– சஜிபிரபு மாறச்சன்
ஆணிவேர் அறுபட்டால் மரம் தழைக்காது. சல்லி வேர்கள் சிதைந்து விட்டால் வளர்ச்சிக்கு வேண்டிய நீர் சரியாக வந்து சேராது. வேர்கள் மரத்துக்கு ஆதாரம். மொட்டையாக நிற்கும் மரத்தால் எவருக்கும் பயனில்லை. கிளைகள் விரிந்தால் தான் பூக்கள் மலரும். காய்கள் கனியும். எந்த மரமும் தனக்காக வாழ்வதில்லை. இருந்தால் பூவும், பழமும் தரும். இறந்தால் விறகாக நம் வீடு வந்து சேரும்.
மரத்தின் வாழ்க்கையே மற்றவர் நலனுக்குத் தான். அது நிழல் தேடும் மனிதருக்கு இளைப்பாறுதல் தரும். அகதிகளாக வரும் அநாதை பறவைகளுக்கு, கூடு கட்டிக் கூடி வாழும் சரணாலயம் ஆகும்.
தன்னை வெட்ட வருபவனுக்கு தயங்காமல் நிழல் தந்து பசியாற்றும். உயர உயர வளர்ந்தாலும் பணிவு தான் என்றும் பெருமை தரும் என்ற உண்மையை உணர்த்த எப்போதும் அதன் கிளைகள் பூமி பார்த்து தாழ்ந்திருக்கும். மனிதர்கள் மரம் போல் வாழ பழக வேண்டும்.
தான் என்ற அகங்காரம் கொள்வதை தூக்கி எறியுங்கள். மரத்தை போன்று பணிந்து வாழக் கற்று கொள்ளுங்கள். ஒவ்வொரு குடும்பமும் ஒரு விரிந்த மரம் தான். எல்லாக் குடும்பத்துக்கும். தாய் தந்தையே வேர்கள். அந்த வேர்களின் பிடிப்பில் விழாமல் நிற்கும் மரம் தான் பிறந்து வளர்ந்து ஆளாகி நிற்கும் மகன். அவன் கரம் பற்றும் மனைவியே மரக்கிளை. அதில் பூக்கும் பூவும், பழுக்கும் பழமும் தான் பிள்ளைகள். எங்கிருந்தோ வந்து குடியிருக்கும் பறவைகள் தான் சொந்தம் கொண்டாடும் உறவுகள்.
மரத்தின் வேரைப் போல பணிந்து இருக்க கற்றுக் கொள்ளுங்கள். பணிந்து இருப்பதால் தவறேதும் இல்லை. ஒரு போதும் தலைக்கனம் கொள்ளாதீர்கள். அகங்காரம் கொள்ளாதீர்கள். வாழ்க்கையில் மரத்தைப் போன்று வாழ பழகிக் கொள்ளுங்கள். மரங்களின் தியாக உணர்வு நமக்கு மிகவும் முக்கியம். தியாகம் என்ற ஒன்று இருந்தால் தான் வாழ்வில் ஜெயிக்க முடியும். வான் அளவு உயர முடியும். பார்போற்ற வாழ முடியும். மரத்தைப் போன்று தாழ்ந்து பணிந்து பணியாற்றுங்கள். யாரிடமும் பணிந்து போவதால் நமக்கு எதுவும் நஷ்டம் ஏற்படாது. நாம் நிச்சயமாக ஒருநாள் வெற்றி மழை பொழிவோம்.
Leave a Reply