தல் ஆணையம் என்றுமே வலிமை இழந்து விடக்கூடாது. இந்த நாட்டின் அனைத்துக் கட்சிகளுமே தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் வண்ணமே சட்டதிட்டங்களும், கட்டுப்பாடுகளும் சீரமைக்கப்பட்டிருக்கின்றன. அந்த கட்டுப்பாடுகள் தளர்ந்துவிட்டால் ஒரு நாட்டின் நம்பகத்தன்மையும் நலமிழந்துவிடும். எனவே தேர்தல் ஆணையம் தன் சுய வலிமையோடு மட்டுமே இயங்கவேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது.
அமெரிக்க அதிபரின் செயல்பாடுகள் உலகநாடுகளின் வர்த்தக மையத்தை குறிவைத்து தாக்குகின்றன. அவரின் பாகுபாடான வரிவிதிப்பு முறைகள் அமெரிக்காவையும் திக்குமுக்காட வைக்கும் என்பதை நினைத்து கூட பார்க்காமல், தங்கள் நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்ற வந்த கடவுள் போல் தன்னை வடிவமைக்கவே இத்தகைய குளப்படியான திட்டங்களை வெளிப்படுத்தி வருகிறார். இதுபோலவே உலகில் பல தலைவர்கள் வலம் வருகிறார்கள். உக்ரைன் போர் நிறுத்தத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பின் அணுகுமுறை ஏனோ சரியாக அமையவில்லை. உக்ரைன் அதிபரும் இன்றும் அமெரிக்காவையே நம்பியிருக்கிறார். இதுபோலவே இஸ்ரேலும் கூட டிரம்பின் கைபிடித்து நடப்பதாக எண்ணி காசாவினை அச்சுறுத்தியது. ஆயுதங்களை விற்று பொருளாதாரத்தைப் பெருக்கும் முக்கிய நாடுகளில் ஒன்று அமெரிக்கா. அது ஆயுத விற்பனையை பெருக்கவே முதல் நடவடிக்கை எடுக்கும் என்பதை உலகநாடுகள் அனைத்தும் அறியும். போர்களே அவர்களின் பொருளாதார வளம்.
இன்று அமெரிக்கா கடைபிடிக்கும் வேற்றாளர் கடைபிடிப்புகள் அங்கு தங்கள் உழைப்பையும், அறிவையும் தியாகம் செய்யும் பலரை தெருவில் நிற்க வைத்துள்ளது. இதனை தட்டிக்கேட்கும் திறன் படைத்த ஐ.நா.-வும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் மக்களுக்கு பயனுடையதாக இருந்தாலும் இவர்களது நிலவரி, மின்சார வரிகள், வீட்டுவரி உயர்வுகள் சாதாரண மக்களின் கண்களில் நேரடிப் பார்வைக்கு வந்துள்ளதால் ஓர் அதிருப்தி நிலை நிலவுவதனை கிராம மக்களின் வாய் வார்த்தைகளில் காணமுடிகிறது. தேர்தல் நெருங்கிவரும் காலகட்டத்தில் ஒவ்வொரு மாநிலமும், மத்தியும் வாக்குவேட்டையில் இறங்கி உள்ள சூழலில், மக்களும் ஓரளவு விழித்துக் கொண்டவர்களாகவே உள்ளனர்.
அன்புடன்,

ஆசிரியர்.
Leave a Reply