ஆபத்தில் இருக்கும் போது விழிப்போடு இருக்கிறோம்…

ஆபத்தில் இருக்கும் போது விழிப்போடு இருக்கிறோம்…

  • By Magazine
  • |

– ஓஷோ

ஜப்பானில் ஒரு சிறந்த ஆசிரியர் இருந்தார். அவருடைய கலையே உயர்ந்த தேவதாரு மரங்களின் மீது எப்படி ஏறுவது என்று சொல்லித் தருவது தான். நேராக மரங்களின் மீது எப்படி ஏறுவது என்பதை மக்களுக்கு கற்றுத் தருவார். காரணம் ஒருவர் தவறி விழுவதற்கு எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது. அவரிடமிருந்து கற்றுக் கொள்ள ஒரு இளைஞர் வந்தார். அந்த ஆசிரியர் எப்படி ஏற வேண்டும் என்று கற்றுக் கொடுத்துவிட்டு, அவனை மரம் ஏறச் சொன்னார். அந்த ஆசிரியருக்கு தொண்ணூறு வயது. அவர் அந்த மரத்தின்  கீழே உட்கார்ந்து கொண்டார். அதே சமயம் அந்த இளைஞன் ஏறிக் கொண்டிருந்தான். அந்த மனிதன், அந்த உயரமான, விண்ணைத் தொடும் அளவுள்ள மரத்தின் மிக உயர்ந்த கிளையை அடைந்து விட்டான். அவன் ஏறக்குறைய மரத்தின் உயரத்துக்குப் போய்விட்டான். இனி போவதற்கு இடமில்லை. அந்த ஆசிரியர் மரத்திற்கு கீழே மௌனமாக இன்னும் சிலருடன் அமர்ந்திருந்தார். அவர்கள் அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். பிறகு அந்த மனிதர் கீழே வரத் துவங்கினார். அவன் தரைக்கு ஒரு இருபது அடி உயரத்தில் இருக்கும் போது, அந்த வயதான ஆசிரியர் எழுந்து நின்று சொன்னார். கீழே வரும்போது , கவனமாக இரு, கவனமாக இரு.

அந்த மனிதர் வியந்து போனார், அவர் மரத்தின் மிக உச்சத்தில் இருந்த போது இந்த ஆசிரியர் இப்படிச் சொல்லவில்லை. நீ மேலே ஏறும் போது கவனமாக இரு, கவனமாக இரு என்று சொல்லவில்லை.

ஆனால் இப்போது அவர் திரும்பி வந்திருக்கிறார். பூமிக்கு அருகில் வந்து விட்டார். இப்போது எல்லா ஆபத்துக்களும் முடிந்து விட்டன. இப்போது அந்த ஆசிரியர் கீழே வரும் போது கவனமாக இரு என்று சத்தம் போடுகிறார்.

அவர் கீழே வந்து ஆசிரியரிடம் சொன்னார். நான் உண்மையிலே வியந்து போனேன். நீங்கள் மிகவும் வினோதமான மனிதராக இருக்கிறீர்கள். நான் ஆபத்தில் இருந்த போது, கவனமாக இருக்கும்படி நீங்கள் கத்தவில்லை. நீங்கள் மரத்தடியில் கண்களை மூடியபடி இருந்தீர்கள். நான் ஆபத்திலிருந்து வெளியே வந்த பின், நீங்கள் கத்தினீர்கள்.

அந்த வயதான மனிதர் சொன்னார் எப்போதும் ஒருவர் ஆபத்திலிருக்கும் போது அவரே விழிப்போடு இருக்கிறார். அந்த நேரத்தில் கத்த வேண்டிய அவசியமில்லை. ஆபத்திலிருந்து விலகிய தருணம் அங்கிருந்து தான் ஆபத்து ஆரம்பமாகிறது. நீ தரை அருகே வந்துவிட்டதாக நினைக்கிறாய் என்று நான் உணர்ந்த தருணத்தில், நீ மிகவும் சாவகாசமாக கீழே வந்து கொண்டிருந்தாய். நீ தூங்கும் நிலைக்கு வந்துவிட்டாய் என்று நான் உணர்ந்த தருணம், கவனமாக இரு என்று கத்தினேன். காரணம், நீ கீழே வரும் போது விழுந்திருக்கக் கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *