தமிழா… உன் மொழி தமிழடா!

தமிழா… உன் மொழி தமிழடா!

  • By Magazine
  • |

பூ.வ.தமிழ்க்கனல்

தமிழ்க்குச் செம்மொழிஉயர்வு வந்ததாய்ப் பெருமைப்படும் இக்காலகட்டத்தில் தமிழர் நாடுதான் எல்லாவற்றிலும் முதன்மை என்று சொல்லிக் கொள்ளும் நிலையில் தெருக்கள் தோறும் தமிழ் அமைப்புகள் நாள்தோறும் நடக்கும் பொழுதிலே பாவேந்தரைப் போற்றும் வகையில் பாவலர் ஏழ் நாள் விழாவென அரசுதான் அறிவித்த மகிழ்விலே மக்கள் இருக்கையில் தமிழ்தான் எங்கே என்று தேடும் இழிநிலை இங்கு உள்ளது என்பதை நாம் எண்ணும் போழ்து,  இது ஒருநாடு இதற்குத் தமிழர் நாடு என்று பெயர் என நம் மனம் வெம்பிச் சாகிறது என்று ஒருபுறம் இருப்பினும் சென்ற நூற்றாண்டில் தமிழுக்காய் உழைத்த பாண்டித்துரையை நாம் நினைவு கூர்ந்து படிப்பதால் அதன்வழி ஒரு சிலரேனும் தமிழராய் மாறமாட்டார்களா என்ற ஏக்கத்துடன் என்றன் சொற்களை இங்கே அடுக்கி வைக்கிறேன்.

                பண்டையதமிழர் நாட்டின் ஒருபகுதி 2000 கல் தொலைவுகடலில் மூழ்கியது அனைவரும் அறிந்த செய்திதான் என்றாலும் இடைக்கழகம் அழிந்த காலத்தில் தான் ஆரியர்கள் தமிழர் நாட்டிற்கு வந்தனர். அவர்கள் கி.பி.2000 முதல் கி.மு.1200 இல் வந்தனர். கடைச்சங்ககாலம் கி.மு.5 ஆம் நூற்றாண்டு முதல் 4 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது. இத்தகவலைத் தமிழ் மூத்த ஆய்வறிஞர் பாவாணர் அவர்கள் ‘தென்மொழி” நூலில் குறிப்பிட்டுள்ளார்.

முதலாம் சங்கத்தில் 549 புலவர்களும் இரண்டாம் சங்கத்தில் 59 புலவர்களும் கடைக்கழகத்தில் 49 புலவர்களும் அதிலே பெண் புலவர்கள் 45 பேர்களும் சிறந்து விளங்கினர் என்று பாவாணர் கூறுகிறார்.

                அதங்கோட்டாசான் தலைமையில் திருவிற்பாண்டியன் அவையில் கடைக்கழகத்திற்குப் பின் தொல்காப்பியம் எனும் இலக்கியப் பெருநூல் அரங்கேற்றப்பட்டுள்ள தொன்மையும் பழமையும் நிறை தமிழர் நாட்டில் மூவேந்தர்கள் ஆட்சி முடிந்ததும் முக்கழகமும் கடல் கொண்டு அழித்ததும் பழைய நூலுரைகளும் மறைந்து படிப்பாருமின்றி இடிப்பாருமின்றித் தொன்மைமிகு தமிழ் மங்கிவரும் காலகட்டத்தில் மதுரை மாநகரில் தமிழ்க் கழகங்கள் கூட்டியும் அருந்தமிழ் நூல்களை ஈட்டியும் படிக்க வைத்தது பரிசில் பல கொடுத்ததும் செந்தமிழ் என்னும் ஏடுகளைவெளிக் கொண்டுவந்ததும் எனபலவாறாகத் தமிழ்த் தொண்டினைத் திறம்படச் செய்த செந்தமிழ் ஆர்வலர் தான் பாண்டித்துரை.

                தமிழர் மரபில் பிறந்த தந்தை பொன்னுச்சாமிக்கும் தாயார் முத்துவீராயி நாச்சியாருக்கும் மூன்றாவது மகனாக 1867- ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 21-ஆம் நாள் பாண்டித்துரை பிறந்த போது பொன்னுச்சாமி அவர்கள் இராமநாதபுரம் மன்னரின் அமைச்சராக இருந்தார் என்றாலும் பாண்டித்துரை சிறுவராக இருந்த போதே தந்தையை இழந்தமையால் சேசாத்திரி என்பவரின் மேற்பார்வையில் வளர்ந்த காலகட்டத்தில் அழகர்ராசு என்ற தமிழ்ப்புலவர் இவரின் தமிழ்ப் பயிற்றுநராகவும் மற்றும் வழக்குரைஞர் வெங்கடேசுவரர் இவரின் ஆங்கிலப் பயிற்றுநராகவும் இருந்த நிலையில்   இவர்களிடமிருந்து மிக்க ஆர்வத்தோடு கற்ற பாண்டித்துரை இரு மொழியிலும் நல்ல தேர்ச்சி பெற்று இராமநாதபுரத்தில் சிலர்டிசு என்ற ஆங்கிலேயரால் நடத்தப்பட்ட உயர்நிலைப் பள்ளியில் மேற்கல்வி கற்றார்.

                இளம் அகவையில் தமிழில் நல்லதேர்ச்சியும் மிகுந்த ஆர்வமும் பெற்றிருந்த பாண்டித்துரை தமிழின் வளர்ச்சிக்காகத் தன் உடல், உயிர், பொருள் அனைத்தையும் கொடுத்த இக்காலகட்டத்தில் தேவரின் நெருங்கிய உறவினராகிய பாசுக்கர சேதுபதி அவர்கள் இராமநாதபுர சிற்றரசராக இருந்த போது பாண்டித்துரையின் தொண்டுகளுக்குத் துணை புரிந்தார்.

                அக்காலத்தில் அரிய தமிழ் நூல்களைத் தேடிக் கண்டெடுத்து அவை அழியாவண்ணம் அச்சிட்டு வந்த சாமிநாதருக்கு உதவும் பொருட்டுப் பாண்டித்துரை அவரை இராமநாதபுரம் வரவழைத்துச் சிறப்பித்த மணிமேகலை புறப்பொருள் வெண்பாமாலை போன்றவற்றை அச்சிடப் பொருளுதவி செய்ததோடு தனது பயிற்றுநரான இராமசாமி எனும் ஞானசம்மந்தம் மூலம் தேவராத் தலைமுறைப் பதிப்பையும் சிவஞானசாமிகள் பிரபந்தத் திரட்டையும் பதிப்பித்து வெளியிட்டார்.

                பிற மதத்தவரின் சைவ எதிர்ப்புப் போக்கை மறுக்கும் பொருட்டுக் கோப்பாய் சபாபதி நாவலர் மூலம் மறுப்பு நூல்கள் வெளியிட்டதோடு தண்டியலங்கராம் சுன்னாகம் குமாரசாமிப் புலவர் அவர்களின் நூல்களுக்கும் பாண்டித்துரை அவர்கள் பதிப்பிக்கும் பொருட்டு உதவி புரிந்தார். குமாரசாமிப் புலவர் பாண்டித்துரையால் தொகுக்கப்பட்ட சைவ மஞ்சரிக்கு வழங்கிய மருப்புப் பாயிரம் இவரின் சிறப்பை நன்கு புலப்படுத்தும்.

                திக்குலகுப் புகழாளன் பண்டைக் காலம் முதல் தமிழக்கழகங்கள் கூடிய மதுரை மூதூருக்கும் அங்கு வளர்ந்த தமிழுக்கும் ஏற்பட்ட துன்பயியல் நிலையை எண்ணி இவர் உள்ளம் துயர் கொண்டது. இந்நிலையை மாற்றும் நோக்குடன் மதுரையில் நான்காம் கழகம் நிறுவத் திட்டமிட்ட பாண்டித்துரை அவர்கள் சென்னையில் கூடிய மாநில அரசியல் மாநாட்டில் அவையோர் முன் வேண்டுகோளாக அம்மாநாட்டில் நான்காம் தமிழ்க்கழகம் மதுரையில் நிறுவுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் விளைவாக நான்காம் தமிழ்க்கழகம் நிறுவப்பட்டுச் செயல்படத் தொடங்கிய நிலையில் இத்தமிழ்க் கழகத்திற்குத் தலைவராகப் பாண்டித்துரையே பொறுப்பேற்றுக் கழகத்தைக் கட்டியெழுப்பும் பொருட்டு அயராது செயல்பட்ட நேரத்தில் தமிழர் நாடு மற்றும் ஈழம் முதலிய நாடுகளிலிருந்து தமிழ் அறிஞர்கள், வல்லுநர்களை அழைத்துக் கழகத்தின் உறுப்பினராக்கி எதிர்காலத் தமிழ் வளர்ச்சிக்கு வழி வகுத்த பாண்டித்துரை தமிழுக்கு மேற்கூறிய தொண்டுகள் மட்டுமல்லாது செய்யுள்கள் பல இயற்றித் தொண்டாற்றும் புலமையும் ஆற்றலும் வலிமையும் இவரிடம் காணப்பட்டதற்குச் சான்றாகச் சிவஞானப் புறமுருகன் காவடிச் சிந்து சைவ மஞ்சரி, இராசராசேசுவரிப் பதிகம், பன்னூல் திரட்டு மற்றும் பல தனிநிலைச் செய்யுள்களும் பல சிறப்பாயிரங்களும் திகழ்கின்றன.

                தமிழுக்கு மட்டும் அல்லாது பிற நற்பணிகளுக்கும் பொருளுதவி செய்யும் வழக்கம் உடைய வள்ளலாக வாழ்ந்த பாண்டித்துரை கப்பலோட்டிய ஈகி உ சிதம்பரனார் அவர்கள் சுதேசி நாவாய்ச் சங்கம் நிறுவுவதற்குப் பத்தாயிரம் உருவாய் நன்கொடையாகக் கொடுத்து உதவியது குறிப்பிடத்தக்கதாகும்.                 தமிழின் உயர்வுக்காக அயராது உழைத்த உயர் மனத்தார் பாண்டித்துரை அவர்கள் 1911 ஆம் ஆண்டு மார்கழித் திங்கள் இரண்டாம் நாள் உயிர் துறந்த பிரிவால் தமிழ் உலகம் வருந்திய போதும் அவரால் உருவாக்கப்பட்ட நான்காம் தமிழ்க் கழகம் நூற்றாண்டுகளுக்கு மேலாகத் தமிழ்த் தொண்டாற்றி வருவது பாண்டித்துரை அவர்களின் உண்மைத் தமிழ்ப் பற்றுக்கு ஓர் உயர்ந்தோங்கிய எடுத்துக்காட்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *